Thursday, December 12, 2013

திருமார்பின் அழகு ஆட்கொண்டது

திருமார்பின் அழகு ஆட்கொண்டது


நெடுநாள் ஏக்கம் தீரும் வகையில் முதல் முறையாக திருவரங்கனைப் பார்த்த நொடிப் பொழுதே, பத்துப் பாசுரங்களால் அரங்கன் அழகை வர்ணித்துப் பாடினார் திருப்பாணாழ்வார். அவரது பாசுரத்தொகுப்பு அமலனாதிபிரான் என்று பெயர் பெற்றது. அதில் உள்ள இந்தப் பாசுரத்தில் திருவரங்கனின் திருமார்பு அழகு தன்னை அவனிடம் ஆட்கொள்ளச் செய்ததாக வர்ணிக்கிறார்.
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொ லறியே னரங்கத் தம்மான்திரு
வார மார்பதன் றோஅடி யேனை யாட்கோண்டதே.
"பொறுக்க முடியாத சுமையாக நின்ற பழைமையான பாபங்களின் தொடர்பைத் துண்டித்து, அதனால் பாபம் நீங்கப் பெற்ற அடியேனை தன்னிடத்தில் அன்பு உடையவன் ஆக்கி வைத்தான் அரங்கநாதன். இப்படிச் செய்து வைத்தது மட்டுமல்லாமல் என் இதயத்திலும் புகுந்து விட்டான்.
இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுவதற்கு ஏற்ற வகையில், நான் கடுமையானதும் மிகப் பெரியதுமான தவத்தை முற்பிறவியில் செய்திருப்பேனோ என்னவோ அறிந்தேன் இல்லை. அரங்கநாதனுடைய பிராட்டியையும் முக்தாஹாரத்தையும் உடையதான அந்தத் திருமார்பு அன்றோ அடியவனான என்னை அடிமைப்படுத்திக் கொண்டது...'' என்று இந்தப் பாசுரத்தில் தெரிவிக்கிறார் திருப்பாணாழ்வார்.

No comments:

Post a Comment