Monday, November 25, 2013

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற

தினம் ஒரு திருப்புகழ் - திருவடி பெற - நாள் - 15 



ராகம் : ஆரபி
தாளம்: ஆதி

வரைத்தடங் கொங்கை யாலும்
வளைப்படுஞ் செங்கை யாலும்
மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும்


வடுப்படுந் தொண்டை யாலும்
விரைத்திடுங் கொண்டை யாலும்
மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி

எரிப்படும் பஞ்சு போல
மிகக்கெடுந் தொண்ட னேனும்
இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற

இசைத்திடுஞ் சந்த பேதம்
ஒலித்திடுந் தண்டை சூழும்
இணைப்பதம் புண்ட ரீகம் ...... அருள்வாயே


சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்
இளக்ரவுஞ் சந்த னோடு
துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தியன் றிந்த்ர லோகம்
அழித்தவன் பொன்று மாறு
சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே

செருக்கெழுந் தும்பர் சேனை
துளக்கவென் றண்ட மூடு
தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே

தினைப்புனஞ் சென்று லாவு
குறத்தியின் பம்ப ராவு
திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.


கருத்துரை :-மலை போலப் பரவி அகன்ற மார்பாலும்,
வளையல் ஒலிக்கும் சிவந்த கரத்தாலும், செழிப்புள்ள
கெண்டை மீன் போன்ற கண்களாலும், பலராலும்
வடுப்படுத்தப்படும் கொவ்வைக் கனி ஒத்த இதழாலும்,
மணம் வீசும் கூந்தலாலும் மயக்குகின்ற மனமுடைய 
விலைமாதர்களின் வசத்தில் பட்டு, தீயில் இடப்பட்ட
பஞ்சு போல மிகவும் கெட்டுப் போகின்ற அடியனாகிய
நானும் துன்பப்படும் வினைத் தொடர்புள்ள கடலிலிருந்து
கரையேற, இசையுடன் கலந்த பல வகையான சந்த
ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த உன் திருவடிகளாகிய 
தாமரைகளை அருள் புரிவாயாக.

தேவர்களுக்கு வஞ்சனை செய்த சூரன், இளைய கிரவுஞ்சன்
என்னும் அசுரனோடு கலங்கி எழுந்து ஓட, அண்ட கோளம்
அளவும் அவர்களைத் துரத்தி, முன்பு இந்திர லோகத்தை 
அழித்தவனாகிய சூரன் அழிந்து போகும்படி, சுடுகின்றதும்
மிகவும் உக்கிரமானதுமான வேலை விட்டவனே, வீம்புடன்
போருக்கு எழுந்த தேவர்களின் சேனை கலங்கும்படி முழக்கம்
செய்த சங்கேந்திய கையை** உடைய திருமாலின் மருகனே,
தினைப் புனத்துக்குப் போய் உலவுகின்ற குறப் பெண் வள்ளியின் 
இன்பத்தை நாடிப் பின் அவளை வணங்கிய, திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும், பெருமாளே.




**தேவர்கள் சேனையை மயங்கச் செய்து சங்க நாதம்

முழக்கி பாரிஜாத மரத்தைக் கண்ணன் பூமிக்குக் கொண்டு

வந்த வரலாற்றைக் குறிக்கும்.







தொடரும் திருப்புகழ் .............................. தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment