Saturday, January 11, 2014

தினம் ஒரு திருப்புகழ் - அடியாரொடு கூட



தினம் ஒரு திருப்புகழ் - அடியாரொடு கூட  - நாள்  - 53








ராகம்: பெஹாக் / நாதநாமக்கிரியா /  மதுவந்தி 

தாளம்:  ஆதி





சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி ...... பவநோயே

தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங்

கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு ...... னடிபேணாக்

கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் ...... புரிவாயே

மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி ...... புனைவோனே

மாக முகடதிர வீ சு சிறைமயிலை
வாசி யெனவுடைய ...... முருகோனே

வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை ...... யுடையோனே

வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் ...... பெருமாளே.

கருத்துரை:  தருமா நெறியிலிருந்து விலகிய அசுரர்களை மாண்டு 
ஒழியுமாறு போர் புரிந்து மகுடத்தை தரித்தவரே! மயிலை, குதிரை 
வாகனம் போல் கொண்ட முருகக் கடவுளே! கலிசை என்ற ஊரில் 
உள்ள மன்னவருடைய உலக கோயிலில் உறைகின்ற பெருமையுடையவரே! 
வீரை என்ற தளத்தில் வாழ்கின்ற குமார சுவாமியே! பழனியில் 
எழுந்தருளியுள்ள வேலாயுதரே! தேவசேனாபதியே! கீழ்மகன் 
தீவினைகளைச் செய்பவன், ஒழுக்கமற்றவன், வஞ்சகன், பிறவி 
நோயை தேடுகின்றவன்; பெருமை, நீதி, நேர்மை, சிறப்பு ஆகிய 
நல்ல குணங்கள் சிறிதும் இல்லாதவன், பொய் பேசுபவன், தீயவன், 
தங்களது திருவடியை நினையாத குப்பை போன்றவன்; 
இப்படிப்பட்டவனாகிய என்னை உமது அடியாருடைய திருக்கொட்டத்தில் 
சேரும் வழியை தந்து அருள் புரிவீராக !

தொடரும் திருப்புகழ் ...................தொடர்ந்து வாருங்கள் 

Thursday, January 9, 2014

தினம் ஒரு திருப்புகழ் - ஞானம் பெற

தினம் ஒரு திருப்புகழ் -  ஞானம் பெற  - நாள்  - 52


ராகம்: நாட்டைக்குறிஞ்சி / ஜோன்புரி    .....    தாளம்: கண்டசாபு 

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.

கருத்துரை: பிரணவத்தின் பொருளை சிவபெருமான் உள்ளமானது 
குளிரும்படி இரு செவிகளிலும் உபதேசித்த ஞானகுருவே! உமாதேவியாருடைய திருக்குமாரரே! வெண்ணையைத் திருடி
உரலில் கட்டுப்பட்ட கண்ணபிரானும்,ரகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமசந்திரருமாகிய விஷ்ணுமூர்த்தியின்  மருகரே!, தெய்வ அம்மையாருக்கும், குறவர் குடியில் தோன்றிய வள்ளியம்மையாருக்கும் மணவாளரே! திருஆவினன் குடியில் எழுந்தருளியவரே! நின் செயலை விரும்பி உள்ளம் நினையாமல், உலகில் வீணாக அலைந்து திரிகின்ற அடியேனை பயப்படாதே என்று சொல்லி வந்தருள வேண்டும், 
ஊன சரீரத்தை விட்டு ஞானசரீரத்தைப் பெறவும், துன்பமானது நீங்கவும், திருவருள் ஞான இன்பத்தைக் கொடுத்து அருள் புரியவேண்டும். 

தொடரும் திருப்புகழ் ..................................தொடர்ந்து வாருங்கள் 

Wednesday, January 8, 2014

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி



திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி






லோக வைகுண்டம்' எனப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலின் முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி விழா. இதன் முக்கிய அம்சம் சொர்க்க வாசல் திறப்பு எனப்படும் பரமபத வாசல் திறப்புதான்.




மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குவது வழக்கம். இதில், திருமொழித் திருநாள் எனப்படும் பகல்பத்து 10 நாட்களும், திருவாய்மொழித் திருநாள் எனப்படும் ராப்பத்து பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறும்.




திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாளில் காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடுவர். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும். அன்று மட்டுமே அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார்.




பிரளய காலத்தின்போது ஆலிலை மேல் பள்ளி கொண்டு கண்வளர்ந்தருளிய திருமால், தமது நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார். ஒரு கட்டத்தில், பிரம்மாவுக்கு கர்வம் ஏற்பட்டது. அந்த கர்வத்தை அடக்கும் விதமாக திருமாலின் காதுகளில் இருந்து தோன்றிய அசுரர்கள் இருவர், பிரம்மாவைக் கொல்ல வந்தனர். திருமால் அதைத் தடுத்து, சுக்லபட்ச ஏகாதசியன்று அவ்விருவரையும் போரில் அடக்கி, வடக்கு வாசல் திறந்து, வைகுண்டத்தில் சேர்த்துக்கொண்டார். அப்போது அசுரர்கள் இருவரும், ""எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருள வேண்டும்'' என்று கேட்டனர். அதன்படியே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நம்மாழ்வார் மோட்சம் என்பதற்காகவே வைகுண்ட வாசல் கதவுகள் திறக்கப்படுவதாகக் கூறுவர். இதையே பரமபதவாசல் திறப்பு எனக் கொண்டாடுகின்றனர்.




இது திருவரங்கத்தை முன்னிட்டு, மற்ற திருமால் ஆலயங்களுக்கும் பொதுவானது. அன்று பெருமாள் கோயில்களில் உள்ள வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து, நான்கு வேதங்களும் ஓதி, பாசுரங்கள் முழங்க பெருமாள் வாசலைக் கடந்து செல்வார்.




இங்கே திருவரங்கத்தில் தங்க அங்கி அணிந்து, மங்கள வாத்தியம் முழங்க இந்த வாசலைக் கடந்து வருவார் நம்பெருமாள். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் இந்த வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் செல்வதாக நம்பிக்கை.




வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங்கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்ரமரனம், அர்ச்சிராத்திரி, திவ்யதேசப் பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம் என்பது இதன் விளக்கம். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும் மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, அரங்கன் நாமத்தை உச்சரித்து, அவன் புகழ் பாடும் தோத்திரங்களைப் பாராயணம் செய்தால் அதிக பயன்களைப் பெறலாம். ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்வதும் உண்டு.




வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும் மோட்ச ஏகாதசி என்றும் பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு.

Tuesday, January 7, 2014

தினம் ஒரு திருப்புகழ் - சிவனை நினைக்க

தினம் ஒரு திருப்புகழ் -  சிவனை நினைக்க - நாள் -  51


ராகம்:  தேஷ் ................................................தாளம்:  கண்டசாபு 



கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே


கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்

அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ 

ராகம்: ஹமீர்கல்யாணி

உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே

உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே

பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா

பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.


கருத்துரை:  உலகளந்த திருமால் மகிழ்ந்த மருகனே! திருஞான சம்பந்தராகத் திரு அவதாரம் புரிந்தவரே! பரவை நாச்சியாருக்காக தூது சென்ற பரமனது திருப்புதல்வரே! பழனி மலையில் என்றும் , இன்பம் தருமாறு எழுந்தருளிய பெருமாளே! அடியேன் கருவிலிருந்து பிறந்து கலைகள் பல தெரிந்து, அதனால் கருத்தழிந்து சிவநாமங்களை நினையாமல், ஆறு சமயங்களின் நீதிகளில் ஒன்றையேனும் அறிந்துகொள்ளாமல், சோறு போடுபவர்கள் இல்லங்கள் தோறும் சென்று நாள்தோறும் சிறிதும் வெட்கமில்லாமல், அலைந்து உழன்ன்று அழிவேனோ? அவ்வாறு அழியாதுஉமது அருட் சோற்றை நாடி ஆலயத்தின் முன் வந்து நிற்கக் கடவேன்.  

தொடரும் திருப்புகழ் ......................................தொடர்ந்து வாருங்கள் 

Monday, January 6, 2014

தினம் ஒரு திருப்புகழ் - திருவடியைப் பெற



தினம் ஒரு திருப்புகழ் - திருவடியைப் பெற - நாள் - 50




ராகம் :கேதார கௌளம்    .....................               தாளம்: ஆதி (திச்ரம்)




கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய ...... திரிசூலன்

கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்
கழிய முடுகி ...... யெழுகாலந்

திரியு நரியு மெரியு முரிமை
தெரிய விரவி ...... யணுகாதே

செறிவு மறிவு முறவு மனைய
திகழு மடிகள் ...... தரவேணும்

பரிய வரையி னரிவை மருவு
பரம ரருளு ...... முருகோனே

பழன முழவர் கொழுவி லெழுது
பழைய பழநி ...... யமர்வோனே

அரியு மயனும் வெருவ வுருவ
அரிய கிரியை ...... யெறிவோனே

அயிலு மயிலு மறமு நிறமும்
அழகு முடைய ...... பெருமாளே.


 கருத்துரை: இமவானுடைய புதல்வி பார்வதியை மணந்த சிவபெருமான்
பெற்ற முருகக் கடவுளே பழனியம்பதியில் வீற்றிருப்பவரே! கிரௌஞ்ச
மலை பிளக்குமாறு வேலாயுதத்தை விடுத்தவரே பெருமிதமுடையவரே!
கருமை நிறத்துடன் கூடிய எருமை மீது ஏறி சூலத்தை ஏந்திய இயமன்
இருக்கப் பிடிக்கின்ற பாசக்கயிற்றுடன் உயிர்கள் நீங்கும்படி வேகமாக
வரும்பொழுது திரியும், நரியும், நெருப்பும் உரிமையை காட்டி நெருங்கி
வராதபடி நிறைவும், அறிவும், உறவும் உடைய உமது பாதமலரை
தந்தருள்வீர்

தொடரும் திருப்புகழ் ...................................தொடர்ந்து வாருங்கள் 

Sunday, January 5, 2014

தினம் ஒரு திருப்புகழ் - பாதம் மறவாமை

தினம் ஒரு திருப்புகழ் - பாதம் மறவாமை -  நாள்  - 49





ராகம்: தோடி / தேஷ் / ஹமீர் கல்யாணி / பெஹாக் 
 
தாளம் : ரூபகம்/த்ச்ரஜம்பை 



கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனத னவெற்பு மேல்மிகு ...... மயலான

கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகிய
கனதன மொத்த மேனியு ...... முகமாறும்

அதிப லவஜ்ர வாகுவும் அயில்நு னைவெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையு ...... முலகேழும்

அதிர வரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிந வபத்ம பாதமு ...... மறவேனே

இரவி குலத்தி ராசத மருவி யெதிர்த்து வீழ்கடு
ரணமு கசுத்த வீரிய ...... குணமான

இளைய வனுக்கு நீண்முடி அரச துபெற்று வாழ்வுற
இதமொ டளித்த ராகவன் ...... மருகோனே

பதினொ ருருத்தி ராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொ டுநிற்கு மீசுர ...... சுரலோக

பரிம ளகற்ப காடவி அரிய ளிசுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.

கருத்துரை : சூரியன் மகனாய் வாலியை  எதிர்த்து தோற்று நின்றவனாய், போர்களத்தில் தூய வீரம் படைத்தவனாய் நின்ற சுக்ரீவனுக்கு அரசாட்சியைப் பெற்றுத் தந்த ஸ்ரீராமனது திருமருகரே! ஏகாதச உருத்திராதிகளின் திருக் கோயிலில் எழுந்தருளியிருப்பவரே! பழனி மலையில் உரைபவரே! மாதர்களின் மயக்கத்தால் உண்டான மனத்தை அடியேன் உடையவனாக இருந்த பொழுதிலும், இறைவனே உன் பொன் போன்ற திருமேனியும், ஆறுமுகங்களையும், தோள்களையும், கூர்மையான வெற்றிவேலையும், பாம்பைப் பிடித்த மயிலையும், ஏழு உலகங்களும் அதிருமாறு கூவுகின்ற சேவலையும், அடியார்கள் துதித்து நல்வாழ்வு பெறுகின்ற திருவடிகளையும் அடியேன் ஒருபோதும் மறக்க மாட்டேன் . 

தொடரும் திருப்புகழ் ...................தொடர்ந்து வாருங்கள் 

Friday, January 3, 2014

தினம் ஒரு திருப்புகழ் - துதி


தினம் ஒரு திருப்புகழ் - துதி  - நாள் - 48



ராகம் : தோடி                                                              தாளம்: ஆதி 


கடலை பொரியவரை பலக னிகழைநுகர்
கடின குடவுதர ...... விபரீத

கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது ...... துணைவோனே

வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வ ருமரகத ...... மயில்வீரா

மகப திதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித ...... மணவாளா

அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும்

அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரக ரசரவண ...... பவலோலா

படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுப திவரநதி ...... அழகான

பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு ...... பெருமாளே

கருத்துரை :  அடியார்கள் படைக்கும் பலவகையான 
உணவுகளை அருந்துகின்ற  யானை முகத்தினையும் 
தாமரை இதைழ் போன்ற சிறிய கண்களையும் உடைய 
விநாயக மூர்த்தியின் தம்பியே! உலகை ஒரு நொடியில் 
வளம் வந்த பச்சை மயில் வாகனரே! ஸ்ரீ வள்ளி தேவசேனா 
சமேதரே! அசுரரை அழித்து தேவரை சிறைமீட்ட்ட 
வேற்படையினரே! சரவணப் பொய்கையில் தோன்றியவரே!
சிவபெருமானும், கங்கா தேவியும், பார்வதி தேவியும் 
பெற்ற புதல்வரே! பழநா புரியில் எழுந்தருளியிருக்கும் 
பெருமிதம் மிகுந்தவரே!( இத்திருப்புகழ் முழுவதும் 
துதியாகவே அமைந்துள்ளது).

தொடரும் திருப்புகழ் .........................................தொடர்ந்து வாருங்கள் 

Thursday, January 2, 2014

தினம் ஒரு திருப்புகழ் - ஆசையை விட

தினம் ஒரு திருப்புகழ் - ஆசையை விட  - நாள் - 47





ராகம்: கானடா / அடாணா                             தாளம்: ஸங்கீர்ணத்ரிபுடை



ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே

பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே

விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.


கருத்துரை: அசுரர்களின்  உயிரையும், உடைமையையும் 
கொள்ளை கொண்ட பெருமிதமுடையவரே! அடியார்க்கு 
எளியவரே! விருதுகவிராஜா! வள்ளி மணவாளா! ஒரு 
வேளையாவது உன்னுடைய சரணாகத விந்தங்களில் 
அன்பு வைத்திலேன். பழனி மலை என்ற க்ஷேத்திரத்தை 
தரிசித்திலேன். உயர்வற்றதாகிய வாழ்வை ஒழிக்கிலேன் 
பிறவியை அற்றுப் போக வேண்டும் என்று எண்ணுகின்றேன் 
ஆனால் அப்பிரவிக்கு வித்தாகிய ஆசையை விட்டு ஒழியமாட்டேனா?

தொடரும் திருப்புகழ் .................................தொடர்ந்து வாருங்கள் 

Wednesday, January 1, 2014

தினம் ஒரு திருப்புகழ் - மதிகெடாதிருக்க

தினம் ஒரு திருப்புகழ் - மதிகெடாதிருக்க - நாள் - 46


ராகம்:  சௌராஷ்ட்ரம்                      தாளம் : அங்கதாளம் 


உலகபசு பாச தொந்த ...... மதுவான
உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்

மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்

சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
சரவணப வாமு குந்தன் ...... மருகோனே

பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.

கருத்துரை: கங்கா நதியையும், அறுகம் புல்லையும், 
தும்பை மலரையும், பூளைப் பூவையும், அணிந்துள்ள 
சிவகுமாரரே! சரவணப் பொய்கையில் தோன்றருளியவரே
பழனி மலையில் எழுந்தருளியவரே! உயிர்களைக் கட்டுப்படுத்தும் 
மலபந்தங்களாகியசுற்றத்தார், துணைவர் , தாய் தந்தையர்
மனைவி, மக்கள் முதலியவர்களாலும், மலஜல பிராண 
வாயுக்களால் உண்டாகும் துன்பங்களாலும், அடியேனுடைய 
அறிவுநிலை கெட்டுப்போகாமல் இருக்குமாறு, உன்றன் திருவருளைத் 
தந்து காத்தருள வேண்டும், 

தொடரும் திருப்புகழ் ...................................தொடர்ந்து வாருங்கள் 

தினம் ஒரு திருப்புகழ் - அகப்பொருள் வேண்ட


தினம் ஒரு திருப்புகழ் - அகப்பொருள் வேண்ட - நாள் - 45







ராகம் : ஆஹிரி தாளம்: கண்டசாபு


இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ

எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச

அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள்

அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே

ராகம்: பைரவி

நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே

நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா

பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா

பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே.


கருத்துரை திருமால் மருகா! பார்வதி பாலா! அவுணர் குலகாலா!
வள்ளி மணவாளா!  பழனிக் குமாரா! தேவர்களிடம் காதல் 
கொண்டமையால் சந்திரன் வெப்பத்தைக் கொடுக்கிறான். 
குயில், புல்லாங்குழல், முரசு, மணி முதலிய இசைகள் 
துன்புறுத்துகின்றன.   இவாறு இன்பவேட்கை கொண்ட 
இப்பெண் கொடியைத் தழுவி ஆட்கொள்ள மயில் மேல் 
வந்தருள்வீர்!


தொடரும் திருப்புகழ் ......................தொடர்ந்து வாருங்கள்