Friday, December 13, 2013

ஆடவல்லானின் ஆனந்த நடனம்


ஆடவல்லானின் ஆனந்த நடனம்






தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. "மாதங்களில் மார்கழியாகவும், நாட்களில் திருவாதிரையாகவும் விளங்குகிறேன்'' என பகவான் கண்ணன் மார்கழியின் சிறப்பினை பகவத் கீதையில் போற்றுகிறான்.




பக்தி மயமாக விளங்குகிறது மார்கழி மாதம். அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் திருக்கோயில்களில் திருப்பாவை- திருவெம்பாவை பாடல்களைப் பாடி இறைவனை வணங்குகின்றனர். வைணவக் கோயில்களில் மார்கழி மாதத்தில் சிறப்பான விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுவது போன்று, சிவாலயங்களில் திருவாதிரை விழா நடைபெறுகிறது. இந்நன்னாளில் ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு சிறப்பான அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. எனவே ""ஆதிரை நாள் உகந்தான்'' ""ஆதிரை நன்னாளான்'' என்று திருமுறைகள் போற்றுகின்றன.




தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்கி இறைவன் ஆடிய நடனம் ஆனந்த நடனம். பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின்படி தாருகாவனத்தில் அன்று ஆடிய நடனத்தை தில்லையில் மீண்டும் ஆதிரை நன்னாளில் சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படுகிறது. இன்னாளில் நடைபெறும் தரிசனத்தை ""ஆருத்ரா தரிசனம்'' எனச் சிறப்பித்து அழைக்கிறோம். சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறும் "ஆருத்ரா தரிசன காட்சி'' மிகவும் சிறப்பானது. அன்று இறைவனுக்கு படைக்கப்படும் "திருவாதிரை களியும்' சுவையானது.




தமிழகத்தில் பல திருக்கோயில்களில் திருவாதிரை விழா சிறப்பாக நடைபெறுகிறது. திருவாதிரை அன்று நடராஜப் பெருமான் பல திருக்கோயில்களில் வீதி உலா வருவதும் உண்டு.




அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகரம் கோயிலில் திருவாதிரை நாளில் எழுந்தருள "அதிரை விடங்கர்' என்ற திருமேனி செய்து அளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் உள்ள திருவாய்மூர் திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை நாளில் "வட்டணை ஆடல் உடையார்' என்ற ஆடவல்லான் திருமேனி உலா வந்ததை கல்வெட்டுகளின் வாயிலாக அறியலாம்.




நடராஜப் பெருமான் திருநடனம் ஆடிய சிறப்பான திருத்தலங்களாக, சிதம்பரம் - கனகசபை, மதுரை - வெள்ளிசபை, திருநெல்வேலி - தாமிரசபை; திருக்குற்றாலம் - சித்திரசபை, திருவாலங்காடு - இரத்தினசபை என ஐந்து சபைகள் கூறப்படுகின்றன.




சென்னை-திருத்தணி செல்லும் பாதைக்கு அருகே திருவாலங்காடு அமைந்துள்ளது. அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்திற்கு வரலாம். வடாரண்யம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் உவந்து ஆடிய அம்பலம் இது. உலகம் உய்ய இறைவன் இங்கு ஆடிய ""ஊர்த்துவ தாண்டவமே'' முதன்மையான தாண்டவம்.




இறைவனின் ஐந்து செயல்களில் "அருளல்' என்னும் செயலை இந்தத் தாண்டவம் குறிக்கிறது. காளியின் செருக்கைப் போக்குவதற்காக ஆடிய திருநடனம் இது. மிக வேகமாக சுழன்று ஆடியதால் "சண்ட தாண்டவம்' என்றும், "அணுக்கிரக தாண்டவம்" என்றும் அழைக்கப்படுகின்றன. ""ஆடினார் காளி காண ஆலங்காட்டடிகளாரே'' என நாவுக்கரசர் பெருமான் போற்றுகின்றார். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் போற்றப்பட்ட சிறப்பு மிகு தலம் இது. ஊர்த்துவதாண்டவத்தை பெருங்கூத்து எனவும் செய்கரிய நடனம் என்றும் போற்றுகின்றனர்.




காரைக்காலம்மையார் திருவாலங்காட்டு ஆடவல்லான் பெருமானிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இறைவன் ஆடும் கூத்தின் சிறப்பினை அம்மையாரின் திருப்பதிகங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. திருமூலர் பெருமானும் ஊர்த்துவதாண்டவத்தின் பெருமையை அழகாக விளக்குகிறார்.




திருவாலங்காடு திருக்கோயிலில் வழிபடப்பெறும் ஊர்த்துவதாண்டவ மூர்த்திக்கு மார்கழி திருவாதிரை நாளில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. (18.12.2013 அன்று இரவு சிறப்பு அபிஷேகமும், 19.12.2013 அன்று கோபுர தரிசனமும், பழையனூர் சென்று வந்து நடராஜப் பெருமான் காட்சி அளிக்கும் தரிசன நிகழ்ச்சியும் இத்தலத்தில் நடைபெற உள்ளன).




மார்கழி மாதத்தில் திருவாதிரையில் தாண்டவமூர்த்தியான நடராஜப் பெருமானை வழிபடுவது நல்லது என காரண ஆகமம் கூறுகிறது. அந்த வழிபாட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் கிடைக்கும் என்கிறது.




தகவலுக்கு: 044-27872074

No comments:

Post a Comment