Showing posts with label இறையருள் பெறுவோம். Show all posts
Showing posts with label இறையருள் பெறுவோம். Show all posts

Wednesday, January 8, 2014

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி



திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி






லோக வைகுண்டம்' எனப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலின் முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி விழா. இதன் முக்கிய அம்சம் சொர்க்க வாசல் திறப்பு எனப்படும் பரமபத வாசல் திறப்புதான்.




மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குவது வழக்கம். இதில், திருமொழித் திருநாள் எனப்படும் பகல்பத்து 10 நாட்களும், திருவாய்மொழித் திருநாள் எனப்படும் ராப்பத்து பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறும்.




திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாளில் காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடுவர். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும். அன்று மட்டுமே அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார்.




பிரளய காலத்தின்போது ஆலிலை மேல் பள்ளி கொண்டு கண்வளர்ந்தருளிய திருமால், தமது நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார். ஒரு கட்டத்தில், பிரம்மாவுக்கு கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை அடக்கும் விதமாக திருமாலின் காதுகளில் இருந்து தோன்றிய அசுரர்கள் இருவர், பிரம்மாவைக் கொல்ல வந்தனர். திருமால் அதைத் தடுத்து, சுக்லபட்ச ஏகாதசியன்று அவ்விருவரையும் போரில் அடக்கி, வடக்கு வாசல் திறந்து, வைகுண்டத்தில் சேர்த்துக்கொண்டார். அப்போது அசுரர்கள் இருவரும், ""எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருள வேண்டும்'' என்று கேட்டனர். அதன்படியே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நம்மாழ்வார் மோட்சம் என்பதற்காகவே வைகுண்ட வாசல் கதவுகள் திறக்கப்படுவதாகக் கூறுவர். இதையே பரமபதவாசல் திறப்பு எனக் கொண்டாடுகின்றனர்.




இது திருவரங்கத்தை முன்னிட்டு, மற்ற திருமால் ஆலயங்களுக்கும் பொதுவானது. அன்று பெருமாள் கோயில்களில் உள்ள வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து, நான்கு வேதங்களும் ஓதி, பாசுரங்கள் முழங்க பெருமாள் வாசலைக் கடந்து செல்வார்.




இங்கே திருவரங்கத்தில் தங்க அங்கி அணிந்து, மங்கள வாத்தியம் முழங்க இந்த வாசலைக் கடந்து வருவார் நம்பெருமாள். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் இந்த வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் செல்வதாக நம்பிக்கை.




வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங்கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்ரமரனம், அர்ச்சிராத்திரி, திவ்யதேசப் பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம் என்பது இதன் விளக்கம். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும் மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, அரங்கன் நாமத்தை உச்சரித்து, அவன் புகழ் பாடும் தோத்திரங்களைப் பாராயணம் செய்தால் அதிக பயன்களைப் பெறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்வதும் உண்டு.




வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும் மோட்ச ஏகாதசி என்றும் பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு.

Wednesday, December 25, 2013

நலம் தரும் ராமநாமம்

நலம் தரும் ராமநாமம்





காசியில் பத்மநாபர் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார், அவர் இளம் வயதிலேயே வேதங்கள் உபநிடதங்கள், பிரம்மா சூத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார், இருப்பியம், இறைவனின் திருவருளைப் பெற வேண்டும் என்றால் குருவருள் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்திருந்த பத்மநாபர், கபீர் தாசரை சரணடைந்து அவரை குருவாக ஏற்றுக்கொண்டார்,  கபீர் தாசரும் பத்மநாபரை அன்புடன் ஏற்று அவருக்கு உபதேசம் செய்து வந்தார்.

தினமும் அதிகாலையில் கங்கைக்கு சென்று நீராடி, குருவிடம் உபதேசம் பெற்று அவருக்கு பணிவிடை செய்து இறைவனை தொழுவது பத்மனாபரின் வழக்கமாக இருந்தது., அன்றைய தினமும் அதிகாலையிலேயே எழுந்து கங்கை கரைக்கு சென்றார் பத்மநாபர், அப்போது கங்கை நதிக்கரையில் கூட்டமாக இருந்தது, ' என்றும் இல்லாத திருநாளாக இன்று என்ன இவ்வளவு கூட்டம்?' என்று எண்ணியபடி கூட்டம் இருந்த பகுதியைநோக்கி சென்றார் பத்மநாபர்.

அப்போது கூட்டத்தின் முன்பாக கங்கை நதியின் படித்துறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அமர்ந்திருப்பதை பத்மநாபர் கண்டார்.  அந்த நபரைச் சுற்றிதான் இவ்வளவு கூட்டமும் திரண்டிருந்தது, அங்கிருந்த ஒருவரிடம் 'எதற்க்காக இப்படி கூட்டமாக நிற்கிறீர்கள்? என்று கேட்டார்.

'ஐயா! இவர் ஒரு பெரிய வியாபாரி, நல்ல மனமுடையவர், தான தருமங்கள் செய்வதிலும் சலிப்படையதவர்  இவருக்கு அழகிய மனைவியும், ஐந்து பிள்ளைகளும் உள்ளனர். இருப்பினும் இவருக்கு கொடுமையான இந்த நோய் தாக்கி இருக்கிறது இதனால் மனைவியும் குழந்தைகளும் இவரை நெருங்கவே தயங்குகின்றனர், எனவே வேதனை தாளாமல் கங்கையில் மூழ்கி இறக்க முடிவு செய்து இங்கு வந்துள்ளார், அவரை நாங்கள் தடுத்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூடியிருந்தவர்களில் ஒருவர் கூறினார்

பத்மனாபறம் அந்த வியாபாரியின் அருகில் சென்றார், ' அன்புடையவரே! மனித பிறவி கிடைப்பது மிகவும் அரிதானது. அதிலும் ஊனமின்றி இருப்பதும் , புத்திசாலியாகவும், செல்வந்தனாகவும், வாழ்வது கிடைத்தர்க்கரியது, செல்வந்தனாக இருக்கும் பலர் தானம் செய்ய முன் வருவதில்லை, இவ்வளவு நல்ல குணங்களையும் கொண்டுள்ள நீங்கள் தற்கொலை செய்ய எண்ணுவது தவறு.   உங்கள் எண்ணத்தை கைவிடுங்கள்' என்று அறிவுரை வழங்கினர்.

ஆனால் துயரத்தின் உச்சியில் இருந்த வியாபாரி, 'சீழும், புண்ணுமாக அழுகிக் கொண்டிருக்கும் இந்த உடலை இன்னமும் காப்பாற்ற வேண்டுமா என்று வினவினார் !?

முற்பிறவிகளில் செய்த வினை நம்மை விடாது அதன் பயனை அனுபவித்தே  தீர வேண்டும், இருப்பினும் வியாதியை நீக்க மருந்தைதேட வேண்டுமே தவிர உயிரை போக்கிக் கொள்ள நினைப்பது பாவம் என்றார் பத்மநாபர்.

அப்போது அங்கே கூடியிருந்தவர்கள், 'இவரது வியாதி நீங்க தகுந்த உபாயத்தை கூறி அருள வேண்டும்' என்று பத்மனாபரிடம் கேட்டுக் கொண்டனர்.

அதற்க்கு அவர், 'கங்கையில் மூழ்கி மூன்று முறை ராம நாமத்தை உச்சரியுங்கள்' என்று கூறி விட்டு, கங்கையில்  நீராடச் சென்றனர்.

வி யாதியால் பாதிக்கப்பட்ட வியாபாரி, மெதுவாக தவழ்ந்து, தவழ்ந்து சென்று கங்கையில், மூழ்கினார், பின்ன்னர் உதடுகளை குவித்தபோது ஏற்ப்பட்ட வலியையும் பொறுத்துக்கொண்டு ,ராம, ராம, ராம என்று ராம நாமத்தை உச்சரித்தார்.

தண்ணீருக்குள் மூழ்கியவன் எவ்வாறு தன்னந்தனியாக எழுந்து மேலே வரப்போகின்றான் என்று கடையில் கூடியிருந்த அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த போது அந்த வணிகனின் உடல் புதுப் பொலிவுடன்
எந்த சிறு வெடிப்புக்கூட இல்லாமல் கங்கையில் இருந்து எழுந்து வந்தான்
கரையில் நின்றுகொண்டிருந்த பத்மநாபரின் காலில் விழுந்து வணங்கினான்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர், கபீர்தாசரிடம் தெரிவித்தனர், ககீர்தாசருக்கு, பத்மனாபரின் செயல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இருபினும், 'மகத்துவம் முகுத தான நாமத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டுமா? ஒரு முறை உச்ச்சரித்திருந்தாலே, அது தன சக்தியை வெளிப்படுத்தி இருக்குமே! என்று ஆதங்கமும் கொண்டார்.

இதுபற்றி தனது சீடரான பத்மனாபரிடமே, கபீர்தாசர் கேட்டார். அதற்க்கு அவர், 'குருதேவா! குரு முகமாக உபதேசம் ஏறாத குற்றம் நீங்க ஒருதடவை, தொழுநோய் நீங்க இரண்டாம் தடவை, அவன் ஞானம் பெற்று மோட்சம் அடைய மூன்றாம் முறை ராமநாமத்தை ஜெபிக்கச் சொன்னேன்,   நீங்கலாக இருந்தால் மூன்றையும் ஒரே தடவையில் செய்து முடித்து இருப்பீர்கள், என்னால் அது முடியுமா? என்று பணிவுடன் கூறினார்,

தன சீடர்களில் மிகவும் சிறப்புக்குரியவராக இருந்த பத்மநாபரை ஆராதழுவி
பாராட்டினார் கபீர்தாசர்.


ராம ராம ராம











நெய் நந்தீஸ்வரர்



நெய் நந்தீஸ்வரர்


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி எனும் ஊருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இங்கே நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த ஆலயத்தில் மீனாட்சி சமேத சொக்கலிங்கேஸ்வரர் அருள்புரிகிறார்.

விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள் எழுந்தருளினாலும் நெய்நந்தீஸ்வரரே இவ்வாலயத்தின் சிறப்பு. நந்திகோவில் என்றே இவ்வாலயத்தை பக்தர்கள் அழைக்கின்றனர். சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதும் பசு நெய் உறைந்திருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை என்பது அதிசயம். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் நெய்நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Saturday, December 21, 2013

துவரிமானில் அழகியசிங்கர் திருநட்சத்திரம்


துவரிமானில் அழகியசிங்கர் திருநட்சத்திரம்








திருமாலின் முக்கிய அவதாரமாகக் கருதப்படுகிறது ம்த்ஸ்ய அவதாரம். கிருதுமால் எனும் நதியில் திருமால் ம்த்ஸ்ய உருவில் அவதாரம் எடுத்து வேதங்களைக் காப்பாற்றினார் என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


மதுரைக்கு மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் கிருதமால் நதி உற்பத்தியாகும் இடத்தின் தென்கரைப் பகுதியிலும், வேதவதி என்ற வைகை நதியின் வடக்கு கரையிலும் உள்ள துவரிமான் அக்ரஹாரத்தில் அகோபிலமடம் 40வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்தர மஹாதேசிகன் பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ஆந்திராவிலுள்ள அகோபிலம் நரசிம்ம ஆராதனைக்கு பெயர் பெற்றது. இங்கு நாற்பதாவது ஜீயராக இருந்தவர் ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்திர மஹாதேசிகர். காரைக்குறிச்சி அழகிய சிங்கர் என்றும் இவரை அழைப்பர். இவர் நரசிம்ம உபாசனையில் தீவிரமாக இருந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் தேவாதிராஜ பெருமாளோடு பேசுவது போல, அகோபிலத்திலுள்ள மாலோல நரசிம்மனோடு பேசுவார்.

ஒருமுறை, அகோபில மட யானைக்கு மதம் பிடித்தது. அனைவரும் பயந்து ஓடத் துவங்கினர். ஆனால் ஜீயர் தன் கையில் திரிதண்டத்துடன் யானையை நோக்கி நடந்தார். நரசிம்மரின் திருமஞ்சன (அபிஷேகம்) தீர்த்தத்தை அதன்மீது தெளித்தார். தீர்த்த மகிமையால் யானை சாந்தமாகிவிட்டது.

ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்திர மஹாதேசிகர் 1851 ஆம் வருடம், மார்கழி மாதம், விசாக நட்சத்திரத்தில் திருநெல்வேலி அருகிலுள்ள காருக்குறிச்சியில் பிறந்தார். வேங்கடகிருஷ்ணமாச்சார்யார் என்பது இவரது இயற்பெயர். 1913, ஏப்ரலில் அகோபில மடத்தின் ஆஸ்தானப் பொறுப்பேற்றுக்கொண்டார். அக்காலத்தில் அகோபிலம் தலத்திற்கு யாரும் போவதில்லை. மந்திர சித்தி பெற்ற இவர் அங்கிருந்த பிரம்மராட்ஷஸ், ஜடாமுனிகளை விரட்டினார். இதன்பின், பக்தர்கள் அகோபிலம் வந்து நவ நரசிம்மரை வழிபடத் தொடங்கினர். 1923ல் யாத்திரையாக வந்து மதுரை கூடலழகரை தரிசித்தார். அப்போது துவரிமான் பகுதியில் தங்கியிருந்தபோது நோய்வாய்ப்பட்டார். கோபால ராமபத்ராச்சார்யாரிடம் ஆஸ்தானப் பொறுப்பேற்கச் செய்துவிட்டு, 1923, ஜனவரி 14ல் பரமபதம் அடைந்தார்.

மார்கழி 14 ஆம் தேதி, அதாவது டிசம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை ஸ்ரீஅஹோபிலமடம் 40வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ திவ்ய பாதுகாúஸவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்திர மஹாதேசிகனுடைய, திருநட்சத்திரம் துவரிமான் பிருந்தாவனத்தில் நடைபெறுகிறது.

வியாழன்தோறும் இந்த பிருந்தாவனத்திற்கு திருமண பிராப்தி வேண்டியும், மழலைச் செல்வம் வேண்டியும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Friday, December 13, 2013

ஆடவல்லானின் ஆனந்த நடனம்


ஆடவல்லானின் ஆனந்த நடனம்






தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. "மாதங்களில் மார்கழியாகவும், நாட்களில் திருவாதிரையாகவும் விளங்குகிறேன்'' என பகவான் கண்ணன் மார்கழியின் சிறப்பினை பகவத் கீதையில் போற்றுகிறான்.




பக்தி மயமாக விளங்குகிறது மார்கழி மாதம். அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் திருக்கோயில்களில் திருப்பாவை- திருவெம்பாவை பாடல்களைப் பாடி இறைவனை வணங்குகின்றனர். வைணவக் கோயில்களில் மார்கழி மாதத்தில் சிறப்பான விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுவது போன்று, சிவாலயங்களில் திருவாதிரை விழா நடைபெறுகிறது. இந்நன்னாளில் ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு சிறப்பான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. எனவே ""ஆதிரை நாள் உகந்தான்'' ""ஆதிரை நன்னாளான்'' என்று திருமுறைகள் போற்றுகின்றன.




தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்கி இறைவன் ஆடிய நடனம் ஆனந்த நடனம். பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின்படி தாருகாவனத்தில் அன்று ஆடிய நடனத்தை தில்லையில் மீண்டும் ஆதிரை நன்னாளில் சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படுகிறது. இன்னாளில் நடைபெறும் தரிசனத்தை ""ஆருத்ரா தரிசனம்'' எனச் சிறப்பித்து அழைக்கிறோம். சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறும் "ஆருத்ரா தரிசன காட்சி'' மிகவும் சிறப்பானது. அன்று இறைவனுக்கு படைக்கப்படும் "திருவாதிரை களியும்' சுவையானது.




தமிழகத்தில் பல திருக்கோயில்களில் திருவாதிரை விழா சிறப்பாக நடைபெறுகிறது. திருவாதிரை அன்று நடராஜப் பெருமான் பல திருக்கோயில்களில் வீதி உலா வருவதும் உண்டு.




அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகரம் கோயிலில் திருவாதிரை நாளில் எழுந்தருள "அதிரை விடங்கர்' என்ற திருமேனி செய்து அளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் உள்ள திருவாய்மூர் திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை நாளில் "வட்டணை ஆடல் உடையார்' என்ற ஆடவல்லான் திருமேனி உலா வந்ததை கல்வெட்டுகளின் வாயிலாக அறியலாம்.




நடராஜப் பெருமான் திருநடனம் ஆடிய சிறப்பான திருத்தலங்களாக, சிதம்பரம் - கனகசபை, மதுரை - வெள்ளிசபை, திருநெல்வேலி - தாமிரசபை; திருக்குற்றாலம் - சித்திரசபை, திருவாலங்காடு - இரத்தினசபை என ஐந்து சபைகள் கூறப்படுகின்றன.




சென்னை-திருத்தணி செல்லும் பாதைக்கு அருகே திருவாலங்காடு அமைந்துள்ளது. அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்திற்கு வரலாம். வடாரண்யம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் உவந்து ஆடிய அம்பலம் இது. உலகம் உய்ய இறைவன் இங்கு ஆடிய ""ஊர்த்துவ தாண்டவமே'' முதன்மையான தாண்டவம்.




இறைவனின் ஐந்து செயல்களில் "அருளல்' என்னும் செயலை இந்தத் தாண்டவம் குறிக்கிறது. காளியின் செருக்கைப் போக்குவதற்காக ஆடிய திருநடனம் இது. மிக வேகமாக சுழன்று ஆடியதால் "சண்ட தாண்டவம்' என்றும், "அணுக்கிரக தாண்டவம்" என்றும் அழைக்கப்படுகின்றன. ""ஆடினார் காளி காண ஆலங்காட்டடிகளாரே'' என நாவுக்கரசர் பெருமான் போற்றுகின்றார். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் போற்றப்பட்ட சிறப்பு மிகு தலம் இது. ஊர்த்துவதாண்டவத்தை பெருங்கூத்து எனவும் செய்கரிய நடனம் என்றும் போற்றுகின்றனர்.




காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு ஆடவல்லான் பெருமானிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இறைவன் ஆடும் கூத்தின் சிறப்பினை அம்மையாரின் திருப்பதிகங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. திருமூலர் பெருமானும் ஊர்த்துவதாண்டவத்தின் பெருமையை அழகாக விளக்குகிறார்.




திருவாலங்காடு திருக்கோயிலில் வழிபடப்பெறும் ஊர்த்துவதாண்டவ மூர்த்திக்கு மார்கழி திருவாதிரை நாளில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. (18.12.2013 அன்று இரவு சிறப்பு அபிஷேகமும், 19.12.2013 அன்று கோபுர தரிசனமும், பழையனூர் சென்று வந்து நடராஜப் பெருமான் காட்சி அளிக்கும் தரிசன நிகழ்ச்சியும் இத்தலத்தில் நடைபெற உள்ளன).




மார்கழி மாதத்தில் திருவாதிரையில் தாண்டவமூர்த்தியான நடராஜப் பெருமானை வழிபடுவது நல்லது என காரண ஆகமம் கூறுகிறது. அந்த வழிபாட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் கிடைக்கும் என்கிறது.




தகவலுக்கு: 044-27872074

Thursday, December 12, 2013

திருமார்பின் அழகு ஆட்கொண்டது

திருமார்பின் அழகு ஆட்கொண்டது


நெடுநாள் ஏக்கம் தீரும் வகையில் முதல் முறையாக திருவரங்கனைப் பார்த்த நொடிப் பொழுதே, பத்துப் பாசுரங்களால் அரங்கன் அழகை வர்ணித்துப் பாடினார் திருப்பாணாழ்வார். அவரது பாசுரத்தொகுப்பு அமலனாதிபிரான் என்று பெயர் பெற்றது. அதில் உள்ள இந்தப் பாசுரத்தில் திருவரங்கனின் திருமார்பு அழகு தன்னை அவனிடம் ஆட்கொள்ளச் செய்ததாக வர்ணிக்கிறார்.
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு
வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.
"பொறுக்க முடியாத சுமையாக நின்ற பழைமையான பாபங்களின் தொடர்பைத் துண்டித்து, அதனால் பாபம் நீங்கப் பெற்ற அடியேனை தன்னிடத்தில் அன்பு உடையவன் ஆக்கி வைத்தான் அரங்கநாதன். இப்படிச் செய்து வைத்தது மட்டுமல்லாமல் என் இதயத்திலும் புகுந்து விட்டான்.
இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுவதற்கு ஏற்ற வகையில், நான் கடுமையானதும் மிகப் பெரியதுமான தவத்தை முற்பிறவியில் செய்திருப்பேனோ என்னவோ அறிந்தேன் இல்லை. அரங்கநாதனுடைய பிராட்டியையும் முக்தாஹாரத்தையும் உடையதான அந்தத் திருமார்பு அன்றோ அடியவனான என்னை அடிமைப்படுத்திக் கொண்டது...'' என்று இந்தப் பாசுரத்தில் தெரிவிக்கிறார் திருப்பாணாழ்வார்.

Monday, November 25, 2013

காலபைரவாஷ்டமி: பைரவரைத் தொழுதால் அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்!

காலபைரவாஷ்டமி: பைரவரைத் தொழுதால் அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்!










கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம். இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன?

பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், தேவர்களுக்கு மிகவும் கொடுமை செய்தனர். அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, முருகனை உருவாக்கினார். முருகன், தாரகாசுரனை அழித்து, பத்மாசுரனை அடக்கி, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி விட்டார். நியாயத்துக்காக செய்த கொலையானாலும், பாவம் வந்து சேரும்.




அந்தப் பாவத்திற்கு பரிகாரம் தான், அன்னதானம். சிவன், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார். அவர் அன்னதானம் செய்த இடம், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊர். இதை, அவ்வூரிலுள்ள மகாதேவர் கோவில் வரலாறு கூறுகிறது. இப்போதும், கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதை, வைக்கத்தஷ்டமி என்பர். இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர். இந்த தானத்தை ஏற்க, சிவனே வருவதாக ஐதீகம் என்பதால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும். அதுபோல், சாப்பிட வருவோரும், சிவனோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற, பரவச நிலையை அடைகின்றனர். ேமலும், சிவன் பைரவராக உருவெடுத்து, அந்தகாசுரன் என்ற அரக்கனை அழித்த தால், இங்கு, பைரவர் வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.




இரண்யாட்சன் என்ற அசுரனின் மகன் அந்தகாசுரன். இவன், திருமால், பிரம்மா முதலான தெய்வங்களால் கூட, அழிவு வரக் கூடாது என்ற வரத்தை, சிவனிடம் பெற்றான். இந்த வரம் காரணமாக, தேவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தி வந்தான். தேவர்களே... என்னை நீங்கள் அழிக்க முடியாதபடி வரம் பெற்றுள்ளேன். என் சேனைகளை நீங்கள் அழித்தால், அவர்கள், எங்கள் குலகுரு சுக்ராச்சாரியாரின் மந்திர சக்தியால், உயிர் பெற்று விடுவர். அதனால், தோல்வியை ஒப்புக் கொண்டு, பெண்களைப் போல உருவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த உத்தரவை மீறினால், உங்களைக் கொன்று விடுவேன்... என்று மிரட்டினான். இதனால், தேவர்கள் பயந்து, தங்கள் உருவத்தை பெண் உருவாக மாற்றிக் கொண்டனர். இந்நிலையிலிருந்து மீள, சிவனை சரணடைந்தனர் தேவர்கள். தான் கொடுத்த வரத்தை, தவறாகப் பயன்படுத்திய அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்க முடிவெடுத்த சிவன், தன்னில் இருந்து தோன்றிய பைரவரை அழைத்து, பைரவா... நீ சென்று, அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்கி வா... என்றார். வந்திருப்பது சிவஅம்சம் பொருந்தியவர் என்பதை அறியாத அந்தகாசுரன், பைரவருடன் போரிட்டான். அழிந்து போன அசுரப்படைகளை, சுக்ராச்சாரியார், தன் மந்திர சக்தியால் காப்பாற்றி விட்டார். உடனே, சிவன், சுக்ராச்சாரியாரை விழுங்கி, வயிற்றில் அடக்கிக் கொண்டார்.




இதன் பின், பைரவர், அந்தகாசுரனை, ஒரு சூலத்தில் குத்தி, உயர்த்திப் பிடித்து, அவனது, ரத்தம் வழியும் வரை காத்திருந்தார். ஒடுங்கிப் போன அந்தகாசுரன், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினான். பைரவரும் அவனை விடுவித்தார். அவன் சிவநாமம் சொன்னவன் என்பதால், உயிர் பிழைத்தான். எதிரிகளால் தொல்லை இருந்தால், தேய்பிறை அஷ்டமி நாட்களில், பைரவருக்கு வடைமாலை, செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலையை, ராகு காலத்தில் சாத்தினால், எதிரிகளின் தொல்லை, நீங்கும் என்பர். கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று, பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் கஷ்டங்களின் அளவு குறையும். பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும்.

Monday, May 13, 2013

ஆதி சங்கரர்

ஆதி சங்கரர்





ஆதி சங்கரர் காவி உடை அணிந்து சந்நியாசம் வாங்குவதற்கு அவரது தாயார் ஆர்யாம்பாவுக்கு விருப்பம் சிறிதும் இல்லை. அவரது தாயார் சங்கரரிடம் அவர் சந்நியாசம் வாங்குவதற்கு முன் இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளச் செய்தார்.

ஒன்று: தான் இறக்கும் பொழுது, தன் மகன் தன் பக்கத்தில் இருக்க வேண்டும்.

இரண்டு: ஸ்ந்நியாசியாக இருந்தாலும், தன் மகன் தான் தனக்குத் தகனம் செய்ய வேண்டும்.

சிருங்கேரியில் ஆதி சங்கரர் தங்கி இருக்கும் பொழுது, தன் தாயாரின் மரணம் நெருங்கி விட்டது என்று சொல்லி, உடனே தன் தபோ வலிமையால் காலடியில் வசிக்கும் தன் தாயாரின் பக்கத்தில் சென்றடைந்தார். தன் தாயாரின் தகனக் கிரிகைகள் முடிந்தவுடன் தாயாரின் மரணத்தை நினைவு கூர்ந்து, ஐந்து ஸ்லோகங்கள் இயற்றினார். இந்த ஐந்து பாக்களில் மட்டும் தான் கடவுளைப் பற்றியோ, தன் வேதாந்தக் கருத்துக்களையோ சொல்ல வில்லை என்பது இதன் சிறப்பாகும்.

ஸ்ந்நியாசம் வாங்கியதால், மகனாகத் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யமுடியாது போய்விட்டதையும், தன் மனச்சாட்சி உறுத்துவதையும் தன் ஐந்து பாக்களிலும் மிக அருமையாக வர்ணித்திருக்கிறார்.

கடைசி வரியில் சொன்ன அவர் வாக்கியம் எவர் மனத்தையும் உருக்கும் என்பது திண்ணம்: மகனாகப் பிறந்த நான் என் தாய்க்குச் செய்ததெல்லாம் மரணத்தின் போது அவளது வாய்க்கு இட்ட ஒரு கைப்பிடி அரிசி மட்டுமே!ஐந்து பாக்களின் மொழி பெயர்ப்பு - தழுவலான மொழி பெயர்ப்பு - கீழே தரப்பட்டிருகிறது. இந்த ஐந்து பாக்கள் - மாத்ரு பஞ்சகம் என்ற தலைப்பில் ஆதி சங்கரால் இயற்றப்பட்டதாகும்.

1.

அன்னை நீ! என்னைப் பெற்றவள் நீ!
பெற பெரு வலி பொறுத்தவள் நீ!
ஒன்பது மாதம் சுமந்தவள் நீ!
உடம்பு இளைத்தவள் நீ!
படுக்கையை நாற்றமடித்தவன் நான்!
பாச மழையால் நணைய வைத்தவள் நீ!
என் புகழ், என் பெயர் அத்தனையும்
உன் வலி, உன் அன்பு எதற்கும்
ஈடாகாது, ஈடாகாது, என்றுமே!

2.

காஷாயம் உடுத்த மகனாய் கண்டாய் கனவில் அன்று!
கண்ணீர் விட்டாய், கதறி அழுதாய் அன்று!
கனவு பலித்துக் காஷாயம் பூண்டேன் இன்று!
கட்டித் தழுவி, துயரம் தீரா அன்னை நீ இன்று!
ஆசிரம ஆசிரியர்கள், அன்புத் தோழர்கள்,
அனைவரும் அழுதார்கள் உன்னோடு!
அன்னையே! வெறென் செய்வேன் நான்!
உன் பாதம் வணங்குகிறேன், போற்றுகிறேன் நான்!

3.

பிரசவ வலியால் துடித்த அன்னையே!
பிரார்த்தனையால் வலியை மறந்தனையோ?
சிவா, கிருஷ்ணா, கோவிந்தா, ஹரி, முகுந்தா ..
நாமத்தை நம்பினாய் நீ அன்னையே!
நானும் ஜனித்தேன் உன் வலி தீர, அன்னையே!
உன் பாதம் வணங்குகிறேன், அன்னையே!
அதுதான் என் கைமாறு, என் அன்னையே!

4.

மரணத்தில் உன் மரணதாகம் தீர்க்க வில்லை நான்!
மகனாக உன்னைக் காக்கவில்லை நான்!
மரணத்தின் மடியிலே இருக்கையில், அன்னையே!
ராம நாமத்தை உன் காதுகளில் ஓதவில்லை நான்!
நேரம் கடந்து வந்தவன் நான், எதையும் செய்யாதவன் நான்!
பிழைகள் எத்தனையோ செய்தவன் நான்!
அத்தனையையும், ஒப்பற்ற அன்னையே!
அமுதமான அன்பால் மன்னிக்க வேண்டுகிறேன் நான்!

5.

அன்னையே! ஆராதிக்கிறேன் உன்னையே நான்!
பவளம் நீ! பளபளக்கும் ஆபரணம் நீ!கண்மணி நீ!
அன்புத் தெய்வம் நீ!ஆத்மாவின் ஆத்மாவான அந்தராத்மா நீ! -
புகழ்கிறேன் உன்னையே அன்னையே நான்!
அன்னையாய் நீ செய்ததற்கெல்லாம் கைமாறாக
நான் செய்ததெல்லாம்உன் வாய்க்கு
நான் இட்டதெல்லாம்அன்னையே! அன்னையே!
ஒரு கைப்பிடி அரிசியே!

Sunday, May 12, 2013

சிறுத்தொண்ட நாயனார்

 சிறுத்தொண்ட நாயனார் குரு பூஜை



திருச்செங்காட்டங்குடி நீர் வளமும், நில வளமும் நிறைந்த ஒரு சிறந்த நகரம். அந்நகரிலே எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர். அந்நகரிலே மாமாத்திரர் என்னும் குலம் உயர்ந்து விளங்கியது. அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அரசர் குலத்திற்குப் படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் பணியாற்றி வந்தனர். இப்பேர்ப்பட்ட உயர்ந்த பெருங்குடியில் பரஞ்சோதியார் என்னும் நாமமுடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பல்லவ மன்னனிடம் படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்டிருந்த அவர் படைக்கல பயிற்சியில் பேராற்றல் பெற்று விளங்கினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு ஈடில்லா மாபெரும் வெற்றியை வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு வீரமிக்கவராய் வாழ்ந்த பரஞ்சோதியார் பக்தி மிக்கவராகவும் இருந்தார். எந்நேரமும் சிவ நாமத்தைச் சிந்தையிலே கொண்டு ஒழுகி வந்தார். அத்தோடு இவர் சிவனடியார்களைச் சிரம்தாழ்த்தி வரவேற்று உபசரித்து உண்பிக்கும் உயர்ந்த பண்பினையும் பெற்றிருந்தார். அடியவர் முன்பு அன்பின் மிகுதியால் தம்மைச் சிறியவராக்கிக்கொண்டு அடக்க ஒடுக்கத்துடன் உள்ளம் உருக உயர் தொண்டாற்றுவதால் இவரைச் சிறுத் தொண்டர் என்று அனைவரும் அழைக்கலாயினர்.

ஒருமுறை பரஞ்சோதியார் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வடநாடு சென்றார். வாதாபியை வென்றார். பாரெல்லாம் பல்லவன் புகழ் பேச வெற்றி முரசம் திக்கெட்டும் முழங்க தென்புலம் திரும்பி வந்தார். பரஞ்சோதியாரின் வீரத்தைப் பார்த்த பல்லவன் பெருமகிழ்ச்சிப் பூண்டான். அவையறிய அவரது வீரத்தையும், தீரத்தையும் வானளாவப் போற்றிப் புகழ்ந்தான். விருதுகள் பல வழங்கினான் மன்னன்.

ஒருநாள் அமைச்சர்கள் பரஞ்சோதியாரின் வெற்றிக்கான முக்கிய காரணத்தை விளக்கும் பொருட்டு மன்னனிடம் சென்றனர். மன்னவா! பரஞ்சோதியார் இறைவனின் திருவடிக் கமலங்களிலே நிறைந்த பக்தியுடையவர். இறைவனின் சக்திக்கும் பரஞ்சோதியாரின் பக்தியுமே இவரது வெற்றிக்குக் காரணம்! இத்தகைய சிவத்தொண்டு மிக்க நம் தளபதியை பகையரசர்கள் வெல்வது என்பது எவ்வாறு சாத்தியமாகும் என்று கூறினார். அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட மன்னவன் திகைப்படைந்தான். பரஞ்சோதியாரின் சிவபக்தியை எண்ணி எண்ணி சிந்தை குளிர்ந்தான். அதே சமயத்தில் வேதனையும் அடைந்தான். தான் அறியாமல், கடவுளுக்கு ஏதோ பெரும் பிழை செய்துவிட்டதாக எண்ணி மனம் வாடினான் மன்னன். தெய்வத்தைப் போல் போற்றி வழிபடுவதற்குரிய திருத்தொண்டரை போர்முனைக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்ந்தான். தனக்குள் கலக்கமுற்றான். மன்னன் சித்தம் தடுமாறினான்.

போர்க்களத்தில் எதிர்பாராமல் இச்சிவனடியார்க்கு ஏதாகிலும் தீங்கு ஏறபட்டிருந்தால் அஃது தமக்கு எத்ததைய பெரும் பழியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எண்ணி எண்ணிப் புலம்பினான். மன்னன் ஒரு முடிவிற்கு வந்தான். பரஞ்சோதியாரைத் தளபதி என்று எண்ணவில்லை. தொழுதற்குரிய பெரும் பேறு பெற்ற மகான் என்றே கருதினான். அரசன் அவசர அவசரமாக பரஞ்சோதியாரை வரவழைத்தான். பரஞ்சோதியார் அரசரின் கட்டளை கேட்டு அரண்மனைக்கு வந்தார். அரசன் பணிவுடன் அருந்தவத்தினரே! தங்களது மகிமையை உணராமல் தங்களைப் போருக்கு அனுப்பி பல தொல்லைகள் கொடுத்ததற்குப் பொறுத்தருள வேண்டும். இந்த எளியேனுக்காக தாங்கள் எல்லையில்லா இன்னல்களைப் பல காலம் அனுபவித்தீர்கள். இனியும் தாங்கள் எமக்கு ஏவல் புரிதல் ஆகாது. அருள் புரிதல் வேண்டும். தாங்கள் சித்தம் போல் சிவனார் அடிபோற்றி தாங்கள் விரும்பியவாறு சிவநெறியில் சிவத்தொண்டுகள் பல புரிந்து ஒழுகுவீர்களாக என்று இறைஞ்சி நின்றான்.

மன்னனின் மொழி கேட்ட பரஞ்சோதியார் திடுக்கிட்டார். செய்வதறியாது சிலையாக நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. முடிவில் மன்னனின் ஆணையை சிரமேற்கொண்டார். நடப்பது யாவும் இறைவனின் அருட் செயலே என்று மனதிலே உறுதி பூண்டார். மன்னன் பரஞ்சோதியாருக்கு நிறையப் பொன்னும் பொருளும் வழங்கினான். பரஞ்சோதியார் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். மன்னன் அவரை ராஜ மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தான். பல்லவ மன்னனிடமிருந்து பொன்னும் பொருளும் பெற்ற பரஞ்சோதியார் அவற்றை ஆலய திருப்பணிக்கும், அடியார்களைப் பேணுவதற்கும் செலவு செய்து வரலானார். அல்லும் பகலும் பக்தி மார்க்கத்தில் வாழத் தொடங்கிய பரஞ்சோதியார் நற்குடியிற் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்னும் பெயருடைய மங்கை நல்லாளை மணம் புரிந்துகொண்டார்.

அவரது மனைவியாரும் அவரைப் போலவே சிவனாரிடத்தும், அவரது அடியார்களிடத்தும் நல்ல பக்தியும், அன்புடையவராகவும் இருந்தார். பரஞ்சோதியார் அவ்வம்மையாரோடு இல்லறத்தை முறைப்படி நடத்தத் தொடங்கினார். குறள்வழி வாழும் இவ்வில்லறத்தார் இன்பத்தின் முழுப் பயனையும் பெற்றுக் கருத்தொருமித்த காதலர்களாக வாழ்ந்து வந்தனர். பரஞ்சோதியாரும் அவரது மனைவியாரும் தொண்டர்களை அன்போடு வரவேற்று அமுதளித்து விருந்தினர் முன்னுண்டு தாங்கள் பின் உண்ணும் முறை அறிந்து ஒழுகினர். சிவத்தொண்டர்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையெனாது அளித்து அமுதூட்டி மகிழ்ந்தனர். இத்தகைய நல்ல இல்லத்தாருக்கு சிவபெருமானின் அருளாள் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்குச் சீராளன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்கள். இவ்வாறு வாழ்ந்து வந்த சிறுத்தொண்டரின் பெருமையையும், பக்தியையும் உலகோர்க்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். அன்று ஒருநாள் சீராளன் பள்ளிக்கச் சென்றிருந்தான். பெற்றோர்கள் விருந்தினரை எதிர்பார்த்து வாயிலிலே நின்றுகொண்டிருந்தனர்.

நெடுநேரமாகியும் விருந்துண்ண ஒரு சிவனடியார் கூட வராதது கண்டு கவலை மிகக்கொண்ட சிறுத்தொண்டர் விருந்தினரைத் தேடி வெளியே சென்றார். சிறுத்தொண்டரின் மனைவி கவலையோடு உள்ளே சென்று சிவநாமத்தை ஜபிக்கத் தொடங்கினாள். அதுசமயம் சிவபெருமான் பைரவ சந்நியாசியாக வேடம் பூண்டு பரஞ்சோதியார் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். எம்பெருமான் வெளியே நின்றபடியே சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா? என்று கேட்டார்.அடியாரின் குரலைக் கேட்டு மனைக்குள் இருந்த சந்தன நங்கை என்னும் பணிப்பெண் வெளியே ஓடிவந்து, சிறுத்தொண்டர் எங்கு போயிருக்கிறார் என்பதை விளக்கி விட்டு அகத்து வந்து அமருமாறு பணிவன்போடு கேட்டுக் கொண்டாள். பணிப்பெண் மொழிந்ததைக் கேட்ட இறைவன் அப்படியாயின் பெண்கள் தனித்து இருக்கும் இடத்தில் யாம் தங்குவதில்லை என்று கூறினார்.

இறைவன் மொழிந்ததைக் கேட்டு உள்ளிருந்து ஓடிவந்த சிறத்தொண்டரின் மனைவி சுவாமி! சற்று பொறுங்கள். என் நாதன் எப்படியும் இப்பொழுது வருவார் என்று கூறினாள். அதற்கும் அவ்வடியார் இயைந்து கொடுக்கவில்லை. அதுகண்டு அம்மையார் மீண்டும் சுவாமி ! தொண்டர்களுக்கு அமுது செய்விக்காமல் நாங்கள் உண்பதில்லை. நாடோறும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அமுதுண்ணும் மனையில் இன்று இதுவரைத் திருத்தொண்டர் ஒருவர் கூட வந்தாரில்லை. அது கருதியே என் நாயகன் அடியார்களைத் தேடிச் சென்றுள்ளார். அவர் எப்படியும் இப்பொழுது வந்துவிடுவார். என் ஐயன் வந்ததும் தங்களது அருட் தோற்றத்தைக் கண்டால் மட்டில்லா மகிழ்ச்சி கொள்வார். அதனால் சுவாமி எங்ஙனமாகிலும் அருள்கூர்ந்து மனைக்குள் எழுந்தருளல் வேண்டும் என்று விண்ணப்பித்தாள். அம்மையார் விண்ணப்பத்தை பைரவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வடபுலத்திலிருந்து யாம் புறப்பட்டு வந்தது தொண்டரைக் காண்பதற்காகத்தான். அவரின்றி யாம் மனைக்குள் தங்குவதாக இல்லை. எதற்கும் யாம் கோயிலுள்ள ஆத்தி மரத்தின் கீழே காத்திருக்கிறோம். அவர் வந்தால் எம் அடையாளங்களைக் கூறி அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றார் சிவபெருமான்! சிவத்தொண்டரின் மனைவியோ வேதனையோடு உள்ளே சென்றாள். பைரவர் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் சிவனடியார்கள் யாரையும் காணாமல், வாட்டத்தோடு மனையிற் புகுந்தார் சிறுத்தொண்டர். கணவரின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்டு மனைவியார் பைரவரின் திருக்கோலத்தைக் கணவருக்கு நன்றாக விளக்கிக் கூறி அன்னார் ஆத்தி மரத்தடியே அமர்ந்திருப்பார் என்பதையும் இயம்பினாள். அதுகேட்டு சிறுத்தொண்டர் உள்ளமும் உடலும் பூரித்துப் போனார். உயர்ந்தேன் என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு சற்றும் தாமதியாமல் ஆலயத்திற்கு விரைந்தார். ஆத்தி மரத்தடியே வீற்றிருக்கும் அருள் வடிவான பற்றற்ற துறவியின் ஒப்பற்ற அடிதனைப் போற்றி வணங்கி நின்றார். சிறுத்தொண்டரை ஏற இறங்கப் பார்த்த பைரவர் - நீ தான் பெருமை பெற்ற சிறுத்தொண்டரோ என்று கேட்டார். சிறுத்தொண்டர் முகம் மலர, தொண்டரைக் காக்க வந்த தவமிக்க எந்தையே! உலகில் எதற்கும் எத்தகைய தகுதியும் இல்லாத இச்சிறியோனை அந்தி வண்ணர் அடிபோற்றும் அன்பர்கள் இப்பெயரால் அழைப்பதுண்டு. இவ்வடியேனுக்கு அத்தகுதியிருப்பதாகத் தெரியவில்லை. சுவாமி! இனிமேல் சற்றும் தாமதியாமல் இந்த ஏழையின் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்து அருள வேண்டும் என்று மிக்க பணிவன்போடு வேண்டி நின்றார்.

அருந் தவத்தீர்! ஐயம் ஒன்றுமில்லை. எமக்குத் தேவையான உணவை வழங்குதல் என்பது உம்மால் ஆகாத காரியம் ஆயிற்றே. ஐயன் இங்ஙனம் எண்ணுதல் ஆகாது. சுவாமி! திருவாய் மலர்ந்து அருளுங்கள். திருவாக்கின்படியே, அமுது செய்விக்கின்றேன். அப்படியா சிறுதொண்டரே! மிக்க மகிழ்ச்சி. நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் உண்போம். பசுவை வதைத்துதான் உண்பது வழக்கம். அக்காலம் இன்றுதான் வந்தது. உம்மால் அத்தகைய பசுவின் மாமிச உணவைச் சமைத்து அமுது செய்ய முடியுமா என்றுதான் சிந்திக்கிறேன். சுவாமி! சாலவும் நன்று! இந்த எளியேனுக்கு இதுவா ஒரு பெரிய காரியம். என்னிடம் மூவகை ஆநிரைகள் உண்டு. ஐயன் எழுந்தருளி எத்தகைய ஆநிரை வேண்டுமென்று பணிகின்றீர்களோ, அதனையே பக்குவமாகச் சமைத்து அளிக்கத் தவறேன். பசுவென்றால், நீர் எண்ணுவதுபோல் விலங்கினத்தைப் பற்றி நாம் கூறவில்லை. யாம் குறிப்பிடுவது பசு, ஐந்தாண்டு பிராயமுள்ள இளம் ஆண் பிள்ளையைத்தான்! அந்த ஆண் பிள்ளைக்கு அங்கங்களில் எவ்வித பழுதும் இருக்கக்கூடாது ! அந்த ஆண் பிள்ளையையும், யாம் கூறுவது போன்ற பக்குவத்தில் கறி சமைத்தல் வேண்டும். ஒரு குடிக்கு ஒரு மகனாய்ப் பிறந்துள்ள அப்பாலகனின் உடலைத் தாயார் பிடிக்கத் தந்தையார் அரிந்து, அதனைச் சமைத்தல் வேண்டும். அப்பொழுது மனையிலுள்ளோர் எவரும் வருந்தக்கூடாது. ஒரேபோல் அனைவருமே சந்தோஷத்துடனேயே இருத்தல் வேண்டும். ஐயனின் ஆணை இதுவாயின் அங்ஙனமே அமுது அளிக்கிறோம். நன்று! நீவிர் உடனே சென்று விருந்திற்கான ஏற்பாட்டை முடித்துவிட்டு அமுதுண்ண வேண்டிய தருணத்திற்கு அழைத்துச் செல்லும். அதுவரை யாம் இங்கேயே காத்திருப்போம்! சீக்கிரம் ஆகட்டும். நான் மிகவும் பசித்திருக்கிறேன் என்று பைரவர் கூறினார்.

சிறுத்தொண்டர் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தமது மாளிகையை விரைவாக வந்து அடைந்தார். பெருமனைக் கிழத்தியிடம் பைரவர் பகர்ந்ததை அப்படியே ஒன்றுவிடாமல் விவரமாகக் கூறினார். அவர் மொழிந்தது கேட்டு மனைவியார் எம்பெருமான் அருளியவாறு ஒரு குடிக்கு ஒரு மகனை எங்கு சென்று தேடுவோம் என்றாள். சிறுத்தொண்டர் நற்குண நங்கையே ! நாம் பெற்ற அருந்தவப் புதல்வனையே அதன் பொருட்டு அழைப்போம் என்றார்.

அம்மையாரும், அவரது மொழிக்கு இயைந்தாள். ஆசானிடம் கல்வி பயிலச் சென்றிருக்கும் நமது அன்புச் செல்வனை அழைத்து வாருங்கள் என்று கூறினாள். சிறுத்தொண்டர் பெருமகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று மகனை அழைத்துக்கொண்டு மனைக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார். எம்பெருமான் உண்மையான சீராளனை மறைத்து மாயச் சீராளனை அவர்களிடம் அனுப்பியதனை அவர்கள் எங்ஙனம் அறிய இயலும். சீராளனை எதிர்பார்த்து, வீட்டுத் திண்ணையோரமாக நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், எதிர் சென்று பொன்னிற வண்ணப் பெருமேனியனாகிய மகனை வாரி அணைத்து உச்சி மோந்தவாறு உள்ளே அழைத்துச் சென்றாள். ஒன்றுபட்ட மனமுடைய கணவனும், மனைவியும் சேர்ந்து தெய்வத் தன்மை பொருந்திய சீராளப் பெருமானைச் சீரோடு அரிந்து, பாலோடு, பசுந்தேனோடு, பச்சைக் காய்கறிகளோடு சேர்த்து பக்குவமாகச் சமைப்பதில் முனைந்தனர். உடனே அடிகளார் பைரவச் சங்கரரை அழைத்துவர ஆத்தி மரத்தடிக்குப் புறப்பட்டார். திருவெண்காட்டு நங்கையாரும், சந்தான தாதியாரும் வீட்டைத் தூப தீபத்தாலும் நிறை குடங்களாலும் அலங்காரம் செய்தனர். நன்றாக வீட்டை கோமய நீரால் மெழுகினர். மாக்கோலமிட்டனர். வண்ண மலர்களைப் பரப்பினர். ஆங்காங்கே மலர் மாலைகளும், முத்து மாலைகளும் தோரணங்களும் அழகுறத் தொங்க விட்டனர். விருந்தினரைப் பேணும் பேராற்றல் பெற்ற அடியார் ஆராக் காதலுடன் நமச்சிவாய மந்திரத்தை நினைத்தவாறு பக்திப் பெருக்குடன் ஆத்தி மரத்திற்கு வந்து பைரவரை அழைத்துக்கொண்டு தமது திருமனையை அடைந்தார். பைரவரை வரவேற்று உபசரிக்க ஆவலோடு நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், பைரவரது திருவடிக் கமலங்களில் நறு மலரைக் கொட்டிக் குவித்து கும்பிட்டு அழைத்துக்கொண்டு மனையுள் புகுந்தார்.

மலர் பரப்பிய ஆசனத்தில் அவரை அமரச் செய்தார். அம்மையார் நீர்வார்க்க, அடிகளார் பாதத்தை விளக்கினார். திருவடிகளுக்குச் சந்தனம் தடவி மலரால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டிப் பாத பூஜை செய்த நன்னீரைச் சென்னி மீதும் மனைவியார் சிர மீதும் வீடு முழுவதும் தெளித்தார். இருவரும் அமுது படைக்க ஐயனின் கட்டளையை எதிர்பார்த்து நின்றனர். அதற்கு ஏற்ப அடிகளார் திருவாய் மலர்ந்து, எல்லாக் காய்கறிகளையும் ஒருங்கே படைத்தாக வேண்டும் என்றார். அடியாரின் விருப்பப்படியே அமுது படைத்தனர். அப்பொழுது பைரவர், எல்லா உறுப்புக்களையும் படைத்தீர்களோ? என்று கேட்க, திருவெண்காட்டு நங்கையார், தலை இறைச்சியை மட்டும் அமுதுக்கு உதவாதென்று சமைக்கவில்லை என்று கூறினாள். அதற்கும் இறைவன் அதனையே யாம் உண்போம் என்றார். சந்தன நங்கையார், நான் அதனைச் சமைத்துப் பக்குவம் செய்து வைத்துள்ளேன் என்றவாறு உள்ளே சென்று தலையிறைச்சியைக் கொண்டு வந்தாள். அம்மையாரும், நாயனாரும் சந்தன தாதியாரின் திறத்தினையும்,பேராற்றலையும், தக்க சமயத்தில் தங்களைக் காத்த நிலையையும் எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அம்மையார் அவ்விறைச்சியையும் அடியவருக்கு படைத்தாள். சிறுத்தொண்டர், அன்போடு அடியாரை நோக்கி சுவாமி! அமுது செய்து அருளலாமே! என்று வணங்கி நின்றார். இறைவன் மேலும் சோதிக்கலானார். அடியார்கள் எவரையாவது அழைத்து வாரும். யாம், தனித்து உண்பதில்லை என்றார். அடியவரின் இம்மொழி கேட்டு சிறுத்தொண்டர் மனம் வருந்தினார். வேதனை மேலிட அடியார்களை எங்ஙனம் தேடி பிடிப்பது ? என்ற கலக்கத்துடன் வெளியே சென்றார். இருமருங்கும் நோக்கி அடியார்கள் எவரையும் காணாமல் மனச்சோர்வுடன், பைரவர் முன் ஏக்கமுடன் வந்து நின்றார். சுவாமி! எம்மைப் பொறுத்தருள்க. சிவனடியார்களை எங்கு தேடியும் காணவில்லை. அடியவர்களை போலவே அடியேனும் திருவெண்ணீறு அணிந்துள்ளேன் என்று பணிவன்போடு பகர்ந்தார் திருத்தொண்டர். அப்படியா? நன்று! வருந்தாதீர். நீரும் ஒரு சிவனடியார்தானே! தாராளமாக நீரே எம்முடன் இருந்து உண்ணலாம் என்று ஆணையிட்டார் பைரவர்.

அம்மையாரை நோக்கி, இருவருக்கும் பக்கத்தில் ஓர் இலை இட்டு, எமக்குப் படைத்தாற் போலவே இறைச்சியும், அன்னமும் படையும் என்று மொழிந்தார். திருவெண்காட்டம்மையாரும், பரமன் பணித்த படியே படைத்தாள். சிறுத்தொண்டர் அமுதுண்ண அமர்ந்தார். தாம் உணவு உண்டபின் தான் அடியார் உண்ணுவார் என்னும் கருத்திற்கு ஏற்ப சிறுத்தொண்டர் உணவில் கையை வைத்தவாறு உண்ண புகுந்தார். பைரவருக்கு கோபம் மேலிட்டது. அவரைத் தடுத்தார். உண்பதற்கு உமக்கு என்ன அவசரம் ; ஆறு மாத காலமாக பட்டினியாக இருக்கிறேன் நான். தினந் தவறாமல் உண்ணும் உமக்குப் பசி அதிகமோ? நன்று! நன்று! உம்முடன் யாம் உண்பதாக இல்லை. நம்முடன் உண்ண உமக்கு மகனிருந்தால் அழைத்து வாரும்! என்று ஆணையிட்டார். எம்பெருமான் மொழிந்தது கேட்ட நாயனார் இடியேறுண்ட நாகம்போல் நடுங்கினார். ஐயனே! அவன் இப்பொழுது உதவான் என்றார். சிறுத்தொண்டரே! அவன் வந்தால்தான் நாம் உண்போம். அவனைப் போய் எப்படியாவது தேடி அழைத்து வாரும் என்று திருவாய் மலர்ந்தருளினார். சிறுத்தொண்டர், சிவபெருமானை மனதில் எண்ணியபடியே தமது அன்பிற்கினிய மனைவியாருடன் வெளியே வந்தார். இருவரும் செய்வதறியாது திகைத்தனர். அடியவருக்கு அமுது அளிக்க தங்களுக்கு ஏற்பட்ட பெரும் தடையை எண்ணிக் கலங்கினர். சிறுத்தொண்டர் நமச்சிவாய மந்திரச் சக்தியால் வாய்விட்டு, சீராளா! வருக!! என்று அழைத்து விட்டார். அம்மையாரும், கண்ணே! மணியே ! சீராளா வாராய்! சிவனடியார் நாம் உய்யும் நிலைபெற உடன் இருந்து திருவமுது செய்ய உன்னையும் அழைக்கின்றார் வா மகனே! வா! என்று உரக்க அழைத்தாள்.

அப்பொழுது எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் சீராளன் பள்ளிச் சென்று திரும்பி வரும் பிள்ளையைப்போல் சதங்கை ஒலிக்க ஓடிவந்தான். பெற்றோர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். எம்பெருமான் பைரவராக வந்து மாயம் புரிவதை அவர்கள் எவ்வாறு அறிய இயலும்! அம்மையார் மகனை வாரித் தழுவி மகிழ்ந்து உச்சிமோந்து கணவரிடம் கொடுத்தாள். சிறுத்தொண்டரும் அழகு மைந்தனை அன்போடு அணைத்துப் பேருவகை பூண்டார். சிறுத்தொண்டருக்கும், அவரது மனைவியாருக்கும் ஏற்பட்ட வியப்பிற்கு எல்லையே இல்லை. சீராளனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பைரவரைக் காணோம். உணவை நோக்கினார். கலத்தில் கறிகளில்லை. இல்லத்தில் பேரொளி பிறந்தது. கயிலை மலை மீது களிநடனம் புரியும் மாதொரு பங்கன் மலைமகளுடன் வெள்ளி விடையின்மேல் அருட்காட்சி தந்தார். பூதகணங்களும், தேவர்களும், முனிவர்களும், விஞ்சையர்கள் முதலியோர்களும் புடைசூழ்ந்து வேதகானம் எழுப்பினர். சிறுத்தொண்ட நாயனாரும் திருவெண்காட்டு நங்கையும், சீராளனும், சந்தன தாதியும் சிரமீது கரம் உயர்த்தி சிவநாம மந்திரத்தை ஓதினர்; நிலத்தில் வீழ்ந்து வணங்கினர்.

ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றனர். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அன்பே சிவம் என்று கருத்தில் கொண்டு, சிவபோதை நிலையில் நின்று, அருந்தவப் புதல்வனையே, அடியார் மனதிற்கேற்ப அரிந்து விருந்து செய்ய இயைந்த சிறுத்தொண்ட நாயனாருக்கும், திருவெண்காட்டு நங்கையாருக்கும், சந்தனத் தாதியாருக்கும், தம்மை அரியும்போது சிவநாமத்தை நினைத்து புன்முறுவல் பூத்த சீராளத் தேவனுக்கும், எவருக்குமே கிட்டாத பெரும் பேற்றை அளித்தார் எம்பெருமான். திருசடைநாதரின் பொற்கழல் பாதத்தின் கீழ் சிறுத்தொண்டரும், உமையம்மையார் திருவடியின் கீழ் திருவெண்காட்டு நங்கையும், சந்தனத் தாதியும், வெற்றிவேல் முருகனின் செஞ்சேவடியின் கீழ் சீராளத் தேவனும் அமர்ந்து இன்புற்றிருக்கும் சிவலோகப் பிராப்தியை அந்நால்வர்க்கும் அளித்து அருள் செய்தார் அம்பலத்திலே ஆடுகின்ற ஆனந்தக் கூத்தன்.

குருபூஜை: சிறுத்தொண்டர் நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

Saturday, April 27, 2013

வளமான வாழ்வருளும் வராகமூர்த்தி

வளமான வாழ்வருளும் வராகமூர்த்தி



இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமியை பந்தாக்கி பாதாள லோகத்திற்கு எடுத்து சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி பூமாதேவி மகாவிஷ்ணுவிடம் வேண்டினாள். அவரும் வராக அவதாரம் எடுத்து பாதாளம் சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டார். அந்த ஆதிவராகப் பெருமாள் திருவருள்புரியும் பல தலங்களுள் கும்பகோணமும் ஒன்று. தாயார் அம்புஜவல்லியுடன் வராகதீர்த்தத்தையே தல தீர்த்தமாகக் கொண்டு பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினப்படி பூஜைகளை வராகமூர்த்தி ஏற்றருளும் திருத்தலம் இது. கும்பகோணத்தில் மகிமை மிக்க மகாமகத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே இந்த வராகமூர்த்தி எழுந்தருளிவிட்டதால் இவர் ஆதிவராகர் என வணங்கப்படுகிறார். இவரே கும்பகோணத்தில் திருவருள்புரியும் தெய்வங்கள் அனைவருக்கும் முதன்மையானவர்.

மாசி மகத் திருவிழாவின் போது கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்ரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்று ஆதிவராகர் என ஐம்பெரும் மூர்த்திகளும் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். மூலக்கருவறையில் ஆதிவராகர் பூமாதேவியை தன் இடது பக்க மடியில் அமர்த்திய திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். பூமாதேவி திருமாலை வணங்கிய நிலையில் அமர்ந்தருள்கிறாள். தினமும் இந்த ஆதிவராகருக்கு அர்த்தஜாம பூஜையின் போது கோரைக்கிழங்கு மாவுருண்டையை நிவேதனமாகப் படைக்கின்றனர். நாம் அமர, படுக்கப் பயன்படுத்தும் பாய், கோரை புல்லால் ஆனது. இந்த கோரைப் புல்லின் அடியில் முளைப்பதே கோரைக்கிழங்கு. அதைப் பொடித்து அதனுடன் அரிசிமாவு, சர்க்கரை, நெய் மற்றும் வாசனைப் பொருட்கள் கலந்து உருண்டையாகப் பிடித்து வராகமூர்த்திக்கு நிவேதிப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு அதை பிரசாதமாகத் தருகின்றனர். பூமியை இரண்யாட்சனிடமிருந்து மீட்டு வந்த பெருமாள் என்பதால், பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு கலந்த நிவேதனம் இந்த மூர்த்திக்கு படைக்கப்படுகிறது.

இத்தல உற்சவமூர்த்தி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தன் இடது பாதத்தை ஆதிசேஷனின் மீது வைத்தபடி அருட்காட்சி தருகிறார். அவருக்கு முன்பாக உள்ள வராக சாளக்கிராமத்தில் சங்கு, சக்ர ரேகைகள் உள்ளன. அந்த சாளக்கிராமத்திற்கு தினமும் பாலபிஷேகம் நடத்தப்படுகிறது. பிராகாரத்தில் விஷ்வக்சேனர், நிகமாந்த மகாதேசிகர் ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. இத்தலத்தில் உள்ள துளசி மாடத்தின் கீழ் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இந்த வராகசுவாமியை வணங்கி தீபமேற்றி வழிபடுகின்றனர். வராக தீர்த்தம் ஆலயத்திற்கு வெளியே உள்ளது. சார்ங்கபாணி, சக்ரபாணி ஆலயங்களுக்கு மிக அருகே இத்தலம் உள்ளது. மாசிமகத்திருவிழா இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வராக ஜயந்தி அன்று ஆலயம் திருவிழாக்கோலம் காணும். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, நிலம் வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இந்த ஆதி வராகர் திருவருள் புரிவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தம் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து புத்தாடை அணிவித்து தம் நன்றியைத் தெரிவிக்கின்றனர்.

Thursday, April 25, 2013

இன்று இசை ஞானியார் குருபூஜை!



இன்று இசை ஞானியார் குருபூஜை!






இசைஞானியாரின் குருபூஜை சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. அறுபது நாயன்மார்களுடன் இசை ஞானியாரின் குடும்பமும் சேர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார் ஆயினர். தாம், தம் கணவர், தம் புதல்வர் என்று குடும்பமே நாயன்மார்களாக உள்ள பெருமையைப் பெற்றனர். சடையனார் வாழ்க்கைத் துணைவியான இவ்வம்மையார் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் பெற்றெடுத்துப் பெரும் பேறு பெற்று உய்ந்தார்கள். இச்சைவத் திருவாட்டியாரின் புண்ணிய பயனையும், பெருமையையும், புகழையும் உரைக்கத்தான் ஒண்ணுமோ ? சித்தத்தைச் சிவன்பாற் வைத்து நித்தம் நித்தம் புற்றிடங்கொண்ட பெருமானின் ஞானக் கதிர்களாகிய திருத்தாள்களை போற்றிப் பணிந்து வந்தவாறு பரவை நாச்சியாருடன் இன்புற்று வாழ்ந்து வந்தார் சுந்தரர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு சேரமான் பெருமாள் நாயனாரைக் கண்டுவர வேண்டும் என்ற காதல் உள்ளத்திலே ஊற்றெடுத்து பெருகியது. ஒரு நன்னாள் பரவையாரிடம் விடை பெற்றுப் பூங்கோவில் அமர்ந்து பெருமானின் பொற்கழல்களை பணிந்து அடியார் புடைசூழ திருவஞ்சைக்களம் புறப்பட்டார். சோழநாட்டுத் தலங்களை கண்குளிரக் கண்டு வணங்கியவாறு கொங்கு நாட்டிலுள்ள திருப்புக கொளியூரை அடைந்தார். வேதியர் வாழ்கின்ற தேரோடும் திருவீதி வழியாக வந்து கொண்டிருந்த சுந்தரர் அவ்வீதியில் எதிர் எதிராக அமைந்துள்ள இரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியை கண்ணுற்றார். ஒரு வீட்டில் அலங்காரமும் ஆனந்தமும் பொங்கிப் பெருகி, மங்கல வாத்தியங்கள் முழங்கியவாறு இருக்க மற்றொரு வீட்டில் அமங்கலமான தோற்றமும், அழுகையும் நெஞ்சை உருக்கும் சோகக் காட்சியும் இருக்கக் கண்டார்.




சுந்தரர், அங்குள்ளோரிடம், இவ்விரு வீட்டார்க்கும் உள்ள இன்ப துன்பங்களுக்கு காரணம் யாது? என்று வினவினார். அதற்கு அந்தணர்கள், சுவாமி! இவ்விரு வீட்டிலும் இருந்த இரு சிறுவர்கள், அருகிலுள்ள மடுவிற்கு நீராடச் சென்றார்கள். அதில் ஒருவனை முதலை விழுங்கி விட்டது. தப்பிப் பிழைத்த மற்றொருவனுக்கு இப்பொழுது உரிய பருவம் வந்ததும் பெற்றோர்கள் முப்புரி நூல் அணியும் சடங்கினைச் செய்து மகிழ்கிறார்கள் என்றனர். இதற்குள் அச்சிறுவனை இழந்து அழுது கொண்டிருந்த பெற்றோர்கள், சுந்தரர் எழுந்தருளியுள்ளார் என்று கேள்வியுற்று வேதனையை மறந்த நிலையில் விரைந்தோடி வந்து அவரது திருவடித் தாமரைகளைப் பணிந்தனர். அருகிலுள்ளோர் மூலம் சிறுவனை இழந்த பெற்றோர்கள் இவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட சுந்தரர், சோகம் நீங்கி; முகமலர்ச்சியுடன் தம்மை வந்து வணங்கிய பெற்றோர்களைக் கண்டு, நீங்களா மகனை இழந்தவர்கள்? என்று வியப்பு மேலிடக் கேட்டார். ஆமாம் சுவாமி ! அந்நிகழ்ச்சி நடந்து ஆண்டுகள் பல தாண்டிவிட்டன. ஆனால் இப்பொழுது ஐயன் எழுந்தருளியது கண்டு, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இம்மையில் நாங்கள் பெற்ற பேறு எவர் பெறுவர் என்று கூறி மீண்டும் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்பெற்றோர்களின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட சுந்தரர் அவர்களது துயரை எப்படியும் தீர்ப்பது என்ற உறுதியில் அவர்களிடம் குழந்தையை விழுங்கிய மடு எங்குள்ளது? என்று கேட்டார். பெற்றோர்கள் சுவாமிகளை அழைத்துக்கொண்டு மடுவிற்குப் புறப்பட்டனர்.




சுந்தரரைத் தொடர்ந்து சிவ அன்பர்களும் சென்றனர். மடுவின் கரையை அடைந்தனர். பெற்றோர்கள் சுந்தரரை வணங்கி, சுவாமி ! எங்கள் குலக் கொழுந்தை விழுங்கிய மடு இதுதான் என்று கூறினார். சுந்தரர் பெருமாளைத் தியானித்தார். ஆக்கவும், அழிக்கவும் வல்ல அவினாசியப்பரை துதித்து ஏற்றான் மறக்கேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். தேமதூரத் தமிழில் நான்காவது பாட்டைப் பாடி முடிப்பதற்குள் பெரு முதலை ஒன்று நீரிலிருந்து வெளிப்பட்டு பிள்ளையைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. அன்பு பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்களது பச்சிளம் பாலகனை வாரித் தழுவி உச்சிமோந்து அகமும், முகமும் மலர சிறுவனுடன் சுந்தரர் திருவடியைத் தொழுதனர். சுந்தரரின் தெய்வீகச் சக்தியைக் கண்டு பக்தர்கள் அதிசயித்து வியந்து போற்றினர். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க என்ற கோஷம் வானைப் பிளந்தது. சுந்தரர் அவர்களை வாழ்த்தி அருளினார். அவிநாசியப்பர் ஆலயம் சென்று, பாடிப் பேரின்பம் பூண்டு, மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரரின் வியக்கத்தக்க அருட்செயலையும், தமது நகருக்கு எழுந்தருளுவதையும் கேள்வியுற்ற சேரர் கொடுங்கோளூரைக் கவின்பெற அலங்கரிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். சுந்தரர் வருகையை நாடு முழுவதும் பறையறைந்து அறிவித்தார். சேரப் பெருந்தகையார் யானை மீது புறப்பட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும் மற்ற பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும், புறப்பட்ட சேர வேந்தன், சுந்தரரை எதிர்கொண்டு அழைக்க எல்லையிலேயே காத்திருந்தார். சுந்தரர் அன்பர்களுடன், தமது சிவயாத்திரையை முடித்தவாறு எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார் யானையினின்றும் இறங்கினார். விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி அகமகிழ்ந்தார். கடல் வெள்ளம்போல் திரண்டு வந்த மக்கள் விண்ணெட்ட வாழ்த்தொலி எழுப்பினர்.




முரசு ஒலிக்க - சங்கு முழக்க - பறை அலற - மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ, சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானை மீது அமரச் செய்தார். தாமும் பின்னால் அமர்ந்து, வெண் கொற்றக் குடையினைப் பிடித்தார். அனைவரும் அரண்மனையை அடைந்தனர். மன்னனின் எல்லையில்லாப் பக்திக்குத் தலைவணங்கி எல்லையில் கூடியிருந்த பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இரு ஞானமூர்த்திகளும் அரண்மனைக்குள் எழுந்தருளினர். சேரமான் பெருமாள் சுந்தரரைத் தமது அரியணையில் அமரச் செய்து வழிபாடு புரிந்து இன்புற்றார். இரு சிவச் செல்வர்களும் மாகோதை மாநகரில் இருந்தவாறே அடுத்துள்ள சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று பதிகம் பாடிப் பரமனைக் கண்டுகளித்து வந்தனர். மாகோதை நகரில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வழிபட்டு வரும் சேரரும், சுந்தரரும், ஆலயத்துள் செல்லும் முன் அடுத்துள்ள அழகிய பொய்கையில் நீராடிச் செல்வது வழக்கம். ஒருநாள் இருவரும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்பொழுது சுந்தரர் மட்டும், சற்று முன்னதாகவே நீராடலை முடித்துக்கொண்டு இறைவன் திருமுன்னே வழிபடச் சென்றார். சுந்தரரின் உடல் புளகம் போர்த்தது; உள்ளத்திலே அருள் உயர்வு பொங்கி எழுந்தது. சைவப் பழமான சுந்தரர் பேரொளிப் பிழம்புபோல் ஆனார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. எம்பெருமான் திருமுன் பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரை அறியாத உள்ளக்கிளர்ச்சியும், உடல் நெகிழ்ச்சியும் அவருக்கு உலக மாயையிலிருந்து விடுபடும் பேரின்ப சக்தியைக் கொடுத்தது.




அருளே வடிவான சுந்தரர் தலைக்குத் தலைமாலை என்னும் பதிகத்தைக் கயிலையரசன் செவிகுளிரப் பாடிப் பரவினார். சுந்தரரின் செந்தமிழ்த் தேன் அமுதத்தை அள்ளிப் பருகி மெய்யுருகிய நீலகண்டர் தமது அன்பு ஆலால சுந்தரரைத் திரும்பவும் தம்மோடு அழைத்துக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டார். அதற்கேற்ப எம்பெருமான் அமரர்களை அழைத்து ஆலாலசுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வருவீர்களாக! என்று ஆணையிட்டார். அமரர்கள் வெள்ளை யானையுடன் புறப்பட்டு திருவஞ்சைக்களம் அடைந்தனர். ஆரூரைக் கண்டு வணங்கினர். ஆண்டவனின் ஆணையைக் கூறி வெள்ளை யானையில் அமர்ந்து கயிலைக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டனர். அரனார் அருள் வாக்கிலே, செய்வதறியாது நின்ற சுந்தரர் எம்பெருமானை நினைத்து துதித்தார். தேவர்கள், அவரை வலம் வந்து வெள்ளை யானையின் மீது எழுந்தருளச் செய்தனர். சுந்தரர் தமது தோழராம் சேரர் நினைவாக வெள்ளை யானை மீதமர்ந்து விண்ணை நோக்கிப் புறப்பட்டார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். பொய்கையினின்றும் வந்த சேரவேந்தன் சுந்தரரைக் காணாது திகைத்தார். சுந்தரர் திருக்கயிலை மலைக்கு வெள்ளை யானையில் எழுந்தருளுவதைத் தமது தபோ வலிமையால் அறிந்து கொண்டார் சேர மன்னர்; அக்கணமே தாமும் ஆரூரரைத் தொடர்ந்து செல்லத் திருவுள்ளங் கொண்டார். சோழன் வெண்புரவியில் அமர்ந்தார். குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரத்தை இடையறாது ஓதினார். குதிரை காற்றினும் கடுகப் புறப்பட்டது. வெள்ளை யானையை அணுகி, வலம் வந்தது. மன்னர் சுந்தரரை வணங்கி வழிபட்டார். மன்னர் புரவியில், யானைக்கு முன்னதாகவே கயிலைமலையை நோக்கிப் புறப்பட்டார். சுந்தரர் தம்மை வணங்கி முன்னால் செல்லும் மன்னனைக் கண்டார். தமக்குள் புன்முறுவல் பூத்தார்.




வெள்ளை யானையில் வந்து கொண்டிருந்த சுந்தரர் தானெனை முன் படைத்தான் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு கயிலைமலைக் கோவிலின் தென்திசை வாயிலை அடைந்தார். வேகமாக வந்த சேரமான் வாயில் அடைத்திருப்பது கண்டு திகைத்தார். அங்கேயே சுந்தரர் வருகையை எதிர்பார்த்து நின்றார். சுந்தரர் வந்தார். அங்கே நின்று கொண்டிருந்த சேரமான் பெருமாள் சுந்தரரை நமஸ்கரித்தார். இரு சிவச் செம்மல்களும் தமது வாகனங்களை விட்டிறங்கி, திருவாயில்கள் பலவற்றைக் கடந்து, திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரர் அவ்வாயிலில் தடைபட்டு நின்றார். சுந்தரர் மட்டும் இறைவன் திருவருளாள் எம்பெருமான் திருமுன் சென்றார். பொன்மயமான கயிலை மாமலையில் வேத முழக்கங்களும், துந்துபி நாதங்களும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன. முனிவர்கள் சிரமீது கரம் உயர்த்தி சுந்தரரை வரவேற்றனர். தேவகணங்கள், கந்தர்வர்கள் கற்பக மலர் தூவித் துதித்துக் கொண்டிருக்க, எம்பெருமான் கற்பக வல்லியோடு எழுந்தருளியிருந்தார். இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு கண்களில் நீர் மல்க தாய்ப் பசுவைக் கண்டு விரைந்து வரும் இளங்கன்றைப் போல் ஆராக் காதலோடு ஐயன் திருமுன் சென்று அவரது கமலமலர்ப் பாதங்களை பணிந்து துதித்து நின்றார் சுந்தரர்! ஆலால சுந்தரரைக் கண்ட திருசடை அண்ணல், ஆனந்தப் பெருக்கோடு, ஆரூரனே நீ வந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஐயனின் அமுதமொழிக் கேட்டு அகமும் முகமும் மலர்ந்த சுந்தரர், ஐயனே ! இந்த ஏழையின் பிழை பொறுத்து, எம்மைத் தடுத்தாட் கொண்ட தெய்வமே! முடிவிலாத் தூய முத்தி நெறியினை அருளிய பெருங்கருணையை எடுத்தருளும் திறத்தினை எமக்கருள வில்லையே? என்று சொல்லி பலமுறை பணிந்து எழுந்து சிவானந்தப் பாற்கடலில் அழுந்தி நின்றார். பேரின்பப் பெருக்கில் மெய்யுருகி நின்ற தம்பிரான் தோழர், எம்பெருமானிடம், நிலவணிந்த நீரணி வேணிய! நின் மலர்க்கழல் சாரும் பொருட்டுச் சாரும் தவத்தையுடைய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற் புறத்தே தடைபட்டு நிற்கின்றார் என பணிவோடு பகர்ந்தார்.




சங்கரர் நந்திதேவரை அழைத்துச் சேரரை அழைத்துவர ஆணையிட்டருளினார். நந்திதேவர் இறைவன் ஆணைப்படி சேரரை அழைத்து வந்தார். எம்பெருமான் திருமுன் வந்த சேரமான் பெருமாள் நாயனார் உள்ளமும் உடலும் பொங்கப் பூரிக்க மெய்ம்மறந்து எம்பெருமானின் திருத்தாள்களில் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தார். எம்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு தவழ சேரரை நோக்கி, எமது அழைப்பின்றி நீ ஏன் இவ்வளவு தொலைவு வந்தாய்? என திருவாய் மலர்ந்து அருளினார். சிரமீது கரங்குவித்து நின்ற சேரமன்னன் எம்பெருமான் திருமுன் தமது பிரார்த்தனையைச் சமர்ப்பித்தார். இவ்வெளியோன் ஆரூரர் கழல் போற்றி ஐயன் திருமுன் அணையப் பெற்றேன். ஐயனின் கருணை வெள்ளத்தால், அடியேன் திருமுன்னே வந்து நின்று சேவித்து நிற்கும் பொன்னான பேறு பெற்றேன். இப்பொழுது இந்த எளியோனுக்குத் தேவரீர்! திருவருள் புரிய வேண்டும். ஆரூரரின் அரிய நட்பை இவ்வடியேனுக்கு தந்தருளிய வேத முதல்வனே ! எம்பெருமான் மீது பூண்டுள்ள ஆராக்காதலால் இவ்வடியேன் திருவுலா என்னும் பிரபந்தம் ஒன்று பாடினேன். அதனை ஐயன் திருச்செவி சாத்தி அருளப் பணிவோடு கேட்கின்றேன் என்று பிரார்த்தித்தார். எம்பெருமான் சொல்லுக ! எனச் சேரர்க்கு ஆணையிட்டருளினார். புலமைமிக்கச் சேரப் பெருந்தகையார் அருள்மிக்க ஞானவுலா என்னும் திருக்கயிலாய உலாவை மெய்யுருகப் பாடினார். எம்பெருமான் ஞான உலாவினைக் கேட்டு மகிழ்ந்தார். சேரரையும், சுந்தரரையும் சிவகணத் தலைவர்களாக, தமது திருவடி நிழலில் இருக்குமாறு வாழ்த்தி அருளினார். சேரமான் பெருமாள் நாயனார் சிவபிரானின் செஞ்சேவடிகளைத் துதித்து திருத்தொண்டு புரியலானார். சுந்தரமூர்த்தி நாயனார், முன்போல் ஆலால சுந்தரராய், இறைவனின் அணுக்கத் தொண்டராய்த் திருத்தொண்டு புரிந்து வரலானார். பூவுலகில் இருந்த பரவையாரும், சங்கிலியாரும் உலகப் பற்றை விட்டகன்று முன்போல் கமலினி, அனிநிந்தையாருமாகி உமாதேவியாரின் சேவடி போற்றும் சேடிகள் ஆயினர்.

மதுரை மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் பவனி

மதுரை மக்கள் வெள்ளத்தில் கள்ளழகர் பவனி









மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவில் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்ககுதிரை வாகனத்தில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே எழுந்தருளினார். வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவில் கள்ளழகர் வேடமணிந்து வந்த பக்தர்கள்.

Tuesday, April 23, 2013

சித்ரா பவுர்ணமி: பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு

நாளை சித்ரா பவுர்ணமி: பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு






சித்ரா பவுர்ணமி நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன்பின் வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் எனப் பெயர். சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று சிவபெருமாள்- பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரைகுப்தன். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதபடைக்கப்பட்டவர் சித்திர குப்தனை வேண்டிக் கொண்டு பெரும் பாலும் பெண்களே விரதம் மேற் கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர குப்தனைப் போல் மாக்கோலம் போட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.




பாவங்களிலிருந்து விடுபடவும் நரகத்திற்கு போகாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் சித்தரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு திருவண்ணாமலையிலும் காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கத் தனியாக ஒரு கோயில் உள்ளது. சித்ராபவுர்ணமி தினத்தில் பூஜையும், புறப்பாடும் உற்சவமும் நடந்து வருகிறது. ஆதி நாளிலிருந்தே தமிழர் கொண்டாடும் திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் சித்திரை திருவிழா தனிச்சிறப்புடையது.




தென்னாட்டு கோயில்களில் குறிப்பிடத்தக்க மதுரை கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். சித்ராபவுர்ணமி அன்று இங்கு தரிசனம் செய்தால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்! அதுமட்டுமல்லாமல் அரவாணிகள் (திருநங்கைகள்) கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழாவும் சித்ரா பவுர்ணமி அன்று தான் நடக்கிறது. குற்றாலம் செண்பகாதேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் நடக்கும். இதில் கலந்து கொள்ள தென் மாவட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும் காட்சியைக் காண கண்கோடி வேண்டுமே!


சித்ரா பவுர்ணமியில் சுத்தினா ஆண்டு முழுக்க சுத்தினா மாதிரி




ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசி வீடுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் மேஷம், ரிஷபம் என பெயர்கள் உண்டு. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சூரியன் ஒவ்வொரு ராசியில் பிரவேசிப்பார். அந்த சூரியனை சுற்றி தினக்கோளான சந்திரன் வலம் வருவார். அப்படி வரும்போது சூரியன் இருக்கும் ராசிக்கு சந்திரன் வரும்போது பவுர்ணமி திதி உதயமாகிறது. இந்துக்களின் ஆன்மிக வழிபாடுகளில் பவுர்ணமி நாள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமி மிகவும் விசேஷம். அதுவே சித்ரா பவுர்ணமியாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி பற்றி பல்வேறு புராண கதைகள் உள்ளன. முழுமையாக இருந்த சந்திரன் தட்சனின் சாபத்தால் தேயத் தொடங்கினான். சிவபெருமான் அவனுக்கு அருள் புரிந்து, தேய்ந்த பிறையை தன் தலையில் சூடி சந்திரனை காத்தருளினார். அதனால் சிவனுக்கு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

அதே நேரத்தில் சந்திரனின் ஆணவம், அகந்தையை அழிப்பதற்காக அவனை தேயச் செய்து பின்னர் பிறை சந்திரனை சூடி, பாலச்சந்திரனாக விநாயகர் காட்சி தந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்று திருக்கடையூர். தம்பதிகள் 60வது திருமண விழாவை இங்கு கொண்டாடுவது வழக்கம். சரபோஜி மன்னர்கள் காலத்தில் இங்கு பட்டர் ஒருவர் வசித்து வந்தார். இங்கு கோயில் கொண்டிருக்கும் அபிராமி அம்மனை நினைத்து பாடல்கள் புனைந்து வழிபட்டு வந்தார். ஒரு அமாவாசை தினத்தன்று கோயிலுக்கு வந்தார் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி. அந்த நேரத்தில் அம்மனை நினைத்து தியானத்தில் இருந்த பட்டரை பார்த்தார். அவர் தன்னை மதிக்காமல் அமர்ந்து இருப்பதாக நினைத்து மன்னர் கோபமடைந்தார். பட்டரிடம் போய், ‘இன்று என்ன திதி?’ என்று கேட்டார். அம்மனின் ஒளி நிறைந்த முகத்தை மனதில் பதித்திருந்த பட்டர் அதே ஞாபகத்தில் தன்னையறியாமல் ‘பவுர்ணமி’ என்றார்.

இதைக் கேட்ட மன்னர், ‘என்னை மதிக்கவும் செய்யாமல், திதியையும் மாற்றி சொல்கிறாரே’ என்று மேலும் கோபமடைந்தார். ‘நீ சொன்னதுபோல முழு நிலவு இன்று தோன்றாவிட்டால் உனக்கு மரண தண்டனை’ என்றார். அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தார் பட்டர். மன்னர் கேட்டதற்கு தான் தவறாக பதில் அளித்ததையும் மன்னர் தண்டனை அளித்திருப்பதையும் அறிந்து கலங்கினார். அபிராமி அம்மனை நோக்கி அந்தாதி பாடல்களை பாடத் தொடங்கினார். பாடி முடித்ததும் காட்சி தந்த அன்னை அபிராமி, தனது காதணியை வானில் வீசி முழு நிலவை தோன்றச் செய்தாள் என்கிறது திருத்தல வரலாறு. தமிழகத்தின் அனைத்து ஆலயங்களிலும் சித்ரா பவுர்ணமி பூஜைகள், வழிபாடுகள் சிறப்பாக நடக்கின்றன. அம்மன், அம்பாள் ஸ்தலங்களில் இரவு நேர பூஜையும், சந்திர தரிசனமும் பிரசித்தம். மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் திருவிழா உலகப் புகழ் பெற்றது.

அழகர் எந்த வண்ணத்தில் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த ஆண்டின் பலாபலன்கள் அமையும் என்பது ஐதீகம். பச்சைப்பட்டு உடுத்தி இறங்கினால் பயிர், பச்சைகள் செழிப்படைந்து விவசாயம் செழிக்கும். நல்ல மழை வளம் இருக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷமாகும். நம் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் சித்ரகுப்தனுக்கு உகந்த நாளாகவும் சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது. ‘நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள், பிழைகளை பொறுத்து இனி பாவங்கள் செய்யாமல் தடுத்து காக்க வேண்டும்’ என்ற பிரார்த்தனையுடன் சித்ரகுப்தனை சித்ரா பவுர்ணமி நாளில் வணங்குவது சிறப்பு. காஞ்சிபுரத்தில் கர்ணகி சமேத சித்ரகுப்தனுக்கு தனி ஆலயம் உள்ளது. ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் 6, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருப்பவர்கள், சந்திர திசை நடப்பவர்கள், மனசஞ்சலம், மனகுழப்பம் உள்ளவர்கள் சித்ரா பவுர்ணமி அன்று சந்திர தரிசனம் செய்து வழிபட, பாதிப்புகள் நீங்கி சகல யோகங்களும் உண்டாகும்.

சந்திரகிரகணம்

26ம் தேதி அதிகாலை 1.24 மணி முதல் 1.51 மணி வரை சந்திரகிரகணம். அது முடிந்ததும், தி.மலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடக்கும். அதை தொடர்ந்து பள்ளியறை பூஜை முடிந்ததும், சிறிது நேரம் மட்டும் நடை சாத்தப்படும். வழக்கம்போல அதிகாலை
4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.


சாய்பாபா ஆராதனை - 24.04.2013



இன்று சாய்பாபா ஆராதனை விழா!







உலகம் முழுவதும் பக்தர்களைக் கொண்டுள்ள சாய்பாபாவிற்கு, தமிழகத்தில் 905 மையங்கள் உள்ளன. இங்கு வரும் குழந்தைகளுக்கு அன்பும், பக்தியும், ஒழுக்கமும், உண்மையும் போதிக்கப்படுகிறது. பாலவிகாஸ், இளைஞர் அமைப்பு, பஜன் மண்டலி, மகிளா அமைப்பு, சமிதி ஆகிய பிரிவுகளின் கீழ், பக்தர்கள் சமூகத்திற்கு நலன் தரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். பாலவிகாஸில் உள்ள குழந்தைகளுக்கு தாய் தான் உன் முதல் கடவுள் என கற்றுத் தரப்படுகிறது. சொல்லிக் கொடுப்பவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் தான், குழந்தைகளை அவ்வளவு அழகாக உருவாக்குகிறார்கள். பாபா, தன் தாய் ஈஸ்வரம்மாவை எந்த அளவு போற்றினார் எனபதற்கு சில உதாரணங்களைக் கூறலாம். மக்களின் தாகம் தணிக்க தண்ணீர் கொடுக்கும்படி மகனிடம் கூறினார் தாய். அவரது கட்டளையை ஏற்று, வறண்ட அனந்தப்பூர் மாவட்டத்திற்கு குடிதண்ணீர் வழங்கினார். அதன்பிறகு சென்னை வரை உள்ள மக்களின் தாகம் தீர்த்தார்.




ஏழைகள் வைத்தியம் பார்க்க வழி செய்ய வேண்டும், என்று ஈஸ்வரம்மா சொன்னதும், அவர்கள் இலவசமாக உயர்சிகிச்சை பெறும் வகையில் புட்டபர்த்தியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியைக் கட்டினார். பிள்ளைகள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் தான் கேட்டார் பாபாவின் தாய். பாபாவோ, பல்கலைக்கழகமே உருவாக்கி கொடுத்துள்ளார். இப்படி தன் தாயின் விருப்பத்தை செய்து கொடுத்த பாபாவின் விருப்பம், அனைவரும் அவரவர் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான்!




தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் செக்யூரிட்டி வேலைக்கான பயிற்சிமுகாம் நடத்தப்படுகிறது. பள்ளிப்படிப்பைத் தாண்டாத இளைஞர்களுக்கு இலவச தங்குமிடமும், உணவும் கொடுத்து நடத்தப்படும் இந்த பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நடத்தப்படும் சிறுதொழில் பயிற்சி முகாமில், பயிற்சியுடன் தொழில் நடத்த தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகிறது. சமூகம் புறக்கணித்ததன் காரணமாக சமூக விரோதியாக மாறிய இளைஞர்கள் இன்று நல்லதோர் வாழ்க்கை அமையப்பெற்றுள்ளார்கள் என்றால் அது சாய்பாபாவின் அருளால் தான்.


ஏப் 24., சாய்பாபா நினைவு நாள்: மும்பையிலுள்ள பாலவிகாஸ் பள்ளிக்கு பாபா விஜயம் செய்தார். ஆசிரியர்களும் மாணவர்களும் ரோஜாவைக் கையில் ஏந்தி, அவரை வரவேற்க காத்திருந்தனர். அப்போது, அந்தப் பள்ளியில் படிக்காத சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். மற்ற குழந்தைகளைப் போல தானும் ரோஜாவோடு பாபாவை வரவேற்க ஆசைப்பட்டான். ஆனால், அவனுக்கு மலர் வழங்கப்படவில்லை. வருந்திய அவன், தனக்கெதிரே இருந்த செடியில் மலர்ந்திருந்த சிறுபூக்களைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டான். மாணவர்களை ஆசிர்வதித்தபடி வந்த பாபாவிடம், தன் கையில் இருந்த மலர்களைக் கொடுத்தான். அவர் புன்னகை பூத்தபடி, அவனது பிஞ்சுக்கைகளை பிடித்தார். எளிமையான அந்த மலர்களை வாங்கிக் கொண்டு ஆசிர்வதித்தார். பள்ளியில் மூன்று மணிநேர நிகழ்ச்சி நடந்து முடிந்தது. பாலவிகாஸை விட்டுக் கிளம்பும் நேரத்திலும், அந்தச் சிறுவன் கொடுத்த மலர்கள் பாபாவின் கைகளிலேயே இருந்தன. அந்தச்சிறுவன் நெகிழ்ந்து போனான். தங்கள் ரோஜாவுக்கு கிடைக்காத பெருமை, யாரோ ஒரு சிறுவனின் சிறுமலருக்கு கிடைத்ததை எண்ணி மற்ற மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர்.




உயிர்களை நேசித்தவர்: சாய்பாபா பெங்களூருவிலிருந்து புட்டபர்த்திக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மலைப்பிரதேசமாக இருந்ததால், பாதை கரடுமுரடாக இருந்தது. ஓரிடத்தில், பாம்பு பாதையின் குறுக்கே சென்று கொண்டிருந்தது. பாம்பைக் கண்ட டிரைவர், பின் சீட்டில் இருந்த பாபாவைத் திரும்பிப் பார்த்தார். அவர் தியானத்திலிருப்பதைக் கண்டார். காரை நிறுத்தினால் பாபாவின் தியானம் கலைந்து விடும் என்பதால் பாம்பின் மீது காரை ஏற்றி விட்டு தொடர்ந்து சென்றார். பிரசாந்தி நிலையம் வந்ததும், டிரைவர் பாபாவிற்கு காரின் கதவைத் திறந்தார். இறங்கிய பாபா மெல்ல நடந்து சென்றார். அவருடைய சட்டையின் பின்புறம், மண்ணால் பெரிய பட்டை போட்டது போல அழுக்காகி இருந்தது. இதைக் கண்ட டிரைவர்,சுவாமி! உங்கள் சட்டையில் ஏதோ பட்டை போல் அழுக்காக இருக்கிறதே!, என்றார்.கொஞ்ச நேரத்திற்கு முன் மலைப்பாதையில் ஒரு பாம்பின் மீது கார் ஏற இருந்தது. அதைத் தடுப்பதற்காக காரின் டயருக்குக் கீழே செல்ல வேண்டி வந்தது, என்றார் பாபா.இதைக் கேட்டதும் டிரைவர் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார். புன்னகை தவழ, பாபா பிரசாந்தி நிலையத்திற்கு சென்றார்.




இன்றைய செயல்பாடுகளே எதிர்கால வாழ்வின் ஆணிவேர்


*மனிதநேயம், நல்லொழுக்கம், கருணை ஆகிய குணங்கள் மனிதனுக்கு அவசியம். இதனைக் கற்றுத்தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை.


*பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.


*ஆரோக்கியமான வாழ்க்கையே உறுதியான வாழ்க்கை.


*திட்டங்களை செயல்படுத்துவதில் வரைமுறையுடன் செயல்படாத நாடு ஒருபோதும் முன்னேற்றப் பாதையில் செல்லாது.


*கடவுளே அனைத்திலும் அனைத்துமாக இருந்து உலகை இயக்குகிறார்.


*நல்ல எண்ணம், வார்த்தையில் மென்மை, செயல்களில் இரக்கம் கொண்டவர்களே உண்மையான மனிதர்கள்.

*எந்தச் செயலையும் செய்யும் முன்பு, கடவுளை எண்ணித் துவங்குங்கள். உங்களுக்கு அவரருளால் வெற்றியே கிடைக்கும்.

*மனிதனின் அறிவாற்றலை, அவனது குணங்களே நிர்ணயிக்கிறது.

*இன்றைய சிறப்பான செயல்பாடுகளே, எதிர்கால வாழ்க்கைக்கு ஆணி வேராக இருக்கிறது.

*உண்மையாக நடப்பவர்களிடம் நற்குணமும், பிறருடன் இணக்கமாக நடந்து ஒத்துப்போகும் தன்மையும் இருக்கும்.

*ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தாலே போதும். உலகில் அமைதி தானாக வந்துவிடும்.

*உண்மையான நட்பில் அகம்பாவம் துளியும் இருக்காது.

*தியானம் செய்வதால் ஆக்கப்பூர்வமான நற்சிந்தனைகள் உருவாகும்.

*நீங்கள் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் உங்களை நோக்கி பத்து அடிகள் எடுத்து வைப்பார்.

*சேவை, கைமாறு கருதாததாக இருக்க வேண்டும். பிறருக்கு செய்த சேவையை வெளிப்படுத்துவதும், அதற்காக பாராட்டை எதிர்பார்ப்பதும் கூடாது.


*ஒவ்வொருவரையும் பிறருக்கு சேவை செய்வதற்காகவே இறைவன் படைத்துள்ளான்.

*நீங்கள் கடவுளை வணங்காவிட்டாலும்கூட, அவர் உங்களுடனேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

*மனப்பூர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் சமைக்கப்படும் உணவிற்கு சுவை அதிகம்.

*உண்மை இருக்குமிடத்தில் மட்டுமே அன்பும், அமைதியும், அதன் வடிவமான கடவுளும், அவரது ஆசிர்வாதமும் இருக்கிறது.

*இறைவன் மீது பக்தி செலுத்துபவர்கள் மட்டுமே, எந்த செயலையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

*உண்மையான மகிழ்ச்சி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. அதை வெளியில் தேடுவதில் ஒரு பயனும் இல்லை.

*கட்டளையிடாமல், அன்புடன் சொல்லித் தரப்படும் முறையே, சிறப்பானகல்வி முறை ஆகும்.

*பற்றில்லாத வாழ்க்கையில்தான் திருப்தி இருக்கிறது.

*சேவை செய்யப்படும் இடத்தில் மட்டுமே பெரு மகிழ்ச்சியும், துன்பமில்லாத நிலையும் இருக்கும்.

-சாய்பாபா

மரகதவல்லிக்கு மணக்கோலம் - திருக்கல்யாணம் ஸ்பெஷல்



திருக்கல்யாணம் ஸ்பெஷல்: மரகதவல்லிக்கு மணக்கோலம்!






வேத மந்திரங்கள் ஒலிக்க.. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) காலை நடைபெற்றது. திருக்கல்யாணம் காலை 8.17 மணிக்கு மேல் 8.41 மணிக்குள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மேல-வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது. இதில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கலந்து கொள்கிறார். திருக்கல்யாணம் காலையில் முடிந்த நிலையில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து நடைபெறுகிறது.




பச்சை நிறத்தில் பெண் இருக்கிறாளா! ஆம்...ஒருத்தி இருந்தாள். அவள் கரும்பச்சை நிறத்தவள். பச்சைக்கிளியை கையில் ஏந்தியவள். பிறக்கும் போதே மூன்று வயதுடையவள். இயற்கைக்கு மாறாக மூன்று ஸ்தனங்களைக் கொண்டவள். மீன் போன்ற கண்களை உடையவள். எங்கும் அவளது பார்வை பரவும். உலகையே தனித்து வெல்லும் ஆற்றல் படைத்தவள். கைலாயம் வரை போருக்குச் சென்றவள். மொத்தத்தில், அந்த மரகதவல்லி ஒரு சாதனைச் செல்வி. அவளுக்கு திருமணம் என்றால் மாப்பிள்ளை இறைவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்! அவள் அன்பால் அடக்கியாள்பவள். அவரும் அவளது அன்பில் மயங்கியிருக்கிறார். அவள் தான் அன்னை மீனாட்சி. சுந்தரேஸ்வரப்பெருமானை அவள் இன்று திருமணம் செய்ய இருக்கிறாள்.




மீனாட்சியின் தாய் காஞ்சனமாலை. இவள் முற்பிறவி ஒன்றில், வித்யாவதி என்னும் பெயரில் மீனாட்சியின் பக்தையாக இருந்தாள். தன் வாழ்நாளை, மீனாட்சியின் திருப்பணிக்காகவே அர்ப்பணித்தாள். கோயிலைச் சுத்தம் செய்வாள். மீனாட்சியை தன் மகளாக எண்ணி அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னைப் பெறாத அந்தத்தாய்க்கு மீனாட்சி காட்சியளித்து, ""என்னை மகளாய் நினைப்பவளே! உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றாள். அம்மா, ""பிறவி என்ற ஒன்று வேண்டாம். அப்படி இருக்குமானால், இனி வரும் பிறவி ஒன்றில் எனக்கு நீ மகளாய்ப் பிறக்க வேண்டும். உன்னைப் பெற்ற பயனால் நான் முக்தியடைய வேண்டும், என்றாள் அந்தப்பெண்.




மீனாட்சி மனமுவந்து அந்த வரத்தை வழங்கினாள். அதுமட்டுமல்ல, அப்பிறவியில் கோயிலில் குப்பை கூட்டுபவளாக இருந்தவள், இன்னொரு பிறவியில் மகாராணியாகப் பிறந்தாள். பெயர் காஞ்சனமாலை. "காஞ்சனா என்றால் "தங்கம். தங்கமாலை எவ்வளவு அழகாக இருக்குமோ, அதுபோல் அழகு படைத்தவள் காஞ்சனமாலை. அவள் மதுரை மன்னன் மலையத்துவஜனை திருமணம் செய்தாள். பாண்டியர்களின் கொடியில் "பொதிகை மலை தான் சின்னமாக இருந்துள்ளது. "மலையத்துவஜனை "மலை+ துவஜன் என்று பிரிப்பார்கள். "துவஜம் என்றால் "கொடி. "மலைக்கொடியை உடையவன் என்று இதற்குப் பொருள். மீனாட்சியின் பிறப்புக்கு பிறகு தான் அவர்கள் மீன்கொடிக்கு மாறியிருக்க வேண்டும். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, பெரியோர் அறிவுரைப்படி புத்திரப்பேறுக்கான யாகம் செய்தான். அந்த யாகத்தீயில் இருந்து எழுந்த மூன்று வயது பெண் குழந்தை அவனது மடியில் அமர்ந்தது. அவளுக்கு "தடாதகை என்று பெயரிட்டனர். பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்கள் இருந்ததால் பெற்றோர் கவலை கொண்டனர். அப்போது, அசரீரி ஒலித்தது. ""மகனே! கவலை வேண்டாம். இவள் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற விதி இருக்கிறதோ, அவர் அவள் எதிரே வரும் போது, ஒரு ஸ்தனம் மறைந்து விடும், என்றது. அவளை ஆணுக்கு நிகராக பெற்றோர் வளர்த்தனர். வயது வந்ததும் பட்டம் சூட்டினர். அந்த பட்டத்துராணி உலகையே வென்றாள். கடைசியாக, கைலாயத்துக்குப் போருக்கு அழைத்த போது, சிவபெருமான் அவள் எதிரே வர ஸ்தனம் மறைந்தது. தன் மணாளன் அவர் என்பதை அறிந்து போரை நிறுத்தினாள். மாப்பிள்ளை மிகவும் அழகானவராக இருந்ததால், "சுந்தரேஸ்வரர் என பெயர் பெற்றார். "சுந்தரம் என்றால் "அழகு. மதுரை வந்து மீனாட்சிக்கு மாலையிட்டார். மதுரையின் மன்னராகப் பொறுப்பேற்றார். அவரை "சுந்தர பாண்டியன் என மக்கள் அழைத்தனர். தாய், தந்தையின் திருமணத்தைக் காண திருப்பரங்குன்றம் முருகனும், தங்கையை தாரை வார்த்துக்கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் வந்தனர். மதுரையில் பெண்களுக்கே மவுசு அதிகம். அவர்களுக்கெல்லாம் மாங்கல்ய பாக்கியம் தந்து, மங்கல வாழ்வு அளித்திருக்கிறாள் மீனாட்சி.

Thursday, April 18, 2013

பக்தனுக்காக பரமன் செய்த பயணம்

பக்தனுக்காக பரமன் செய்த பயணம்





நாம் ஒவ்வொருவரும் பரமனைத் தேடி காசி முதல் இராமேஸ்வரம் வரை இமயம் முதல் குமரி வரை எத்தனையோ இடங்களுக்கு பயணம் செய்கிறோம். ஆனால் தன்னையே நம்பி வந்த ஒரு பக்தனுக்காக பரமன் ஏழு ஊர்களுக்கு செய்த பயணத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அப்பர் பெருமானுக்கு கயிலைக் காட்சி கிடைத்து, "கண்டறியாதன கண்டேன்' என்று இறும்பூதி எய்திய தலம். காவிரியில் மூழ்கி ஐயாறப்பரை தரிசனம் செய்தால் காசி தரிசனத்தை விட புண்ணியம் அதிகம்.

இப்படி எத்தனையோ சிறப்புகள்கொண்ட ஊர் திருவையாறு. இங்கு ஐயாறப்பரை அனுதினமும் வழிபாடு செய்து வந்தார் சிலாதர் என்னும் முனிவர். ஆனாலும் அவருக்குப் பிள்ளைகள் இல்லை. ஐயாறப்பரை நோக்கி தவமிருக்க, ஈசனும் காட்சி தந்து "புத்திர காமேஷ்டி யாகம் செய்'' என்றார். யாகத்தின் பயனாய் முனிவருக்கு ஒரு பெட்டி கிடைத்தது. அந்தப் பெட்டியைத் திறக்க ஆயிரம் சூரியப் பிரகாசத்துடன் அற்புதமான ஒரு குழந்தை. அதற்கு செப்பேஸ்வரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் சிலாதர். ஆனாலும் அவனுக்கு ஆயுள் பதினாறுதான் என்பதை அறிந்து அதிர்ந்தார்.

ஆனால் செப்பேஸ்வரனோ "விதியை மதியால் வெல்கிறேன்' என்றபடி ஐயாறப்பர் சந்நிதி முன் உள்ள சூரிய புஷ்கரணியில் ஒற்றைக் காலில் நின்று பரமனை நினைத்து கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்துக்கு இரங்கிய ஈசன் அம்பிகையுடன் காட்சி தந்தார். அவரிடம், 'பிறப்பு, இறப்பு இல்லா பெருவாழ்வு வேண்டும். கயிலையில் எப்போதும் தங்களுடன் இருக்க வேண்டும்'' என்று வரம் கேட்டான் செப்பேஸ்வரன். அவனுக்கு நந்திகேஸ்வரன் என்ற திருநாமம் சூட்டி சிவகணங்களுக்கு தலைவராக்கினார் ஈசன்.

கயிலையில் சிவத்தொண்டு புரிவதையே சிந்தனையாகக் கொண்டு நந்திதேவர் கவலையின்றிருந்தார். ஆனால் தன்னைத் தவிர வேறு சிந்தனை இல்லாது இருக்கும் நந்திதேவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலை சிவனுக்கு ஏற்பட்டது. தன் வளர்ப்பு மகனுக்கு பெண் தேடி சிவபெருமான் உமையுடன் திருமழபாடி திருத்தலத்திற்கு வந்தார். அங்கிருந்த வசிஷ்ட முனிவரிடம் பேசி அவரது பேத்தியான சுயசாம்பிகையை திருநந்தி தேவருக்கு நிச்சயம் செய்தார். திருவையாற்றைச் சுற்றியுள்ள ஆறு ஊர்களில் இருந்து திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் திருமழபாடியில் குவிந்தன. ஒரு பங்குனி மாதம்,புனர்பூச நட்சத்திரத்தில் நந்தி தேவருக்கும், சுயசாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றது. இதன்பின் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு ஊர் இறைவர்களுக்கும் நன்றி செலுத்தவும், திருநந்தி தேவரை மற்ற ஊர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் ஏற்பாடானது.

சித்திரை மாதம் முழு நிலவின் மறுநாள் ஐயாறப்பரும், அறம்வளர்த்த நாயகியும் பெரிய பல்லக்கிலும், புதுமணத் தம்பதிகளான நந்தியெம்பெருமாளும், சுயசாம்பிகையும் வெட்டிவேர் பல்லக்கிலும், திருவையாற்றில் இருந்து புறப்படுகிறார்கள். அன்று காலை கிழக்கு கோபுர வாசலில் நிகழும் இந்நிகழ்வுக்கு கோபுர தரிசனம் என்று பெயர். இதற்கு ஆயிரக் கணக்காண பக்தர்கள் கூடுவார்கள். காலை 6 மணிக்கு புறப்படும் பல்லக்கு திருப்பழனம் வந்து சேரும். ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊர்ப்பெருமானும், பெருமாட்டியும் இவர்களை எதிர்கொண்டழைத்து மரியாதை செய்து தங்கள் ஊர் பல்லக்கில் அடுத்த ஊருக்கு கூடவே செல்கிறார்கள்.

அதன்படி வருகிற 27.4.2013 காலை 6 மணிக்கு திருவையாறு கிழக்கு கோபுர வாசலில் இருந்து ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியின் பெரிய பல்லக்கும், நந்திதேவர்- சுயசாம்பிகையின் வெட்டிவேர் பல்லக்கும் புறப்படும்.

இரண்டு பல்லக்குகளும் மதியம் திருப்பழனம் (சுமார் 4 கி.மீ.) வந்து சேரும். திருப்பழனத்தில் இருந்து புறப்பட்டு மூன்று பல்லக்குகள் திருச்சோற்றுத்துறை (சுமார் 4 கி.மீ.) வந்து சேரும். திருச்சோற்றுத்துறையில் இருந்து 4 பல்லக்குகள் புறப்பட்டு திருவேதிக்குடி (சுமார் 4 கி.மீ.) வந்தடையும். திருச்சோற்றுத்துறை பல்லக்குடன் சேர்ந்து 5 பல்லக்குகள் திருக்கண்டியூர் (சுமார் 5 கி.மீ.) அடையும். அங்கிருந்து 6 பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்தி (சுமார் 3 கி.மீ.) அடையும். திருப்பூந்துருத்தியில் இருந்து 7 பல்லக்குகள் புறப்பட்டு இரவில் தில்லைஸ்தானம் (சுமார் 4 கி.மீ.) காவிரி ஆற்றை அடையும்.

இரவு தில்லைஸ்தானம் பல்லக்கு உட்பட 8 பல்லக்குகள் காவிரி ஆற்றங்கரையோரம் முகாம் இடும். மறுநாள் 28.4.2013 அன்று காலை முதல் ஒவ்வொரு பல்லக்காக புறப்பட்டு திருவையாறு (சுமார் 3 கி.மீ.) தேரடித் திடலை அடையும். அன்று மாலை தேரடித் திடலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல்லக்குகள் திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் சிரம பரிகாரம் செய்துகொண்டு ஒவ்வொன்றாக சொந்த ஊர் திரும்பும்.

சிறந்த ராம பக்தராகிய தியாகராஜ சுவாமிகளும், புகழ் வாய்ந்த கர்நாடக சங்கீத வித்வானாகிய மகா வைத்தியநாத ஐயரும், தமிழ்க் களஞ்சியமாக விளங்கிய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரும், இன்னும் பல அறிஞர் பெருமக்களும் ஏழூர் வலம் வந்த பெரியவர்கள். அவர்கள் பெற்ற பிறவிப் பயனை நாமும் பெறலாமன்றோ!

பிரம்மனுக்கு அருளிய நாதர்!

பிரம்மனுக்கு அருளிய நாதர்!




முக்தி தரும் தலங்களில் முக்கியமானது காஞ்சி மாநகர். இங்கிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ளது தியாமுகச்சேரி. தற்போது மருவி சேரிஐய்யம்பேட்டை என்று அழைக்கப்படும் இக்கிராமத்தில் உள்ளது பழைமையான கோதண்டராமஸ்வாமி திருக்கோயில். பிரம்மதேவனுக்கு திருமால் பரமபதநாதனாக காட்சியளித்த தலம் இது.

இத்திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகணகவல்லி சமேத ஸ்ரீபரமபதநாதஸ்வாமியும், ஸ்ரீசீதா லட்சுமண ஹனுமத் சமேத ஸ்ரீகோதண்டராம ஸ்வாமியும் அருள்பாலிக்கிறார்கள். ஆலயத்திற்கு வெளியே சிறிய திருவடிக்கு தனி சந்நிதி உள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த மகாசம்ப்ரோக்ஷணத்திற்கு பிறகு ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவலூரின் அபிமானத் தலமாக விளங்குகிறது. பரமபதநாதர் அழகிய கோலத்தில் அருள்கிறார். பிரதான தெய்வமாக பரமபதநாதர் இங்கு சந்நிதி கொண்டிருந்தாலும் அரசாங்க பதிவேடுகளில் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு திருக்கல்யாண உற்ஸவம் வருகிற 21ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. காவேரிப்பாக்கம் அழகிய ராமர் கோயிலிலிருந்து பட்டாச்சார்ய பெருமக்கள் இந்த வைபவத்தை நடத்திக் கொடுக்கிறார்கள். தியாமுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அன்பர்கள் இதனை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

தகவலுக்கு: 91760 72181

Tuesday, April 16, 2013

விறல்மிண்ட நாயனாரின் குருபூஜை



இன்று விறல்மிண்ட நாயனாரின் குருபூஜை!



விறல்மிண்ட நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. திருச்செங்குன்றூர் நீர்வளமும், நிலவளமும், மழைவளமும், குடிவளமும், முடிவளமும், மற்றெல்லாப் பெருவளங்களையும் தன்னகத்தே கொண்ட மலைநாடு ! இம்மலை நாட்டைச் சேரநாடு என்றும் கூறுவர் சிலர். இம்மலைநாடு புராணச் சிறப்பு மிக்கப் பழம்பெரும்பதி. இம்மலைநாடு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் பரசுராமர். சிவபெருமானை வேண்டிப் பெரும் தவம் புரிந்து பரசு என்ற மழுவாயுதத்தைப் பெற்றவர் பரசுராமன். இவரது தந்தையாகிய ஜமதக்கினி முனிவர், மன்னர் குலத்தினரால் கொலை செய்யப்பட்டார். பரசுராமர் உருத்திரம் பொங்க மழுவாயுதத்தோடு மன்னர் குலத்தைப் பழிவாங்கப் புறப்பட்டார். மன்னர் குலத்தை இருபத்தோரு தலைமுறைக்குப் பழி வாங்கி வதைத்தார்.




முடிவேந்தர்களின் செங்குருதியிலே தந்தைக்குச் செய்ய வேண்டிய பிதிர்கடனைக் கழித்தார். அதன் பிறகு சினம் தணிந்து அமைதி அடைந்த பரசுராமர், கடல் சூழ்ந்த இப்பரந்த நிலவுலகத்தைக் காசிபர்க்குத் தானம் செய்துவிட்டு மேற்குக் கடலை நோக்கிப் புறப்பட்டார். மேற்குக் கடலை அடைந்த பரசுராமர் தமது தபோவலிமையால், மழுவாயுதத்தைப் பயன்படுத்திக் கடல் நீரை விலகச் செய்து, மலைநாடு என்னும் ஒரு திருநாட்டைத் தோற்றுவித்தார். இம் மலைநாட்டில், அலைகடலிலிருந்தும், சோலைக்கரும்பிலிருந்தும், மூங்கில்களிலிருந்தும், யானைத் தந்தங்களிலிருந்தும் பற்பல வகைகளில், பற்பல விதமான முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இத்தகைய விலை உயர்ந்த முத்துக்களை பாவையர்களின் புன்சிரிப்பு முத்துக்களோடு முறைபடக் கோர்க்கின்ற சிறப்புச் சேர நாட்டுப் பெண்மணிகளுக்கே உரியதாகும். இவ்வாறு வரலாற்றுப் பெருமை மிக்க - புராண சிறப்புமிக்க மலைநாட்டிலே, மிக்கச் சிறப்புடன் விளங்கும் தலங்களிலே செங்குன்றூரும் ஒன்றாகும்.




மண்மடந்தையின் கமலமலர் வதனம் போன்று ஒளிவிடும் செங்குன்றூர்ப் பதியிலே, உழவுத் தொழிலில் வேளாளர் குடி வல்லமை பெற்றிருந்தது. அந்த வேளாள மரபிலே இறைவனின் திருவருளால் அவதாரம் செய்தார் விறல்மிண்டர். இவ்வடியார், திருநீறும், கண்டிகையும் பூண்டு, நதியும், மதியும், பாம்பும் புனைந்த வேணியரின் செஞ்சேவடிகளை வணங்கி வழிபட்டு வந்தார். அரனாரிடம் பேரன்பு பூண்டிருந்தாற்போல், அரனார்தம் அடியார்களிடமும் அளவிட முடியாத அளவிற்குப் பேரன்பும், பெருமதிப்பும் கொண்டிருந்தார் அடியார். அடியார்களைப் பற்றி எவராகிலும் சற்று, மட்டு மரியாதை இன்றி, தரக்குறைவாகப் பேசினால் போதும், அக்கணமே அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் தண்டிப்பார். அத்தகைய நேரங்களில் விறல்மிண்டரது பக்தி வீரமாக மாறிவிடும். விறல் என்ற சொல்லிற்கே வீரம் என்பதுதான் பொருள். விறல்மீண்டார் என்ற பெயரே, இவர்க்கு வீரம் பற்றிய விளக்கமாக வந்து அமைந்துவிட்டது.




அஞ்சா நெஞ்சமும், அறநெறி உள்ளமும் படைத்த விறல்மீண்டர், அடிக்கடி எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் தோறும் சென்று இறைவழிபாடு செய்து வருவது வழக்கம். ஆலயங்கட்டுச் சென்றுவரும் இவ்வன்பர், ஆன்றோர் மரபு ஒழுக்கப்படி, முதலில் சிவனடியார்களைத் தொழுது வழிபட்டு, அவர்களது அருளைப் பெற்ற பின்னர்தான், ஆலயத்துள் எழுந்தருளியிருக்கும் பெருமானை வணங்குவார். இங்ஙனம், சிவத்தலங்கள் தோறும் சென்று, ஆங்காங்கேயுள்ள தொண்டர்களைத் தொழுவதும் திருசடையானைத் சேவிப்பதுமாக தலயாத்திரை நடத்திக் கொண்டுவந்த இவ்வடியார், சிறப்புமிக்கத் திருவாரூரை வந்தடைந்தார். தேவாசிரிய மண்டபத்திலே குழுமியிருந்த அடியார்களை வணங்கி நின்று தாமும் அவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார். இத்தருணத்தில் ஓர் நிகழ்ச்சி நடந்தது.




வழக்கம்போல் சுந்தரமூர்த்தி நாயனார் புற்றிடங்கொண்ட நாதரை வணங்கி வழிபட வந்தார். அவர் அடியார்களை மனத்தால் வணங்கியவாறு, வேறு புறமாக ஒதுங்கியபடியே உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தார். இதனைக் கவனித்த விறல்மிண்டர், சுந்தரரை தவறாக எண்ணினார். சுந்தரரின் மனப்பக்குவத்தை அவர் எவ்வாறு அறிய இயலும் ! இறைவனை வழிபடுவது எளிது. அடியாரை வழிபடுவது அரிது. அடியார்களை வணங்குவதற்குத் தக்க தகுதியும், பக்தியும், அன்பும் இருத்தல் வேண்டும். அஃது தமக்கு இல்லாமற் போயிற்றே ! அடியார்களைப் பேணும் பேற்றினைத் தாம் பெறவில்லையே என்ற மனத்துடன், அடியார்களை மனத்தால் மட்டுமே வழிபட்டு, விலகிச் செல்வதை சுந்தரமூர்த்தி நாயனார் வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தகைய சுந்தரரின் உள்ளத் தூய்மையினை உணராத விறல்மிண்டர் அவர்மீது சினங் கொண்டார்.




சுந்தரரது செவிகளில் விழுமாறு, முதலில் வணங்கத்தக்க தேவாதி தேவர்கள் இங்கிருப்பதை மறந்துவிட்டு அங்கு செல்கின்றாரே, என்ன பயன் ?வன்றொண்டான் அவ்வடியார்களுக்குப் புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியார்களுக்குப் புறம்பானவன்தான் என்று கடுமையாகச் சொன்னார். விறல்மிண்டர் மொழிந்ததைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார் விறல்மிண்டர் அடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தி எத்துணைச் சிறப்புடையது என்பதை எண்ணிப் பெருமையுற்றார். எம்பெருமானின் திருமுன் வீழ்ந்து வணங்கி, அடியார்களுக்கும் அடியானாகும் பேரின்ப நிலையைத் தமக்குத் தந்தருள வேண்டும் என்று இறைஞ்சி நின்றார். அப்பொழுது இறைவன், தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக் கொடுக்க, விண்ணும், மண்ணும் உய்ய, திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தினைப் பாடித் திருகூடத்தைத் தொழுது அணைந்தார் சுந்தரமூர்த்தி நாயனார்.




திருத்தொண்டர்களின் பெருமையைச் சொல்லும் திருத்தொண்டத் தொகை இல்லாவிடில் நாயன்மார்களின் பெருமையைச் சொல்லும் பெரியபுராணமே தோன்றியிருக்காது ! சுந்தரர் அடியார்கள் மீது கொண்டுள்ள பக்தியின் உயர்வை எண்ணிப்பார்த்து விறல்மிண்டர் பேரின்பம் பூண்டார். சைவ சமய நெறியைப் பாதுகாத்துத் திருத்தொண்டு பல புரிந்து வாழ்ந்து வந்த விறல்மிண்டர், சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையைக் கேட்டு, எல்லையற்ற பெருமகிழ்ச்சி பூண்டார். உலகம் உய்யவும் மக்கள் எல்லாம் கடைத்தேறவும், சைவம் தழைத்தோங்கவும், சுந்தரருடைய திருவுள்ளம் திருத்தொண்டர்களிடத்திலே பதிந்திருந்தது என்பதை உணர்ந்த விறல்மிண்டர் களிப்பெய்தினார். திருக்கூட்டத்தை வணங்காது செல்லுகின்ற வன்றொண்டன் அடியார்களுக்குப் புறது; அவ்வன்றொண்டனை ஆட்கொண்ட பரமசிவனும் புறகு என்று சுந்தரமூர்த்தி நாயனார் செவிகளில் விழுமாறு விறல்மிண்டர் கூறியிராவிடில் திருத்தொண்டத் தொகையே பாடப்பட்டிருக்காது எனலாம். இந்த நாயனாரைப் பற்றி மற்றொரு சம்பவமும் சொல்லப்படுகிறது.




சுந்தரர் மீது கோபம் கொண்ட அடிகளார் சுந்தரரையும் வெறுத்தார். திருவாரூரையும் வெறுத்தார். திருவாரூர் எல்லையைத் தீண்டுவதில்லை என்று தமக்குள் ஒரு திடசங்கல்பம் பூண்டார். அத்துடன், அந்த அடியார் மற்றொரு வைராக்கியத்தையும் கடைப்பிடித்து வந்தார். தமது இல்லத்திற்கு விருந்திற்கு வரும் அன்பர்களிடம், எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள் என்று ஒரு கேள்வி கேட்பார். அவர்கள் திருவாரூர் என்று சொன்னால் உடனே அடிகளார், அடுத்துள்ள கொடுவாளை எடுத்து விருந்துண்ண வந்தவரின் காலைத் துண்டிப்பார். இதற்காகவே அவரது மனைவியார் வீடு தேடிவரும் அன்பர்களிடம் அடியாரின் மனோநிலையைக் கூறி ஊரைப்பற்றி விசாரித்தால் திருவாரூர் என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்து விடுவாள். இதனால் அடியார்களின் கால்கள் தப்பின.




திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகேசப் பெருமான், தனது அன்புத் தொண்டனை ஆட்கொண்டருளத் திருவுள்ளம் கொண்டார். எம்பெருமான் சிவனடியார் போல் வேடம் பூண்டார். நேராக நாயனார் இல்லத்திற்கு வந்தார். வாயிலிலே நின்றுகொண்டு எம்பெருமான், பவதி பிக்ஷõம் தேஹீ என்று குரல் கொடுத்தார். அடுப்படியில் வேலையாக இருந்த நாயனாரின் மனைவியார் வெளியே ஓடி வந்தாள். சிவனடியாரைக் கண்டு அகமும் முகமும் மலர வாருங்கள் என்று முகமன் கூறி உள்ளே அழைத்துச் சென்றாள். சுவாமி ! என் கணவர் வந்துகொண்டே இருக்கிறார். அதற்குமுன் தேவரீரிடம், இந்த ஏழைக்கு ஒரு சிறு விண்ணப்பம். அம்மணீ ! மங்களம் உண்டாகட்டும். விஷயத்தைச் சொல்வாய். அம்மையார் அடியாரிடம் நாயனாரின் சங்கல்பத்தைச் சொல்லி, சுவாமி ! தாங்கள் தயவு செய்து ஊரைப் பற்றிக் கேட்டால் திருவாரூர் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டாள். எம்பெருமான் குறுநகை சிந்த, அம்மணீ ! எனக்குப் பொய் பேசத் தெரியாது. அதனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். அவர் சாப்பிடும்போது கொடுவாளை வலதுபுறம்தானே வைத்திருப்பார். இன்று மட்டும் அதனை இடதுபுறம் வைத்துவிடு. மற்றவை நான் பார்த்துக் கொள்கிறேன். என்றார்.




அம்மையாரும் அதற்குச் சம்மதித்தார்கள். அதற்குள் நாயனாரும் உள்ளிருந்து வெளியே வந்தார். நாயனார், சிவனடியாரை வரவேற்று விருந்திற்கு எழுந்தருளச் செய்தார். இருவரும் இலை முன் அமர்ந்தார்கள். மனைவியார் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். நாயனார் வழக்கம்போல் தமது கேள்வியைக் தொடங்கினார். சுவாமிக்குச் சொந்த ஊர் எது ? அங்கிங்கெனாதபபடி எங்கும் இருப்பேன். ஆயினும் அடியேன் சொந்த ஊர் சுந்தரர் அவதரித்த திருவாரூராகும்! என்ன ! திருவாரூரா ? அடியார்களை அவமதிக்கும் அந்த அற்பன் பிறந்த ஊரில் பிறந்தவரா நீர் ? உம்மை என்ன செய்கிறேன் பார் என்று வன்மொழி கூறினார்.




நாயனார் கண்கள் கோபத்தில் சிவந்தன. சட்டென்று வலது பக்கம் திரும்பி கொடுவாளை எடுக்க முயன்றார். அங்கு கொடுவாளை காணாது மனைவியை நோக்கினார். அவர்கள் பயத்துடன், இடதுபுறம் வைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது என்று கூறினாள். நாயனார் சட்டென்று இடது பக்கம் திரும்பினார். இதற்குள் அடியார் எழுந்து வெளியே ஓடிவிட்டார். நாயனார் அடியாரைத் துரத்திக் கொண்டு ஓடினார். அடியார் ஓட, நாயனார் துரத்த இருவரும் ஓடி ஓடி திருவாரூரின் எல்லையை அடைந்து ஊருக்குள் வந்து சேர்ந்தனர். நாயனார் களைத்துப்போன நிலையில் நிலத்தில் விழுந்தார். அடியார் சிரித்துக்கொண்டே, நீர் இப்பொழுது திருவாரூர் எல்லையைக் கடந்து ஊருக்குள்ளே வந்து விட்டீரே என்றார். நாயனார் மனம் பதறிப் போனார். ஆத்திரத்தால் துடித்தார். தவற்றை உணர்ந்தார். கொடுவாளை எடுத்துத் தமது காலை வெட்டிக் கொண்டார். நாயனாரின் செயலைக் கண்டு சிவபெருமான் அதற்கு மேலும் பக்தனைச் சோதிக்க விரும்பவில்லை. ரிஷப வாகனத்தில் கமலாம்பாள் சமேதராய் காட்சி கொடுத்தார் திருவாரூர் தியாகேசப் பெருமானார் ! தம்மை ஆட்கொண்டருளிய அடியார் எம்பெருமானே என்பதனை உணர்ந்த நாயனார், சிரமீது கரம் உயர்த்தி கண்களில் நீர்மல்க பக்தியால் பரமனைத் தொழுதார்.




எம்பெருமான், விறல்மிண்டருக்கு சுந்தரர் அடியார்கள் மீது கொண்டுள்ள ஒப்பற்ற பக்தியை உணரச்செய்து நாயனாருக்குப் பேரின்ப பெருவாழ்வு நல்கி அருளினார். இப்படி ஒரு வரலாறும் இந்த நாயனாரைப் பற்றி கூறப்படுகிறது ! அடியார்களிடம் அளவிலாப் பக்தி பூண்டிருந்த விறல்மிண்ட நாயனார், திருக்கையிலையிலே, இறைவன் திருவடியைப் பிரியாது வழிபடும் சிவகணங்கட்குத் தலைவராகத் திகழும் திருவருளைப் பெற்றார்.