Saturday, December 21, 2013

சக்தி பீடம் 51: மானசரோவர் - தாட்சாயணி

சக்தி பீடம் 51: மானசரோவர் - தாட்சாயணி





மானசரோவர் - திபெத் பகுதியில் உள்ளது அன்னை தாட்சாயணியின் ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் வலது உள்ளங்கை விழுந்த இடமாகக் கருதப்படும் இது, சக்தி பீட வரிசையில் 43வது பீடமாக விளங்குகிறது. திபெத்தில் வீற்றிருக்கும் அன்னை தாட்சாயணி (துர்கா) என்றும், இறைவன் அமரேஷ்வர் என்றும் வணங்கப்படுகின்றனர்.

சுதர்சன சக்கரத்தால் துண்டிக்கப்பட்டு விழுந்த தேவியின் வலது உள்ளங்கை பாகம், மிக வேகமாக வந்து விழுந்ததால் அந்தப் பிரதேசம் தாழ்வடைந்ததோடு அங்கே பெரும் பள்ளம் ஏற்பட்டதாம். பல யுகங்களுக்கு பிறகு பிரம்மனின் வரவால் இங்கே நீர் நிரம்பி அந்த இடம் அழகாகக் காட்சி அளித்தது. இதுவே பின்னாளில் "மானசரோவர்' என்று பெயர் பெற்றது.


இந்த இடத்துடன் தொடர்புடைய புராணக் கதைகளில் ஒன்று... ஒருமுறை அத்ரி மகரிஷி இங்கே தவம் புரிந்தார். அவரின் கடுமையான தவத்துக்கு மனம் இரங்கி அவர் முன் தோன்றினார் ஸ்ரீமந் நாராயணர். அத்ரி மகரிஷியின் விருப்பப்படி தனது அம்சம் கொண்ட ஒரு குழந்தையை மகாவிஷ்ணு உருவாக்கி, அத்ரி மகரிஷியிடம் அளித்தார். அவரே தத்தாத்ரேயர். தக்க வயதில் நான்கு வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் கற்று பிற்காலத்தில் பெரும் ரிஷியாகத் திகழ்ந்தார் தத்தாத்ரேயர்.

தத்தாத்ரேயர் ஒரு முறை இமயமலையைக் கடக்க முயன்றார். அப்போது, இமயவன் அவர் முன் வணங்கி, "மகரிஷியே தங்கள் வரவால் தன்யனானேன். பெரும் மலையான என்னைத் தாங்கள் கடக்க முற்படுவது என்ன காரணத்தால்?' என்று கேட்டான். தத்தாத்ரேயர், "மலையரசனே மங்களம் உண்டாகுக. மந்தரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம் முதலிய மலைகள் எல்லாம் உன்னைப் போல் பிரமாண்டமாக இல்லை. இருந்தாலும் பக்தர்கள் அங்கே கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். ஏன் தெரியுமா? அவை எல்லாம் தெய்வங்கள் உறையும் இடங்கள். அது போல், உன்னிடம் மறைந்துள்ள, அரிய சக்திபெற்ற தலங்களை நேரில் தரிசித்து அதன் பெருமைகளை மக்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். அதற்காகவே வந்துள்ளேன். உன்னிடம் மறைந்துள்ள அந்தத் தெய்வீக இடங்களுக்குச் செல்ல எனக்கு வழிகாட்டு' என்றார். அவரது வேண்டுகோளுக்கு மகிழ்ந்த இமயவன் முதலில் கயிலைநாதனை அவர் தரிசிக்க வழிகாட்டினான். அதன்பின் இருவரும் மானசரோவரை அடைந்தனர். அதன் மகிமையை இமயவன் எடுத்துக் கூறினான்.

பிரம்மாவின் புத்திரர் மரீசி ஒருமுறை கயிலையில் பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்ய வந்தார். அங்கு முன்பே வசித்துவந்த ரிஷிகள், யோகிகள் உதவியுடன் சிவனை திருப்தி செய்ய, 12 ஆண்டுகள் முறைப்படி ஆராதிக்க அனைவரும் திட்டமிட்டனர். குளிர்காலம் வந்தது. கயிலையிலிருந்த நீர் முழுவதும் பனிக்கட்டி ஆனதால் அவர்கள் நீராடவும் பூஜைகள் செய்வதற்கும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட எங்கும் கிடைக்கவில்லை. நீராடி ஈர உடைகளோடு வழிபாடு தொடங்க வேண்டும் என்ற நியமம் இருந்ததால், தண்ணீருக்காக அனைவரும் தவித்தனர்.


இந்த இக்கட்டான நேரத்தில் மரீசிக்கு தன் தந்தையின் நினைவு வந்தது. நான்முகனை அவர் பிரார்த்தித்தார். நான்முகன் அவர்கள் முன் தோன்ற, தங்கள் தண்ணீர்க் கஷ்டத்தைக் கூறி வழிகாட்டுமாறு அவர்கள் கோரினர். பிரம்மன், கயிலை நாதனைப் பிரார்த்திக்க, பனிக்கட்டி உருகி, ஆறாகப் பெருகி, தாட்சாயணி தேவியின் அங்கம் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் நிரம்பி அழகிய ஏரியானது. இந்த ஏரி மானசரோவர் எனப் பெயர் பெற்றது. இந்த இடமே அன்னை தாட்சாயணியின் சக்தி பீடமாகத் திகழ்கிறது.

No comments:

Post a Comment