Showing posts with label வத்தல் - வடாம் வகைகள். Show all posts
Showing posts with label வத்தல் - வடாம் வகைகள். Show all posts

Thursday, April 11, 2013

கொத்தவரைக்காய் வத்தல்


கொத்தவரைக்காய் வத்தல் 



கொத்தவரைக்காய் நன்றாக சுத்தம் செய்து
தேவையான அளவு தண்ணீரும் உப்பும்
சேர்த்து குக்கரில் 3 முதல் 5 விசில் சத்தம்
வரை வைத்து , பிறகு அடுப்பில் இருந்து
இறக்கி பெரிய தட்டில் பரத்தி உலர்த்தி வெயிலில்
வைக்கவும்.




நன்றாக சுக்காக காய்ந்த பின் காற்று புகாத
கண்ணாடி பாட்டில் அல்லது டப்பாவில் வைத்து
பத்திரப்படுத்தவும்.

எண்ணையில் பொரித்து அப்படியே சாப்பிடலாம்
வெத்தக்குழம்பு , சாம்பார் வைக்கும்பொழுது
பச்சை காய் போடுவதற்கு மாற்றாக இதை
பயன்படுத்தலாம் ,

செய்முறை மிகவும் எளிது , வீட்டிலேயே செய்து
பழகுங்கள் பண விரயத்தை தவிர்த்திடுவீர் .

Saturday, April 6, 2013

ஜவ்வரிசி வடாம்


ஜவ்வரிசி வடாம் செய்முறை விளக்க படங்களுடன்

வழங்கியவர்-  திருமதி சாவித்திரி வாசன்

இன்னைக்கு முதல் நாள் வடாம் செஷன்
எங்க வீட்ல

எப்பவுமே நாங்க முதல்ல செய்யற வடாம் ஜவ்வரிசி
வடாம் தான் அது ஒரு சோதனை ஓட்டம் போல




ஜவ்வரிசி வடாம் செய்ய தேவையானவை

ஜவ்வரிசி
எலுமிச்சை
பச்சை மிளகாய்
உப்பு தேவைக்கேற்ப





இன்று நாங்கள் எடுத்துக்கொண்ட அளவு

ஜவ்வரிசி 1 கிலோ
எலுமிச்சை 5
பச்சை மிளகாய் 150 கிராம்

உப்பு தேவைக்கேற்ப




ஜவ்வரிசி முதல்ல தண்ணில சுத்தம் செய்து
நீரை வடித்து வைத்துக்கொள்ளவும்


எலுமிச்சை சாறு தயார் செய்து கொளவும்
பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து மிசியில்
மைய்ய(நைசாக) அரைத்துக்கொள்ளவும்






ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் விட்டு
அதனுடன் அரைத்த மிளகாய் விழுது எலுமிச்சை
சாறு சேர்த்து அடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும்.

நல்ல கொதிவந்ததும் , நீர் வடிகட்டி வைத்த
ஜவ்வரிசியை அதனுடன் சேர்த்து மேலும் சிறிது
நேரம் (10 நிமிடம்)நன்றாக கிளறி கொதிக்கவிடவும்
கொஞ்சம் 1 டீஸ்பூனில் எடுத்து ஆறவைத்து சுவை
பார்க்கவும் (உப்பு , காரம், புளிப்பு) தேவைக்கேற்ப
சரி செய்துகொள்ளவும் .


இதோ தயாராகி விட்டது ஜவ்வரிசி வடாம் செய்வதற்கு

முன்பெல்லாம் இதை வீட்டில் உள்ள புடவை, அல்லது
வேட்டி இவைகளை நன்றாக சுத்தம் செய்து அவற்றில்
இந்த வடாம் செய்து வெயிலி காய வைப்பார்கள் , காய்ந்த
பின்பு இந்த துணியின் பின்புறம் நீர் தெளித்து காய்ந்த
ஜவ்வரிசி வடாத்தை உரித்து எடுத்து பிறகு நியூஸ் பேப்பரில்
காய வைத்து எடுப்பார்கள் .

ஆனால் இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் சீட் மிகவும்
பேருதவியாக உள்ளது. காய்ந்ததும் எளிதில் உரித்து
எடுக்க முடியும். நாமும் அவ்வழியே பின்பற்றுவோம்.இ

இனி இதை பிளாஸ்டிக் சீட்டில் இட்டு தயார் செய்யும்
முறையை பார்ப்போம்.





வடாத்து மாவு தயார் இனி அடுத்த கட்ட நடவடிக்கை

மொட்டை மாடி நோக்கி பயணம் , அங்கே தரை
நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து வடாம்
இடும் பிளாஸ்டிக் தாள்களை நன்றாக சுத்தம் (தண்ணீரில்)
செய்து, தரையில் விரித்து அது பறக்காவண்ணம் நான்கு
பக்கமும் செங்கல் வைத்து வேலையே தொடரவேண்டும்



வடாத்து மாவை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு
கொஞ்சம் நீர் விட்டு இளக்கிகொண்டு ஒரு ஸ்பூன் துணையுடன்
கொஞ்சம் கொஞ்சமாக ஒரே சீரான வரிசையில் வைத்து
அழகு பார்க்கலாம் , இதிலும் ஒரு கை பக்குவம் மிளிரத்தான்
செய்கின்றது .




என்ன அன்பு நெஞ்சங்களே எங்களது அனுபவங்களை
உங்களுடன் பகிர்ந்துகொண்டோம் , நீங்களும்
உங்கள் செய்முறை அனுபவங்களை .......... எங்க போறீங்க
கடைக்கு ஜவ்வரிசி வாங்கவா !!!

பார்த்து நல்ல ஜவ்வரிசியா வாங்கிட்டு வாங்க வடாம்
இட்டு பொரித்து பார்க்கும்போது முத்துக்களால்
பொரித்து எடுத்த சிப்பி போல அழகாக இருக்க வேண்டும்

கொஞ்சம் மாவு தனியா எடுத்து வச்சிருக்கேன்
சாப்பிடதான் , உங்களுக்கு தெரியாத சுவையா
சுவைத்து பாருங்கள்இங்கே கொடுக்கப்பட்டவை பலர்
அறிந்ததே இருப்பினும்
தெரியாதவர்களுக்கு ஒரு முறை சொல்வதன் மூலம்
எனக்கும் இன்னமும் நன்றாக மனதில் பதியும் என்ற
நோக்கத்தில் கொடுத்துள்ளேன்.

இதில் சில மாற்று முறைகள் இருக்கும் , வண்ணங்கள்
சேர்ப்பது , அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப வடிவமைப்பது
அதுபோன்றவற்றை அன்பு நெஞ்சங்கள் பகிர்ந்து கொண்டால்
இவனும் அறிந்து மகிழ்வேன்.

வெயில் காலம் ,  
சுட்டெரிக்கும் வெயிலானாலும் 
சுவைக்க ஏற்ற பல வடாம் வத்தல் இவற்றை 
செய்வதற்கும் ஏற்ற பருவம் இது .....பருவத்தே பயிர் செய்யலாமே 

Thursday, April 4, 2013

மோர் மிளகாய் (ஊறுகாய் மிளகாய்)

மோர் மிளகாய் (ஊறுகாய் மிளகாய்)

எப்படி சொன்னாலும் சுவை மாறாது 

மோர் மிளகாய் , இது பெரும்பாலும் ஒரு ஊறுகாய் வகை 
என்றே சொல்லலாம்.

பச்சை மிளகாயில், தஞ்சாவூர் சின்ன குடமிளகாயில் 
இந்த ஊறுகாயை தயார் செய்யலாம் 

இது நீட்டு மிளகாய், அல்லது ஊசி மிளகாய் 


இது தஞ்சாவூர் குடைமிளகாய் 



இந்த மிளகாயை நன்றாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்து 
கொஞ்சம் கீறி  மோரில் போட்டு , உப்பு தேவைக்கேற்ப 
சேர்த்து 2 அல்லது 3 நாட்கள் ஊறவிட வேண்டும். பிறகு 
தினமும் வெயிலில் காயவைத்து மாலை மீண்டும் அந்த 
மோர் கரைசலில் போட்டு வைக்கவேண்டும் , நாட்கள் 
செல்ல செல்ல மோர் கரைசல் முழுதும் உறிஞ்சப்பட்டு 
விடும். பிறகு வெயிலில் நன்றாக காய வைக்கவேண்டும் 


பிறகு இதுபோல் நன்றாக காய்ந்ததும் , காற்றுபுகாத 
கண்ணாடி பாட்டில் அல்லது டப்பாவில் எடுத்து 
பத்திரப்படுத்தி வைக்கவும். தேவையான பொழுது 
கொஞ்சம் எண்ணை வைத்து அதில் காய்ந்த மிளகாயை 
போட்டு பொரித்து எடுக்கவும் 


இந்த வறுத்த மோர் மிளகாயின் முதல் பயன்பாடு 
தயிர் சாதத்திற்கு ஊறுகாய் போல் தொட்டுக்கொள்வது 

பிற பயன்பாடுகள்

மோர் களி செய்யும்போது இதை தாளிப்பதற்கு 
பயன் படுத்தலாம்.

வருத்த   வேப்பம்பூ, சுண்டைக்காய், மணத்தக்காளி 
இவற்றுடன் சேர்த்து இதையும் வறுத்து சாதம் பிசைந்து 
சாப்பிடலாம்.

என்னங்க தெரிஞ்சுதா இப்ப  இதோட பயன்பாடு 
வாங்குங்க மிளகாய் , போடுங்க ஊறுகாய் 

மிளகாய் வாங்குங்க , மோரும் உப்பும் சேர்த்து 
ஊறுகாய் போடுங்க , உபயோகப்படுத்துங்க 


Friday, March 29, 2013

மணத்தக்காளி வத்தல்



மணத்தக்காளி வத்தல்






மனத்தக்காளிகாயை  வாங்கி நன்றாக சுத்தம் செய்து
அதை தயிர் கடைந்த மோரில் உப்பு சேர்த்து 2 நாட்கள் 
நன்றாக  ஊறவிடவும் . பிறகு நல்ல சூரிய வெப்பத்தில் 
மோர் கரைசலில் இருந்து எடுத்து  உலர வைக்கவும் 
மீண்டும் மாலை மோர் கரைசலில் இட்டு வைக்கவும் 
இப்படியே மோர் கரைசல் உறிஞ்சப்படும் வரை (3 நாட்களாகும்)
போட்டு எடுத்து வெயிலில்  உலர வைத்து , நன்கு உலர்ந்த பின் 
காற்று புகாத கண்ணாடி குடுவையில் எடுத்து வைக்கவும் 
தேவைப்படும் பொழுது (வாரத்தில் ஒரு நாலாவது) எடுத்து 
எண்ணையில் இட்டு வறுத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .

மேலும் வெத்தக்குழம்பு  செய்யும்பொழுது காய் போடுவதற்கு 
பதிலாக இந்த வத்தலை போட்டு செய்தால் சுவையும் கூடும் ,
உடலுக்கும் நல்லது. 

மனத்தக்காளியின் மருத்துவகுனங்களை கீழே பட்டியலிடப் 
பட்டுள்ளது அதையும் தெரிந்து கொள்ளுங்கள்




மருத்துவக் குணங்கள்:

1. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து உண்ண உடம்பு குளிர்ச்சி அடையும்.

2. வாரம் ஒரு முறை இக்கீரையை உண்டுவர, கடுமையான உழைப்பு காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்றியைப் போக்கலாம்.

3. இதயத்திற்கு வலிமை ஏற்றும்.

4. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

5. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும்.

6. கண்பார்வையும் தெளிவு பெறும்.

7. வயிற்றுநோய், வயிறு பெறுக்கம், வாய்புத் தொல்லை உடையவர்கள், வாரம் இருமுறை மணத் தக்காளிக் கீரையை சமைத்து உண்டு வர, நோய் கட்டுபட்டு குணமாகும்.

8. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து தொடர்ந்து சாப்பிட்டால், குடல் புண் மற்றும் மூத்திரப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

9. மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையை நீக்கும்.

10. கீரைப்பூச்சி போன்ற கிருமித் தொல்லை உடையவர்கள் வற்றலை உண்டுவர அவை வெளியேறும்.

11. மணத்தக்காளிப் பழம் குரலை இனிமையாக்கும்.

12. கருப்பையில் கரு வலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் உதவுகிறது.

13. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

14. மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

15.  இதை சுத்தம் செய்து கொஞ்சம் தயிர் கடைந்த கோரில்  உப்பில் சிறிது நேரம் ஊற வைத்து வெயிலில் காய வைத்து கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்தவும். இதை வற்றலாக எண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டுவர, உடல் சூட்டைச் சமப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கும். ஆனால் வயிற்றுக் கழிச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது.

16. இதன் கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வர மூலம் நாளடைவில் குணமாகும்.

17. மணத்தக்காளி இலைச்சாறுடன் சிறிது நெய் கலந்து பூசிவர அக்கி குணமாகும்.

18. மணத்தக்காளி சாறு 50 கிராம் அளவு எடுத்து அத்துடன் காயத்துண்டு பொடியுடன் சேர்த்து 2 முறை குடித்துவர இடுப்பில் வலி, பிடிப்பு குணமாகும்.

19. மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்து அதில் சிறிது நெய்விட்டுக் காய்ச்சி தண்ணீர்ப்பதம் நீங்கியவுடன் அதை வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்துவர ஈரலில் உள்ள வீக்கம், குடல்புண் நெஞ்சு எரிச்சல், வயிற்றில் உள்ள கட்டிகள் கரையும்.

20. மணத்தக்காளி இலைச்சாறுடன் 200 மில்லியளவு எடுத்துக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர உடம்பில் உள்ள துர்நாற்றம் பேதியாகி வெளியேறும். இதே ரசத்தில் சிறிது தேன் கலந்து வாய் கொப்பளிக்க நாள்பட்ட வாய்ப்புண் ஆறும்.

21. மணத்தக்காளி இலையைக் கசக்கி 1/2 சங்களவு குழந்தைகளுக்குக் கொடுத்துவர, மலபந்தம் நீங்கும்.