Wednesday, November 20, 2013

தினம் ஒரு திருப்புகழ் - பாவம் அழிய அருள் பெற

தினம் ஒரு திருப்புகழ் - பாவம் அழிய அருள் பெற 





ராகம்:- கரஹரப்ரியா
தாளம்:- திஸ்ரத்ரிபுடை

நாள் 10

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே

கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே

பனகந்துயில் கின்றதி றம்புனை
கடல்முன்புக டைந்தப ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே

பலதுன்பம்உழன்றுக லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே

ராகம்: பூர்விகல்யாணி

அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே

அடல்வந்துமு ழங்கியி டும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்

மனமுந்தழல் சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே

மதியுங்கதி ருந்தட வும்படி
உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.

கருத்துரை:-தங்கம் திரண்டு சேர்கின்ற பெரிய மேரு
மலையை அடைந்து அதன் மேல் தக தக என்று
மின்னுகின்ற ஒளிவீசும் செண்டாயுதத்தை
(பொற்பிரம்பை)** எறிந்திட்ட புகலிடமானவனே
மிக்க மதம் கொண்டு, பலவித பக்ஷணங்களைப் புசித்து,
அனைத்தையும் கவள அளவாக உண்டு வளர்ந்த
யானைமுகனுக்கு இளையவனாகப் பிறந்த முருகனே,
ஆதிசேஷன் மீது அறிதுயில் கொள்ளும் வல்லமை
உடையவரும், பாற்கடலை முன்பு (கூர்மாவதாரத்தில்)
தாமே கடைந்த பெரும் பொருளும், வானில் படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே,
பல துன்பங்களால் மனம் சுழன்று கலக்கமுற்ற
அற்பனும், புலால் உண்பவனும், கொலைகாரனுமான நான்
செய்கின்ற பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ
என் முன் தோன்றி திருவருள் புரியவேண்டும்.

பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து நின்று, எப்போதும்
சுழன்று திரியும் திரிபுரத்தையும் வெற்றி கொள்ள,
அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக் கொள்ளும்படியாக
சிரித்தே எரித்த திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே, வலிமையோடு வந்து முழங்கும் பறை வாத்தியங்கள்
(அதே ஒலியோடு) உலகம் அதிர, அண்டங்கள் கூட்டமிகுதியால்
நெரிய, போருக்கு வந்த சூரர்களின் மனத்தில்
சென்று அக்கினி சுடும்படி, அந்த நாள் அவர்களின்
உடல்களும் குடல்களும் கிழியும்படி, மயிலின் முதுகின் மேல் வந்தருளிய மதிப்பும் பெருமையும் உடையவனே, சந்திரனும்
சூரியனும் தடவிச் செல்லும்படியான உயரமான மரங்கள்
உள்ள சோலைகள் நிறைந்த வளமிக்க திருப்பரங்குன்றத்தில்
எழுந்தருளி அருள் பாலிக்கும் பெருமாளே.

**முருகனது அம்சமான உக்கிர பாண்டியன் ஆட்சியின்
போது நாட்டில் வறுமை மிக, பாண்டியன் கனவில்
சிவபெருமான் தோன்றி பொன்மலை மேருவைச்
செண்டால் அடித்தால் பொன்னாகக் கொட்டும் என,
பாண்டியன் மேருவைச் செண்டால் அடித்து பொன்
பெற்ற திருவிளையாடல் இங்கு கூறப்படுகிறது.


தொடரும் திருப்புகழ் .......... தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment