Showing posts with label வசிஷ்ட பாரதி வம்சா வளி. Show all posts
Showing posts with label வசிஷ்ட பாரதி வம்சா வளி. Show all posts

Monday, October 1, 2012

வஷிஷ்ட் பாரதி வம்சா வளி ......Page..6


வஷிஷ்ட் பாரதி வம்சா  வளி                       By: Grand Son S.S.Vasan


அவருடைய இஷ்ட தெய்வமாகிய விநாயகரை வணங்கி  தொடருகின்றேன் 



கவி

"மாய நீங்கிய சிந்தனைமா மறை ,
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லலாம்,
ஆய சாலை யரும் பெறலன்பினான் ,
நேய நெஞ்சின் விரும்பி நிரப்பினன்" ----கம்பர்


என்பதுபோல் நமக்கு இங்கு நிரப்பினன். எல்லாம் ஸ்ரீ ராமன் அருள். எல்லோருக்கும் போஜனம் செய்வதற்காக சங்கரியம்மாளும் மற்றவர்களும் நூறு பேருக்கு வேண்டிய சாப்பாடுகள் தயாராக்கினர். சுவாமி நிவேதனம் செய்த பிறகு பிராமணரோடு பாரதியார் உண்ட பிறகு , சோளகரும் அங்குள்ளவர்களும் அப்படியே சாப்பாடு நடந்ததும் சோளகர்


"பட்டுப்புடவைதனைக் கட்டி பர தேவதைப்போல் முன்வந்து,
மட்டில்லாத மகிழ்ச்சியுடன் மலர்போல் சோற்றில் நெய் வார்த்து
கெட்டிப் பருப்பும், குழம்பு ரசம் கிளரும் துவட்டல் தயிரோடு
இட்ட சங்கரியம்மாள்  கைக்கிடுவேன் தங்க கடயன்களே"


என்று சோழகர் உபசாரம் சொன்னதாகக் கேட்டிருக்கிறேன். இது நடந்த வருடம் பரசுராம பாரதியாரின் 60௦-வது ஆண்டு, ஆதலின் அவருக்கு தெயவீகமாகவே வீட்டிற்கு அக்னி வாதயைச் செய்து மனையைப் புதுப்பிக்க வைத்து அவருக்கும் அறுபதாம் ஆண்டின் கலியாணத்தை கடவுளே  சோழகர் மூலமாய் நடத்திவைத்ததாகக் கொண்டாடினார்கள். இவர் எப்பொழுதும் காலை 5 மணிக்கு முன்னமே விழித்துக்கொள்வார் . எழுந்து கை கால் சுத்தி செய்து  வீபுதி தரித்து ஸ்ரீ ராம நாமத்தை ஜபம் பண்ணிக்கொண்டு இருப்பார்.

பொழுது விடியும்முன் காவிரி சென்று ஸ்நானம் ஜபம் உபஸ்தானம் அச்வத பிரதக்ஷணம், விநாயக தர்சனம் செய்து கொண்டு வீட்டிற்கு வருவார். வந்து பூஜை, ராமாயண பாராயணதிகள் செய்து கொண்டு அதற்குமேல்
ஆகாராதிகள் செய்வார். அப்பால் ஸ்ரீ ராமனை தியநித்துக்கொண்டு  ஏகாந்தமாய் இருப்பார், அப்பால் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஸ்ரீ ராம நாடக கீர்த்தனங்களை தானும் பாடிக்கொண்டிருப்பார், பிறருக்குஞ் சொல்லிகொடுபார். இப்படி இருக்கையில் இவருக்கு வயது 75-க்கு மேல் ஆயிற்று. இவருடைய மூத்த முமாரன் ஸ்ரீ ராமஸ்வாமி பாரதிக்கு புதுக்கோட்டைக்கு மேற்கு சிகாகிரி என வழங்கும் குடுமியாமலை பரமேஸ்வர அய்யர் குமாரி காமாட்சியை கல்லியாணம் செய்து வைத்தனர். மற்றுமுள்ள பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் கலியாணம் ஆகிவிட்டது மூத்த குமாரன் ராமஸ்வாமி பாரதிக்கு ஒரு  பிள்ளை பிறக்க அப் பேரனையும் கண்டு மகிழ்ந்தார்.


இப்படி இருக்கையில் ஒருநாள் இரவு இரண்டுமணி நேரத்தில் வழக்கம்போல அயல் வீட்டு பிராமணர் ஒருவர் அழைப்பதுபோல் சப்தம் கேட்க விடியற் காலமென நினைத்து ஸ்நானத்திற்கு இருவரும் புறப்பட்டு காவேரிக் கரைக்குப் போனார்கள். அங்கு வேறு ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது வானத்தைப் பார்த்து நட்சத்திரங்களின் நிலைகளால் ஓஹோ விடியும்முன் நேரத்தில் வந்துவிட்டோம் இன்னும்  நாலு ஐந்து  நாழி இருக்கிறது என்று நினைத்தார் . நினைக்கவே மனதில் அச்சம் எழுந்தது
சாஸ்திரிகளே என்று கூப்பிடும் பொழுது அவரும் காணவில்லை.


பரசுராமா ராம நாமத்தை சொல்லிக்கொண்டேயிரு பயபடாதே என்று சப்தம் மாத்திரம் கேட்டது. பாரதியாருக்கு அச்சமும் மிச்சமாய் எழுந்தது.கூட வந்த சாஸ்திரிகளைக் காணூம் சப்தமோ கேட்டது நமது பேரைச் சொல்லி இங்கு கூப்பிட்டவர் யார் என்று சிந்தித்தார். அந்த இரவில் மீண்டு திரும்பி தெருவுக்குள் போகவும் மனம் துணியவில்லை. இந்நிலையில் வந்தவர் யாரோ அறியாமல் மோசம் போனேனே என்று அங்கேயே நின்று வாய் விட்டு கதறி ராமனாமமே கதியென்று விடியுமளவும் சொல்லிக்கொண்டு அந்தக் காவேரிக்கரையில் இருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் கிழக்கு வெளுக்க கரிச்சான் கூவியது, காக்கை கரைந்தது பொழுது விடிந்து பாரதியார் ஸ்நானம், நியமம் முடிந்தது வழக்கம் போல் வீடு வந்து சேர்ந்தார்.

இப்படி இருந்து வயது 80க்கு மேலும் ஆகியது. இவர் தனது 81-வது வயதில்
மனைவி, மக்கள் , பேரன், பேத்தி, பல சுற்றம் சூழ திடசரீரியாகவே மரணகாலத்தை எதிர்பார்த்து இருந்த காலத்திலேயே ஸ்ரீராமனை தியானம்
செய்துகொண்டு தனது ஆவி துறந்தார்  இவர் அரிய சேஷ்ட குமாரராகிய
ராமஸ்வாமி பாரதிகளும் மனைவி மக்களோடு 35-வது ஆண்டில் தனது
தந்தைக்குரிய கடனை செய்து மனை வாழ்க்கையைக் கைக்கொண்டு
மற்றயோரை ஆதரித்து தந்தையைப் போல் தன்னை யாவரும் மதிக்க
வாழ்ந்து வந்தார்.


08-02-1936 நேசன் தொடர்ச்சி

ராமஸ்வாமி பாரதி
--------------------------------
இவர் பரசுராம பாரதியின் மூத்த மைந்தர் , காலக்கிரமத்தில் விதாயரம்பம் எட்டாவது வயதில் உபநயனம் செய்வித்து வேத அத்யானத்தயும் செய்வித்தார்  தமக்குத்  தெரிந்த தமிழ்பாஷயையும் கற்பித்து வைத்தார். இத்துடன் தமிழ் கணிதங்களும், நூல் முறைப்படி(இலக்கம், நெல்ல்லிலக்கம், எண்சுவடி , குழி மாத்து , கீழ் வாய்க் கணக்கு) முதலிய நூல்களும் கற்பிக்கப்பட்டன
சட்டம், சரவை(பெரிய எழுத்து சின்ன எழுத்து) முதலியன எழுதவும் ஓலைகளை வாரவும் சுவடிகள் சேர்க்கவும் நன்றாய் பழகினார்.


இவர்க்கு தந்தையின் பால் உள்ள கல்வித் திறன்கள் யாவும், ' குல வித்தை கல்லாமல் வரும்' என்பதை ஒத்து சிறிது பழகவே அவைகள் மிகவும் பெருகியது. அன்றியும் தாய் தந்தையர் மாட்டு அதிக நேயம் பிறந்தமையால் , நாள் தோறும் தான் செய்யும், தெய்வ வணக்கத்தோடு அவர்களையும் வணங்குவது வழக்கம். இவருக்கு இராம பக்தியும் தந்தயினிடத்தே நின்று பெருகியது.


இராமஸ்வாமி பாரதி தந்தை இல்லாத சமயத்தில் பக்கங்களிலுள்ள நண்பர்களிடம் பேசும்போது சில கவிகளை தந்தைபோல் சொல்லுவதும் பொருள்களை கூறுவதும் கேட்ட சில பெரியோர்கள் அஹா விரை ஓன்று போட்ட சுரை ஓன்று வருமா? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? இந்த இளம் பிராயத்திலேயே விளையும் பயிர் முலையில் தெரியும் என்பதுபோல் இவர்க்கும் தமிழ் மணம் வீசுகிறது. வாக்கு நன்றாய் இருக்கிறது என்றார்கள். வயது சென்ற சோழகரும் இவரை குட்டி பாரதி என்றே சொல்லிக் கூப்பிடுவார்.


இவருக்கு வயது இருபது. இத்தருணத்தில் அச்சோழகர் காலத்தை வீண்போக்கல் ஆகாது என தங்கள் தெருவில் கல்விக்கூடம் ஒன்றைக் கட்டி அதில் பத்து பிள்ளைகளைச் சேர்த்து கொடுத்து இவர்களுக்கும் கண்ணைத் திறந்துவிடுக்ன்கள் என்று உபாத்தியாயராக அமைத்தார். இதற்காக வீட்டிற்கு ஒரு கலம் நெல் ஆக வருடத்திற்கு பத்து கலம் நெல் என்று ஏற்பாடு
செய்தார். தந்தையார் ஒருநாள் கம்பராமாயண சுவடியை எடுத்து ஆசிர்வாதித்து கொடுத்து நீ நாள் தோறும் பாராயணம் செய்வதோடு மாலையிலாவது இரவிலாவது என்னைப்போல் நீயும் கதை சொல்லிப் பழகவேண்டும் என்று கொடுத்தார். இவர் இதை அன்போடு பெற்று
தந்தையை நமஸ்கரித்து தனக்கு அரியதோர் புதிய வாழ்வு வந்தெய்தியதாக மகிழ்ந்தார். மறுநாள் ராமநவமி மகோற்சவம் அதில் ஸ்ரீ ராமரை ஆராதித்து பானகம், நீர் மோர் பழம் சுண்டல் நிவேதித்து பிராமணர்களுக்கும் மற்றுமுள்ளவர்களுக்கும் கொடுத்து அன்றே கதை சொல்லவும் ஆரமித்தார்.


மறுநாள் வழக்கம்போல் பாராயணம் செய்ய ஆரம்பிக்கும்போது முதல் ஏட்டின் பிளவுக்குள் ஒரு சிறிய நறுக்கு இருக்கக் கண்டு அதை எடுத்துப் பார்த்துப் படிக்கும்போது தன் தந்தை கையினால் எழுதிய கவி ஓன்று இருக்கக் கண்டார் அது வருமாறு.


"எந்தை தன் தந்தை தந்தை
எனுமொரு குலங்கள் மூன்றும்
மைந்தர் தம் மைந்தர் மைந்தர்
வழி வரு குலங்களெல்லாம்
உந்தன் பொற் பாதங்கட்கே
உற்றிடும் அடிமையாவோம்
செந் திரு மான் மணாளா சீ ராமா
போற்றி! போற்றி !! "


இக்கவியின்படி நாமும் ராமனுக்கு அடிமைதான் என்று நினைத்தார் . நிற்க ஒருநாள் தந்தையை வணங்கி எனக்கு ஏதேனும் உபதேசம் அனுக்கிரகம் செய்யவேண்டுமென்று பணிந்து கேட்க அவர் கம்பராமாயணத்தின் பாயிரத்தின் நூற்  பயனாக கூறியுள்ள


" நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேறியங்க மலை நோக்கம்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள் வலி கூறுவார்க்கே "


ஆறம், பொருள்,  இன்பம் வீடு என்னும் நாற்  பயனும் கிடைக்கும் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும். சத்ரு சம்ஹாரம் செய்த "ஸ்ரீ கோதண்டபாணி குறை கழலன்றி நமக்கு வேறு யாது துணை ?. இதை விடாது சிந்திக்க வந்த தீவினை சிந்திப்போம் இதுவே உபதேசம் என்றார்.. தகப்பனார் உபதேசித்த பிரகாரம் இந்தக் கவியை 108 தரம் ஆவர்த்தி செய்து வந்தார் . இவருக்கு 30-வது வயதில் கலியாணம் நடந்தது.  இவர் மனைவி பெயர் காமாக்ஷி . இவருக்கு முப்பத்தைந்தாவது வயதில் மூத்த குமாரன் பிறந்தான் அவன் பெயர் பட்டாபிராமன் என்று மறு பெயர் கொண்ட பிச்சு பாரதி. இது அவர்களின் முன்னோர்களின் பெயர்.  இவருடைய ஜாதகத்தைப் பார்க்க இவர் 60௦ வயதில் யோகீச்வரராவார் என்றும் ராஜாக்களுக்கு குருவாக இருப்பார் என்று ஜாதகத்தில் இருந்தபடியே இவர் பின் அனுபவத்தில் குடும்ம்பம் நீங்கி சரபோஜி மகாராஜாவுக்கு ஒருவகையில் குருவாக கொண்டாற்றப்பெற்று தஞ்சையில் இருந்தார்.


.........தொடரும் 

வசிஷ்ட பாரதி வம்சா வளி

வசிஷ்ட பாரதி வம்சா வளி                  By: Grand Son S.S.Vasan

அவர் வணங்கும் இஷ்ட தெய்வமாகிய விநாயகரை வணங்கி 
தொடருகின்றேன்   1-2-1936 நேசன் தொடர்ச்சி. 



பரசுராம பாரதிக்கு இருபத்தைந்து வயதில் கல்யாணத்திற்கு தீர்மானம் செய்தார்கள் , இவரும் உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் போகும் வழக்கம் உண்டு.அந்த ஜாமீனில் பிரஸித்த சங்கீத ஸாஹித்ய வித்வான் கனம் கிருஷ்ணய்யர் அவர்கள் தனது தமக்கையின் பெண்ணாகிய சங்கரியை பரசுராம பாரதிக்கு கன்னிகாதானம் செய்தார்கள் ,. மறுவருடம் பரசுராம பாரதியின் தம்பி நாகசாமி அய்யருக்கு மங்கலம் தக்ஷிணாமூர்த்தி அய்யர் தனக்கு பிள்ளைகள் இல்லாமையால் தனது ஒரே கன்னிகையை வைத்யநாத பாரதியின் இரண்டாவது குமாரனாகிய நாகசாமி அய்யருக்கு கன்னிகாதானம் செய்து தனது  ஏராளமான புஞ்சை நிலங்களையும் பெண் காணியாக விட்டு தனது கிராம மிராசு பட்டாமணித்தயும் அவருக்கு கொடுத்துவிட்டார். திருச்சினாப்பள்ளி ஜில்லா முசிரி  தாலுக்கா முசிரிக்கு வடக்கு ஆறு
மைலில் உள்ளது மங்கலம் கிராமம். அந்தப் பரம்பரையில் மூன்றாம் தலைமுறைப பேரன் மங்களம் முத்துஸாமி அய்யர் பிரஸிசித்தராயிருந்து இன்றைக்கு பத்து வருடத்திற்கு முன் வரையிலும் இருந்து தேகம் நீத்தார்.


பரசுராம பாரதிகள் தனது தருமபத்தினி சங்கரி அம்மாளோடு குடும்ப                    ரக்ஷினைகளும் செய்து வருவதோடு வயது முதிர்ந்த  தனது பிதா
வைத்யநாத பாரதியின் போஷணையை மிக்க அன்பாக தன மனைவியோடு செய்து வருவார். தங்கள் குடும்பத்தில் வருடத்திற்க்கு ஒருமுறை சுமங்கலிப் பிரார்த்தனையாக உடன் கட்டை எறிய உத்தமியாகிய ஞானம்மாளையும் சுமங்கலியாக இறந்த ஜானகி அம்மாளையும் குறித்து ஒரு ஆராதனம் செய்து வருவார். அப்பொழுது இக்கவியால் துதிப்பது வழக்கம்.

'புண்ணிய ஞானம்மாள் பொருவில் ஜானகி ,
மண்ணிற் கற்புடன் மருவு தெய்வமே,
எண்ணியே மனதில் ஏத்தும் என் குலம்
கண்ணினுள் மணியெனக் காக்க கடவதே."

எனப் போற்றுவாராம். தந்தையாகிய வைத்யநாத பாரதி வானுலகடைந்தார் . பரசுராம பாரதிகளுக்கு தந்தை பிரிந்த வருத்தம் அதிகம். இருந்தாலும் குடும்ப
காரியத்திலும், சில நேரம் போனது போக ராமத்தியானத்தாலே துக்கத்தை ஆற்றிக்கொள்வார். மற்றொரு சமயம் ஆற்றில் வழக்கம் போல் வைகாசி மாதம் வருகிற வெள்ளம் தாமதிக்கக் கண்டு சாகுபடிக்கு தாழ்வாக தண்ணீர் இல்லாமல் இருக்கிறதை நினைத்து யோசித்து வருந்தி பாரதியாரை வேண்டிக்கொண்டார்கள் . அப்போது பாரதியார் ஆண்டவன் இருக்கிறார் என்று

" உள்ள முனக்கே தெரியும் உணர்ந்துவதேன் அய்யனே,
பள்ளம் படுகுழியும் உலர்ந்ததுகான் பாரதனில் ,
தெள்ளும் தியக்கமது தீர உந்தன் கடைக்கணருள் ,
வெள்ளம் பெருகிவரச் செய்மதகார் விநாயகனே"

 என்று கவிபாடின அன்று இரவே வெள்ளம் வந்ததாம்.
மறுநாள் எல்லோரும் பாரதியாரைப் புகழ்ந்தனர், மறுநாள் கிராமத்தார் எல்லோரும் தெய்வ கிருபையால் வெள்ளம் வரக்கண்டு மகிழ்ந்து எல்லாரும் பாரதியாரைப் புகழ்ந்து அந்நாளில் காளமேகப் புலவர் இருந்ததாகச்
சொல்வார்கள் அல்லவா? நாம் பார்த்ததில்லை. இப்பொழுது நமக்கு காளமேகப் புலவரைக் கண்டு கொண்டோம் அவர் தான் பாரதியார். இப்படி நமக்கு தக்க சமயங்களில் பேருதவி செய்யும் பாரதியாருக்கு நாம் என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறோம்


குறள்

செய்யாமற் செய்த உதவிக்கு வய்யகமும் ,
வானகமும் ஆற்றல் அரிது ..(திருவள்ளுவர்)


சோழகர்: நாம் முன்னமே நஞ்சை நிலத்தில் ஊரில் மானியம் விட்டு இருக்கிறோம். இப்பொழுது  படுகையில், புஞ்சையில் சோளம், கம்பு, கேழ்வரகு, உளுந்து, பயறு, எள்ளு எது விளைந்தாலும் எத்துக்குக் குருணி(ஒரு மரக்கால்) நாம் கொடுக்கவேண்டும் என்று ஒப்பந்தம். செய்துகொண்டனர். அதுவுமின்றி கலியாணங்களில் பெண்ணுக்கு திருப்பூட்டின பிறகு பிள்ளையையும் பெண்ணையும் பெரியோர்களும் பந்துக்களும் பச்சை அரிசியும் , அருகம் புல்லும் கொண்டு (சேடை) ஆசிர்வதித்து இரண்டு கைகளாலும் வாரி விடுவது வழக்கம். நமது பாரதி  சேடை இடும்போது காணிக்கையாக ரூபாய் ஒன்றுக்கு குறையாமல் வீடுகள் தோறும் கொடுக்கவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

வேத வித்துக்களான அக்ரகார வாசிகளாகிய பிராமணர்களும் தங்கள் வீடுகளில் நடக்கும் கல்யாணங்களில்  பாரதியாரை உபசரித்து பிள்ளையையும் பெண்ணையும் ஆசிர்வதிக்கச் செய்து சம்பாவனை செய்வார்கள்.

 அந்தணர்கள் கல்யாணத்தின் ஆசிர்வாதத்தில்

1) ஹரிஹர சம்பாவனை அதாவது சிவாலயங்கள் விஷ்ணு ஆலயங்களுக்கு கொடுப்பது அதற்க்கு திட்டம் 4ஆனா

2) ஆச்சார்ய சம்பாவனை இது அவர் அவர்கள்  மதாச்ச்சர்யர்களை குறித்து செய்வது.

3) சரஸ்வதி சம்பாவனை , இது பரசுராம பாரதியாருக்கு ஒரு திட்டம் செய்து 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிற் பிரியமாக செய்து வந்தார்கள்.


இந்த சம்பாவனை தான் பாரதியாருக்கு வருஷ வருமானம், இதுவே பாரதியின் குடும்ப ரக்ஷன நிதி. கிழக்கில் உள்ள மகக்ஷேத்ரமாகிய திருவையாற்றில் இருந்து மேற்கே கல்லணை வரையிலும் இடையில் காவிரியின் இருகரையிலும் உள்ள கிராமங்கள்

1) கண்டியூர் 2) திருப்பந்துருத்தி 3 திருவாலம் பொழில், 4) நடுக்காவேரி 5) வைதினாம் பேட்டை, 6 வரகூர், 7) செந்தலை 8) கண்டமங்கலம் 9) திருக்காட்டுப்பள்ளி 10) பூதலூர் 11) ஓம்பத்துவேலி,  12) முல்லக்குடி
13) பழமாநேரி  14) நேமம் 15) இளங்காடு 16) கூத்தூர் 17) விஷ்ணும்பேட்டை       18) மகாராஜபுரம் 19) சாத்தனூர் 20) மரூர் 21) தில்லைத்தானம், 22) திருமழுபாடி

 முதலிய கிராமங்கள் மற்றும் பலவாம் . பரசுராம பாரதிக்கு இவ்வூர்களில் எல்லாம் சரஸ்வதி சம்பாவனை கொடுத்து வந்தார்கள் . அது பரம்பரையாக இற்றைக்கு ஐம்பது வருஷத்துக்கு முன் என் பிதாவாகிய வைத்தியநாத பாரதி அதனை தனது ஐம்பத்து ஆறாம் ஆண்டு அனம்  அச்சரஸ்வதி சம்பாவனையைக்  கொண்டே தனது குடும்பத்தை ரக்ஷித்து  வந்தனர்.

வருஷத்த்திற்கு 150௦ ரூபாய்க்கு மேல் 200ரூபாய்க்குள் குறையாமல் வர நானும் பார்த்திருக்கிறேன். எங்கள் தந்தையின் பிறகு நாங்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு குடியேறி விட்ட படியாலும் திருநெல்வேலி மதுரை முதலிய அயலூர்கள் சஞ்சரிக்க யத்தனித்தமையாலும் இச்ச்சம்பாவனையை பெறுவதற்கு அவகாசம் இல்லாமற் போயிற்று; என்றாலும் உள்ளூரில் அபிமானித்துத்  திருவயாற்றிலிருந்து என்பெரிய தந்தை நாகுபாரதியின் குமாரன் தமிழ் அறிவும் சங்கீத ஞானமும் உடையவனும் , கீர்வாணப் பிரஸ் மானேஜருமாயிருந்த பரசுராமருக்கு சாத்தனூரிலேயே கல்லியாணமும் செய்திருந்த படியால், அவர்களில் சிலர் சரஸ்வதி சம்பவனையை என் தம்பியாகிய பரசுராமனுக்கு அபிமானித்து கொடுத்துவந்தார்கள். அவனும் சந்ததியின்றி நாற்பதாவது வயதில் நானிலம் துறந்தான்.

மூல புருடராகிய அப்பறசுராம பாரதியாருக்கு 30-வது வயதில் கொள்ளிடக்கரையில் உள்ள திருக்குன்னம் என்ற கிராமத்தில் பிரசித்த சங்கீத வித்வான் கனம் கிருஷ்னையருடைய தமக்கையின் பெண்ணாகிய சங்கரி என்ற கன்னிகையை கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள் . அவர்கள்
இல்லறம் நடத்தி சில ஆண்டுகள் செல்ல சில குழந்தைகளை ஆணும் பெண்ணுமாக 5, 6,  குழந்தைகளை பெற்றார்கள் . அவர்களில் மூத்த குமாரர் ராமஸ்வாமி பாரதி , பரசுராம பாரதி பெரிய குடும்பி ஆயிட்டார். இவருக்கு அருணாசல கவியால் எழுதிய இராமாயண பதம் முற்றும் பாடம். ஆகையால் பகலில், ஒழிந்த மாலைக்காலத்தில் ராமாயண கீர்த்தனைகளை பாடிக்கொண்டு கம்பராமாயணக் கவிகளையும் இடை இடையே சொல்லி பொருள் கூறி கதை சொல்லி ஜனங்களை ரசிக்கச்  செய்வதே இவருடைய நித்திய வழக்கம்.


இப்படி இருக்கும் பொழுது ஒருசமயம் கோடை மிகுதியால் தன் கூரை வீடு தீப்பற்றிக்கொன்டது. அப்பொழுது பாரதியார் குட்டிகளோடும் மாடு கன்றுகளோடும் வெளியில் வந்து விட்டார். வெளியில் வந்தவர் தன் இடுப்பு வஸ்திரம் ஒழிய மேல் வஸ்திரத்தை "அக்னி பகவானே ஸ்வாஹா" என்று எரிகிற நெருப்பில் எறிந்துவிட்டு தெருவில் வந்து நமஸ்காரம் செய்து  குழந்தை குட்டிகளை அழைத்து பெருமாள் கோவிலில் போய் உட்கார்ந்துவிட்டார். உட்கார்ந்து ஸ்ரீ ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டு கதறினார். வேடிக்கைப் பார்க்க வந்தவர்களெல்லாம் கண்ணும் கண்ணீருமானார்கள் அநேகர் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து ஊற்றினார்கள்.  இதற்குள் சோழர் சில ஆட்களையும்  கூட்டிக் கொண்டு ஓடிவந்தார்.  பக்கங்களில் பற்றாமல் அக்னி தணிக்கப்பட்டது.

அவ்வூரில் தலைமை பெற்றவரும் வயது சென்றவரும் பாரதியாரிடம் பக்தியுடய்வருமான காலாட்டி சோழகர் உடனே கோவில் வாசலில் வந்து பலரும் சூழ்ந்திருக்க மனைவி மக்களோடு கண்ணும் கண்ணீருமாக ஆனந்த பரவசமடைந்து தன்னை மறந்து பாரதியார் ஏக வஸ்திரத்தில் ஏக்கத்தோடு பாரதியார் இருக்கக் கண்டார் அனவீடு  மெழுகுபோல அன்பால் உருகி கண்ணீர் பெருக பாரதியாரைப் பார்த்து வணங்கி

"சாமி வருத்தப்பட வேண்டாம் பழைய வீடு வேகுது புதிய வீடு ஆகுது.

புதிய வீடு கட்டி புதுச் சோறு சமைத்து சாமிக்கு படைச்ச பிறகு இன்னிக்கு ஆண்டவன் சேடம் தான் அடியேன் புசிப்பது. கூபிடுங்கடா கம்காணியை, காவற்காரனை கூப்பிடு, வெட்டியானை கூப்பிடு . ஆளுக்கு மூங்கில்               வெட்டியாங்க, யார் படுகையில் மூங்கில் கொத்தாய் இருந்தாலும் சரி சிறிது, பெரிது இனவாரியாய்  கொண்டுவரச் சொல்.


யாருடா இந்தக கிள்ளை பள்ளர்களை கூப்பிட்டு . சுத்தமாக வரண்டி குப்பைக் குழிகளில் கொட்டிவிடுங்கள் . புதிதாக மண் கொணர்ந்து போட்டு பழைய சுவர்களைத்  தட்டி புது சுவர்களை எழுப்புங்கள் என்றார். உடனே மேலே படுகையிலிருந்து கொத்து மூங்கில்களை கைகோர்த்து மோடு கட்டி வரிச்சுகட்டி பேக்கரும்பு தட்டிகளால் வரிச்சு  விரிச்சு அப்பொழுது புது கீத்துக்கள் முடைந்து கூரை வேய்ந்து சுவர்கள் மழுப்பி தரைகளை இடித்து சமப்படுத்தி வாயிற்படி, திண்ணை அறைகள் கூடங்கள் அமைத்து புழக்கடையும் மாட்டுச்  சாப்பும் போடப்பட்டது. இவைகள் ஒரு ஜாம நேரத்திற்குள் எல்லாம் புதிதாகவே அமைந்துவிட்டன.

சோழகர் அம்மணியும் குழந்தைகளும் பட்டினி இருக்காங்கள் சீக்கிரம் ஆகட்டும் என்று ஆட்களை வேலை விரட்டுகிறார். அவர்கள் அதிகாரத்திற்கும் அன்பிற்கும் இணங்கியவர்களாக முடித்தார்கள்.


முதல் ஜாமத்தில் எறிந்த வீடு மூன்றாம் ஜாமத்தில் சோழகர் புதிதாக சொன்னபடி ஆக்கிவிட்டார்கள். ஜனங்கள் அதிசயம் அடைந்தார்கள் . வாயிலில் வாழைமரம் , மாவிலைத் தோரணம் கலியாண  வாசல் போல் அமைக்கப்பட்டது. அக்ரகாரத்தில் உள்ளவர்களும், கணக்குப்பிள்ளை முதலானவர்கள்  கிரஹப் பிரவேசம் செய்வதற்கு ஆயத்தம் செய்தார்கள். கல்வியில் கம்பர் போல் இருக்கிற பாரதிக்கு சடையப்ப வள்ளலைப்போல் வீடுகட்டி வைத்தீர்கள் சோழகரே, நீங்கள் சோழ மகாராஜாவைப்போலவும்
ஆதரிக்கிறீர்கள் என்றார்கள்.

உடனே சோழகர் பாரதியாருக்கு சோமன் ஜோடி(வேட்டி)  , அம்மாளுக்கு புடவை குழந்தைகளுக்கு எல்லாம் புதிய வஸ்திரங்கள் , தேங்காய்கள் , வாழைப்பழ தாறுகள் வெற்றிலைப் பாக்கு கோயிலிலிருந்து சந்தனம், புஷ்ப மாலைகள் தயாரிக்கப்பட்டன , வீட்டிற்கு சாப்பாட்டிற்கு பச்சரிசி , பருப்பு, உப்பு, புளி, மிளகாய் சாம்பரங்கள்  , பால், தயிர், நெய் வகையறாக்கள், காய்கறி , இலை முதலிய சர்வ பதார்த்தங்களும் ஆயத்தம் ஆயின.

பாரதிகள் குடும்பத்தாரோடும், பிராமனரோடும், சோழரோடு  காவிரியில்
சென்று ஸ்நான அனுஷ்டானங்களை முடித்துக்கொள்ள புதிய வஸ்திரங்களை தரிப்பித்து, கோயில் சென்று கடவுளைத் தொழுது, மதகடி
விநாயகருக்கு தீபாராதனை  செய்து நமஸ்கரித்துக் கொண்டு பெருமாள்
கோவிலில் பிரதக்ஷின நமஸ்காரம் செய்துகொண்டு மத்தியானம் இரண்டு
மணிக்கு(20 நாழிகைக்கு மேல்) மேல் சுபமுகூர்த்தத்தில் கிரஹபிரவேசம்
செய்து வாஸ்து சாந்தி, ஹோமம் முதலியன செய்தார்கள். தான் எடுத்துக்கொண்டு வந்த ராமாயணத்தை வைத்து பூஜை செய்தார். வந்தவர்களுக்கு  சந்தன தாம்பூல மரியாதை, கிராம மஹா ஜனங்களுக்கு
செய்து  சோழகருக்கு உபசாரம் சொன்னார்கள். அப்போது பாரதியார் சோழகத்
தம்பியாரைக் குறித்து மகா ஜனங்களை நோக்கி சொன்னதாவது:-

ஸ்ரீ ராமபிரானுக்கு சித்திரகூட மலையில் இளைய பெருமாளாகிய
இலக்ஷ்மணப் பெருமாள் பர்ணசாலை கட்டிக் கொடுத்ததாகப் படித்திருக்கிறோம் , பார்த்ததில்லை. இங்கு என் விஷயத்தில் இச் சோழகத்
தம்பியார் அவ்வாறே எனக்குச் செய்து பிரத்யக்ஷமாக காணும்படி எரிந்த
வீட்டை நூதனமாக புரிந்துவிட்டார்.

Friday, September 21, 2012

வசிஷ்ட பாரதி வம்சா வளி - Page - 4



வசிஷ்ட பாரதி வம்சா வளி Page - 4


அவருடைய இஷ்ட தெய்வமாகிய விநாயகரை தொழுது தொடருகின்றேன்
 


"பூவின் மாமகள் ஞானமான்
ஓவு நாயகன் ஓடுடன் கட்டையில் ,
மேவி தீயினில் மூழ்கி மேலுல,
காவி தாவவே ஆவி தாவினாள்"                                (1)

கண்ணனென் காதலனை காரிகையால் தாம் கலந்து
நண்ணுமொரு கட்டை யெறி நயந்தனள் ன் தான் என்னேடி
நண்ணுமொரு கட்டைஎரின்யந்தவள்  தான் யாரென்னின்
கண்ணும் என்குல  தெய்வம் ஞானம்மாள் காணேடி               (2)

முன்னாளில் பெண்கள் முயங்குல  தருமம் என்பார்
இன்னாளினும் கண்டோம் எறிபுக்க தென்னேடி
இன்னாளினும் காண எறிபுக்கர் யாரென்னிற்
என்னாளும் எமைகாக்கும் ஞானம்மாள் காணேடி!...............(3)

மடமாரு  நாணச்சம் மருவுமொரு மடந்தை
உடநாத னோடெறியில் உற்றது தாநென்னேடி
உடநாத னோ டெறியில் உற்றவர்தாம் யாரென்னில் 
கடமையென் குலங்கக்கும் ஞானம்மாள் காணேடி .............(4)


என்று 4 பாக்களும் அக் காலத்தில் வைத்தியநாத பாரதியார் 
கூறியது என் கன்ன பரம்பரை மேல் இருவர்களுக்குமே
ஸமஸ்காரங்கலைச்   செய்து உடனே அவர்களைக்
குலதெய்வமாகப் போற்றி வந்தார்கள். இவ்வழக்கம் ஆரிய நாட்டு நாரிமணிகள் சீரிய ஒழுக்கமெனத் தேறி அனுபவித்து வந்தார்கள்.

இது பூர்வ கால வழக்கம் இன்றைக்கு 100 வருஷங்களுக்கு
முன் வரையிலும் இருந்தது. அதற்குமுன் நூற்றாண்டில்
கருணைக்கடலாகிய அக்பர் சக்ரவர்த்தி இதை நிறுத்த முயற்ச்சித்தார்
அஃது பின் நூற்றாண்டில் ஆங்கில தர்ம ஆட்சியில் " வில்லியம்பெண்டிங்" என்பவரால் சட்டமாக நிறுத்தப்பட்டது..

 சில வருடத்திற்குப் பின் வைத்தியநாத பாரதியின் மனைவியாகிய
ஜானகி அம்மாள் ஞானம்பாளைப் பிரிந்து இருக்க ஆற்றாதவலாய்
தானும் 3 வது வருடத்தில் சுமங்கலியாக திடீரென்று உயிர் நீங்கி
உத்தம கதியை அடைந்தார். தாயார் இறக்கும் பொழுது பரசுராம பாரதிக்கு
20 வயது இவரது தம்பி நாகசாமி அய்யருக்கு வயது 15, . இப் பரசுராம பாரதி தந்தையைப்போல் தமிழறிவும் தெய்வபக்தியும் உடையவர். ஸ்ரீராமனாமமே கத்தி எனக் கொண்டவர்."எத்துகின்றோம் நாத்தழும்ப ராமன் திருப்பெயரே" என்று சொல்லி ஒருவரை மனமாரப் புகழ்ந்தாலும் பலிக்கும்.
இவர் அபசாரம் யாரும் செய்வாராயினும் அதையும் பொருட்படுத்தாமல் சகிக்கும் நற்குணமுடயார். நிரம்ப மனம் பொறாமல் ஒருசமயம் பிறரை நொந்து கூறுவாராயின், அது பிறர்களை வருத்துவதும் உண்டு.
நோவுடாய மணிதரேனும் மாடு கன்றுகளேனும் வருந்துவது கண்டால
தான்  உள்ளம் கசிந்து ராமன் பெயரைச் சொல்லி  மண்ணை அள்ளிக்கொடுப்பார் அதைக் கொண்டு அவர்கள் நன்மை அடைவார் என்பது அவ்வூரில் பிரசித்தம். அதனால் அவ்வூரார் இவரைத் தெய்வம் போல
பணிந்து கொண்டாடுவார்கள். இவர் காலையில் காவேரி ஸ்நானம் செய்து நியமம் முடித்து வீட்டிற்கு வந்து கம்பராமாயணச் சுவடியைப் பாராயணம் செய்வார். பூஜை முடிந்து போஜனமும் செய்த பிறகு ரா - ம  த்  தியானமும் செய்வார். அவ்வூரில் காவேரிக்கரையில் மரத்தடியில் ஒரு விநாயகர்
ஆலயம் உளது, அம மூர்த்தியை ஸ்தாபித்து அச் சிறு ஆலயம் கட்டியவர்
இப் பாரதியாரே  என அவ்வூரார் சொல்லக் .கேட்டிருக்கிறேன்
அவ்வினாயகர்  பேரில் பஞ்சரத்தினம், வேறு சில பதிகம் பண்டைக்காலத்தில்
சிறுவர்கள் பழகும் மானம்புப் பாட்டு, கோலாட்டப் பாடல்களும் இவர் பாடியதாக கேள்வி.  பல பல சமயங்களில் பல பல கவிகள் பாடியதாக கேள்வி மழை பெய்யாவிடில் பாரதியாரை  அவ்வூரார் கவி படும்படி கேட்டுக்கொள்வது வழக்கமாம்.




ஒருசமயம் புரட்டாசி மாதம் வரையில் மழை பெய்யாம இருந்ததாம் ஆனி மாதத்தில் அஸ்த நட்சத்திரத்தில் விரை விட்டால மெத்த விளைவாம் என்பது பண்டைப் பழமொழி. இவ்விஷயம் ஸ்ரீ மத்  கவி சக்ரவர்த்தியாகிய
கம்பநாட்டாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய  'ஏரெழுபது' எனும் நூலில் விரைவிடு இலக்கணம் என்னுஞ் செய்யுளின் உரையில்
விளக்கியிருக்கிறார்.

வைகாசி மாதம் காவேரியில் வெள்ளம் வராமலும் , ஆனி ஆடி ஆவணி புரட்டாசி வரையிலும் நாலு மாதங்களாக மேல் மழை பெய்யாமலும் இருத்த பொழுது கிராம வாசிகளாகிய பலரும் சோழர்களும் சேர்ந்து பாரதியார் வீட்டின் வாசலை அடைந்து சாமி பாரதியாரே மழை பெய்தால் ஒழிய எழுந்திருந்து போகமாட்டோம் என்று தெருவின் வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அப்போது ஸ்ரீராமனாமமே செய்துகொண்டிருந்த பரசுராம பாரதியார் பின் வருமாறு ஒரு கவி கூறினார்.

                                                                         வெண்பா

"சீராமன் பாதத்தை சிந்திக்கப் பெய்யும்  மழை
வாரா வளங்களெலாம் வந்திடுமே --  தேறீர்
நன்மைகள் யாவும் நாளுக்கு நாள் பெருகும்
தின்மைகள் ஏதேதும்  வாராதே

 இதைச் சொல்லி ' ஸ்ரீ ராமன்   கிருபையாகிய கருணை மழை பொழியும்
என் அப்பன் மதகடி  விநாயகன் எங்கு போனான். நீங்கள் மனம்
தேறியிருங்கள்   சத்தியமாய் நம்புங்கள்' என்று சொல்லி விபூதியை
தரித்துக்கொண்டு விநாயக மூர்த்தியை குறித்து ,

" மண்ணுருகப்  பேயும் பொன்னுருகக் காயும்
  மண்ணாளும்  புரட்டாசி என்பது பிரட்டா--சீபோ
 எண்ணுரு தேதியுமாச்சே  இனிமேல்  எப்படி விறைப்பு
எப்படி நாத்துவிடல் எப்படியே நடவாகும்
அண்ணலே இது உனக்கு சம்மதமா உந்தன்
அடிமைகளாம் குடிகளுறை  சாத்தநூரதனில்
பண்ணுறு  செய்பயிர் தழைக்க உயிர்களெலாம் செழிக்க
பக்ஷமுடன் மதகடிவாழ் கணபதியே அருள்க"

என்று சொல்லி வெற்றிலை போட்டுக்கொண்டு ஜனங்களுடன்
பேசிக்கொண்டிருக்கும்போதே கார் மேகங்கள் வந்து கூடி ஒரு
நாழிகை உலகம் செழிக்க கொட்டிவிட்டதாம். அப்போது
பாரதியார்

" வளநகர் முனிவரன் வரலும் வானமின்
கலாணாமற் கதுமென கடுகி வான்மிசை
சள சள வென  மழைத் தாரைகான்றன
குளனோடு நதிகளும் குறைக  தீரவே"  ---- கம்பர்.

 
கலைக்கோட்டு முனிவர் வரவால் அங்க தேசத்தில் மழை பொழிந்து வறுமை நீங்கியவாறு இங்கும் பெய்தது ஒரு குறையும் இல்லை போங்கள் என்று சொல்லிவிட்டார். அவ்வருஷம் யாவர்க்கும் விளைவு அதிகமாக இருந்தது அதனால் அவ்வூரார், பொதுவில் கோயிலடி சேய் என்று ஒரு பெரிய செய்யும் அதன் பக்கத்தில் வேறு சில நிலங்களும் ஊர் பொதுவில் பாரதிமானியம் என்று விட்ட நிலம் இன்று எங்கள் குடும்பப் பொதுவில் அனுபவப்பட்டு வருகிறது . வருஷந்தோறும் வேண்டிய உணவுப்பொருட்கள் , மற்றும் கரவைப்பசுக்கள் கொடுத்து ஆதரித்தார்கள்.


தொடரும் .................. தொடர்ந்து வாருங்கள்

வசிஷ்டபாரதி வம்சா வளி - Page 3


வசிஷ்டபாரதி  வம்சா  வளி                           (3)     By:-:S.S.Vasan Grand Son

அவருடைய இஷ்ட தெய்வமாகிய விநாயகரை தொழுது தொடருகின்றேன் 





அருமை சகோதரிகள்


இவ்விருவரின் மனைவியரில் மூத்தவளாகிய ஞானாம்பாள் தனது ஒர்படியாகிய(ஓரகத்தாளகிய) ஜானகியைத் தங்கை போலவும் பெண்போலவும் ஆதரித்து வருவாள். அந்த ஜானகி அம்மாளும் 
ஞானம்பாளை தாய் போல் பாவித்து இட்ட கட்டளைக்கு இணங்கி 
நடப்பாள் இவர்கள் வீட்டுக்காரியங்கள் செய்யும்போதும் , காவிரிக்கு
போகும்போதும் வரும்போத்ரும் பிரியாமல் நேசித்து பேசி சந்தோஷமாக இருப்பதைக்கண்ட அயலார்கள் அண்ணன் தம்பி ஒற்றுமை அதிகமா ?அவர்களுக்கு வாய்த்த இம்மனைவியர்களின்  ஒற்றுமை அதிகமா, 
எது அரிது? அண்ணன் தம்பி ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள், 
இவர்கள் அயல் வீட்டுப் பெண்கள் ஆச்சே இவர்கள் ஒற்றுமை தான்
அரிது என்று கொண்டாடுவார்கள். இவர்கள் பெரிய குடும்பிகள் 5, 6 குழந்தைகள் பெற்றவள் என்ன பாடுபட்டு வளர்க்கிறாள், இவர்கள் குணங்களை என்னென்று கூறுவது?


"சிறுகாலையட்டில் புகலுருத்தி யுறச் சமைத்தல், சுவை திருத்தி யூட்டல்
மறுகாலை என்னாது விருந்தான்மைத்தல்,  மகப்பெறுதல், மடனாணச்சம்
பெறு காலை யின்புறுத்தல் முன்னுறங்கப் பின்னுறங்கல் பின்னெழாதல்
உறுகாலை தொழுதெழுதல் பன்னிரண்டும் அந்நகர்க்  கற்புடயார்ச செய்கை ................... குற்றால புராணம்


இத்தனை குணங்களையும்  இந்த உத்தமிகளிடத்தில் காணலாம் என்பார்கள்


தேந்தரைக்கு ளுழவோர்க்கும் தெய்வநிலை போற்றாது
காந்தாரைக் கும்பிடுவோர்க்கு கைகூப்பும் கதிர்ச்சாலி (சாலி - அருந்ததி) .... குற்றால புராணம்


"தெய்வம் தொழ அள்  கொழுநற்றெழு தொழுவாள்
பெய்யனப் பெய்யும் மழை ......... திருக்குறள்


உடன்கட்டை ஏறிய உத்தமி


ராமஸ்வாமி பாரதி தமது 68௮ம் ஆண்டு யாதொரு நோயுமின்றி திடசரீரி யாயிருந்து மண்ணுலக வாழ்க்கையை முடித்து மகாதேவன் மலரடி
அடைந்தார். அவருடைய தரும பத்தினியாகிய ஞானாம்பாள் அவர் இறந்த உடனே எல்லோரோடும் விழுந்து அழுதாள். அவரை தூக்கிக்
கொண்டுபோய் மந்திர விதிப்படி கனல் மூட்ட ஞானம்பாள் ஸ்நானம் செய்து மஞ்சள் குங்குமம் அணிந்து ஈர வஸ்திரத்தோடு 'அவரைப்பிரிந்து
அரைக்கணமும் இரேன்' என்று கனலில் தாவினாள். ஜானகி அம்மாள் முதலானவர்கள் தகைந்துகொண்டு தாயே நீங்கள் இருக்கவேண்டும் என்று
கூறி வேண்டிக்கொண்டார்கள் . அம்மா அவருக்கு சமைத்து யார் போடுவார்கள்? நீங்கள் எல்லாரும் சவுக்கியமாய் நன்றாய் இருங்கள் என்று சொல்லி கனலிற் போய் விழுந்துவிட்டார். அக்னி சூழ்ந்துகொண்டது என்ன ஆச்சர்யம் இதுவன்றோ கற்புடையார் செய்கை..?


"மருவு காதலர் ஆருயிர் மாய்ந்திடில்
எரியின் மூழ்கி யிறந்து படுவதற்கு
அருநெறித் தலை வைக்குமரிவையர்
புரலி நன்மகப் பேறு பொருந்துவார் "

..................................அதிவீர ராம பாண்டியன்
இதன் பொருள்: புரஷ்னோடு உடன் கட்டை ஏறுகிற பூவையர்கள் அச்வமேத யாகத்தின் பயனை அடைவார்கள்


"நீடுகாதல னோடுயிர் நீத்திடும்
விடில் கற்புனண் மெய்மயீர் ஒன்றினுக்கு
அடக்கப்பசும் பொன்னிலத்தாயிரம்
கோடிகாலம் கொழுனனோடின்புறும்

................................அதிவீர ராம பாண்டியன்

இதன் பொருள்:- புருஷனோடு சாக மனம்(உடன்கட்டை) ஏறும் உத்தமிகள் மேலுலகத்தில் அப்பதியினோடு அநேகமாயிரம் கோடி காலம்
பிரியாமல் கூடி வாழ்வார்கள் என்னும் பெருமையை உணர்ந்து தானும் அவ்வாறு செய்தாள்


தொடரும் .................................தொடர்ந்து வாருங்கள்

Friday, September 7, 2012

வசிஷ்ட பாரதியாரின் வம்சா வளி - நேற்றைய தொடர்ச்சி

வசிஷ்ட பாரதியாரின் வம்சா வளி ..............பகுதி 2   By: S.S.VASAN



அருமைச் சகோதரர்கள்.


மேற்சொன்ன அஷ்டசகஸ்ர வகையில், ஆத்ரேயா கோத்திரம், ஆசுவலாயன சூத்திரம் இருக்கும் வேதி மூலபுருடர் தமையன் ராமஸ்வாமி பாரதி , தம்பி வைத்யநாத பாரதி. இவ்விருவருக்கும் உருவத்திலும் குணத்திலும் ஒத்தவர்கள். தமையன் தம்பியின் மேல் கருணையும் அன்புமுடயவர் , தம்பியோ தமையன் மேல் மிக்க விசுவாசமும் பக்தியுமுடயவர். தமையன் எள் என்பதற்குள் தம்பி எண்ணையாய் நிற்பார். குறிப்பறிந்து ஏவின செய்யும் இயல்புடையவர். இவரை இராமருக்கு இயன்ற பணி செய்யும் இராமானுஜன் என்று சொல்லலாம்.


இவர்கள் அரியலூருக்கு அருகிலுள்ள உடையார் பாளையம் ஜமீந்தார் யுவரங்க பூபதி சமூகத்தில் இருந்தார்கள், இவர்கள் வடமொழி, தென்மொழி, சங்கீதம், பரதம், ஜோதிடம், வைத்தியம் முதலிய கலைகளில் தலைவராய் இருந்து அந்த யுவரங்க பூபதி சபையில் கண்போல விளங்கினார்கள். ஜமீன்தாரும் எல்லாக் கலைகளிலும் பழகியவராதலின், வித்வான்கள் செயலறிந்து கொடுக்கும் வள்ளலாயிருந்தார்.

ஒரு சமயம் ஜமீந்தார் சபையில் சங்கீத வித்தையின் திறமையை பாடிக் காட்டும் பொழுது துரையவர்கள் சரிகைத் தலைப்பாகை ஓன்று கொடுத்தார். இவ் வறுமைச் சகோதரர்கள் அக் கொடைச் சிறப்பித்து மோகன ராகத்தில் ஒரு 

"பல்லவி ச - ரி - க - பா - கா இச்சாரோ" (சரிகா) என்று 

எடுத்துக் கொண்டு பாடினார்கள். அது இந்த மோகனராகத்தின் ஆரோகன ஸ்வரம். அந்த ராகத்திலேயே "சரிகைப்பாகை" கொடுத்தார் என்ற அர்த்தம் அடங்கியிருக்கிறது; இது வெகு விசித்திரம் , 

இதைக் கேட்டு மகிழ்ந்த ஜமீந்தார்,
"சா - தா - ப - கா - இச்சேரா" - என்று அந்த ராகத்தின் அவரோகன ஸ்வரத்தில் சாதா பாகை கொடுக்கப்பட்டது என்று தன் கொடைத் தாழ்த்தி வினயமாகப் பதில் உபசாரமாக தாமும் பாடிக் காட்டினாராம். என்ன அருமையினும் அருமை பிரபுக்கள் இப்படியன்றோ இருக்கவேண்டும் , அப்படி அருமை அறிந்த பிரபுக்களின் முன்னிலையில் அன்றோ வித்வான்கள் பெருமை விளங்கும் இவர்களுக்கு வேண்டுவன கொடுத்து அவர்களை அன்பாக ஆதரித்து வந்தார்.


கலியாணம்

அந்த ஜமீன்தாரின் கிராம விசாரணை உத்தியோகத்திலிருந்து திருக்குன்னம் ஜாமொவய்யர் குமாரி ஞானம்பாளை ராமசாமி பாரதிக்கும், திருதிமலை சுப்பய்யர் குமாரி ஜானகியை வைத்தியநாத பாரதிக்கும் விவாகம் செய்துவைத்த பின் இவர்கள் சிலவருடங்கள் அங்கிருந்தார்கள். ஜானகிக்கு(பென்காநியாக) ஸ்ரீதனமாக ஒரு மனையும் சிறிது நிலமும் கிடைத்தமையால் இவர்கள் சாத்தனூரில் வந்து குடியேறினார்கள்.


சாத்தனூர்


இப்பெயருடைய கிராமங்கள் தஞ்சை ஜில்லாவில் அநேகமுள்ளன. இது காவேரிக்கரையின் வடக்கில் பூலோக கைலாசமென விளங்கும் திருவயாற்றிற்கும், திருநித்தானத்திர்க்கும்(தில்லைத் தானம்) மேற்கு நான்கு மைல் தூரம்.

மரூர் கிராமத்திற்கு அடுத்து சாத்தனூர் இவ்வூரில் வேளாளர்கள் மிகுதி , நாலாவது வகுப்பினரில் பல பட்டப் பெர்யர்கள் உள்ளன அவை 

சோழர்கள், 
மழவர்கள் , 
தஞ்சிராயர், 
வாண்டையார், 
ராசாளியர் மற்றும் தேங்க்கொண்டார் 

என்பனவாம். இவ்வகுப்பில் காலாட்டிசோழகர் ஒருவர் அவ்வூரில் பெரிய மிராசுதார் (நாட்டாமைக்காரர்) இவர் தெய்வ பக்தி அந்தணர் நேயம் அடைந்தவர். தமிழருமையையும் அறிந்தவர் , தரும சிந்தையும் தயையும் நிரம்ப உடையவர்.

ராமசாமி பாரதிக்கு 60 வயதுக்கு மேல் ஆகியும் சந்ததியில்லை . அவர் அறுபதாம் ஆண்டில் சஷ்டியப்த பூர்த்தியும் செய்து வைத்தனர் , தம்பி வைத்யநாத பாரதிக்கு இரண்டு பிள்ளைகளும் முன்று பெண்களும் இருந்தார்கள்.

இவருடைய மூத்த குமாரன் பரசுராம பாரதி( இவருக்கு எல்லைப்ப பாரதி என்று மறு பெயரும் உண்டு) இவருக்கு சொற்ப சங்கீத ஞானமும் தமிழ் சம்ஸ்க்ருத பயிற்ச்சியும் இருந்தன . இக்குடும்பத்தினருக்கு அக்காலத்தில் சங்கீதத்திற்கு ஆதாரமாக இருந்தது ஸ்ரீ ராமநாடக பதமே , இது குடும்பத்தினருக்கு முழுவதும் நன்றாகவே தெரியும். இத்துடன் வடமொழியில் ஸ்ரீ மகாபாகவதத்திலுள்ள கோபிகா கீதம்(கீதகோவிந்தம்) ஜெயதேவர் அஷ்டபதி , சதாசிவ பிரமேந்திர பதம் தீர்த்த நாராயண தரங்கம் முதலியன இவைகளை தம் வீட்டில் நித்தியம் பஜனை செய்வதுடன் மற்றவர்களுக்கும் கற்பித்து வருவார்கள். உடையார் பாளயத்திலும் சிலமாதம் இருந்து வந்ததுண்டு.


தொடரும்.....................   தொடர்ந்து வாருங்கள் 

வசிஷ்ட பாரதி வம்சா வளி

வசிஷ்ட பாரதி வம்சா வளி                     By:S.S.VASAN Grand Son of Shri. V.Vasishta Bharathi



நான் தொடர்ந்து எழுத இருப்பது எனது பாட்டனார் ( அப்பாவின் அப்பா)
புரனசாகரம் கம்பராமாயணம் வசிஷ்ட பாரதியாரின் வம்சா வழி பற்றிய
அவருடைய குறிப்புகளில் இருந்து.


இவர் தோன்றிய காலம் 1872 , மறைவு 1945,


இவரைப்பற்றிய குறிப்புகளை இவர் தனது சுய சரிதையாக தான் வாழ்ந்த
காலத்திலேயே சுதேசமித்திரன் என்ற தமிழ் நாளிதழில் பதித்திருக்கின்றார்
அதனை நான் பகுதி பகுதியாக இங்கே பதிய விழைகின்றேன்.


அவர் வணங்கிய விநாயகரை தொழுது இதை துவங்குகின்றேன்




                                                        வசிஷ்ட பாரதி வம்சா வளி
                                                       பூர்வீகர் காலமும், நிலையும்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமுமின்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண் டெழுத்தினால்

இற்றைக்கு முன்னூறு வருடங்களுக்கு முன் தேசம் முழுவதும் 
ஆளுகின்ற நியாய அரசர்கள் இன்றி நாட்டு குழப்பம் அடைந்து இருந்தது
கர்நாடக வடுக நாயகர்கள் தஞ்சை, திருச்சி மதுரை முதலிய இடங்களிலும் 
முகலாயர்கள் வட திசையிலும் வியாபித்து இருந்தார்கள்.
மஹாராட்டிரரும் இடையிற் புகுந்து தஞ்சையில் குடியேறி 
ஆண்டுவந்தார்கள். இந்நிலையில் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் 
சென்னையில் புகுந்து வியாபாரம் செய்யத் தொடங்கிய காலம். 
உள்நாட்டில் வாழும் குடிகள் அமைதியின்றி தட்டுகிட்டு தடுமாறிப் பல இடங்களிலும் பரவினார்கள்

அந்தணர் வகுப்பில் அநேகர், அதில் ஒருவகை அஷ்டசகஸ்ரம்(என்னாயிரர்), 
இதில் அந்தியூர், அருவப்பாடி, நந்திவாடி என்பன மூன்று பிரிவு. இதுபோல்
வடமரிலும் , பிரகசரணரிலும் பலவகை உள்ளவாம். அஷ்டசகஸ்ரத்தை பற்றி மகா கவியாகிய கம்பர்.

"இருபிறப்பானா என்னாயிரர் மனிக்கலசமேந்தி
அருமறைவருக்க மோதி அருள்நீர் அளித்துச் சூழ
வரன்முறை வந்தோர் கோடி மங்கள மழலைச் செவ்வாய்
பருமணிக் கலாபந்தர் பல்லாண்டிசை பரவப் போனார்"

என்ற கவியினால் எனாயிரர் அந்தணர் அயோத்தியில் தசரத மகாராஜாவின் பக்கலில் இருந்ததாகவும் அவர்கள் மண்ணை தனது குமாரன் ராமபிரான்
மனத்தைக் குறித்து மிதிலைக்குச் செல்லும்போது இவர் தம்பதிகளோடு மண்ணை ஆசிர்வதித்து உடன் சென்றார்கள் என்பது இக்கவியால் நன்கு விளங்கும். ஆதலின் இவ் வென்னாயிரர் பூர்வம் கங்கையின் பக்கத்திலுள்ள அயோத்தியில் இருந்தார்கள் என்பதும் பின்பு கால மாறுபாடுகளால் பல இடங்களிலும் பரவினார்கள் என்பதும் விளக்கமாய் அறியப்படுகிறது

தொடரும் ...................தொடர்ந்து வாருங்கள் .