Wednesday, December 25, 2013

இலம்பையங்கோட்டூர் ஸ்ரீ தெய்வநாதேஸ்வர் ஆலயம்இளமைப் பொலிவு நிலைக்கும் இலம்பையங்கோட்டூர் ஸ்ரீ தெய்வநாதேஸ்வர் ஆலயம்இளமைப் பொ−வு நிலைக்கும் இலம்பையங்கோட்டூர் ஸ்ரீ தெய்வநாதேஸ்வர் ஆலயம் முப்புரங்களை எரிப்பதற்காகத் தேரின் மீதேறிச் சென்றார் முக்கண்ணர். அவருடன் போருக்குக் கிளம்பிச் சென்றார்கள் தேவர்கள். ஆனால், எப்போதும் எந்தத் துவக்கத்துக்கும் வழிபடப்பட வேண்டிய விநாயகப் பெருமானை வணங்காமல் சென்றனர். அதனால், அவர்கள் பயணம் தடைப்பட்டது. தந்தையே ஆயினும் தமக்குக் கொடுத்த வாக்கின்படி தன்னைத் தவிர்த்துச் சென்றதால் விநாயகர் விளையாடினார். சிவபெருமான் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தது. தேர் நிலை குலைந்து சாய்ந்தது. ஆனால் அது சாயா வண்ணம் ஸ்ரீவிஷ்ணு அதனைத் தாங்கிப் பிடித்தார். ஆயினும் சிவபெருமானின் தோளில் சூடியிருந்த கொன்றை மலர் மாலை நழுவிக் கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் பெருமான் சுயம்பு உருவாகத் தோன்றினார். அந்தத் தலமே இலம்பையங்கோட்டூர் என்றும் எலும்பியங்கோட்டூர் என்றும் வழங்கப்படும் தலம்.

இந்தத் தலத்தின் புராணத்தில் இது கூறப்படுகிறது. தேவர்கள் படைக்குத் தலைமையேற்று திரிபுர சம்ஹாரத்துக்குச் சென்றதாலும், தேவர்களால் வழிபடப்பட்ட பெருமான் என்பதாலும், இந்தத் தலத்தின் இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்றும் போற்றப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவிற்கோலம் எனப்படும் கூவம் தலத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து உள்ளூர் வாகனங்களில் இந்தத் தலத்தை அடையலாம். பொதுப் போக்குவரத்து வசதி குறைவுதான்.

ஆலயம் பழமை அழகுடன் திகழ்கிறது. ராஜகோபுரம் என்று எதுவும் இல்லை. கிழக்கே மதில் சுவரும் அதை ஒட்டி, ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாசலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபமும் உள்ளன. தலத்துக்கென்று கொடிமரம் ஏதும் இல்லை. கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கி, லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

மூலவர் சுயம்பு லிங்கமாக, தீண்டாத் திருமேனியாக உள்ளார். பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது.

இந்த ஆலயத்துக்கு ஒரு பிராகாரம் மட்டுமே இருக்கிறது. பிராகார வலத்தின்போது, குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி - தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவற்றை தரிசித்தபடி வலம் வருகிறோம். இங்கே கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, கருவறையின் பின்புறம் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சிவாலயத்துக்கு உரிய லட்சணங்களுடன் அழகான அமைப்புடன் உள்ளது கோயில்.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய அம்சம், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவமே. இங்கே யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்தபடி அழகாகக் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. தனது வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக்கொண்டு, கணகளை மூடியபடி, கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க அமைதியான கோலத்தில் காட்சி தருகிறார். நம் கண்களைவிட்டு அகலாத அற்புதம் இவரது திருவுருவம்.

அம்பாள் கனககுசாம்பிகை என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

ஆலயத்துக்கு வெளியே இருபுறமும் இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினானாம். இதனால் சங்காபிஷேகம் செய்து இறைவனை வழிபட மன நிம்மதி கிடைக்கும்.

நாம் சந்நிதி வலம் வரும்போது, வித்தியாசமாக வெளிப் பிராகாரத்தில் இடதுபுறம் ரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் சந்நிதியை தரிசிக்கிறோம். 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் இவர். ரம்பை ஏன் இங்கே வந்து வழிபட்டாள்?

தேவலோக மங்கை ரம்பை ஒரு முறை தன் இளமை அழகு குலைய, பொலிவிழந்து சோகத்தில் ஆழ்ந்தாள். தான் மீண்டும் இளமை அழகு பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, இத்தல இறைவனை பூஜித்தால் மீண்டும் பொலிவு கிட்டும் என்று உணரப் பெற்றாள். தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டும் என்று பிரார்த்தித்து இறைவனை நோக்கி தவம் புரிந்தாள். அவளுக்கு இரங்கிய ஈசன், அவள் விரும்பிய வரம் அளித்தார். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டானது. ரம்பை வழிபட்ட இத்தலம் ரம்பைக்கோட்டூர் என்றானதாம். பின்னாளில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி எலுமியன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது என்கின்றனர். எனவே, இளமை அழகும் பொலிவும் பெற இங்கே கன்னியர் ஈசனைத் தொழுது வணங்குகின்றனர்.

ஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக்கொண்டு இந்தத் தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோவில் இருப்பதை உணர்த்தினார் ஈசனார். ஆனால், உடன் வந்த அடியார்களோ, அதைத் தெரிந்து கொள்ளவில்லை. பின்னர் இறைவன் வெள்ளைப் பசுவின் உருவில் வந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை முட்டினார். அதனால் வியந்த சம்பந்தப் பெருமான், பசு காட்டிய குறிப்பினை உணர்ந்து, பசுவைத் தொடர்ந்து செல்ல, இந்தத் தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்துவிட்டது.

அப்போது தான் பசு உருவில் வந்தது இறைவனே என்பதை உணர்ந்து, நேரில் வந்து இத்தலத்தைப் பற்றி ஈசன் உணர்த்தியுள்ளதை அறிந்து மெய் சிலிர்த்தார் சம்பந்தர். அந்த சிலிர்ப்புடனே, இறைவனைப் பதிகம் பாடி வழிபட்டார். தனது பதிகத்தின் 3-வது பாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்.

பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம்
பண்டுவெங்கூற்றுதைத்து
அடியவர்க்கருளும்
காலனாம் எனதுரை தனதுரையாகக்
கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய
நீர்மலர்க் குவளைகள்
தாதுவிண்டோங்கும்
ஏல நாறும் பொழில்
இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என்எழில்
கொள்வதியல்பே.

-இப்பதிகத்தில்தான் சம்பந்தர் எனதுரைதனதுரையாக என்ற தொடரை, பாடல் தோறும் அமைத்துப் பாடினார்.

இங்கே வருடத்தில் இருமுறை ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் சூரியனின் ஒளிக் கற்றைகள் சுவாமி மீது படுகின்றன.

தேவர்கள் வழிபட்ட தெய்வநாதேஸ்வரரை வணங்கிட சகல விதமான தோஷங்களும் நீங்கும். குரு பரிகாரம் செய்பவர்கள், யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.


குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு போன்றவை இக்கோயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சந்நிதி திறந்திருக்கும் நேரம்: காலை 8-12, மாலை 4-30-8 வரை.

தரிசன உதவிக்கு: 94448 65714

No comments:

Post a Comment