Tuesday, December 10, 2013

தினம் ஒரு திருப்புகழ் - மயில் மேல் காட்சி பெற

தினம் ஒரு திருப்புகழ் - மயில் மேல் காட்சி பெற - நாள் - 29




ராகம்: மாயாமாளவ கௌளை / பெஹாக் தாளம்: ஆதி

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி

தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்

ராகம்: ஹிந்தோளம்

எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம

இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்சூ டிடவருக
என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்

சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.

கருத்துரை : பகவானாகிய நாராயணர், அளவற்ற தவம் 
புரிந்த கௌசலா தேவி அன்புடன் பற்பல வகையாக அழைக்குமாறு, மண்ணுலகில் அவதரித்த இராமனும், மாய சொரூபியுமாகிய மகாவிஷ்ணு உள்ளம் மகிழ்ச்சியடையும் மருகரே! வள்ளி நாயகியின் மணாளரே! 
தேவர்களது சிறை வாசம் ஒழிய, அசுரர்களது வமிசம் அடியோடு அழிய போர் புரிந்த தீரரே! சிவபெருமானது புதல்வரே! செந்திலாண்டவரே! முதுமையினால், தொந்தி சரியவும், மயிர்கள் வெளுத்து நரையடையவும், பற்கள் அசையவும், முதுகு வளையவும், உதடுகள் தொங்கவும், ஊன்று கோலின் மீது ஒரு கரம் பொருந்திய வண்ணம், தள்ளாடி வரும் பொழுது, பெண்கள் எள்ளி நகையாடவும், கிண்கிண் என்ற ஒலியுடன் இருமல் வரவும், வார்த்தைகள் குழறவும், கண்கள் ஒளிகுன்றி குருட்டுத் தன்மை அடையவும், செவிகள் செவிடாகவும், உடலில் வந்த நோயை நீக்குவதற்கு வந்த வைத்தியனும், பிள்ளைகள் சொத்து எவ்வளவு இருக்கிறது, கடன் எவ்வளவு இருக்கிறது என்று கேட்கவும், பத்தினி ஓவென்று கதறி அழவும், யம தூதர்கள் என் உயிரைப் பற்ற நெருங்கி வரவும், மலம் ஒழுக மரண வேதனை அடைந்து உயிர் மங்குகின்ற காலத்தில், அடியனைக் காத்தருள வேண்டும். 

தொடரும் திருப்புகழ் .............................தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment