Saturday, December 7, 2013

கார்த்திகை கடைஞாயிறு கோலாகலம்

கார்த்திகை கடைஞாயிறு கோலாகலம் நாகநாதசுவாமி கோவிலில் கொடியேற்றம்



திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா டிச 6; கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ராகுதோஷ நிவர்த்தி தலமாக கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமிகோவில் விளங்குகிறது.

தேவாரப்பதிகங்களால் பாடல் பெற்றது. சுசீல முனிவரின் குழந்தையை தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. தனது சாபத்தை போக்குவதற்காக நாகநாதபெருமானை மாசி மகாசிவராத்திரி நாளில் ராகு வழிபட்டார். ராகுவின் பூஜையை மெச்சிய சிவபெருமான், என்னருள் பெற்ற நீ என்னை வழிபட்டு பின் உன்னை வணங்கும் அடியார்களுக்கு உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம், திருமணதோஷம் ஆகியவற்றை நீக்கியருள்வாய் என வரமளித்தார். நாகநாதசுவாமியின் இடப்பாகத்தில் பிறையணியம்மன் சன்னதி உள்ளது. கார்த்திகைத் திங்கள் முழுநிலவு நாளில் இறைவியின் முகத்தில் நிலவொளி படுவது சிறப்பு. சிறப்பு மிக்க இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இவ்வாண்டும் டிச 6; காலை கொடியேற்றத்துடன் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா தொடங்கியது. டிச 6; காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடிமரம் முன் எழுந்தருளினர். முன்னதாக அஸ்திரதேவர் விழா கொடியுடன் வீதியுலா சென்று வந்தது. பின் காலை 9 மணிக்குமேல் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனையைத் தொடர்ந்து காலை 9.40 மணிக்கு திரளான பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடந்தது. விழாவில், உதவி ஆணையர் பரணீதரன், முன்னாள் அறங்காவலர்கள் உப்பிலிசீனிவாசன், திருநாவுக்கரசு, சேக்கிழார் ஆதிவாரவழிபாட்டுக்குழு தலைவர் சண்முகம் உள்ளிட்ட திரளான முக்கிய பி முகர்கள், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேக பூஜைகள் தலைமை அர்ச்சகர் நாகராஜசிவாச்சாரியார் தலைமையில் உமாபதி, ஸ்ரீதர், சங்கர், செல்லப்பா உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். இரவு 7 மணிக்கு மஞ்சத்தில் வீதியுலா நடந்தது. விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், மாலை நாக, கிளி, காளை, பூத, சிம்ம,கைலாச, யானை, அன்ன, குதிரை என பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 10ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 12ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இரவு மஞ்சத்தில் வீதியுலா நடக்கிறது. விழாவின் 9ம் நாளான 14ம் தேதி காலை 7 மணி தேரோட்டம் நடக்கிறது. 15ம் தேதி கார்த்திகை கடைஞாயிறன்று காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் வீதியுலாவும், மதியம் 1.30 மணிக்கு சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி வைபவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் பரணீதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.

No comments:

Post a Comment