Showing posts with label சாத வகைகள். Show all posts
Showing posts with label சாத வகைகள். Show all posts

Thursday, November 21, 2013

குக்கரில் குழைந்த ரசம் சாதம் - நேரடி பிரஷர் குக்கர் ரசம் சாதம்

Pressure Cooker Rasam - Sadam  ........................
by: Savithri Vasan (Courtesy Ms Saraswathi Jayaraman)

சிலநேரங்களில் வீட்டில் கணவன் மனைவி 
இருவரும் ஒரு சேர அவசரநிமித்தம் வெளியே 
செல்ல நேரிடும் முக்கிய வேலை காரணமாக 

இப்படிதான் ஒருநாள் எனது மனைவியும் நானும் 
காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்றோம் , விரைவில் 
வேலை முடிந்து வந்து விடலாம் , வந்து சமையல் 
செய்து சாப்பிடலாம் என்று கருதி. வீட்டில் இருந்த 
பழைய சாதத்தை கரைத்து குடித்துவிட்டு 
கிளம்பிவிட்டோம் .

எதிர் பாராதவிதமாக சென்ற இடத்தில நேரம் அதிகமாக 
செலவிட வேண்டிய நிலை , வீட்டிற்கு வர மதியம் 
1 மணி ஆகி விட்டது.  

என்ன செய்யலாம், வீட்டிலே சமைக்கலாமா 
அல்லது வெளியில் இருந்து ஏதாவது வாங்கி 
வந்திருக்கலாமோ என்ற மனக்குழப்பம் 

திடீர் என்று  எனது மனிவியின் தோழி ஒருவர் 
சொன்ன குறிப்பு நினைவில் வந்தது , சாதம், ரசம் 
இரண்டும்  10 நிமிடத்தில் தயார் செய்து உடனே 
சாப்பிடலாம் என்று .

அந்த குறிப்பை நினைவு படுத்தி செயல் படுத்தினாள்
என் மனைவி. 

எப்படி என்று நீங்களும் பாருங்களேன் 

எங்கள் இருவருக்குதான் சமையல் 

குக்கரை  எடுத்தாள் அதில் 1.1/2 ஆழாக்கு 
அரிசியை போட்டாள், 2 தக்காளியை துண்டு 
துண்டாக நறுக்கி போட்டாள், உப்பு , பெருங்காயம் 
கடுகு , மிளகாய்வற்றல், கருவேப்பிலை, கொத்தமல்லி 
கொஞ்சம் துவரம் பருப்பு, கொஞ்சம் பயத்தம்பருப்பு 
(2 டீஸ்பூன் அளவு) அவ்வளவுதான் ,(புளி கரைசல் இருந்தால் 
நலம்) 



அவ்வளவுதாங்க, குக்கர்ல 7 விசில் சத்தம் வந்தது 
அடுத்த 5 வது நிமிடத்தில், தட்டில் சுட சுட சுவையான 
ரசம் சாதம், கைகளில் வந்தது.  இந்த இடைப்பட்ட 
நேரத்தில், 2 அப்பளம் எடுத்து சுட்டு தயாராக வைத்து 
இருந்தாள். 

வீட்டிலே சுவையான விருந்து சாப்பிட்ட உணர்வு 

இப்படி நேரடி குக்கர் சமையல் பலவிதமான 
உணவுகள் தயாரிக்கலாம், இவற்றை நாம் 
ஒன்றன்பின் ஒன்றாக பார்ப்போம் .

நீங்களும் செஞ்சு பாருங்க, சுவைத்து கூறுங்கள் 



Wednesday, November 20, 2013

நேரடி பிரஷர் குக்கர் வெத்தக்குழம்பு சாதம்

நேரடி பிரஷர் குக்கர் வெத்தக்குழம்பு சாதம் By: Savithri Vasan




சென்னை எங்கும் ஒரே பரபரப்பு

மக்கள் கூட்டம் பாத்திரக்கடைகளை நோக்கி
படை எடுப்பு .........

என்னப்பா இது புதுசா இருக்கு , பொதுவா நகை
கடைக்கும் , புடவை கடைக்கும் தான் நம்ம பெண்கள்
ஆண்கள் போவாங்க !!!!!

ஆச்சர்யம் ஆனால் உண்மை , ஒவ்வொரு ஆண்மகனும்
தங்கள் மனைவிக்கும் , தாய்க்கும் 2 முதல் 4 குக்கர்
வாங்கி எடுத்துகிட்டு போராங்களாமே

சில கடைல தள்ளுபடி விற்பனை வேற அறிவிச்சு
இருக்காங்களாம்


சரி சரி ரொம்ப ஒட்டாத , விஷயத்துக்கு வா

இல்லத்தரசிகளுக்கு சமைப்பது என்பது ஒரு
கலை ஆனாலும் சில நேரங்களில் அது கொலை
விழும் சண்டையில் போய் முடிந்துவிடும் .

ஆனால் நமது கை பக்குவம் தந்த அறிய வரப்பிரசாதம்
நேரடி பிரஷர் குக்கர் , சமையல் வகைகள்

அட ஆமாங்க இன்னைக்கு கல்யானத்ல சாப்பிடலையே
அப்டின்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்ல , நம்ம வீட்ல
வந்து நேரடி பிரஷர் குக்கர் வத்தக்குழம்பு சாதம் , அப்பளம்
வடாம் வறுத்து சாப்பிட்டதில்.

படத்துல இருக்கற எல்லாம் அப்டியே குக்கர்ல போடுங்க 
மேல மூடிய போட்டு , வெயிட் போட்டு 7 விசில் சத்தம் 
வர விடுங்க ........

இப்ப மூடிய திறங்க, அப்டியே உங்க கண்ணையும் திறங்க 
மூக்க துளைக்குமே வெத்தக்குழம்பு சாத வாசனை 


அப்புறம் என்னங்க, எடுத்து சாப்பிடுங்க , தொட்டுக்கவா 
7 விசில் சத்தம் வரதுக்குள்ள நாம 7 உலகத்தையும் 
ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரலாமே , அந்த நேரத்ல இதோ 
பாருங்க கீழ இருக்கா மாதிரி , அப்பளம், வடாம் எல்லாம் 
வறுத்து வச்சிடுங்க , அப்புறம் என்ன 


அட என்னங்க கிருஷ்ணர் காலிங்க நர்த்தனம் செய்யறா 
மாதிரி , சங்கு, சக்கரம், போங்க நீங்க ரொம்ப , ரொம்ப 
கெட்டிக்காரர் ஜமாய்ச்சுட்டீங்க.

குறிப்பு:- புளி கரைசல் மட்டும் ரெடி செஞ்சுடுங்க
புளிய அப்டியி குக்கர்ல போடா கூடாது. சாதாரணமா 
சாதத்துக்கு எவ்ளோ தண்ணி வைப்பீங்களோ அதே 
அளவு தண்ணி வேண்டும். அதைத்தவிர புளி கரைசல்   

துவரம் பருப்பு சாதம் ..

துவரம் பருப்பு சாதம் ..

சாதங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் 
குழந்தைகளையும் கட்டிப்போடும் இது ஒரு வித 
புது சாதம் ..... 

சமைச்சு பாருங்க , சரின்னு சொல்லுங்க






சத்துநிறைந்த முருங்கைக் கீரையை சாப்பாட்டில் அதிகமாக 
பயன்படுத்துங்க .அப்படீன்னு மருத்துவம் சொல்லுது .
முருங்கைக் கீரையை தனியாக சமைத்தால் குழந்தைகளை 
சாப்பிடவைப்பது கடினம் .அதற்கு ஒரேவழி சாதத்தோடு சேர்த்து சமைப்பதுதான் .அந்தவகையில் இந்தசாதம் உற்றதுணை புரிகிறது .குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாதமாக இது அமைந்து விட்டது .

இதைச் சமைக்க 

 உரித்த சின்ன வெங்காயம்,
பச்சைமிளகாய்,
இரண்டு பெரிய முருங்கைக்காய்,
இரண்டு கைப்பிடி முருங்கைக்கீரை,
ஒருகப் அரிசி.
கால்கப் துவரம் பருப்பு,
தேவையான புளி ,உப்பு, 
சாம்பார் பொடி,
மஞ்சள்பொடி,
பெருங்காயப்பொடி
 
துருவிய தேங்காய் ஒருமூடியோடு 
அரைக்க சிறிது சீரகம் ,வெங்காயம் ,
பூண்டு எடுத்துக் கொண்டேன்

வெங்காயம் மிளகாயை வதக்கி ,அரிசி பருப்பு ,முருங்கைக்காய் ,கீரை மஞ்சள்பொடி ,பெருங்காய பொடியுடன் குக்கரில் வேகவைத்தேன்.

புளியைகெட்டியாகக் கரைத்து ,அரைத்ததேங்காய் விழுது ,உப்பு ,வத்தல்போடி கலந்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு ,உழுந்து ,கறிவேப்பிலை தாளித்து அதைஊற்றி கொதிக்கவைத்தேன் .நன்கு கெட்டியானதும் வெந்த சாதத்தில் கொட்டி கிளறினேன் .துவரம் பருப்பு சாதம் தயாரானது .

தொட்டுக்க பொரித்த அப்பளமும் தயிர்பச்சடியும் வைத்தேன் .குழந்தைகள் ஓடிவரும் காலடிச்சத்தம் கேட்கிறது .பரிமாறப் போகிறேன்.

முந்தானை முடிச்சு போட மட்டும் முருங்கைக்காய் இல்லை 
குழந்தைகளையும் கட்டி இழுத்து சாப்பிடவும் வைக்கும் 

Tuesday, November 19, 2013

காபேஜ் ரைஸ் -

காபேஜ் ரைஸ்    by Velammal Gurusamy 






ஒரு வாரமாக பிரிட்ஜிக்குள் இருந்த காபேஜ் 
என்னைப்பார்த்து முறைத்தது .இன்றாவது என்னை 
சமைப்பாயா ?என்று கேட்பதுபோல் இருந்தது .





கேபேஜ் வீட்டிலே பாதிபேர்க்கு பிடிக்கும் .பாதிபேருக்கு பிடிக்காது .இதுக்கு என்னவழி என்று யோசித்த போது கேபேஜ் ரைஸ் நினைவில் நின்றது .இது புளிப்பு இல்லாமல் சிறிது உப்பு காரத்துடன் மட்டுமே இருக்கும் .பக்காவா வெஜிடபிள் குருமா வைத்தேன் .சொல்லணுமா ? பாத்திரத்திலிருந்த கேபேஜ் ரைஸ் காணாமல் போனது .என் மனம் மகிழ்ச்சி கண்டது .

கேபேஜ் ரைஸ் செய்ய ஒருகப் அரிசிக்கு கால்கிலோ கேபேஜ் 
என்ற அளவில் எடுத்துக்கொண்டு காபேஜை சிப்ப்ஸ் கட்டர் 
உதவியோடு தேங்காய் துருவல் போல் மெல்லிசாக துருவி 
லேசாக எண்ணெய்யில் வதக்கி அரிசியுடன் குக்கரில் 
வேகவைத்தேன் .மூன்று பச்சைமிளகாயை மிக்சியில் அரைத்து ,அதை உப்புடன் சேர்த்து வெந்த சாத்த்தில் கிளறினேன். 

கேபேஜ் ரைஸ் தயார்  இதற்க்கு ஒரு ஜோடி வேண்டுமே 
என்ன செய்வது , 
.
காரட் ,உருளை ,பீன்ஸ் நூல்கோல் இவற்றை பொடியாக நறுக்கி வேகவைத்தேன் .வெங்காயத்தை பொடியாக நறுக்கி ,கடாயில் 
வதக்கி ,இஞ்சி ,பூண்டு சேர்த்து ,நறுக்கிய தக்காளியையும் 
போட்டு கிளறி உப்பு ,மஞ்சள்பொடி ,வத்தல்பொடி ,தனியாப்
பொடி ,கரம்மசாலாப் பொடி சேர்த்து ,வெந்தகாய்களை அதில் 
கொட்டி கிளறி மல்லீலை தூவியதும் ........ அவளவுதான் 

குருமாவை கேபேஜ் (ரைசுக்)கு ஜோடியாக்கினேன் .


Saturday, October 13, 2012

பகாளா பாத் (தயிர் சாதம் ) /கர்ட் ரைஸ்

பகாளா  பாத் (தயிர் சாதம் ) /கர்ட் ரைஸ் 


என்ன பார்க்கறீங்க , எல்லாம் ஒண்ணுதான் , பெயர்தான் 
வேற.  பொதுவா முதல் நாள் இரவு வீட்ல யாரும் சாப்பிடாம 
சாதம் மீந்து போச்சுன்னா , அதுல கொஞ்சம் தண்ணி விட்டு 
வச்சு  மறுநாள் காலைல அதுல தயிர் விட்டு , பச்சைமிளகாய் 
பச்சை வெங்காயம் தொட்டுண்டு சாப்பிட்டாலும் அதுவும் இதுதான் 


ஆனா நாம இப்ப தனிய சூடா சாதம் வடிச்சு அதுல புளிக்காத 
தயிர்விட்டு , கொஞ்சம் பால் விட்டு இப்டி அலம்பலா செஞ்சும் 
சாப்பிடலாம் 
                                                                   புளிக்காத தயிர்


கொஞ்சம் குழைய வடித்த சாதம்



                                                                   காய்ச்சிய பால்  

தேவை: 

அரிசி 2 ஆழாக்கு 
புளிக்காத தயிர்  3 கப் 
பால்                    1 கப் 
பச்சை மிளகாய்  3
இஞ்சி                  1 துண்டு 
மாங்காய் கிடைத்தால் 1 துண்டு 
உப்பு       தேவைக்கேற்ப
கொத்தமல்லி  கொஞ்சம் 
கருவேப்பிலை கொஞ்சம் 

தாளிக்க: கடுகு 


அரிசிய குக்கர்ல போட்டு கொஞ்சம் குழைசலா சாதம் வடிச்சிடுங்க 

கொஞ்சம் சூடு ஆறினதும் , தயிர் அதுல விட்டு , தேவையான உப்பு 
சேர்த்து நல்லா கலந்திடுங்க , கொஞ்சம் பால் சேர்த்து , இதனுடன் 
துண்டு துண்டா நறுக்கிய  இஞ்சி, பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து 
கடுகு தாளிக்கவும் .

பிறகு கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும் .






வெய்யில் காலத்திற்கு ஏற்ற உணவு. பயணங்கள் மேற்கொள்ளும் போது  
எளிதில் தயார் செய்து எடுத்துசெல்ல ஏதுவானது. பயணங்கள் மேற்கொள்ளும் போது  
புளிக்காமல் இருக்க பால் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கவும் .(பழக பழக பாலும் புளிக்கும்- பழ மொழி)

இன்னமும் ரொம்ப ரிச்சா  இருக்கணும்னா , முந்திரி, திராட்சை, பச்சை திராட்சை 
இவற்றை தேவைக்கேற்ப சேர்க்கலாம் 

மாங்காய் சாதம்


மாங்காய்  சாதம்  -  (MANGO RICE)  By: Savithri Vasan






தேவையான பொருட்கள்

அரிசி - 2  டம்பளர்
மாங்காய் - 1 சிறியது (சுமாரான புளிப்பு)
காய்ந்த மிளகாய் - 3
வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் -   2 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - 1/2  தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
நிலக்கடலை - 50 கிராம்......(நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)
நல்ல எண்ணெய் -50 கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

அரிசியை கழுவி 3 கோப்பை தண்ணீர் விட்டு குழையாமல்  வேக வைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயத் தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். அடுத்து துருவிய மாங்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

 இதில் ஆறிய சாதம், வறுத்த நிலக்கடலை போட்டு, சாதம் குழையாமல்
 கிளறி வைக்கவும்.




சுவையான மாங்காய்  சாதம் தயார்




Wednesday, September 26, 2012

பத்திய சாதம்

பத்திய சாதம்


ஆரோக்கியம் தவறினால் ரோகம் (நோய்)


வாரத்ல எல்லா நாளும் பருப்பு , கிழங்கு வகைகள் சேர்த்து
சாப்ட்டா நல்லா தான் இருக்கும் , அனா உடம்பு , அது
கெட்டுப் போகுமுங்க .  அதுனால வாரம் ஒருமுறையோ
இல்லை 15 நாட்களுக்கு ஒருதடவையோ , அட வேண்ட்டாங்க
குறைஞ்சது மாசத்துக்கு ஒருநாள் , இந்த சாதம் சாப்பிட்டு
பாருங்க  நோய் அண்டாது , ஆரோக்கியம் குறையாம  இருக்கும்


இதோ  இது  ஒன்னும் பெரிய தயாரிப்பு இல்லைங்க

சுண்டைக்காய்
வேப்பம்பூ
மணத்தக்காளி
மோர் மிளகாய்



இது நாலும்  கொஞ்சம் கொஞ்சம் எடுத்து , வாணலில
கொஞ்சமா என்னை விட்டு பொன் வறுவலா வறுத்துக்கோங்க





அவள்வுதாங்க , சூடா சாதம் வடிங்க , தட்ல போட்டு , இந்த
வறுத்ததுல கொஞ்சம் , கொஞ்சம் போட்டுக்கோங்க , நெய்
கொஞ்சமா சேர்த்துக்கோங்க (நெய் இல்லாமல் சாப்பிடுதல்
நலம்). நல்லா நொறுங்க பிசைஞ்சு சாப்பிடுங்க . நோய்
நொறுங்கிப்போகும் .

இன்னைக்கு மட்டும்  ஜீரகம் மிளகு ரசம் தான் இதோட
கூட்டணி  (பருப்பு ரசம் வேண்டாம்) .

பொதுவா எண்ணை  தேச்சு குளிச்சு , இந்த காம்பினேஷன்
சப்பாட சாப்டு  தூங்கி எழுந்தா அப்பா உடம்பு அவ்ளோ
புத்துணர்ச்சியா இருக்கும் .

நான் சொல்லறது உண்மையா பொய்யான்னு நீங்களே
சாப்ட்டு பார்த்து சொல்லுங்களேன் , நான் வெயிட் பண்றேன்
உங்க பதிலுக்காக.

பாத்தியப்பட்ட பத்திய சாதம் 

Tuesday, September 25, 2012

குஸ்கா சாதம் - குஷியான சாதம்

குஸ்கா சாதம்


பெயரே ஒரு புதுமாதிரி!! , அதேதான் அதோட சுவையும்
புதுமாதிரி !!!

தினம் வெறும் சாதத்தில் , குழம்பு , ரசம் , மோர் போட்டு
சாப்பிடறோம் , இல்லைன்னா ,  தேங்கா சாதம், புளியிஞ்சதம்
இப்டி , இல்லன்னா , பிரியாணி சாதம் , பிரைடு ரைஸ் , இப்டி

இப்ப நாம இந்த குஸ்கா சாதம் பண்றது எப்டின்னு தெரிஞ்சுகிட்டு
செஞ்சு சாப்பிடலாமா , வாங்க


தேவை:-

பாசுமதி அரிசி      2 கப்
கடலைப்பருப்பு  1/2 கப்
எண்ணை               3 கரண்டி
நெய்                         2 கரண்டி
தக்காளி                  2
புதினா கொஞ்சம்
கொத்தமல்லி கொஞ்சம்
பட்டை, ஏலம் , கிராம்பு  Each 2 nos
பச்சை மிளகாய் 2
மஞ்சள் பொடி கொஞ்சம்
வெங்காயம்         2
தயிர்                        1கப்
இஞ்சி (பூண்டு) விழுது  கொஞ்சம்
எலுமிச்சை சாரு 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

(பூண்டு வேணாம்னா விட்டுடுங்க
நெய்  உடம்புக்கு ஆகாதுன்னா எண்ணை  மட்டும் போதும்)

சரி எப்டி செய்யறதுன்னு பார்க்கலாம்


அரிசி , கடலைப்பருப்பை   ஊறவச்சு (15 நிமிடம்)

குக்கரில் எண்ணை , நெய் விட்டு பட்டை, கிராம்பு , ஏலம் போடுங்க
வெடிச்சதும் , நறுக்கின வெங்காயம் ,உப்பு,  இஞ்சி பூண்டு விழுது
போட்டு வதக்கி , வெங்காய வாசனை வந்ததும் , தக்காளி நறுக்கி
போட்டு பச்சை மிளகா பிளந்து போட்டு , மஞ்சள்  பொடி , தயிர் சேர்த்து
இன்னும் கொஞ்சம் வதக்குங்க , இப்ப பாசுமதி அரிசி , கடலைப்பருப்பு
ஊற வச்சத போட்டு மொத்தம் 3 டம்பளர் தண்ணி விட்டு குக்கர
மூட்டி 4 விசில் சத்தம் வந்ததும், அடுப்பை அனைத்து விடுங்கள் .

10 நிமிஷம் கழிச்சு திறந்து ,  எலுமிச்சை சாறு சேர்த்து
நன்றாக கிளறி , கொத்தமல்லி , புதினா சேர்த்து சுவயாக
சூடான குஸ்கா எடுத்து பறிமாறுங்க.





சைடு டிஷ்  என்னவா?

கொத்தமல்லி , புதினா, வெங்காய , தக்காளி , இதுல ஏதாவது
ஒரு சட்னி செஞ்சு அசத்துங்க !!!!


குஸ்கா சாதம் சாப்பிட்டு  குஷியா  இருங்க





Sunday, September 23, 2012

புளியோதரை - ஐயங்கார் புளியோதரை



புளியோதரை (புளியிஞ்சாதம்)               By:- Savithri Vasan



புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில் தயார் நிலை பொடியும் , புளிக்காய்ச்சலும் கிடைக்கின்றது . இருந்தாலும் வீட்டில் செய்து சுவைப்பது ஒரு தனி சுவைதானே !!



தேவையானவை:-

புளி 100 கிராம்
மிளகாய் வத்தல் 15
எண்ணை 100 கிராம்
மஞ்சள்பொடி 1 ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு


தாளிக்க:-
பெருங்காயம்
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
கருவேப்பிலை


புலியை தண்ணீரில் சிறிதுநேரம் ஊறவைத்து நன்றாக கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்

வெத்த மிளகாய் இரண்டாக கிள்ளி  வைத்துக்கொள்ளவும் 






அடுப்பில் வாணலியில் மிதமான் சூட்டில் , 100 கிராம் எண்ணை விட்டு , முதலில் பெருங்காயம் பொரித்துக் கொண்டு , கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை , மிளகாய் வத்தல் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.

அதன் பின் கரைத்து வைத்த புளித் தண்ணீரை அதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் ,இதனுடன் மஞ்சள் பொடி உப்பு சேர்க்கவும் 




புளிக்கரைசல் கெட்டியாகி அதனுடன் இருக்கும் எண்ணை மேலே வரும் அளவு கொதிக்கவேண்டும் இதனுடன் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கலக்கவும்.





இப்பொழுது புளியோதரை கலக்க புளிக்காய்ச்சல் தயார்.

2 ஆழாக்கு அரிசியை களைந்து நீர் ஊற்றி குக்கரில் 5 விசில் பதத்தில் 
வடித்துகொள்ளவும் .

குக்கர் சத்தம் அடங்கியவுடன் , வடித்த சாதத்தை ஒரு வாயகன்ற 
பத்திரத்தில் போட்டு சற்று ஆறவைக்கவும்.

சூடு சற்று ஆறியவுடன் தயார் நிலையில் உள்ள புளிக்காய்ச்சலை 
போட்டு விரல்களால் தூவினாற்போல் கலக்கவும். 

இப்பொழுது சுவையான புளியோதரை சாதம் சுவைக்க தயார் 






 குறிப்பு:-

இதன் சுவை கூட்ட இதனுடன் வருத்த வேர்கடலை புளிக்காய்ச்சல் 
ஊற்றி கலக்கும்போதே சேர்த்து சாதம் கலக்கலாம் .

கொண்டைக்கடலை சேர்க்கவேண்டும் என்றால் ஊறவைத்து 
குக்கரில் வேகவைத்து இதனுடன் கலந்து சுவைக்கலாம்

ஸ்பெஷல் பொடி:

மிளகு,........................ 1 டீஸ்பூன் 
 மிளகாய்வற்றல்....4  
கடலைப்பருப்பு.......2 டீஸ்பூன்  
உளுத்தம்பருப்பு .....2 டீஸ்பூன் 
தணியா ......................2 டீஸ்பூன் 

மேலே சொன்னவற்றை அடுப்பில் வாணலியில் கொஞ்சம்
எண்ணை விட்டு  , இவற்றை வறுத்து , மிக்சியில் பொடி செய்து 
புளிக்காய்ச்சல் விட்டு சாதம் கலந்த பின்பு , இந்த பொடியை 
மேலே போட்டு நன்றாக கலந்தால் ..... இதுவே ஐயங்கார் 
புளியோதரயாக மாறிவிடும் . 




நல்ல உப்பு காரம் கூடிய பதத்தோடு செய்யப்படும் புளிக்காய்ச்சல்
சுமார் 1 மாதம் வரை பயன் படுத்த முடியும் .



பெருமாள் கோவில் பிரசாதம் , புளியோதரை விசேஷம் 










Monday, September 10, 2012

புதினா சாதம் (Mint Rice)

                             புதினா சாதம் (Mint Rice)  By: Savithri Vasan



புதினாவின் புகழ் புதிதல்ல , அரியதோர் அவனியில் இல்லை

புதினாவை பலவிதமாக பயன் படுத்தலாம் அதில் ஒருவகை
புதினா சாதம்.


புதினாவை நன்றாக சுத்தம் செய்து ஆய்ந்து, தண்ணீரி
அலம்பி வைத்துக்கொளளவும் .

2 ஆழாக்கு சாதம் 4 விசில் பதத்தில் வடித்து தயார் செய்யவும்

பெரிய வெங்காயம் துண்டு துண்டாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்

கொத்தமல்லி , தக்காளி, பச்சை மிளகாய் புதினா மிக்சியில் போட்டு
விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி அதனுடன் அரைத்த விழுதை போட்டு மேலும்
சிறிதுநேரம் வதக்கவும் .


வடித்த சாதத்தை , வாயகன்ற பாத்திரத்தில் போட்டு , வதக்கிய
விழுதை அதில் சேர்த்து , உப்பு சேர்த்து ,நன்றாக விரல்களால்
கலந்து விடவும்.

சுவையான சூடான ஆரோக்கியம் தரும் புதினா சாதம்
இப்போது உங்கள் முன்.  



கொஞ்சம்  ஆனியன் ராய்தா செய்து இதனுடன் சுவைத்து பாருங்கள்

சொர்க்கம் பக்கத்திலே , தெரியுதா?



   Don't  Mint Money , Eat Mint Rice

Sunday, September 9, 2012

பிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்

பிரைடு ரைஸ் (Fried Rice) வேகவைத்த சாதம்

தேவையான காய்கள் :-

காரட் , குடை மிளகாய், தக்காளி, பச்சை பட்டாணி
உருளைக்கிழங்கு , பீன்ஸ்

இந்த காய்களை, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ,
உப்பு சேர்த்து வேகவைக்கவும் , வெந்தபின்
நீர் வடித்து , அடுப்பில் வாணலி வைத்து, கொஞ்சம்
எண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து
வெந்த காய்களை போட்டு 5 நிமிடம் வதக்கவும்
( காயில்  உள்ள நீர் இழுத்துவிடும்)


சாதம் 2 ஆழாக்கு குக்கரில் தயார் செய்து கொள்ளவும்

அரைக்க வேண்டிய மசாலா பொருட்கள் :-

தேங்காய் துருவல்
தனியா
கிராம்பு
பட்டை
சோம்பு
இஞ்சி
பச்சை மிளகாய்
பூண்டு
மிளகு
இவைகளை , வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு
வறுத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்

வடித்த சாதத்தில் வேகவைத்து வதக்கிய காய்களை  போட்டு ,
உப்பு சேர்த்து ,பொடித்து வைத்த மசாலா பொடியை போட்டு நன்றாக
கிளறவும்.



சுவையான சூடான , வண்ணமிகு' ப்ரைடு ரைஸ்' ரெடிதானே !!!


இதில் இன்னமொரு சுலபமான வழி:-

அரிசி இரண்டு ஆழாக்கு , 4 டம்பளர் தண்ணீர்
வதக்கிய காய்கள் (வேக வைக்க வேண்டாம்)
தயார் படுத்திய மசாலா பொடி , இவை அனைத்தும்
ஒன்றாக போட்டு குக்கரில் சாதம் செய்வது போல்
5 விசில் சத்தத்தில் ,  பதப்படுத்தப் பட்ட சுவையான
சாப்பாடு தயார்.

செஞ்சு பாருங்க ,  எது சுவையா சுலபமா இருக்கோ
அத அவங்க அவங்க கடைபிடிங்க .........

"ஆகமொத்தத்தில் வேகவைத்த சோறு  சுவையில்  அட்டகாசம்"






தக தக தக்காளி சாதம் (Tomato Bath)

தக தக  தக்காளி சாதம் (Tomato Bath) By: Savithri Vasan



(நாட்டு)  தக்காளி  1/2 கிலோ , வாங்கி நல்லா அலம்பி
"துண்டு துண்டா" நறுக்கி வைங்க



வெங்காயம் 4 எடுத்து  'பொடி பொடியா'  நறுக்குங்க
பச்சை மிளகாய் 4 பிளந்து வைங்க
(இதை சாதத்தில் வதக்கி போடனும், மறக்காதீங்க)



மசாலா தயார் செய்யா

1.கிராம்பு                             5
2.பட்டை                              1 சுருள்
3.மிளகாய் வத்தல்          5
4.தனியா                              25 கிராம்
5.கடலைப்பருப்பு             25 கிராம்  

அய்ய்டம் 1 முதல் 5 வரை அனைத்தும்
வாணலியில் என்னை விட்டு ஒன்றன் பின்
ஒன்றாக போட்டு வறுத்து ,  மிக்சியில்
பொடிசெய்து கொள்ளவும்.

2 ஆழாக்கு சாதம் உதிர் உதிராக வடித்து , ஒரு வாயகன்ற
பாத்திரத்தில் ஆற வைக்கவும் .

சூடு  .சற்று ஆறியதும் , பொ டித்துவைத்த கலவையை
போட்டுக, தக்காளி வெங்காயம், பச்சை மிளகாய்
 வதக்கி போட்டு, உப்பு சேர்த்து நன்றாக கைவிரல்களால்
கலந்து விடவும்.  மணக்கும் கொத்தமல்லி மறக்காம போடுங்க



சைடு டிஷ்  ஆனியன் ரைத்தா இருக்கா , அப்பா ஒரு
கட்டு கட்டலாமே !!!!! 


'தக'.. 'தக'!!!!!  தகவென  ஆடவா ........................(KBS குரலில்)
தக்காளி சாதம் கொஞ்சம் போடவா




எள்ளுஞ் சாதம் (எல்லோதரை)

எள்ளுஞ் சாதம் (எல்லோதரை)

வெள்ளை எள்ளு வாங்கி சுத்தம் செய்து
வருத்துக்கொள்ளவும் ,

மிளகாய் வற்றல் வறுக்கவும் , உளுத்தம் பருப்பு
வறுக்கவும்

இவையனைத்தும் ஒன்றாக மிக்சியில் போட்டு பொடி
செய்து கொள்ளவும்

சாதம் வடித்து , ஒரு வாயகன்ற பத்திரத்தில் போட்டு
ஆறவைக்கவும் .அதில் கடுகு , உளுத்தம் பருப் ,
மிளகாய் வத்தல் தாளித்து, கருவேப்பிலை சேர்க்கவும்

சூடு ஆறியதும் பொடியை போட்டு விரல்களால்
நன்றாக கலந்து விடவும் .



இரண்டு மூன்று அப்பளம் பொரித்து இதில் நொறுக்கி
போடவும் .

சனிக்கிழமைகளில் செய்து , இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம்
செய்து  சனி பகவானை வழிபட்டு ,நாமும் உண்டு மகிழ்வது
மிக்க ன்று

சனியும் காத்து, பிணியும் நீங்கி வாழ்வில்
ஏற்றம் தரும் எள்ளு சாதம் 

Saturday, September 8, 2012

எலுமிச்சை சாதம்

 எலுமிச்சை சாதம் (மஞ்சா சோறு)


ஒரு ஆழாக்கு அரிசி : சாதமாக தயார் செய்து கொள்ளவும்


எலுமிச்சம் பழம் :-  1

மஞ்சள் பொடி     :- சிறிது

தாளிக்க:-


கடுகு
உளுத்தம் பருப்பு பருப்பு  1 டீஸ்பூன்
கடலை பருப்பு                     1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்                   4
வெத்த மிளகாய்                   2
கருவேப்பிலை
வேர்கடலை                           தேவைக்கேற்ப
(விருப்பம் இருந்தால்)


வடித்து தயார்  செய்து  வைத்த சாதத்தை ஒரு வாயகன்ற
பத்திரத்தில் போட்டு சற்று  சூடு ஆறியவுடன் மேலே \
சொன்னவற்றை தாளித்து சாதத்துடன் கலந்து
எலுமிச்சை சாறு , உப்பு சேர்த்து

சுவையான எலுமிச்சை சாதம் ரெடி





சைடு டிஷ் : உருளைக்கிழங்கு கறி

நெஞ்சுல இருக்கிற  மஞ்சா சோற  எடுத்துடுவேன் அப்டின்னு
சொல்லுவாங்களே அது என்ன?  இதுதானா !!!!





தேங்காய் சாதம்

தேங்காய் சாதம் - By:- Savithri Vasan


துருவிய தேங்காய் 2 கப் 

அரிசி  1 ஆழாக்கு , சாதமாக  வடித்து வைத்துக்கொள்ளவும் 

தாளிக்க :-

பச்சை  மிளகாய் , வெத்த  மிளகாய் ,  கடுகு , உளுத்தம் பருப்பு 
கருவேப்பிலை 


வடித்து தயார் செய்த சாதத்தை  ஒரு வாயகன்ற பத்திரத்தில் 
போட்டு , சிறிது சூடு  ஆறியவுடன் ,  மேலே சொன்னவற்றை 
சிறிது என்னைவிட்டு தாளித்து , தேங்காய் துருவலை வதக்கி 
போட்டு, உப்பு சேர்த்து  கைகளால் லேசாக கலந்து வைக்கவும்.

தேங்காய் சாதம் தயார்  




இதனுடன் வேர்கடலை சேர்க்க சுவை  கூடும் 

சைடு டிஷ்   மோர் குழம்பு   சுப்பரா இருக்கும் 

Friday, September 7, 2012

பிசிபேளா பாத் (சாம்பார் சாதக் கலவை )


பிசிபேளா பாத் (சாம்பார் சாதக் கலவை )  By: Savithri Vasan
---------------------------------------------------------------------------
கன்னடத்து பைங்கிளி என்றழைக்கப் படும் உணவு வகை
இன்று அனைவராலும் விரும்பி எளிதில் சமைத்து 
உண்ணக்கூடியது.


வீட்டில் விருந்து என்றால் இது இல்லமல் விருந்து இல்லை


உபயோகப்படுத்திய காய்கள்



  • கோஸ்
  • உருளைக்கிழங்கு
  • பச்சை பட்டாணி
  • சின்ன வெங்காயம் 
  • பீன்ஸ்
  • முள்ளேங்கி
  • கேரட் 
  • காப்சிகம் (குடைமிளகாய்)
  • சின்ன வெங்காயம் தோல் உரித்து , வதக்கி
    சிறியதாக நறுக்கிய மற்ற காய்களுடன்
    சேர்த்து ஒரு பாத்திரத்தில்
    போட்டு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து
    வேகவைக்கவும் 


பருப்பு 3/4 (முக்கால்) ஆழாக்கு , மஞ்சள் பொடி 
பெருங்காயம் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும் 





மிக்சியில் பொடி செய்ய தேவயானவை :-
கடலைப் பருப்பு
தணியா 
வெத்தமிளகாய்
தேங்காய் துருவல்
கிராம்பு , பட்டை 




அனைத்தையும் சிறிதளவு எண்ணை விட்டு 
வறுத்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும் 

புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து
வைத்துக்கொள்ளவும் .




சாதம் மூன்று ஆழாக்கு குக்கரில் வைத்து 
4 விசில் சத்தத்தில் தாயார் செய்து கொள்ளவும் 




           

வெந்த காயில், புளித்தண்ணீரை கலந்து
பருப்பில் அரைத்த பொடியை கலந்து
அந்த கலவையை கொதிக்கும் சாம்பாரில்
போடவும். இதனுடன் வடித்து வைத்த
சாதத்தை கலந்து , 10 நிமிடம் அடுப்பில் வைத்து
நன்றாக அடிபிடிக்காமல் கிளறி இறக்கவும்.

கடுகு , உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
கருவேப்பிலை சேர்க்கவும்
         
சூடான சுவையான , பிசிபேளா பாத் தயார்

இதுதான் காலம் காலமாக நான் தயார்
செய்யும் முறை.

என்ன சார் /மேடம்  நீங்க ரொம்ப பிசியா , இந்த பிஸிபேளா பாத் 
கொஞ்சம் சாப்ட்டு பார்த்து நல்லா இருக்கா சொல்லுங்களேன்