Friday, November 15, 2013

சக்தி பீடம்: பிருந்தாவனம் உமா



51 சக்தி பீடம்: பிருந்தாவனம் உமா





உத்திரப் பிரதேசத்தில், பிருந்தாவனம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது உமா தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 2வது பீடமாக விளங்கும் இது, அன்னை தாட்சாயினியின் கேசம் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. விருந்தாபன், பிருந்தாபன், பிருந்தாவனா என சில பெயர்களைக் கொண்ட இன்றைய பிருந்தாவனம் சக்தி பீடமாக போற்றப்படுகிறது.




இங்கே ஸ்ரீகிருஷ்ணரின் பால லீலைகள், விநோதங்கள், ராதையின் புனித நாமம் என பிருந்தாவனம் முழுவதும் பரவி உள்ளது.




யமுனைக் கரையிலுள்ள அழகிய தலம் பிருந்தாவனம். தில்லியிலிருந்து 126 கி.மீ, மதுராவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சக்தி பீட நாயகி உமா தேவி என்றும், úக்ஷத்திர பாலகர் பூதேசர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.




இங்கே நிகழ்ந்த பல்வேறு வரலாற்றுக் கதைகளில் ஒன்று, மிதிலையில் ராமன், சீதையைத் திருமணம் செய்து கொள்ள நகர வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது, அந்த ஊர்ப் பெண்கள் ராமனைக் கண்டு மோகித்து, அவனை நாடி தங்கள் விருப்பத்தை விவரித்தனர். துவாபர யுகத்தில் அவர்களது ஆசையைத் தீர்ப்பதாக ராமன் வாக்களித்தார். அதன்படி அந்தக் கன்னிகைகள் அனைவரும் அடுத்த பிறவியில் நவநந்தர்களுக்குப் புத்திரிகளாகப் பிறந்து, வளர்ந்து, அதிகாலையில் யமுனையில் புனித நீராடி, காத்யாயினி விரதத்தைக் கடைப்பிடித்தனர்.




இவ்வாறு ஒரு முறை அவர்கள்




ஆற்றில் நீராடும்போது, அங்கே வந்த கண்ணன் அவர்களது உடைகளைத் திருடி எடுத்துக்கொண்டு மரத்தின்மேல் உட்கார்ந்து விட்டான். பின்பு கோபியர் அனைவரும் தங்களின் இரு கரங்களையும் கூப்பி கண்ணனை வேண்டினர். அவர்களின் உண்மையான பக்தியை மெச்சிய மாதவன் ஆடைகளைத் திருப்பித் தந்தான். இந்தப் பெண்கள், மைதில கோபிகைகள் என்று அழைக்கப்பட்டனர்.




இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பிருந்தாவனத்தில் அன்னையின் கேசம் விழுந்து சக்தி பீடம் ஆனது. அன்னை உமா தேவிக்கு என்று இங்கே தனி ஆலயம் கிடையாது. அங்குள்ள பூதேச மகாதேவ் எனும் சிவன் ஆலயத்தில் உள்ள பாதாள அறையில்தான் அன்னை காட்சியளிக்கிறாள். இந்த மகாசக்தி பீடேஸ்வரி, அங்குள்ள மக்களால் காளி என்னும் திருநாமத்தால் ஆராதிக்கப்படுகிறாள். இங்குள்ள கருவறையை அடுத்து சுமார் 50 படிக்கட்டுகளைக் கடந்து சென்றால், பாதாள அறை ஒன்றில் அன்னையை தரிசிக்கலாம்.

No comments:

Post a Comment