Wednesday, January 8, 2014

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி



திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி






லோக வைகுண்டம்' எனப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலின் முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி விழா. இதன் முக்கிய அம்சம் சொர்க்க வாசல் திறப்பு எனப்படும் பரமபத வாசல் திறப்புதான்.




மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குவது வழக்கம். இதில், திருமொழித் திருநாள் எனப்படும் பகல்பத்து 10 நாட்களும், திருவாய்மொழித் திருநாள் எனப்படும் ராப்பத்து பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறும்.




திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாளில் காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடுவர். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும். அன்று மட்டுமே அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார்.




பிரளய காலத்தின்போது ஆலிலை மேல் பள்ளி கொண்டு கண்வளர்ந்தருளிய திருமால், தமது நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார். ஒரு கட்டத்தில், பிரம்மாவுக்கு கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை அடக்கும் விதமாக திருமாலின் காதுகளில் இருந்து தோன்றிய அசுரர்கள் இருவர், பிரம்மாவைக் கொல்ல வந்தனர். திருமால் அதைத் தடுத்து, சுக்லபட்ச ஏகாதசியன்று அவ்விருவரையும் போரில் அடக்கி, வடக்கு வாசல் திறந்து, வைகுண்டத்தில் சேர்த்துக்கொண்டார். அப்போது அசுரர்கள் இருவரும், ""எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருள வேண்டும்'' என்று கேட்டனர். அதன்படியே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நம்மாழ்வார் மோட்சம் என்பதற்காகவே வைகுண்ட வாசல் கதவுகள் திறக்கப்படுவதாகக் கூறுவர். இதையே பரமபதவாசல் திறப்பு எனக் கொண்டாடுகின்றனர்.




இது திருவரங்கத்தை முன்னிட்டு, மற்ற திருமால் ஆலயங்களுக்கும் பொதுவானது. அன்று பெருமாள் கோயில்களில் உள்ள வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து, நான்கு வேதங்களும் ஓதி, பாசுரங்கள் முழங்க பெருமாள் வாசலைக் கடந்து செல்வார்.




இங்கே திருவரங்கத்தில் தங்க அங்கி அணிந்து, மங்கள வாத்தியம் முழங்க இந்த வாசலைக் கடந்து வருவார் நம்பெருமாள். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் இந்த வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் செல்வதாக நம்பிக்கை.




வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங்கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்ரமரனம், அர்ச்சிராத்திரி, திவ்யதேசப் பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம் என்பது இதன் விளக்கம். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும் மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, அரங்கன் நாமத்தை உச்சரித்து, அவன் புகழ் பாடும் தோத்திரங்களைப் பாராயணம் செய்தால் அதிக பயன்களைப் பெறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்வதும் உண்டு.




வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும் மோட்ச ஏகாதசி என்றும் பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு.

No comments:

Post a Comment