Tuesday, November 26, 2013

தினம் ஒரு திருப்புகழ் - சிற்றின்ப வலையில் வீழாதிருக்க

தினம் ஒரு திருப்புகழ் -    சிற்றின்ப வலையில் வீழாதிருக்க  - நாள் 1 6 


அங்கை மென்குழ லாய்வார் போலே
சந்தி நின்றய லோடே போவா
ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ

அன்று வந்தொரு நாள்நீர் போனீர்
பின்பு கண்டறி யோநா மீதே
அன்று மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா

எங்க ளந்தரம் வேறா ரோர்வார்
பண்டு தந்தது போதா தோமே
லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா

திங்கு நின்றதென் வீடே வாரீ
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே

மங்கு லின்புறு வானாய் வானூ
டன்ற ரும்பிய காலாய் நீள்கால்
மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய்

வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்ப ரம்புனை பாராய் பாரேழ்
மண்ட லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய்

உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனே

ஒண்த டம்பொழில் நீடூர் கோடூர்
செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.

கருத்துரை :-

தங்களது அழகிய கைகளால் மென்மையான கூந்தலை சிக்கு
எடுப்பவர்களைப் போல பாவனை காட்டி, மாலைப் பொழுதினில் 
(மனையின் வெளிப் புறத்தில்) நின்று, வெளியில் போகும் 
ஆடவர்களை அன்பு கொள்ளுமாறு  நீங்களா போகின்றீர், என்னைத் 
தெரியாதா உமக்கு, அன்று ஒரு நாள் நீர் இங்கு வந்து போனீர்,
 அதன் பிறகு உம்மை நாம் பார்க்கவில்லை, இது ஒரு உண்மையே. 
அன்று முதல் இன்று வரை ஒரு நாள் கூட பொழுது போகவில்லை. 
தூக்கமும் வரவில்லை.

 எங்கள் உள்ளத்தை (உம்மைத் தவிர) வேறு யார் அறிவார்கள்.
(நீர்) முன்பு கொடுத்த பொருள் போதாதோ. மேலே இன்று இன்னும் 
வேறு தந்தால் தான் உறவோ? இது எதற்கு? இது வரை கொடுத்த 
பொருள் மாத்திரம் போதாதா?

 நான் நிற்கும் வீடு என்னுடையதுதான். உள்ளே வாரும் என்று மனப் பொருத்தம் பேசும் பொது மகளிரின் மாயை லீலைகள் ஆகிய இன்பமாகிய நஞ்சுக் குழியில் வீணாக விழாத வண்ணம் அருள் புரிய வேண்டும்.
மேகங்கள் இன்புற்று உலவும் வானாகவும், ஆகாயத்தில் அன்று தோன்றிய காற்றாகவும்,  பெருங் காற்றுடன் கூடி நெருங்கி வரும் பகைகளை நீறாக்கும் வன்மை கொண்டுள்ள எரிகின்ற நெருப்பாகவும், வந்து ஒலித்து எழுகின்ற நீராகவும், கடல் என்னும் நீர் சூழ்ந்த ஆடையை அணிந்த பூமியாகவும், ஏழு உலகங்களும் புகழ்கின்ற நீயாகவும், நானாகவும், தாமரை மலரில் வாழும் பிரமனாகவும்,  உங்கள் தந்தையாகிய சங்கரர் ஆகவும், அச்சம் தரும் அண்டக் கூட்டங்கள் ஆகவும், மூலப் பிரகிருதி ஆகவும், எதிலும் இறுதியில் தோயாது இருக்கின்ற மாயவனாகிய திருமாலின் மருகனே,  தெளிந்த நீர்க் குளங்களும் சோலைகளும் நிறைந்த ஊரும் சங்குகள் விளங்கும் நகரும் ஆகிய திருச்செந்தூர்ப் பதியில் வாழ்பவனே,  உன்னை நினைந்து வாழ்பவர்கள் அனுபவித்த மனம் அறியும் தேனே, தேவர்களின் பெருமாளே.

No comments:

Post a Comment