Thursday, November 14, 2013

உத்தம விரதம் சோமவாரம்

உத்தம விரதம் சோமவாரம்



சோமவாரம் என்பது திங்கள் கிழமையைக் குறிக்கும். "சோம' என்பது சந்திரனையும் குறிப்பதாக உள்ளது. சந்திரனுக்கு தமிழில் திங்கள், மதி, நிலவு என்ற பெயர்களும் உண்டு. ஈசனையும், சந்திரனையும் குறிக்கும் சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடும் வழக்கம் புராண வரலாற்றைப் பின்பற்றியது.

ஒருமுறை தட்சனின் சாபத்தால் ஒளி குன்றிய சந்திரனை தன் தலையில் சூட்டிக்கொண்டு சந்திரனின் பிறை தொடர்ந்து வளர அருள் செய்தார் ஈசன். இவ்வாறு ஈசன் சந்திரனை தலையில் சூட்டிக்கொண்ட தினமே சோமவாரம் திங்கள் கிழமையாகும். சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடுவது மிகவும் எளிதானது. உத்தமமான விரதங்களுள் ஒன்று சோமவார விரதம் என்று வேத நூல்கள் கூறும். அதிலும் சிவனுக்குரிய சோமவாரத்தில் கார்த்திகை மாதச் சோமவாரம் மிகவும் உத்தமம்.

கார்த்திகை சோமவார வழிபாடு பல்லாண்டுகளாக சிவாலயங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. அவ்வகையில் காஞ்சி மாவட்டம், செங்கற்பட்டு வட்டத்தில் செம்பாக்கம் கிராமத்தில் அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயில் கார்த்திகை சோமவார வழிபாட்டிற்கு உகந்த சிறப்பு தலமாகக் கருதப்படுகிறது.

திருப்போரூர், செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ள இப்புண்ணிய திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தல விருட்சம் போன்றவற்றில் திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சம்புகேசுவரர் திருத்தலத்தை ஒத்திருப்பதால் வடதிருவானைக்கா உத்தரசம்புகேசுவரம் என வழங்கப்படுகிறது. இவ்வாலயம் சென்று வழிபட்டால் பஞ்சபூதத் தலங்கள், ஐந்து சபை நடராசர் திருத்தலங்கள் மற்றும் ஆறுபடை வீட்டு முருகன் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்று ஆலயத்தின் தலபுராணம் கூறுகிறது. மேலும் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத் தடைகள், தீராப்பிணிகள் நீக்கும் தலமாகவும் உள்ளது.

இந்நிலையில் 30ஆம் ஆண்டு கார்த்திகை சோமவாரப் பெருவிழா நவ:18ஆம் தேதி திங்கட் கிழமையன்று அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயிலில் நடைபெறுகிறது. சிறப்பு அபிஷேகம், வேதபாராயணம், தேவார இன்னிசை, சமயச் சொற்பொழிவுகள் போன்ற வைபவங்களும் நடக்கின்றன. அன்றிரவு 11 மணிக்கு சம்புகேசுவரப் பெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை வழிபாட்டுடன் விழா முடிவடைகிறது.

தகவலுக்கு: 92833 26355

No comments:

Post a Comment