Friday, December 13, 2013

"சார்..இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?"



"சார்..இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?"

கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

My Source : Sage of Kanchi 







ஒரு தடவை...பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர்
வந்தார். வழக்கமாகப் பள்ளிக் குழந்தைகளின் படிப்பறிவைச்
சோதிக்கக் கேள்விகள் கேட்பது வழக்கமல்லவா?

ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர்,அந்த வகுப்புப்
பையன் ஒருவனிடம் கேள்வி கேட்டார்.அந்தக் கேள்விக்கு
அந்தப் பையனால் பதில் சொல்ல முடியவில்லை.

பக்கத்து வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மகான் எழுந்து
வந்து, "சார்..இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?"
என்று கேட்க....அவரும் உத்தரவு கொடுத்தார்.
மகான்...'கட கட' வென அந்தப் பாடத்தின் பகுதியைச் சொன்னார்.
எல்லோருக்கும் மிகவும் வியப்பு. 'பெரிய வகுப்புக் கேள்விக்கு
சின்ன வகுப்பில் படிக்கும் பையன் பதில் சொல்கிறானே!'
என்று பாராட்டி மகிழ்ந்தார்கள்.

பிற்காலத்தில் ஒரு தடவை ரா.கணபதியிடம் இந்த நிகழ்ச்சியைப்
பற்றிக் குறிப்பிடுகிறார்.-அவர்தான் இதைப்பற்றிப் பின்னால்
எல்லோருக்கும் தெரியச் செய்தவர்.பெரியவா அந்த நிகழ்ச்சியைப்
பற்றிச் சொன்னவுடன் கணபதி, "மகா பெரியவாளுக்குச் சகலமும்
தெரியும். வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவருக்குப்
பள்ளிக்கூடப் பாடத்துக்குப் பதில் சொல்வதா கடினம்?" என்று
பாராட்டினார்.

அவரைக் கையமர்த்திய மகான்....

"அவசரப்பட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ....
எதற்கும் முடிச்சுப் போடாதே...என் அண்ணா அந்த மேல்வகுப்பிலே
அப்ப படிச்சுண்டு இருந்தான். அவன் உரக்கவே பள்ளிப் பாடங்களைப்
படிப்பான்.அது என் காதிலும் விழும். அதனால்தான் இன்ஸ்பெக்டரின்
கேள்விக்கு நான் பதில் சொன்னேன்..." என்றார் அடக்கமாக.

தான் காண்பித்த அந்த அபூர்வமான விஷயத்தை மிகவும் சாதாரண
விஷயமாக ஒதுக்கித் தள்ளிவிட்டார் மகான்.

ஒன்றுமில்லாத விஷயங்களைப் பற்றிப் பெருமை கொள்வது
நமது குணம்.ஆனால், உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய
விஷயத்தை ஒதுக்கித் தள்ளுவது மகான்களின் குணம்.

No comments:

Post a Comment