Saturday, December 7, 2013

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற

தினம் ஒரு திருப்புகழ்  -  திருவடி பெற  -  நாள் - 27 



ராகம்: அடாணா                                        தாளம் : ஆதி(திஸ்ரம்) 

தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார்

தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன்

மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய்

வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற் ...... கழல்தாராய்

கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக் ...... குமரேசா

கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் ...... கிரியோனே

கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப் ...... புயவேளே

கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற் ...... பெருமாளே.

கருத்துரை : தன்னை புகழ்கின்றவர்களை மகிழ்ந்து 
கொண்டாடுகின்ற, சூரபத்மனைக்கொன்றவரே! வண்டுகள் 
பங்களைப் பாடுகின்ற வள்ளி மலையில் எழுந்தருளியிருப்பவரே!
பகைவரைக் கண்டித்தவரே ! வாசனை தாங்கிய புயத்தை உடையவரே!
கந்தக் கடவுளே! திருசெந்தூரில் எழுந்தருளி இருக்கும் பெருமிதம் 
உடையவரே ! மாதர் ஆசைப்பட்டு வளம்கொண்ட உடம்பாகிய
பொய்யாகிய சரீரத்தினின்றும் உயிர் நீங்கி இடுகாடு போகுமுன்
அடியேன் முன் வந்தருளி தேவரீருடைய அழகிய திருவடி மலரைத் தந்து 
ஆட்கொள்ள வேண்டும். 

தொடரும் திருப்புகழ் ...................... தொடர்ந்து வாருங்கள் 

No comments:

Post a Comment