Tuesday, December 10, 2013

வெப்பு நோய்கள் தீரும் வழுவதூர் ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்


வெப்பு நோய்கள் தீரும் வழுவதூர் ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
அக்னி தன் சக்தியை மேம்படுத்தவும், தன் தொழிலுக்கு வலு சேர்க்கவும், பல்வேறு தலங்களில் தீர்த்தம் அமைத்து, சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றான். அத்தகைய தலங்களில், அக்னியைப் போற்றும் வகையில் தலத்து இறைவன் அக்னிபுரீஸ்வரன் என்றே பெயர் கொண்டார்.


சோழநாட்டில் நான்கு தேவாரத் தலங்கள் அமைந்துள்ளன. காவிரி வடகரையில் பொன்னூர் எனப்படும் திருஅன்னியூர், கஞ்சனூர், காவிரி தென்கரையில் திருவன்னியூர், திருப்புகலூர் ஆகிய தலங்கள் அவை. இந்த நான்கு தலங்களிலும் தீர்த்தம் அமைத்து அக்னி வழிபட்டு பேறு பெற்றதைக் குறிக்கும் வகையில் இறைவன் அக்னீஸ்வரன் என்றும், அக்னிபுரீஸ்வரன் என்றும், தீர்த்தங்கள் அக்னி தீர்த்தம் என்றும் வழங்கப்படுகின்றன.


நடுநாட்டில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அக்னி தலமாகப் போற்றப்படுகிறது. திருவையாறு வட்டத்தில் கழுமங்கலம், செங்கம் வட்டத்தில் தாமரைப்பாக்கம், திருவாரூர் வட்டத்தில் இருக்கை, நன்னிலம் வட்டத்தில் கழப்பூதனூர் ஆகிய தலங்களில் உள்ள இறைவனும் அக்னிபுரீஸ்வரன் என்றே அழைக்கப்படுகின்றான்.


இந்த வகையில், தொண்டை நாட்டில் அக்னி வழிபட்டு பேறு பெற்ற தலமாகத் திகழ்வது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வழுவதூர் திருத்தலம்.


இந்தத் தலம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் 13ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1264) கட்டப்பட்டுள்ளதை ஒரு கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இக்கோயிலின் பழம்பெருமைக்கு இவ்வூரில் அமைந்துள்ள மூன்று கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன. தவிர, இவ்வூர் நிலங்களில் சூலம் குறியீடு கொண்ட சுமார் எட்டுக்கும் மேற்பட்ட எல்லைக் கற்கள் காணப்படுகின்றன.


வழுவதூர் தலத்தில் உறையும் சுவாமியின் திருப்பெயர் அக்னிபுரீஸ்வரர், தாமரை பீடம் கொண்டு, வட்ட வடிவ ஆவுடையாரில் பாணம் சுயம்பு திருமேனியாய் அமைந்துள்ளது. அன்னை செüந்தர நாயகி எளிய வடிவில் கலை நயத்துடன் காட்சி தருவது பழைமைத் தன்மைக்குச் சான்று. சிதிலமடைந்த ஆலயம் என்றாலும், சுவாமி அக்னிபுரீஸ்வரரும், அன்னை செüந்தர நாயகியும், எழில்மிகு கோலத்தில் காட்சி தருகின்றனர்.


அழகே உருவான நந்தி தன் உடலில் அணிகலன்களுடன் ஒரு காளை உயிருடன் அமைந்துள்ளது போன்று காட்சி தருகின்றது. விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட விக்ரகங்கள் காலச் சக்கரத்தில் காணாமல் போயுள்ளன.


பரிகாரம்: தீ விபத்துகளைத் தடுத்தல், வெப்பம் சம்பந்தமான நோய்களைத் தீர்த்தல், ரத்த அழுத்தம் உள்ளவர்களை குணமாக்குதல் போன்றவற்றுக்குக் கண்கண்ட தெய்வமாக இறைவன் விளங்குகிறார். இதனை ஊர்ப் பெரியவர்கள் இன்றும் நினைவுகூர்கின்றனர்.


அமைவிடம்: காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் வழுவதூர் அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றம்- மதுராந்தகம் பேருந்து வழித்தடத்தில் திருக்கழுக்குன்றத்திலிருந்து தென்மேற்கே 8 கி.மீ,, மதுராந்தகத்திலிருந்து வடகிழக்கே 18 கி.மீ, சென்னைக்குத் தெற்கே 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றத்திலிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.


தன்னைக் காட்டிக் கொண்ட நாக சித்தர்: சிவாலயத்தின் கற்களை அகற்றும் போது சிவன் கருவறையிலிருந்து சுமார் இருபது அடி நீள நாகம் ஒன்று வெளியே வந்து நந்தி சிலையை மூன்றுமுறை வலம் வந்து அருகிலிருந்த வேப்ப மரத்தின் உச்சியில் ஏறி மூன்று முறை ஆசீர்வதிக்க, அதைக் கண்ட ஊர்மக்கள் அனைவரும் அச்சத்துடன் கவனித்தனர். அப்போது அங்கிருந்த அடியார்கள் நாகத்தை வணங்கி நிற்க, அடுத்த கணமே அது அங்கிருந்து மறைந்தது. சித்தர் ஒருவர் இத்தலத்து இறைவனை இதுநாள் வரை நாக வடிவில் வழிபட்டிருந்தார் என்று எண்ணி ஊர்மக்கள் வியப்பில் வணங்கினர்.


திருப்பணி : சிறப்பும் பெருமையும் கொண்ட இக்கோயில் நீண்டகாலமாக, சூணாம்பேடு


ஜமீன் நிர்வாகத்தில் இருந்து வந்தது. காலப்போக்கில் பராமரிப்பின்றி செடிகொடிகள் முளைத்து, புதர் மண்டி ஆலயம் முழுமையும் மறைக்கப் பட்டது. இந்நிலை கண்டு மனம் கலங்கிய ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் அருட்பணி மன்றம், ஊர்ப் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் வேறுபாடின்றி ஒன்றிணைந்து இவ்வாலயத்தைப் புனரமைக்க முடிவு செய்தனர். இதை அடுத்து, இந்த ஆலயம் திருப்பணி செய்ய கற்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, அதே நிலையில் பழைமை மாறாமல் புதுப்பிக்க திட்டமிட்டு, திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.


தொடர்புக்கு : 99524 32615, 93606 36805