Saturday, December 21, 2013

துவரிமானில் அழகியசிங்கர் திருநட்சத்திரம்


துவரிமானில் அழகியசிங்கர் திருநட்சத்திரம்








திருமாலின் முக்கிய அவதாரமாகக் கருதப்படுகிறது ம்த்ஸ்ய அவதாரம். கிருதுமால் எனும் நதியில் திருமால் ம்த்ஸ்ய உருவில் அவதாரம் எடுத்து வேதங்களைக் காப்பாற்றினார் என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.


மதுரைக்கு மேற்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் கிருதமால் நதி உற்பத்தியாகும் இடத்தின் தென்கரைப் பகுதியிலும், வேதவதி என்ற வைகை நதியின் வடக்கு கரையிலும் உள்ள துவரிமான் அக்ரஹாரத்தில் அகோபிலமடம் 40வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்தர மஹாதேசிகன் பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ஆந்திராவிலுள்ள அகோபிலம் நரசிம்ம ஆராதனைக்கு பெயர் பெற்றது. இங்கு நாற்பதாவது ஜீயராக இருந்தவர் ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்திர மஹாதேசிகர். காரைக்குறிச்சி அழகிய சிங்கர் என்றும் இவரை அழைப்பர். இவர் நரசிம்ம உபாசனையில் தீவிரமாக இருந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் தேவாதிராஜ பெருமாளோடு பேசுவது போல, அகோபிலத்திலுள்ள மாலோல நரசிம்மனோடு பேசுவார்.

ஒருமுறை, அகோபில மட யானைக்கு மதம் பிடித்தது. அனைவரும் பயந்து ஓடத் துவங்கினர். ஆனால் ஜீயர் தன் கையில் திரிதண்டத்துடன் யானையை நோக்கி நடந்தார். நரசிம்மரின் திருமஞ்சன (அபிஷேகம்) தீர்த்தத்தை அதன்மீது தெளித்தார். தீர்த்த மகிமையால் யானை சாந்தமாகிவிட்டது.

ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்திர மஹாதேசிகர் 1851 ஆம் வருடம், மார்கழி மாதம், விசாக நட்சத்திரத்தில் திருநெல்வேலி அருகிலுள்ள காருக்குறிச்சியில் பிறந்தார். வேங்கடகிருஷ்ணமாச்சார்யார் என்பது இவரது இயற்பெயர். 1913, ஏப்ரலில் அகோபில மடத்தின் ஆஸ்தானப் பொறுப்பேற்றுக்கொண்டார். அக்காலத்தில் அகோபிலம் தலத்திற்கு யாரும் போவதில்லை. மந்திர சித்தி பெற்ற இவர் அங்கிருந்த பிரம்மராட்ஷஸ், ஜடாமுனிகளை விரட்டினார். இதன்பின், பக்தர்கள் அகோபிலம் வந்து நவ நரசிம்மரை வழிபடத் தொடங்கினர். 1923ல் யாத்திரையாக வந்து மதுரை கூடலழகரை தரிசித்தார். அப்போது துவரிமான் பகுதியில் தங்கியிருந்தபோது நோய்வாய்ப்பட்டார். கோபால ராமபத்ராச்சார்யாரிடம் ஆஸ்தானப் பொறுப்பேற்கச் செய்துவிட்டு, 1923, ஜனவரி 14ல் பரமபதம் அடைந்தார்.

மார்கழி 14 ஆம் தேதி, அதாவது டிசம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை ஸ்ரீஅஹோபிலமடம் 40வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ திவ்ய பாதுகாúஸவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்திர மஹாதேசிகனுடைய, திருநட்சத்திரம் துவரிமான் பிருந்தாவனத்தில் நடைபெறுகிறது.

வியாழன்தோறும் இந்த பிருந்தாவனத்திற்கு திருமண பிராப்தி வேண்டியும், மழலைச் செல்வம் வேண்டியும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment