Wednesday, November 20, 2013

ஒப்பிட்டு


ஒப்பிட்டு   by Velammal Gurusamy 

நமக்கு எப்பவுமே ஒன்றோடு ஒன்று 
ஒப்பிட்டு பார்த்துதான் வழக்கம் 
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதே 
பொருள் அடுத்தவரிடம் இருந்தால் நாம் 
அதை ஒப்பிட்டு பார்ப்போம். 

சமையலும் அப்டித்தாங்க , ஒப்பிட்டு பார்க்கவேண்டிய 
ஒன்று , பொறாமை கொள்ள அல்ல,பெருமை கொள்ள 

அப்படி ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவு 
சுவைகொண்ட இனிப்புதான் இது ஒப்பிட்டு 
என்ன ஆச்சர்யமா இருக்கா , கீழ இருக்கறதை 
படிச்சுட்டு நீங்களே செஞ்சு பாருங்களேன் சாரி
ஒப்பிட்டு பாருங்களேன்



ஒப்பிட்டு அப்படீன்னு சொல்லி என் பக்கத்துவீட்டு வயதான அம்மா நான் முதன்முதலில் தாய்மை அடைந்திருந்த போது சாப்பிம்மா என்று சொல்லி கொண்டுவந்து கொடுத்தாங்க .இது நடந்து நாற்பது வருடங்களுக்கு மேலாயிற்று .அந்த அம்மா கர்னாடகாவைச் சேர்ந்தவங்க.எங்கஊர் பலகாரம் அப்படீன்னு சொன்னாங்க.

இதுவரை இந்தபெயரில் நம் தமிழ் நாட்டில் அப்படி ஒரு பட்சணம் சாப்பிட்டதேயில்லை.அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்த்தால் 
அந்த அம்மாவிடமே செய்முறையும் கேட்டு தெரிந்து கொண்டேன். 
உங்களில் சிலருக்கு இது பற்றி தெரிந்திருக்கலாம் இருந்தாலும் 
இதை நினைவு கூறும் விதமாக எடுத்துக்கொள்ளுங்கள் .


ஒரு கப் கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து குழையாமல் நறுக்கு பதத்தில் வேகவைத்து மிக்சியில் பொடித்துக்கொண்டேன். கடாயில் நெய்விட்டு துருவிய தேங்காய் கொஞ்சம் வறுத்து அதோடு ஏலப்பொடி ,ஒருகப் பொடித்தவெல்லம் ,பொடித்த பருப்பு சேர்த்து கிளறி உருண்டைகளாக்கினேன்.பின் அதை வடை போன்று தட்டிக்கொண்டேன். ஒரு பாத்திரத்தில் தேவையான கோதுமைமாவை சிட்டிகைஉப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குகரைத்தேன்.தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து வடைகளை மாவில் நன்கு முக்கி கல்லில் வைத்து நெய்விட்டு ஷாலோ ப்ரை பண்ணிஎடுத்தேன், அவ்ளவுதான் , 

ஒப்பிட முடியாத சுவையில் ஒப்பிட்டுகள் வந்தன.

நீங்களும் செஞ்சு பாருங்களேன் , செஞ்சிட்டு 
ஒப்பிட்டு பாருங்க , நான் சொன்ன சுவை இருக்கா அப்டின்னு

· 

No comments:

Post a Comment