Thursday, December 12, 2013

51 சக்தி பீடம்: ஜ்யோதிஷ்மதி

51 சக்தி பீடம்: ஜ்யோதிஷ்மதி


மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜ்யோதிஷ்மதி தேவியின் ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் முதுகுப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படும் இது, சக்தி பீட வரிசையில் 18வது பீடமாக விளங்குகிறது. கண்ட்வாவில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் ஜ்யோதிஷ்மதி (ஷர்வாநீ). தலத்தின் காவல் தெய்வமாகத் திகழும் பைரவர் நிமிஷர்.


ஜ்யோதிஷ்மதி மகாசக்தி பீடம் ம.பி.யில் கிழக்கு நிமாட் எனும் காண்ட்வா மாவட்டத்தில் 77 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தை ஓம்காரேஷ்வர் என்பர். ஓம்காரேஷ்வரில் தாக்ஷôயிணியின் அங்கம் வீழ்ந்து அங்கே ஒரு மகா காளி ஆலயம் எழும்பியது. ஆனால் சிவாலயத்தை ஒட்டி மலைச் சரிவில் தென்படும் ஓர் குகையையே மகாகாளி கோயில் என அழைத்து வந்தனர். ஆதிகாலத்தில் ஓம்காரேஷ்வருக்கு வருபவர்களை, இங்கே உக்கிர ரூபியாகத் திரிந்து கொண்டிருந்த மகாகாளியும், பைரவரும் தாக்கி ரத்தத்தை காணிக்கையாக்கி வந்தனராம். ஆனால், மந்திரவாதிகள் பலர் ஒன்றுசேர்ந்து காளியின் உக்கிரத்தை அடக்கி ஒரு குகையின் சுரங்கத்தில் அடைத்து அதன் வாயிலை பெரும் பாறைகளால் மூடிவிட்டனராம். பைரவரை மலை உச்சியில் நிறுதி வைத்து அவ்வப்போது பலி கொடுப்பதாக வாக்களித்து அவரது உக்கிரத்தையும் தணித்தனராம். காளி அடைக்கப்பட்ட இந்தக் குகையையே அண்மைக் காலம் வரை காளி மந்திர் என்று அழைத்து வந்தனர்.


இந்தக் குகையில்தான் பிற்காலத்தில் குருகோவிந்த பகவத் பாதர் தவம் செய்தார். ஆதிசங்கரர், குருகோவிந்த பகவத்பாதரை குருவாக ஏற்று, அவர் மூலம் தீட்சை பெற்று சாஸ்திரங்களைக் கற்றறிந்ததும் இந்தக் குகையில்தான்.


மேலும் இங்கே, விந்தியன் என்பவன் ஓம்கார யந்திரம் அமைத்து, அதில் மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, கடுந்தவம் புரிந்து சிவன் அருள் பெற்றானாம். அவன் அமைத்த ஓம்கார யந்திரம் அந்த வடிவிலேயே குன்றாக மாறி, பிடித்து வைத்த பிருத்வி லிங்கம் இறுக்கம் அடைந்து ஜோதிர் லிங்கமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறது.


தினமும் நடுஇரவு நேரத்தில் தேவர்கள் அனைவரும் அங்கே வந்து வழிபடுகிறார்களாம். நள்ளிரவில் குன்றின் மேல் ஏறி கிழக்கு நோக்கி நின்றால், வானிலிருந்து வேத கோஷம் நம் காதுகளுக்குக் கேட்கும் என்கின்றனர் பக்தர்கள்.

No comments:

Post a Comment