Showing posts with label தீபாவளி பட்ஷன வகைகள். Show all posts
Showing posts with label தீபாவளி பட்ஷன வகைகள். Show all posts

Sunday, November 24, 2013

கலர்புல் காராபூந்தி.


கலர்புல் காராபூந்தி. by: velammaal Gurusamy

இதன் அடிப்படை பெயர் பூந்தி , இதில் காரம் சேர்த்தால்
காரா பூந்தி , இனிப்பு சேர்ந்தால் பூந்தி லட்டு

இனிப்பு பூந்தியை லட்டு செய்யலாம், பருப்பு தேங்காய்
கூடுகளில் அடைத்து திருமணங்கள், போன்ற சுப
காரியங்களுக்கு செய்தல்.

திருமணங்களில் இனிப்பு பூந்தியை பந்தியில் தூளாக
பரிமாறுவார்கள்

இதே பூந்தியில் காரம் சேர்த்து , காரா பூந்தி என்று
அழைக்கின்றோம்.




குளிர் காலத்தில் டீ டைம்முக்கு ஏற்ற கர கரப்பான காரம் இந்த சுவையான ஸ்னாக் காராபூந்தி இதை கலர்புல்லா  அளித்திருக்கிறேன்.


எந்த பூந்தியாக இருந்தாலும் கண்டிப்பாக பூந்திக் கரண்டி வேண்டும்.

ஒரு கப் கடலை மாவிற்கு ஒரு டேபிள்ச்பூன் அரிசிமாவுஎடுத்துக்
கொண்டு அதோடு தேவையான உப்பு வத்தல்பொடி ,பெருங்காயப்
பொடி சேர்த்து,

பஜ்ஜி மாவு பதத்தைவிட சிறிது நீர்த்த பதமாக கரைத்து ,கடாயில் எண்ணெய்யை நன்கு காயவைத்து, பூந்தி கரண்டியை கடாய்க்கு
மேலாக இடது கையில் பிடித்துக்கொண்டு வலது கையால் மாவை குழிக்கரண்டியில் எடுத்து கரண்டியில் ஊற்றி லேசாகபூந்திக் கரண்டியின் ஓரத்தை குழிக்கரண்டியால் தட்ட வேண்டும் .

பூந்தி எண்ணெயில் உருண்டு ஓடும் .எண்ணெய் சரியாக காயாவிட்டால் பூந்திகள் நடுவில் சேர்ந்து ஒட்டிக்கொள்ளும்.


கலர் பூந்தி என்றால் புட் கலரைதனித்தனி மாவில் கரைத்து
தனித்தனியாக பொரித்தெடுக்க வேண்டும்.தீபாவளி பட்சணத்தோடு
கொஞ்சம் காரமும் கரகரப்பும் இருந்தால் தான் தீபாவளி கலகலக்கும்.

Wednesday, November 20, 2013

ஒப்பிட்டு


ஒப்பிட்டு   by Velammal Gurusamy 

நமக்கு எப்பவுமே ஒன்றோடு ஒன்று 
ஒப்பிட்டு பார்த்துதான் வழக்கம் 
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதே 
பொருள் அடுத்தவரிடம் இருந்தால் நாம் 
அதை ஒப்பிட்டு பார்ப்போம். 

சமையலும் அப்டித்தாங்க , ஒப்பிட்டு பார்க்கவேண்டிய 
ஒன்று , பொறாமை கொள்ள அல்ல,பெருமை கொள்ள 

அப்படி ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவு 
சுவைகொண்ட இனிப்புதான் இது ஒப்பிட்டு 
என்ன ஆச்சர்யமா இருக்கா , கீழ இருக்கறதை 
படிச்சுட்டு நீங்களே செஞ்சு பாருங்களேன் சாரி
ஒப்பிட்டு பாருங்களேன்



ஒப்பிட்டு அப்படீன்னு சொல்லி என் பக்கத்துவீட்டு வயதான அம்மா நான் முதன்முதலில் தாய்மை அடைந்திருந்த போது சாப்பிம்மா என்று சொல்லி கொண்டுவந்து கொடுத்தாங்க .இது நடந்து நாற்பது வருடங்களுக்கு மேலாயிற்று .அந்த அம்மா கர்னாடகாவைச் சேர்ந்தவங்க.எங்கஊர் பலகாரம் அப்படீன்னு சொன்னாங்க.

இதுவரை இந்தபெயரில் நம் தமிழ் நாட்டில் அப்படி ஒரு பட்சணம் சாப்பிட்டதேயில்லை.அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்த்தால் 
அந்த அம்மாவிடமே செய்முறையும் கேட்டு தெரிந்து கொண்டேன். 
உங்களில் சிலருக்கு இது பற்றி தெரிந்திருக்கலாம் இருந்தாலும் 
இதை நினைவு கூறும் விதமாக எடுத்துக்கொள்ளுங்கள் .


ஒரு கப் கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து குழையாமல் நறுக்கு பதத்தில் வேகவைத்து மிக்சியில் பொடித்துக்கொண்டேன். கடாயில் நெய்விட்டு துருவிய தேங்காய் கொஞ்சம் வறுத்து அதோடு ஏலப்பொடி ,ஒருகப் பொடித்தவெல்லம் ,பொடித்த பருப்பு சேர்த்து கிளறி உருண்டைகளாக்கினேன்.பின் அதை வடை போன்று தட்டிக்கொண்டேன். ஒரு பாத்திரத்தில் தேவையான கோதுமைமாவை சிட்டிகைஉப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குகரைத்தேன்.தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து வடைகளை மாவில் நன்கு முக்கி கல்லில் வைத்து நெய்விட்டு ஷாலோ ப்ரை பண்ணிஎடுத்தேன், அவ்ளவுதான் , 

ஒப்பிட முடியாத சுவையில் ஒப்பிட்டுகள் வந்தன.

நீங்களும் செஞ்சு பாருங்களேன் , செஞ்சிட்டு 
ஒப்பிட்டு பாருங்க , நான் சொன்ன சுவை இருக்கா அப்டின்னு

· 

Monday, November 5, 2012

பாசுந்தி - தித்திக்கும் தீபாவளி ஐட்டம் - 12


பாசுந்தி Basundi




தேவை


பால் 1 லிட்டர்
சர்க்கரை 4 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
சாரப்பருப்பு - கொஞ்சம்
பாதம் பருப்பு - கொஞ்சம்
குங்குமப்பூ - கொஞ்சம்
நெய் 2 டீஸ்பூன் 







பாலை நல்ல அடி கனமான பாத்திரத்தில் விட்டு
அடுப்பை குறைந்த சூட்டில் வைத்து சுண்ட
காய்ச்சவும் , நாலில் 1 பங்காக குரைந்த
பாலில் சர்க்கரை சேர்த்து நன்றாக கைவிடாமல்
கிளறவும் , பிறகு வினிகர் சேர்க்கவும். இப்பொழுது
ஏடை போன்று பிரிந்து வரும் சமயத்தில்
அடுப்பை அனைத்து , கீழே இறக்கி வைக்கவும்


இதன் மீது சாரப்பருப்பு, பாதம் , குங்குமப்பூ போட்டு
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து , குளிர்ச்சியான
பாசந்தி அனைவருக்கும் வழங்கி மகிழுங்கள்


(நெய் சேர்ப்பது அவரவர் விருப்பத்திற்க்கேற்ப)

முந்திரி பருப்பு கேக் - தித்திக்கும் தீபவளி ஐட்டம் - 11



முந்திரி பருப்பு கேக்





தேவை முந்திருபருப்பு 200 கிராம்
சர்க்கரை 100 கிராம்
நெய் 50 கிராம்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்




செய்முறை:-


முந்திரி பருப்பை 2 மணிநேரம் ஊறவைக்கவும்
பிறகு மிக்சியில் மிகவும் நைசாக அரைத்துக்கொள்ளவும்


ஒரு பாத்திரத்தில் அடுப்பில் சர்க்கரை பாகு தயார் செய்து
கொள்ளவும், நல்ல பதம் வந்ததும் அதில் அரைத்த
முந்திரி பேஸ்ட் போட்டு நன்றாக கைவிடாது கிளறவும்
கிளறும்போது ஏலக்காய் போடி சேர்த்து நன்றாக கிளறி
அடுப்பில் இருந்து இறக்கி , நெய் தடவிய தாம்பாளத்தில்
பரவும் விதமாக கொட்டி சற்று ஆறியதும் வேண்டிய
விதத்தில் துண்டுகள் போட்டு , மேலும் சற்று ஆறியதும்
காற்றுபுகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .


Sunday, November 4, 2012

காராபூந்தி - தித்திக்கும் திபாவளி ஐட்டம் - 10

கர கர காராபூந்தி

தேவை
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


வேர்கடலை
முந்திரி
கருவேப்பிலை


எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு


கடலை மாவுடன் , அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து ,
கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்





அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் எண்ணை வைத்து , எண்ணை
சூடானதும் , ஜாரிநித்தட்டில் விட்டு மாவில் முத்துக்களாக விழச்செய்து
பொன்வறுவலாக பொரித்து எடுக்கவும் 



பிறகு , வேர்கடலை, முந்திரி , கருவேப்பிலை வறுத்து சேர்க்கவும்


கர கர காராபூந்தி - தித்திக்கும் திபாவளி ஐட்டம் - 10

Saturday, November 3, 2012

பயத்தம் (மாவு) உருண்டை



பயத்தம் (மாவு) உருண்டை 



பயத்தம் பருப்பு 2 கப் 

சர்க்கரை              2 கப் 

நெய்                      1 கப் 

ஏலக்காய்            5( பொடி செய்து கொள்ளவும்)



அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் கொஞ்சம் 
நெய் விட்டு அதில் பயத்தம் பருப்பை பொன்வறுவலாக 
வறுத்து மிக்சியில் போட்டு  நைசாக பொடி செய்து கொள்ளவும் 

சர்க்கரை மிக்சியில் தனியாக போட்டு நைசாக அரைத்துக்  
கொள்ளவும் .

பிறகு ஒரு பாத்திரத்தில்  பயத்தம் மாவு, சர்க்கரை , ஏலக்காய் 
சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு கலந்து தேவையான 
அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். 

உருக்கிய  நெய் சூடானதாக இருக்க வேண்டும் 




சுவையான பயத்தம் மாவு உருண்டை தயார் 


இதை ஒரு உருண்டையை அப்படியே வாயில் போட்டுக்கொண்டு 
பேச முற்பட்டால் வாயில் இருந்து உதிர்ந்த மாவு வெளியே 
அருகில் உள்ளவர் மேலே தெளிக்கும் , சிறு வயதில் இது ஒரு 
வேடிக்கை. 

Friday, November 2, 2012

பாதுஷா - தித்திக்கும் தீபாவளி ஐட்டம் - 9

பாதுஷா 


அக்பர், பாதுஷா மறக்கலாம் !!! , 
அம்மா சொல்லிக்குடுத்த பாதுஷா மறக்க முடியுமோ ??


எனக்கு ஒவ்வொருவருஷமும் தீபாவளிக்கு பாதுஷா
வீட்லயே செய்யனும்னு ஆசை ஆனா சரியா வருமா ?
வரதா? அப்டின்னு ஒரு சின்ன சந்தேகம் , அப்புறம்
நம்ம நண்பர் (ஸ்வீட் கடை வச்சிருக்கார்) அவர்கிட்ட
போய் கேட்டேன் , அட இது என்னப்பா பெரிய விஷயம்
நான் சொல்லித்தரேன் அதே மாதிரி பண்ணு அப்டின்னு
சொன்னார்.


அவர் சொன்ன செய்முறைதான் உங்களுக்கும் எனக்கும். 

அதே முறையில் தான் நாம இந்த வருஷம் செய்யபோறோம் 
கவனமா பாத்து பண்ணுங்க , சந்தோஷமா சாப்பிடுங்க


தேவை என்ன என்ன

மைதா மாவு ( ஆல் பர்பஸ் மாவு) 200 கிராம்
உருக்கிய நெய் 2 டீஸ்பூன்
உப்பு 2 சிட்டிகை
ஆபசோடா 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 1/4 கப் ( தேவைக்கேற்ப)
எண்ணை / நெய் 200 ML


சர்க்கரை பாகு தயாரிக்க 
தேவையானவை

சர்க்கரை 100 கிராம்
தண்ணீர் 1 டம்பளர்

சர்க்கரை 1/4 கப் மேலே தூவுவதற்கு இருக்கட்டும்





மைதா மாவு, உப்பு, ஆபசோடா, உருக்கிய நெய் விட்டு , தேவையான
அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும் .


30 நிமிடம் கழித்து இந்த மாவை 9 பங்காக பிரித்து சிறு உருண்டைகளாக
உருட்டி உள்ளங்கையில் வைத்து மெதுவாக அமுத்தி நடுவில் கட்டை
விரலால் ஒரு சின்ன ப்ரெஸ் குடுக்கவும் (படத்தை பார்க்கவும்)

அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் எண்ணை / நெய் விட்டு
தயார் செய்து வடை போல் தட்டி வைத்த மாவை போட்டு
நன்றாக இருபுறமும் திருப்பி திருப்பி பொரிக்கவும் , பொன்னிறம்
கலரில் வாணலியில் இருந்து எடுத்துவிடவும் .


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சர்க்கரை போட்டு , சர்ர்க்கரை
நன்றாக கரையும் வரை கிளறவும். இப்பொழுது எண்ணை / நெய்யில்
பொறித்த பாதுஷாவை சர்க்கரை பாகில் போட்டு , இருபுறமும்
படும்மாறு திருப்பி போட்டு வைக்கவும்.


பிறகு இதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும் , காலையில்
பார்க்கும் பொழுது சர்க்கரை பூத்த வெள்ளை நிற பாதுஷா
கண்ணைப்பறிக்கும்.

என்னங்க இதைப்பார்த்ததும் இப்பவே பண்ணனும்னு மனசு
கிடந்து துடிக்குமே , செய்யுங்க , செஞ்சு சுவையுங்க , நானும்
எனவீட்ல செஞ்சு, சுவைத்து சொல்லறேன் எப்டி இருந்ததுன்னு

ரிப்பன் பகோடா - தித்திக்கும் தீபாவளி ஐட்டம் - 8



ரிப்பன் பகோடா


தலையில் வைக்கும் ரிப்பன் மறந்தாலும் ரிப்பன் பகோடா மறக்க முடியுமா


தேவையானவை
அரிசிமாவு 1 கப்
கடலை மாவு 2 கப்
கார பொடி 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 டீஸ்பூன்
வெண்ணை 50 கிராம்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவைக்கேற்ப
எண்ணை 200 ML (பொரித்து எடுக்க )



அரிசிமாவு, கடலை மாவு, கார பொடி , பெருங்காயம் , வெண்ணை, உப்பு
சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு நன்றாக கெட்டியாக பிசைந்து
கொள்ளவும்.

அப்புறம்?



அப்புறம் என்ன கீழ காட்டி இருக்காப்ல இந்த அச்ச தேர்வு செய்து
அச்சுக்குழல்ல மாவ போட்டு அழகா பிழிந்து ,



அடுப்பில் மிதமான சூட்டில் என்னை வைத்து , அதில் பிழிந்து
கருகாமல் பார்த்து பொரித்து எடுக்கவும்.







என்ன கண்ணுக்கு அழகான நாவிற்கு சுவையான ரிப்பன் பகோடா 
ரெடியா, அசத்துங்க தீபவளிய  'ரிப்பன் வெட்டி' (சாப்பிட்டு தாங்க)





                             




Thursday, November 1, 2012

மைசூர்பாக்

மைசூர்பாக் - தித்திக்கும் தீபாவளி ஐட்டம் - 7


ரொம்ப பேர் மைசூர் பாக் அப்டின்னு சொன்னதும்
பிரபல கடைகளின் பெயர்தான் நினைவில் வரும்
ஆனால் விலையை கேட்டதும் மயக்கம் வரும்


கொஞ்சம் அவங்க மூஞ்சில தண்ணி தெளிச்சு
எழுப்பி இங்க குடுத்திருக்கா மாதிரி செஞ்சு
பாக்க சொல்லுங்கள் அப்புறம் அவங்க முகத்தில்
சிரிப்பு வரும் ....................
இன்னும் கொஞ்சம் செஞ்சு சாப்பிடனும்னு
ஆசையும் வரும்.


இந்த தீபாவளிக்கு நாமும் மைசூர் பாக் செஞ்சு
அசத்தலாம் வாங்க


கீழே கொடுத்திருப்பது மாதிரி செய்முறை
அளவு உங்கள் குடும்ப தேவைக்கு ஏற்ப நீங்கள்
அளவை கூட்டிக்கொள்ளலாம் .


கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1.1/2 கப் (உருக்கியது)
தண்ணீர் - 1/2 கப்




கடலை மாவில் கொஞ்சமாக நெய்விட்டு கலந்து
கொள்ளவும்.

 ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்
விட்டு அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி
சர்க்கரை பாகு திரண்டு வரும் ........




நேரத்தில் நெய்யில்
கலந்த கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக
சர்க்கரை பாகில் சேர்த்து நன்றாக கிளறவும் .
(கட்டியாகாமல்)




மீதமுள்ள நெய்யையும் அதில்
சேர்த்து நன்றாக கிளறி நெய் தனியாக பிரிந்து
வரும் வரை 

  
அடுப்பில் வைத்து பிறகு அடுப்பில்
இருந்து இறக்கி , நெய் தடவி வைத்த தாம்பாளத்தில்
கொட்டி , தாம்பாளம் முழுவதும் பரவும் படி செய்து




கொஞ்சம் சூடு தணிந்ததும் தேவைப்படும் அளவில்
துண்டு போட்டு....... ஒரு துண்டை வாயில் போட்டு
சுவைத்து பாருங்கள் ....... அப்புறம் சொல்லுவீங்க
இத இத , இதத்தான் எதிர்பார்த்தேன் அப்டின்னு.




நீங்க சொல்லுவீங்களா?

உளுத்தம் மாவு தேன்குழல்

 உளுத்தம் மாவு தேன்குழல்   -  தித்திக்கும் தீபாவளி -ஐட்டம்  6 


தேவை:-

 அரிசி  1 ஆழாக்கு 
உளுத்தம்பருப்பு  1  ஆழாக்கு 
வெண்ணை  - தேவைக்கேற்ப 
 பெருங்காயம் -  1 டீஸ்பூன் 
ஜீரகம்      -  1 டீஸ்பூன் 
உப்பு  - தேவைக்கேற்ப 




அரிசி, உளுத்தம்பருப்பு  இரண்டையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைத்து 
சலித்து வைத்க்கொள்ளவும் 

இதனுடன் கொஞ்சம் பெருங்காயம் , ஜீரகம், உப்பு சேர்த்து , கொஞ்சம் 
வெண்ணை போட்டு தண்ணீர் விட்டு  நன்றாக பிசைந்து வைக்கவும் 



அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் எண்ணை விட்டு , 
சூடு ஏறியதும்  அச்சுக்குழலில்  இந்த மாவை போட்டு 


அழகாக பிழிந்து , ரொம்பவும் சிவந்து விடாமல் பார்த்து 
எடுக்கவும் 


Wednesday, October 31, 2012

கடலைமாவு கேக் ( 7 கப் கேக் )



கடலைமாவு கேக் ( 7 கப் கேக் ) தித்திக்கும் தீபாவளி ஐட்டம் - 5


கடலை மாவு 1 கப்
துருவிய தேங்காய் 1 கப்
நெய் 1 கப் (உருக்கியது)
பால் 1 கப்
சர்க்கரை 3 கப்
ஏலக்காய் 5 (பொடி செய்து வைக்கவும்)
முந்திரி 5 (நெய்யில் வறுத்து
கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்)






அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் கடலை மாவை
போட்டு சற்று சூடேற்றி , அதனுடன் , சர்க்கரை , பால் சேர்த்து
நன்றாக கிளறவும் ( கட்டி ஆகாமல் பார்த்துக்கொள்ளவும்)
                               



இதனுடன் அரைத்த முந்திரி , தேங்காய் துருவல் சேர்க்கவும்
நெய்யில் பாதி அளவு சேர்த்து நன்றாக கிளறவும். பக்கவாட்டில் 





உள்ளவற்றை நன்றாக நடுவில் சேரும்படி கிளறி பதம் வந்தவுடன்
நெய் தடவி வைத்து உள்ள தாம்பாளத்தில் கொட்டி, தாம்பாளம்
முழுவதும் பரவும்படி செய்து சற்று ஆற விடவும் .


சூடு கொஞ்சம் ஆறியபிறகு வேண்டும் அளவிற்கு கத்தியால்
துண்டுகளாக போட்டுவிடவும் . பிறகு சிறிது நேரம் ஆனதும்
அவற்றை ஒரு டப்பாவில் எடுத்து வைக்கவும் .

மிக்சர் - Mixture

மிக்சர்  - தித்திக்கும் தீபாவளி ஐட்டம் - 4 




மிக்சர் -  பல தின்பண்டங்களின் கூட்டு சேர்க்கையே  இது 

ஓமப்பொடி, 
முள்ளு முறுக்கு, 
ரிப்பன் பகோடா , 
காராபூந்தி , 
வேர்கடலை
அவுல்
முந்திரிப்பருப்பு

இதில் சேர்க்கப்படும் எல்லாவற்றிக்கும் மூலப்பொருள் 
ஒரே மாவுதான் 


இப்படி பலவகையான வற்றை செய்து 
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து , கொஞ்சம் 
காரம் சேர்த்து, கருவேப்பிலை பொரித்து போட்டு 
சுவைக்கலாம் 

தீபாவளிக்கு இது இல்லாமல் யாரும் கொண்டாட 
மாட்டார்கள். 

இதனுடன் வேர்கடலை, அவுல் பொரித்து போடுங்க 

முந்திரிப்பருப்பு வறுத்து சேர்த்திடவும் 

நாமும் நம் வீட்டில் செய்து சுவைப்போமா 

இனிப்பு சோமாஸ் , இன்னைக்கே செய்யலாம்

இனிப்பு சோமாஸ்  -  தித்திக்கும் தீபாவளி ஐட்டம் - 3


தேவையான பொருட்கள்

ரவை - 1/2 கிலோ
மைதா - 1/2 கிலோ

பூரணம் செய்ய
வேர்கடலை  - 100 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
வெல்லம் - 1/4 கிலோ ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
எண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை

 வேர்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.  பொட்டுக்கடலையை தனியே மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
 ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள வேர்கடலை, பொட்டுக்கடலை, 
ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது பூரணம் தயார்.

மிதமான சூட்டில் அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

 ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.


எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரி செய்வது போல் செய்து நடுவில் 1 முதல் 2 தேக்கரண்டி கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும்.

பிறகு கடையில் விற்கும் நெளி தேக்கரண்டியையோ அல்லது சோமாஸ் செய்வதற்கான அச்சையோ பயன்படுத்தி ஓரங்களை அழகு பட வெட்டவும். இவை எதுவும் கிடைக்காத பட்சத்தில் கத்தி கொண்டு ஒரே சீராக ஓரங்களை வெட்டிக் கொள்ளவும்.



அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் ஒட்டி வைத்துள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்து சாப்பிட்டு மகிழவும்.


Tuesday, October 30, 2012

ஓமப்பொடி செய்வது எப்படி


ஓமப்பொடி செய்வது எப்படி - தித்திக்கும் தீபாவளி ஐடம்-2



கடலை மாவு 2 கப்
அரிசிமாவு 2 டீஸ்பூன்
ஓமம் 1 டீஸ்பூன்
ஜீரகம் 1 டீஸ்பூன்
பெருங்காயம் கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப
வெண்ணை 50 கிராம் (தேவைக்கேற்ப சேர்க்கவும்)





ஓமம் , ஜீரகம் இரண்டையும் கொஞ்சம் தண்ணீரில்
ஊறவைத்து அந்த தண்ணீரை வடித்து தனியாக
எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்





இப்பொழுது கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம் ,
வெண்ணை, உப்பு ஆகியவை போட்டு கைகளால் கலந்து
வடித்து வைத்த (ஓமம், ஜீரகம்)தண்ணீரை விட்டு
கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து
வைத்துக்கொள்ளவும் .



அடுப்பில் மிதமான சூட்டில் வானலியில் எண்ணை விட்டு,
எண்ணை சூடு அடைந்ததும் , பிசைந்து வைத்த மாவை அச்சுக்குழலில் போட்டு பொறுமையாக அழகாக பெரிய வட்டமாக பிழிந்து சிவக்காமல் பொரித்து எடுக்கவும் .



பொதுவாக ஓமப்பொடிக்கு கருவேப்பிலை வறுத்து சேர்க்க மாட்டார்கள் மேலும் இது அவரவர் விருப்பத்தை பொருத்தது.

கண்ணைக்கவரும் ஓமப்பொடி இதோ உங்கள் முன்னே
அனைவருக்கும் கொடுத்து நீங்களும் சுவைத்து மகிழுங்கள்



முள்ளுத் தேன்குழல் (முறுக்கு)



முள்ளுத் தேன்குழல்

அரிசி                      4 ஆழாக்கு
பயத்தம் பருப்பு  1 ஆழாக்கு
கடலைப்பருப்பு 1 ஆழாக்கு

அரிசியை களைந்து , உலரவைத்து மாவாக
அரைத்துக்கொள்ளவும்

பயத்தம் பருப்பு , கடலைப்பருப்பு இரண்டும்
சற்று வறுத்து இதையும் அரைத்துக்கொள்ளவும்


இந்த அரைத்த பருப்பு மாவு 1 டம்பளர் மாவிற்கு
2 டம்பளர் அரிசிமாவு சேர்க்கவும் பெருங்காயம்,




உப்பு, வெண்ணை சேர்த்து முறுக்கும் சுத்தும்
பதத்தில் பிசைந்து வைத்துக்கொள்ளவும் .




அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில்
தேவையான  எண்ணை விட்டு பிறகு முறுக்கு


பிழியும் அச்சில் இந்த பிசைந்த மாவை போட்டு


முறுக்குகளாக பிழிந்து  நல்ல பதத்தில்  எடுக்கவும் .