Showing posts with label குழம்பு வகைகள். Show all posts
Showing posts with label குழம்பு வகைகள். Show all posts

Friday, November 22, 2013

அவியல் (திருநெல்வேலி )



அவியல் (திருநெல்வேலி )  By:- Velammal Gurusamy

அவியல் பெயர் காரணம் பாருங்கள் 
கைகள் பலவற்றை ஒன்றாக போட்டு 
அவித்து (வேகவைத்து) செய்யப்படும் 
ஒருவிதமான குழம்பு 

இந்த அவியல் (குழம்பு) பலவிதமான 
சுவைகளில் செயல் முறைகளில் உண்டு 

தஞ்சாவூர் அவியல் 
திருநெல்வேலி அவியல் 
கேரளா அவியல் 
மலபார் அவியல் 
மைசூர் அவியல் 

அடிப்படை செயல் முறை ஒன்றாக இருந்தாலும் 
சில சிறப்பம்சங்களை கொண்டு அந்த அந்த ஊர் வாழ் 
மக்களால் தயாரிக்கப்பட்டு பிரசித்தி பெற்றதால் அந்த 
ஊர்களின் பெயர்களை தாங்கி இவை பிரகாசிக்கின்றன 
என்றால் அது மிகையல்ல 






கல்யாணபந்தியில் முக்கிய இடம் வகிப்பது இந்த அவியல் தான் .இதை சுவைக்காதவர் யாரும் இருக்க முடியாது .

நான்தெரிந்து கொண்ட அவியல்கள் இரண்டு வகை .ஒன்று தமிழ்நாட்டு அவியல் ,மற்றது கேரள அவியல் .தமிழ்நாட்டு அவியலில் தாளிப்பு உண்டு .கேரள அவியலில் இல்லை அதோடு வெறும் நாட்டு காய்களையே இதில் சேர்ப்பார்கள்.புடலை .பூசணி இவற்றை சேர்க்க மாட்டார்கள் கேரள அவியலில் இவை இடம்பெறும் .

இன்று எங்கள் மதிய உணவில் அவியல் இடம்பிடித்திருக்கிறது .இதில் நான் பொடியாக நறுக்கிய 
சேனை ,வாழை ,கத்தரி ,காரட் ,உருளை அவரை ,பீன்ஸ் சேர்த்திருக்கிறேன் கொதிக்கும் தண்ணீரில் இதை வேகவிட்டு ,துருவிய தேங்காய் ,பச்சைமிளகாய் .சீரகம் ,சிறிது சின்னவெங்காயம் ,பூண்டு சேர்த்து
அரைத்து வெந்தகாயுடன் சேர்த்து உப்பு,மஞ்சள்பொடி ,கறிவேப்பிலை ,கொஞ்சம் தயிர் (காயுடன் மாங்காய் சேர்த்தால் தயிர் வேண்டாம் )சேர்த்துனன்கு கிளறி கடாயில் எண்ணெய்விட்டு கறிவடாம் இருந்தால் உதிர்த்து போட்டு தாளிக்கலாம் ,நான் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சிவக்க வறுத்து கடுகு ,உளுந்து போட்டு தாளித்திருக்கிறேன் .

இப்போ அவியல் பந்திக்கு தயார் .

வெள்ளைக்கறி (தேங்காய் குழம்பு )



வெள்ளைக்கறி (தேங்காய் குழம்பு ) By Velammaal Gurusamy


 






இன்று எங்கள் வீட்டில் சிம்பிளா கிராமத்து சமையல் .
அதுதான் வெள்ளைக்கறி .

திருநெல்வேலி மாவட்ட கிராமத்து மக்களின் சிறப்புக் குழம்பு இது .
இதோடு அவர்கள் முழு கறுப்பு உழுந்தையும் வேவைதிருப்பார்கள் இந்தபருப்பையே சாதத்தில் போட்டு பிசைந்து குழம்பையையும் ஊற்றிக்கொள்வார்கள் . இதுஒரு தனி சுவை. எந்தபொரியலாக 
இருந்தாலும் இதற்கு சூட்டாகும் .

எங்கள் வீட்டில் எல்லோருமே இந்த குழம்பின் அடிமைகள் .

இதோகுழம்பின் செய்முறை :_

உரித்த சின்ன வெங்காயம் ,
கீறிய மிளகாய் ,
வெட்டிய முருங்கைக்காய் துண்டுகள் ,
தக்காளி துண்டுகள் ,
தேவையான புளிக் கரைச்சல் ,
உப்பு ,
மஞ்சாள்பொடி ,
வத்தல்பொடி ,
துருவி சீரகம் ,

பூண்டு வெங்காயம் வைத்து அரைத்த தேங்காய் விழுது 
இவையே இந்த குழம்பிற்கு தேவை .

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு ,உழுந்து ,கறிவேப்பிலை 
போட்டு தாளித்து ,வெங்காயம் ,மிளகாய் .இவற்றோடு காய்களையும் 
வதக்கி ,சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவேண்டும் .

புளிக்கரைசலோடு உப்பு ,மஞ்சள்பொடி ,வத்தல்பொடி ,அரைத்த தேங்காய் விழுதையும் கரைத்து வெந்த காயுடன் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.

வெள்ளைக்கறியின் மணம் விருந்தினரையும் வரவழைக்கும் .

 இது ஒரு பருப்பு இல்லாத சாம்பார் 
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் 
வெள்ளை கறி . 

சாம்பார் என்ற பெயர் பண்டைய சமையல் வழக்கத்தில் இல்லை 
அண்மைக்காலத்தில்  நாம் கொண்ட பெயரே சாம்பார் 

Thursday, November 1, 2012

வெங்காயம் தக்காளி சாம்பார்


விறுவிறுப்பான வெங்காயம் தக்காளி சாம்பார் 

செய்வது சுலபம் , சுவைப்பது அதைவிட சுலபம் 


பயத்தம் பருப்பு 1/2 ஆழாக்கு 
வெங்காயம் 2
தக்காளி 3
பச்சை மிளகாய் 2
புளி கரைசல்       2  டீஸ்பூன் 



தாளிக்க:- வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு 


பயத்தம் பருப்பு வேகவசிடுங்க 


வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் வதக்கி  
வேகவைத்த பருப்பில் போட்டு, கொஞ்சம் 
புளி கரைசல் விட்டு , 1 டீஸ்பூன் குழம்பு பொடி 
போடுங்க . நல்லா கொதிக்கட்டும்  சுமார் 
15 நிமிஷம் .





கடுகு, உளுத்தம் பருப்பு , மிளகாய் வற்றல் தாளிக்கவும் 

கருவேப்பிலை போடுங்க , வேணும்ன்னா கொத்தமல்லி போடுங்க 



அவ்ளவுதாங்க இந்த சாம்பார் இட்லிக்கு 
தொட்டுக்கவும் நல்லா இருக்கும் 
 சாப்பாட்டுக்கு ,சாப்பிட்டவும் நல்லா இருக்கும்.

இது எங்க வீட்டு  All time Favourite   உங்க வீட்ல ?

Sunday, September 23, 2012

புளிக்குழம்பு

புளிக்குழம்பு


எனக்கு ரொம்ப நாளா  நினைப்பு , வெத்தக்குழம்புதான் , புளிக்குழம்புன்னு
அனா 2 நாளைக்கு முன்னாடிதான் நம்ப நண்பர்வீட்டுக்கு போனப்ப
ரெண்டும் வேற வேற அப்டின்னு தெரிஞ்சுது , சாப்ட்டேங்க  அப்டியே
அசந்து போயிட்டேன்


 அவங்க கிட்ட செய்முறை கேட்டு இன்னைக்கு வீட்ல செஞ்சு பார்த்தேன்
ஆஹா சுப்பர் போங்க

சரி இப்ப அதை உங்களுக்கும் சொல்லறேன் தெரிஞ்சிக்கிட்டு செஞ்சு
பாருங்க , சாப்பிட்டு சுவை எப்டின்னு எனக்கு எழுதுங்க .

தேவையானவை :-

புளி  எலுமிச்சை அளவு
தேங்காய்  1 கப் (துருவியது)
பெரிய வெங்காயம்  2
தக்காளி                         1
உங்கள் விருப்பமான காய் 100 கிராம் (பரங்கிக்காய் )
பெருங்காயம்       சிறிது
மிளகாய் பொடி : 2  டீஸ்பூன்
மஞ்சள் பொடி :    1 சிட்டிகை
தனியா  பொடி     1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்
உப்பு                         தேவைக்கேற்ப
கருவேப்பிலை    1 கொத்து

(பூண்டு விரும்புபவர்கள்  5 பல் பூண்டு சேர்க்கவும் )






தாளிக்க:-

கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , (அளவு உங்களுக்கே தெரியும்)


அடுப்பில் மிதமான சூட்டில் வாணலியில் கொஞ்சம் என்னை விட்டு
தளிக்கும் பொருட்களை சேர்த்து , நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து
வதக்கவும்.இப்ப உங்களுக்கு பிடித்தமான காய் வச்சிருபீங்க இல்ல அதையும்
சேர்த்து நல்லா  வதக்குங்க.

இப்ப இதுல தனியா பொடி, மஞ்சபொடி , காரப்பொடி சேர்த்து கொஞ்சம் தண்ணி விட்டு , கரைச்சு வச்ச புளி கரைசலை சேர்த்து நல்லா கொதிக்க
வைங்க , இப்ப தேங்காய் துருவல் , பொட்டுக்கடலை 2ம் மிக்சில போட்டு
அரைச்சு குழம்புல சேர்த்திடுங்க .



இன்னும் கொஞ்சம் கொதிக்கட்டும் , இறக்கி வச்சு , கருவேப்பிலை போடுங்க

கொஞ்சம் ஒரு கரண்டில எடுத்து அப்டியே வாயால ஊதி  சுவை பாருங்களேன்

என்ன  எப்டி இருக்கு நான் சொன்னது சரிதானே , அதுவேற இது வேற

எது

வெத்தக்குழம்பு வேற , புளிக்குழம்பு வேற ,  ஹ  ஹ்  ஹா !!!!!


புளிக்குழம்பு பிடிக்குமா




Thursday, September 20, 2012

வாழைத்தண்டு மோர் கூட்டு

வாழைத்தண்டு மோர் கூட்டு



வாழைத்தண்டு சுத்தம் செய்து , நார் நீக்கி , மோர் + நீர் கலந்த
தண்ணீரில் துண்டு, துண்டாக நறுக்கி போட்டு வைக்கவும்
(முடிந்தால் முதல் நாள் இராவே)



மோர் தண்ணீரை வடிகட்டி நல்ல தண்ணீரில் போட்டு கொஞ்சம்
உப்பு சேர்த்து வேகவைக்கவும் .

தேங்காய் , பச்சைமிளகாய், அரிசி , இவை மூன்றையும்
மிக்சியில் அரைத்து விழுது தயார் செய்து , மோரில் கலந்து
வெந்த வாழைத்தண்டுடன் சேர்த்து நண்டாக கொதிக்க வைத்து
சற்று கெட்டியானதும் இறக்கிவிடவும் ,

தேங்காய் எண்ணை  விடு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
கருவேப்பிலை சேர்க்கவும்.





வாழைத்தண்டு  மோர் கூட்டு தயார்


Sunday, September 16, 2012

பச்சைப்பயிறு குழம்பு

பச்சைப்பயிறு  குழம்பு


இது ஒரு சுவையான குழம்பு வகை , செய்வது எளிது
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


தேவையான பொருட்கள்:




பச்சை பயிறு  1/2 ஆழாக்கு
பச்சை மிளகாய் 2
தனியா  2 ஸ்பூன் (பொடி செய்து வைக்கவும்)
சிறிய (சாம்பார்) வெங்காயம் 10
புளி  எலுமிச்சை அளவு (சாறு எடுக்க)
ஜீரகம் 1 டீஸ்பூன்
மிளகுதூள் 1 டீஸ்பூன்
பெருங்காயம்  கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க:-

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு , மிளகாய் வற்றல்

மணம் கூட்ட, பச்சைபயிரை  வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்
வெங்காயம் தோல் உரித்து வதக்கி வைக்கவும்

குக்கரில் பச்சைபயிறு  , வெங்காயம்,  பச்சை மிளகாய்
பெருங்காயம் , மிளகு தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணை ,
 2 டம்பளர் தண்ணீர் விட்டு 4- 5 விசில் சத்தத்தில் இறக்கிவிடவும்.

வெந்த பயரில் கரைத்த புளி கரைசலை விட்டு நன்றாக
மத்து கொண்டு மசிக்கவும் .

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணை  விட்டு , கடுகு , உளுத்தம் பருப்பு
வெத்த மிளகாய், கடலை பருப்பு,ஜீரகம்  போட்டு தாளித்து , வெந்த
பயிறு, புளி  கலவையை போட்டு,தனியா பொடி ,  தேவையான
உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக  10 நிமிடம்
கொதிக்க விடவும்  கருவேப்பிலை சேர்க்கவும் .



குழம்பு கெட்டி பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி
கொத்தமல்லி மேலே போட்டு, சூடாக பரிமாறவும்

இதை சப்பாத்தி சாப்பிடும்போது சைடு டிஷாகவும்
உபயோகிக்கலாம்.


"இச்சையுடன் சாப்பிட பச்சைபயிறு குழம்பு"



Sunday, September 9, 2012

குருமா ! குருமா !! குருமா !!!

குருமா ! குருமா !! குருமா !!!  By:- Savithri Vasan




தேவையான காய்கள் :-

உருளைக்கிழங்கு  1/4 கிலோ
முள்ளேங்கி               1
வெங்காயம் (பெரிசு) 4
காரட்                              2
பச்சை பட்டாணி       100 கிராம் (உரித்தது)
பீன்ஸ்                            100 கிராம்
முருங்கைக்காய்       1
தக்காளி                          1/4 கிலோ
பூண்டு பல்                    10


மேலே சொன்ன காய்களை  நறுக்கி , வேகவைத்து
தயார் செய்து கொள்ளவும் .



விழுது அரைக்க

தேங்காய் துருவல்     1.1/2 கப்
பொட்டுக்கடலை          4 டீஸ்பூன்
பட்டை                              1 சுருள்
கிராம்பு                              5
பச்சை மிளகாய்             5
வெங்காயம்                     2
பூண்டு                                10 பல்
சோம்பு                               1 டீஸ்பூன்

மேலே சொன்ன வற்றை அப்படியே பச்சையாக
மிக்சியில் போட்டு , (பட்டை ,கிராம்பு மட்டும் -வறுத்து)
அரைத்து வைத்துக்கொள்ளவும் .

வெந்த காய்களை  அடுப்பில் ஏற்றி , அரைத்த விழுதுடன்
1 ஸ்பூன் குழம்புபொடி சேர்த்து  குருமாவில் கலந்து
நன்றாக கொதிக்கவிடவும் .

சோம்பு 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும்




கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்த்து , சுவையான
சூடான குருமா அனைவருக்கும் பரிமாறவும்




குருமா!!! குருமா!!! அதன் சுவை சுகம் வருமா? வருமா ??





.









பொரிச்ச கூட்டு

                                     (பலவிதமான) பொரிச்ச கூட்டு

அது என்ன பொரிச்ச கொட்டு , இந்த கூட்டுக்கு குழம்பு பொடி போடுவதற்கு
பதிலா  மசாலாக்களை பொரிச்சு ( வறுத்து ) அரைத்து விழுதாக
போடுவதால் , பெயர்க்காரணம்


உபயோகப்படுத்தக்கூடிய காய்கள் :-

1. அவரைக்காய்
2. கொத்தவரைக்காய்
3. பீன்ஸ்
4. முருங்கைக்காய்
5. கத்தரிக்காய்
6. பெங்களூர் கத்தரிக்காய்
7. பூசணிக்காய்
8. புடலங்காய்

மேலே சொன்னவற்றில் ஏதேனும் ஓன்று

தேவையானவை :

பயத்தம் பருப்பு

வறுத்து அரைத்து விழுது எடுக்க

மிளகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு
இவைகளை வறுத்து , இவற்றுடன் ஜீரகம் தேங்காய்
துருவல் சேர்த்து நன்றாக கெட்டியாக அரைத்து
விழுது தயார் செய்யவும்.(மிளகு சற்று அதிகமாக
இருந்தால் உடலுக்கு நல்லது)

பயத்தம் பருப்பு வேகட்டும் , காய் நறுக்கி அதில்
போட்டு, உப்பு சேர்த்து ,அரைத்த விழுதை அதில் போட்டு
நன்றாக கொதிக்க விடவும் .




கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு
தாளிக்கவும்.

கருவேப்பிலை சேர்க்கவும் .

பரிச்சியமான பலவிதமான பொரிச்ச கூட்டு
அதிசயமான அரைத்துவிட்ட கூட்டு






வெத்தக் குழம்பு, வத்தக் குழம்பு , காரக் குழம்பு

வெத்தக் குழம்பு, வத்தக் குழம்பு , காரக் குழம்பு

"சத்யம்" "சிவம்" "சுந்தரம்" , இது மூன்றும் ஒன்றுதான் என்பதுபோல
மேல சொன்ன மூன்றும் ஒண்ணேதான்

இதன் பெர்யர் காரணம் சற்று பார்ப்போம்

வெத்தல் போடுவதால், வத்த கொதிக்கவைப்பதால் , காரம் சற்று
அதிகமாக சேர்ப்பதால்  இது போன்ற பெயர்கள் வந்திருக்கலாம்

ஆகா எல்லாம் ஒண்ணுதான்


தேவை

குழம்பு பொடி    4 ஸ்பூன்
புளி                         எலுமிச்சை அளவு ( சாறு எடுக்க)
வெந்தயம்           2 டீஸ்பூன்
துவரம் பருப்பு   1 டீஸ்பூன்
பெருங்காயம்    சிறிது
கடுகு                      1 டீபூன்
உப்பு                       தேவைக்கேற்ப

அடி கெட்டியான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி 4 முட்டை
என்னை விட்டு , முதலில் பெருங்காயம்.  துவரம் பருப்பு போட்டு
பிறகு வெந்தயம், கடுகு , இறுதியாக குழம்பு பொடி போட்டு
ஒரு பெரட்டு பெரட்டி ,  கரைத்து வைத்த புளி  தண்ணியை
விட்டு, உப்பு சேர்க்கவும்.

நன்றாக பொடி வாசனை போக கொதிக்கட்டும்





காய்!!! காய்!!  காய் !:- உங்கள் சாயஸ் (வெண்டைக்காய் , சுண்டைக்காய்
கத்தரிக்காய், கரட் , சர்க்கரை வள்ளிகிழங்கு, முருங்கைக்காய், பரங்கிக்காய்
இப்படி இன்னும் பல பல ...... போட்டு செஞ்சு ஜமாயுங்க .


நல்ல உப்பு காரம் சரியா இருந்ததுன்ன கொறைஞ்சது 3 நாள் வரை
உபயோகப்படுத்தலாம். (குளிர் சாதனப்பெட்டியில் வைத்து)

பழக பழக பாலும் புளிக்கும் , ஆனா
வெத்தக்குழம்பு சுவைக்கும்




வெங்காயம் முருங்கக்கா , முள்ளேங்கி சாம்பார்

வெங்காயம் முருங்கக்கா , முள்ளேங்கி  சாம்பார் By:-Savithri Vasan



"வெங்காயம் முருங்கக்கா , முள்ளேங்கி  சாம்பார்
எங்கேயும் கிடைக்காது இதுபோல ........ வாங்க "

இன்னைக்கு வீட்ல என்ன சமையல் ?

சாம்பார் !!

கேட்கும் ஆளுக்கு சுவாரசியம் இருக்காது

அதே நீங்க  வெங்காயம், முருங்கக்கா, முள்ளேங்கி  சாம்பார்ன்னு
சொல்லிப்பாருங்க,

கொஞ்சம்  அவருக்கு நாக்குல நீர் சுரக்கும்

அதுவும் அரைச்சுவிட்ட சாம்பார்ன்னு  சொல்லுங்க , அப்டியே
வீடு வரைக்கும் வந்து சாப்பிட்டு விட்டு போவார்

அப்டி என்னங்க இருக்கு இந்த  கூட்டணியில்???

நாட்ல எவ்ளோ கூட்டணி வந்திருக்கு , உடைந்து போயிருக்கு
அனா இந்த கூட்டணி , எத்தனை நூற்றாணடுகளைக்  கடந்து
போயிட்டிருக்கு .....

இதுதான் சமையலின் விஷேசம் , கைமணத்தின்  பெருமை

தேவையானவை:

சின்ன வெங்காயம் 50 கிராம்
முருங்கக்காய்            2
முள்ளேங்கி                 2









பருப்பு 1 ஆழாக்கு

புளி  கரைசல் 2 கப்

தாளிக்க:-

மிளகாய்வற்றல்
கடுகு ,
வெந்தயம்
உளுத்தம் பருப்பு

கருவேப்பிலை

வெங்காயம் தோல் உரித்து , என்னை விட்டு வதக்கி
வச்சிடுங்க.

பருப்பில் மஞ்சள் பொடி , பெருங்காயம்  சேர்த்து
குக்கர்ல (5 விசில்) வேக வைங்க .

முருங்கக்காய் , முள்ளேங்கி  நறுக்கி  ஒரு பாத்திரத்தில்
போட்டு , கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து , புளி கரைசல்
அதில் விட்டு ஒரே ஒரு பச்சை மிளகாய் நறுக்கி போட்டு
குழம்பு பொடி 2 ஸ்பூன் போட்டு அடுப்புல யேத்துங்க
(சிம்ல அடுப்பு இருக்கட்டும்)

வெந்த பருப்பை நன்றாக மத்து கொண்டு மசித்து
கொஞ்சம் ரசத்துக்கு தெளிவா எடுத்து வைங்க மீதி
பருப்ப அடுப்பில் கொதிக்கும் சாம்பார்ல விடுங்க.

பருப்பு சேர்த்ததும்  பக்கத்து வீட்ல/ அடுத்த போர்ஷன்ல
கேப்பாங்க , என்னங்க இன்னைக்கு  வெ , மு , மு சாம்பாரா
அப்டின்னு................. இல்லையா???

நல்லா கொத்திவந்ததும் , வாணலில கொஞ்சம் எண்ணை
விட்டு மிளகாய் வற்றல், வெந்தயம், கடுகு , உளுத்தம்பருப்பு
தாளிச்சு போடுங்க

கருவேப்பிலை  கிள்ளி  போடுங்க

சாம்பார இறக்கி வைங்க , எதுக்கும் ஒரு கப்ல கொஞ்சம்
எடுத்து வைங்க அக்கம் பக்கத்து வீட்லேந்து யாரவது
நிச்சயம் கேப்பாங்க



அரைத்து விட்ட சாம்பார்

இது ஒன்னும் பெரிசா இல்லைங்க சாம்பார் பொடி போடுவதற்கு
பதிலாக நான் சொல்லறதெல்லாம் வறுத்து அரைச்சு விழுதா
சேர்த்திடுங்க

விழுது அரைக்க


தணியா
கடலைப் பருப்பு
மிளகாய் வற்றல்
தேங்காய்



தேங்காய் நீங்கலாக மற்றவற்றை வறுத்து
மிக்சியில் தேங்காயும் சேர்த்து அரைச்சு விழுதா
எடுத்து வச்சுக்கணும், பருப்பு சேர்க்கும் பொழுது
இதையும் சேர்த்துடுங்க ,











Saturday, September 8, 2012

அவியல்! , அவியல் !! , அவியல் !!!

அவியல்! , அவியல் !! , அவியல் !!!        By:- Savithri Vasan


என்னடா இவன் ஏலக்கடை ஆளான்னு பாக்குறீங்களா
இல்லைங்க , அவியல் மூன்று வகைப்படும்

தஞ்சாவூர் அவியல், மலபார் அவியல் , கேரளா அவியல்

நான் சொல்லப்போறது தஞ்சாவூர் அவியல்

தேவைப்படும்  இன்றி அமையாத காய்கள்

உருளை
சேனை
சேம்பு
அவரை
கொத்தவரை
பீன்ஸ்
கரட்
சௌ,சௌ
பூசணி
பட்டாணி
முருங்கைக்காய்

விழுது அரைத்துக்கொள்ள

தேங்காய் 1 மூடி
பச்சை மிளகாய் 5
ஜீரகம்         2 டீஸ்பூன்
அரிசி           2 டீஸ்பூன்

கெட்டித் தயிர் 3 கப்

தோல் உரிக்கவேண்டிய காய்களை  உரித்து, சீவ வேண்டிய காய்களை  தோல் சீவி , ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு
தண்ணீர் அதிகம் விட்டு உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்


மிக்சியில் விழுது தயார் செய்து வைக்கவும்

தயிர் தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கெட்டியாக வைத்துக்கொள்ளவும்

இப்ப பாருங்க காய் வெந்திருக்கும் , அதுல இந்த அரைத்த விழுதை
தயிரில் கலந்து காயுடன் சேர்க்கவும் ,

அவியல் கொதிக்க ஆரம்பிக்கும் , நறுமணம் மூக்கை துளைக்கும்
நாக்கு சுவைக்க துடிக்கும் .



நன்றாக கொதிக்கவிட்டு , அடுப்பில் இருந்து இறக்கும் முன்
2 முட்டை தேங்காய் எண்ணை சேர்க்கவும் . கருவேப்பிலை
சேர்க்கவும்

சூடான அவியல் சுவையுடன் பரிமாற தயார்

"காய்களின்  சங்கமம் அவியல் , நம் மனங்களின் சங்கமம் அன்பு
ரெண்டும்  ஓன்றுதாங்க "





பிடிகரனை (சட்டி) மசியல்

                  பிடிகரனை (சட்டி) மசியல் By:- Savithri Vasan


பிடிகரனை கொண்டு செய்யப்பட்டாலும் , சட்டியில் அந்த காலத்தில்
செய்யப்பட்டதால் இது பெயர் காரணம் கொண்டு திகழ்கின்றது



பிடிகரனை காரல் எடுக்கும், நாக்கு அரிக்கும் என்ற அச்சம்
சிலரிடத்தில் காணப்படும் . இதை தவிர்க்க  பிடிகரனை வாங்கி
ஒரு வாரம் சென்றபின் இதை சமைத்தல் நலம்.


பிடிகரனை துண்டுகளாக நறுக்கி அடுப்பில் வேகவைத்து தோல்
உரித்து வைத்துக்கொள்ளவும்



ஆழாக்கு பருப்பு , மஞ்சள் , உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து
தயார் செய்து கொள்ளவும்


புளி  கரைசல் தயார் செய்து கொள்ளவும்

வேகவைத்த பிடிகரனையை மசித்து  ஒரு பாத்திரத்தில் போட்டு ,
உப்பு , பெருங்காயம் சேர்த்து , 2 ஸ்பூன் குழம்பு பொடி போட்டு ,
புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும் , சிறிது நேரத்தில் வெந்த
பருப்பை நன்றாக மசித்து இதனுடன் சேர்க்கவும் .




மீண்டும் 10 நிமிடம் கொதிக்கவிடவும்.  இஞ்சி பச்சை மிளகாய்
துண்டு துண்டாக நறுக்கி வதக்கி போடவும் .

கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் , கருவேப்பிலை சேர்க்கவும்


கருணை(யில்லா) கிழங்கே!  காரலெடுக்கும் குணம் மாறாயோ ??
ஊரலெடுக்கும் ஏன் நாவின் சுவை அறியாயோ


Friday, September 7, 2012

கருவேப்பிலை குழம்பு


கருவேப்பிலை குழம்பு  - By:- Savithri Vasan


இதுக்கு கருவேப்பிலை ப்ரெஷ் தேவை 




கருவேப்பிலை ...... 3 கப்
மிளகு ......................... 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-- 10
துவரம் பருப்பு ........ 5 டீஸ்பூன்
தணியா ..................... 50 கிராம்
புளி .............................. எலுமிச்சை அளவு
பெருங்காயம் -------சிறிது
உப்பு .............................தேவைக்கேற்ப

அடுப்பில் வாணலியில் சிறிது என்னை விட்டு , பெருங்காயம் 
மிளகு, துவரம்பருப்பு, மிளகாய் வற்றல், தணியா  ஒன்றன் பின் 
ஒன்றாக போட்டு வறுத்து வைத்துக்கொள்ளவும்.


மிக்சியில் வறுத்த பொருட்கள் எல்லாம் போட்டு , உப்பும் புளியும் 
சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும் பிறகு இதனுடன் 
கருவேப்பிலை சேர்த்து மைய அரைக்கவும் .

இப்பொழுது அடுப்பில் வாணலியில் எண்ணை  கொஞ்சம் 
அதிகமாக விட்டு கடுகு தாளித்து , அதில் அரைத்த விழுதை 
போட்டு , சிறிது தண்ணீர் சேர்த்து (மிக்சி அலம்பிய நீர் போதுமானது)
நன்றாக கிளறவும்.



இப்பொழுது சுவையான கருவேப்பிலை குழம்பு தயார் 


அப்புறம் என்ன , தட்டில் சாதம் போட்டு, கொஞ்சம் கருவேப்பிலை
குழம்பு  போட்டு Hello, மேடம்  Hello Sir  என்ன சார் எங்க போறீங்க  
நான் இன்னும் முடிக்கவே இல்லை , அதுக்குள்ளே எங்க போய்டீங்க ......... சாப்டவா .....???

ரொம்ப பாஸ்ட் சார் / மேடம் நீங்க...... கொஞ்சம் நல்லெண்ணெய் 
சேர்த்து பிசைஞ்சு சாப்டுங்க . தொட்டுக்க கொஞ்சம் பச்சை வெங்காயம் 
இருக்கா ??  அது இல்லாமையா ???


உள்ளக்குழப்பம் தீர இறைவனை நாடுங்க 
உடல் குழப்பம் தீர கருவேப்பிலை குழம்பை  சாப்டுங்க 



Thursday, September 6, 2012

பச்சை மோர் குழம்பு

பச்சை மோர் குழம்பு

என்னங்க  இது ,  மோர்  குழம்பு சொன்னா போதாதா
வெள்ளை மோர் குழம்பு, மஞ்சள் மோர் குழம்பு , பச்சை
மோர் குழம்பு , இப்டி கலர் கலரா , ஈஸ்ட்மன் கலர்ல
ஓட்டுவாங்க போல இருக்கே

நிறுத்துங்க!   நிறுத்துங்க !!!  அப்டில்லாம் ஒன்னும் இல்லை
மேல சொன்ன எல்லாம் சரிதான் , வெள்ளை மோர் குழம்பு
இருக்கு , மஞ்சப்பொடி போட்டு மஞ்ச மோர் குழம்பு  இருக்கு
அனா பச்சை பொடி போட்டு செய்யறது இல்ல பச்சை
மோர் குழம்பு

அப்டியா  அப்ப அது எப்டின்னு சொல்லுங்க

இப்டி கேட்டா நானும் சொல்லுவேன் .

வீட்ல சில சமயங்களில் செய்யும் சமையலுக்கு
இதுதான் தொட்டுக்கொள்ள என்று நாம் முன்னமே
தீர்மானித்து விடுகின்றோம்.

அதுபோல இல்லாமல் இந்த குழம்பு எல்லாவிதமான
சாப்பாட்டுக்கும் ஏற்றது.

தேங்காய் பொடி சாதம், பருப்பு உசிலி  சாதம் , பருப்பு பொடி
சாதம், பருப்பு உருண்டை குழம்பு சாதம் , தேங்காய் சாதம்
புளியோதரை ...... இப்டி இன்னும் பல பல சாதத்திற்கு
தொட்டுக்கொள்ள நல்ல ஒரு சைடு டிஷ்.

 ஏங்க இந்த குழம்புல சாதமே போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம்னா
 பாருங்களேன்

சரி சரி புரியுது  ரெசிப்பி சொல்லாம வள, வளன்னு  என்னன்னு
கேக்கறீங்க

தேவை:

தேங்காய் துருவல் கொஞ்சம் ,
கடுகு கொஞ்சம் ,
மிளகாய் வற்றல் 2
இது மூனும் மிக்சில போட்டு அரைச்சு , தயிர்ல கலந்து
வச்சா போதும் அதுதான் பச்சை மோர் குழம்பு ,

அடுப்புல ஏத்தி சுட வைக்காததால இதுக்கு
பச்சை மோர் குழம்பு அப்டின்னு பேர்.

எப்டி நல்லா இருக்கா , இன்னும் செய்யலையா
சீக்கிரம் செஞ்சு பாருங்க , சுவைத்துக் கூறுங்கள்


மோர் குழம்பு, மஞ்ச மோர்குழம்பு  அது என்ன பச்சை மோர்குழம்பு
வாங்க படிச்சு பாருங்க


பாகற்காய் பிட்லை

                                                  பாகற்காய் பிட்லை

பாகற்காய் ஒரு சிறிய அறிமுகம் , இதில் இரண்டுவகை
மிதி பாகற்காய் (சிறிதாக இருக்கும் - இது கொடியாக  படராமல்
தரையில் அப்படியே படர்ந்து வளரும் அவ்வமயம் கால்களில்
மிதிபடும்  அதுவே பெயர்காரணம் )



மற்றொன்று கொம்பு பாகற்காய் ,  கொடியாக  தவழ்ந்து
வளரும்.



இதன் குணங்கள் , மிதி பாகல் சற்று கசப்புத் தன்மை
குறைவு.

கொம்பு பாகல் சற்று கசப்புத்தன்மை அதிகமாக இருக்கும்.
செய்முறைகளில் கசப்பை குறைக்க வழியுண்டு  ஆனால்
முற்றிலும் அகற்ற முடியாது.

சரி இது இப்படி இருக்க , நாம பிட்லை எப்டி செய்யறதுன்னு
பார்க்கலாம் .

பிட்லை செய்ய ரெண்டு  பாகற்காய்களும்   உகந்தது
ஆயினும் மிதிபாகல் சற்று முக்கியத்வம் அதிகம்.


பாகற்காய் 100 கிராம்
துவரம் பருப்பு  1 ஆழாக்கு
புளி  ........ எலுமிச்சை அளவு
பெருங்காயம்  - சிறிது
உப்பு  - தேவைக்கேற்ப

விழுது அரைக்க தேவையானவை :-

தேங்காய் துருவல் 1 கப்
மிளகு    ........................1 டீஸ்பூன்
தனியா......................... 3 டீஸ்பூன்
கடலைப்பருப்பு ........3 டீஸ்பூன்
மிளகாய்வற்றல் ......10

பருப்பு அடுப்பில் வேகட்டும்



பாகற்காயை நறுக்கி , பத்திரத்தில் போட்டு , புளிகரைசல்
விட்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்

விழுது அரைக்க வேண்டியவற்றை வாணலியில்
என்னை விட்டு வறுத்து அரைத்து கெட்டியான
விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்

கொதிக்கும் பாகற்காயுடன் , பருப்பை சேர்த்து
அரைத்த விழுதை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும் , கொஞ்சம்
தேங்காய்  எண்ணை  சேர்த்தால் கம கமா மணம்
இருக்கும்.  கருவேப்பிலை சேர்க்கவும் .



சுவையான பாகற்காய் பிட்லை தயார்.!!!!!!

காய் நறுக்குவதில் ஒரு சிறிய குறிப்பு :-

மிதி பாகற்காய் , பிளந்து போடவேண்டும்
கொம்பு பாகற்காய்  வட்டவடிவமாக நறுக்க வேண்டும்

மருந்து கசக்குதுன்னு யாரும் குடிக்காம இருக்கோமா
அதுபோல பாகற்காய் கசக்கும்னு சாப்டாம இருக்கலாமா




Wednesday, September 5, 2012

கத்தரிக்காய் ரசவாங்கி




கத்தரிக்காய் ரசவாங்கி :- By Savithri Vasan




தேவையானவை

வெள்ளை கத்தரிக்காய்
துவரம் பருப்பு : 1 கப்
புளி : எலுமிச்சை அளவு
(கரைசல் தயார் செய்துகொள்ளவும்)
பெருங்காயம் - சிறிது 
உப்பு  - தேவைக்கேற்ப 



பொடி செய்வதற்கு :-




பொடி செய்வதற்கு :-

கடலைப்பருப்பு
மிளகாய் வற்றல்
தேங்காய் துருவல்
தனியா




தாளிக்க :-
கடுகு, உளுத்தம்பருப்பு 

செய்முறை:-

துவரம் பருப்பு வேக வைத்துக்கொள்ளவும்

கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் , தேங்காய் துருவல்
தணியா இவைகளை சிறிது எண்ணை விட்டு வறுத்து
மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்

கத்தரிக்காய் நறுக்கி
(வெள்ளை கத்தரிக்காய் ரொம்ப பேஷா இருக்கும்)
இலுப்ப சட்டியில் எண்ணை விட்டு வதக்கி பாத்திரத்தில் 
போட்டு ,புளி கரைசல் விட்டு, பெருங்காம், உப்பு சேர்த்து, 
பொடி செய்துவைத்துள்ள ,கலவையை போட்டு பருப்ப 
சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.



அடுப்பில் இருந்து இறக்கும் முன் கொஞ்சம் 
தேங்காய் எண்ணை சேர்க்கவும்

கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்,
கருவேப்பிலை சேர்க்கவும்

சூடான சுவையான ரசவாங்கி , சாப்பிட வரலாமா ???

என்ன என்னவோ வாங்கினீங்க  ரசவாங்கி வாங்கினீங்களா செஞ்சீங்களா 

Tuesday, September 4, 2012

புளிப்புக் கீரை



புளிப்புக் கீரை (புளியிட்ட கீரை)

முளைக்கீரை ஒரு கட்டு வாங்கி
காம்புகளை ஆய்ந்து , பொடி பொடியாக
நறுக்கி  நன்றாக அலசி அலம்பி (சுத்தம் செய்வது)
வைங்க.

அடுப்புல (குக்கர்ல கூட வைக்கலாம் ) ஆழாக்கு பயத்தம் பருப்பு
வேகவையுங்க.

பருப்பு வெந்ததும் , அதில் கீரையை போட்டு
புளிகரைசல் சேர்த்து, குழம்பு பொடி போட்டு
தேவையான உப்பு போட்டு நல்லா கொதிக்க
விடுங்க.

இஞ்சி பச்சை மிளகாய் துண்டு துண்டா நறுக்கி 
வாணலியில் வதக்கி போடுங்க . அப்புறம்
கடுகு, உளுத்தம் பருப்பு , மிளகாய் வற்றல்
தாளிக்கவும். கருவேப்பிலை சேர்க்கவும் .
ரொம்ப சுப்பர் டேஸ்ட்

உங்களுக்கு தேவை என்றால் தேங்காய் துருவல் மற்றும் 
ஜீரகம் மிக்சியில் விழுதாக அரைத்து சேர்க்கவும் .

Method:

Cook green gram dhal till soft.
Remove the roots and wash the keerai thoroughly. Chop the keerai finely.

Place the chopped keerai in a thick bottomed vessel. Add salt, sambar powder 

and turmeric powder. Add tamarind extract. Close it with a lid. Cook the keerai 
in slow flame. When the keerai is cooked, add cooked dhal mashed nicely.

Have cut ginger and green chilly and fry it in a pan and add with this.

season it with mustard, Urad dal  and red chilly , Add curry leaves.

If you want you can Grind coconut and jeera and add with this

Monday, September 3, 2012

பச்சை சுண்டைக்காய் மோர் குழம்பு


பச்சை சுண்டைக்காய் மோர் குழம்பு  By: Savithri Vasan 

தேவை :-

நல்ல கெட்டித் தயிர்
சுண்டைக்காய் கொஞ்சம்
தேங்காய் துருவல் .......1 கப்
பச்சை மிளகாய் ...........4
ஜீரகம் .......................1 டீஸ்பூன்
அரிசி /அரிசி மாவு கொஞ்சம்

சுண்டைக்காய் கொஞ்சம் நசுக்கி பிளந்து 
வைத்துக்கொள்ளவும்.


தயிர் கெட்டியாக தண்ணீர் விடாமல் கடைந்து 
வைத்துக்கொள்ளவும்.

தேங்காய் துருவல் , பச்சை மிளகாய் , ஜீரகம் , அரிசி/அரிசிமாவு
சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்
கடைந்து வைத்த தயிரை ஒரு பாத்திரத்தில் விட்டு
அடுப்பில் வைக்கவும் அரைத்த விழுதை அதனுடன்
சேர்த்து கிளறாமல் பொங்கி வந்ததும் அடுப்பை
அணைக்கவும்.

பச்சை சுண்டைக்காயை வதக்கி போடவும்

கடுகு தாளிக்கவும் , கருவேப்பிலை சேர்க்கவும்
(தேவைப்பட்டால் தாளிப்புக்கு தேங்காய் எண்ணை
உபயோகப்படுத்தலாம்)

சிலர் மஞ்சள் பொடி சேர்த்து , மஞ்ச மோர் குழம்பு
செய்வார்கள்.
இதில் காய்களாக
பூசணிக்காய் ,
கரட்,
வெண்டைக்காய்
சுண்டைக்காய் வற்றல்,
சேப்பங்கிழங்கு,
முருங்கைக்காய்
என பலவாறு விருப்பம் போல் சேர்க்கலாம்.

ஆனா மோர் குழம்பு செய்யும் விதம் இதுதான்
அப்டின்னு ஐ எஸ் ஐ முத்திரை குத்தி சொல்லலாம்.

சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்
அது பழமொழிங்க................. ஆனா நாம செய்யப்போறது
பச்சை சுண்டைக்காய் மோர் குழம்பு , இதுக்கு கூலி
குடுக்க வேணாம் 

Sunday, September 2, 2012

பருப்பு இல்லாத சாம்பார்



பருப்பு இல்லாத சாம்பார்........ ரெடி !!!!! By:- சாவித்திரி வாசன்
 ----------------------------------------------



புளி கரைத்து , உப்பு சேர்த்து ஏதேனும் சாம்பார் காய்கள் சிலவற்றை
வதக்கி இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்


வெந்தயம்,
வெள்ளை எள்ளு , 
மிளகாய் வத்தல் 
தேங்காய் 
இவை நான்கையும் வறுத்து மிக்சியில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துவைத்துக்கொள்ளவும் .

 அடுப்பில் கொதிக்கும் புளித்தண்ணீரில் இதை 
சேர்த்து கொஞ்சம் பெருங்காயம் (தேவைப்பட்டால்) 
சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் , 
(சாம்பார் நன்றாக கெட்டி பட வேண்டும் என்றால்
கொஞ்சம் அரிசி சேர்த்துக்கொள்ளவும் .மேலே 
சொன்னவற்றை அரைக்கும்போது ) 

கடுகு , 
உளுத்தம் பருப்பு , 
மிளகாய் வத்தல் தாளிக்கவும் , 
கருவேப்பிலை சேர்க்கவும்

பருப்பு இல்லாத சுவையான சாம்பார் தாயார். 


இத செஞ்சு பார்த்து சொல்லுங்க சுவை எப்டி 
இருந்ததுன்னு , நான் இப்பதான் சாப்பிட்டேன் , 
அஹா பிரமாதம்

பருப்பு உருண்டை குழம்பு

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி  By.Savithri Vasan

நான் சொல்லும் குறிப்பு 12 உருண்டைகள் வரும்
5 பேர் சாப்பிடக்கூடிய குழம்பு அளவு.


ஆழாக்கு துவரம் பருப்பு ஊறவைக்கவும்
புளி எலுமிச்சை அளவு ஊறவைத்து
கரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும் .

அரைக்க தேவையானவை

பத்து நீட்டு மிளகாய்
நான்கு பச்சை மிளகாய்
கொஞ்சம் பெருங்காயம்
கொஞ்சம் உப்பு

இதை முதலில் மிசியில் நன்றாக
அரைத்துக்கொள்ளவும் , பிறகு இதனுடன்
ஊறவைத்த பருப்பை மிக்சியில் போட்டு
அரைத்த மிளகாயுடன் ஓன்று இரண்டாக
அரைத்துக்கொள்ளவும்.

கரைத்த புளி கரைசலில் , மூன்று ஸ்பூன்
குழம்புபொடி, கொஞ்சம் பெருங்காயம்
தேவையான உப்பு போட்டு அடுப்பில்
மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.
புளி கரைசலுடன் தேவையான அளவு
தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும் .

அடுப்பில் வாணலியில் கொஞ்சம் எண்ணை
விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுதை
சிறிதுநேரம் கிளறி இறக்கவும் .

கொஞ்சம் அரிசிமாவு கைகளில் தொட்டுக்கொண்டு
கிளறி எடுத்த விழுதை உருண்டைகளாக
உருட்டி வைத்துக்கொள்ளவும் . பிறகு
அடுப்பில் கொதிக்கும் குழம்பில் ஒன்றன்பின்
ஒன்றாக போடவும்.

குழம்ப நல்லா கொதிக்க விடுங்க , உருண்டை
நல்லா வேகட்டும் அப்பத்தான் சாப்பிட சுவைக்கும்

கொஞ்சம் தேங்கா எண்ணை விட்டு , கடுகு
உளுத்தம்பருப்பு தாளித்து , கருவேப்பிலை சேர்த்து
இறக்கவும்.

ரசம் :-

பருப்பு ஊறவைத்த தண்ணி, மிக்சி அலம்பி எடுத்த
தண்ணி இத ஒரு பாத்திரத்தில் போட்டு , கொஞ்சம்
குழம்புபொடி, பெருங்காயம், உப்பு , தக்காளி சேர்த்து
கொதிக்க விடுங்க , நல்லா கொதிச்சு வந்ததும்
தண்ணி விட்டு விளாவி, நெய்ல கடுகு, மிளகாவத்தல்
தாளித்து , மேல கொஞ்சம் கொத்தமல்லி தூவி
இறக்கிடுங்க

தட்டப் போடுங்க , ரெண்டு உருண்டை போட்டுக்கோங்க
சூடா சாதம் , கொஞ்சம் நெய் , அப்டி அந்த உருண்டைய
கைவச்ச்சதும் அது அப்டியே உடையும் , அத அப்டியே
சாதத்தோட பிசைஞ்சு சாப்டுங்க. பக்கத்தல தண்ணி
இருக்கா, முதல் பிடி வாய்க்குள்ள போனதும் விக்கல்
..........வந்துடுச்சா ........, தண்ணி குடிங்க , இப்டியே
ஒவ்வொரு சாதமா சாப்டுங்க , சந்தோஷமா இருங்க
நானும் போய் சாப்டுட்டு வரேன் ,


இந்த ரசம் இருக்கு பாருங்க அது நான் சொல்லறத விட
நீங்க வந்து சாப்டு பார்த்து சொல்லணும்ங்க அதுதான்
எனக்கு திருப்தி , எப்ப வரீங்க