Friday, November 15, 2013

இன்பம் நல்கும் கார்த்திகை தீபத் திருநாள்

இன்பம் நல்கும் கார்த்திகை தீபத் திருநாள்
இல்லம் தோறும் ஒளிவிட்டு பிரகாசிக்கட்டும்





மகாபலிச் சக்கரவர்த்தி. பெயர் பெற்ற அசுர அரசன். அவன் முற்பிறவியில் எலியாகப் பிறந்திருந்தான். தான் அறியாமலேயெ தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெயைக் குடித்து வரும்போது, திரியைத் தூண்டி வந்தது அந்த எலி. இதனால், கருவறையில் சர்வ காலமும் விளக்கு பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலேயே எலியாய்ச் செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவி எடுத்தது எலி. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டு ஆணையிட்டான்.

இருள் என்பது வாழ்வின் அந்தமாகிய கடைசியைக் குறிக்கும். ஒளி என்பது, வாழ்வின் நம்பிக்கைத் துவக்கத்தைக் குறிக்கும். நம்பிக்கை ஒளி பிறக்க, இருள் அகன்று ஒளி பெருக விளக்கேற்றி வழிபாடு செய்வது மரபு. கண்கண்ட மாபெரும் விளக்கு சூரியன்தான். அதனால்தான், ""புத்தியாகிய ஒளியைத் தூண்டுபவரே'' என்று சூரிய மண்டலத்தில் வாசம் செய்யும் சூரிய நாராயணனை துதிக்கிறோம்.

அறிவு எனும் ஞானத்துக்கும், ஒளி எனும் சூரியனுக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. முதலாழ்வார்கள் மூவர் எனப்படும் பொய்கையார், பூதத்தார், பேயார் மூவரும் இறைவனைக் கண்டு கொண்டு, தங்கள் ஞானம் தூண்டப் பெற்று, இறை ஒளி அறிவினில் புகுந்த காட்சியை விவரிக்கும் போது, இதனையே வெளிப்படுத்தினர்.

அன்பே தகளியா... என்று கார்த்திகை விளக்கு ஏற்றும் தத்துவத்தை எளிமையாக விளக்குகிறார் பொய்கையாழ்வார். அன்பே விளக்காக, இறைவனைக் காணும் ஆர்வமே நெய்யாகத் தூண்டப் பெற்று, இறைச் சிந்தனையையே திரியாக்கி, எலும்பும் உருகும் அன்பு மிகுந்த ஞானத்தால் நாராயணனுக்கு விளக்கு ஏற்றினேன் என்கிறார் அவர்.

வையம் தகளியா... என்று இந்த உலகை விளக்காக்கி, கடலை அதில் இடும் நெய்யாக்கி, ஒளிரும் கதிரவனை விளக்குச் சுடராக்கி, இடர் என்னும் துன்பக் கடல் நீங்குவதற்காக சொல்மாலை சூட்டித் துதித்தேன் என்கிறார் பூதத்தாழ்வார். இவர்கள் இருவரும் விளக்கேற்ற, அந்த விளக்கொளியில் ""திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்'' என்று பெருமானின் தரிசனம் கிட்டுவதை பேயாழ்வார் பாடி வைத்தார்.

கார்த்திகை தீபம் என்றாலே மக்கள் மனத்தில் முதலில் எழுவது திருவண்ணாமலையே. அக்னி தலமான இங்கே மலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளதாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் எனப் பெருமை பெற்ற திருவண்ணாமலை, ஜோதிப் பிழம்பாய் இறைவன் நின்று லீலை நடத்திய இடமே என்பர். அந்த நாளாகிய கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு இறைவனை அனைவரும் அக்னிஸ்வரூபனாக வழிபடுகின்றனர்.

கார்த்திகையில், காசியிலும், ஹரித்துவாரிலும் மாலை நேரம் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் உள்ளது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடும் கங்கா ஆரத்தி முக்கியமான வழிபாடாகத் திகழ்கிறது. கார்த்திகை தீபம் கண்டு களித்தவர் கண்களே கண்கள். மற்றதெல்லாம் வெறும் புண்கள் என்று கார்த்திகை தீபத்தை சிறப்பிப்பார்கள். நமிநந்தி அடிகள், கலிய நாயனார், கணம்பில்ல நாயனார் உள்ளிட்டோர் திருவிளக்கு ஏற்றி வைத்து சிவத்தொண்டு புரிந்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது.

கார்த்திகை தீப வழிபாடு மட்டுமின்றி, இதனை ஒரு விரதமாகவே கொண்டாடுவர். திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டை கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான். மாணிக்கவாசகர், ""சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே'' என்று சிவபெருமானைக் குறித்துப் பாடினார். அண்ணாமலை இறைவனே சூழ் ஒளி விளக்காகத் தோன்றினானாம்.

ஐந்து முக தீபம் ஏன்? குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் லட்சுமிகரமாக பொலிவுடன் இருக்கும் என்பர். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றுக்கு ஒப்பிட்டுக் கூறுவர். இதனாலேயே பஞ்ச முக தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு செய்வது அதிகரித்தது.

தீபத்துக்கு, அகல், எண்ணெய், திரி, சுடர் என நான்கும் சேர வேண்டும். இதனை மனதில் கொண்டே, விளக்கேற்றும் பாவனையில் பாசுரம் பாடினர் பொய்கையாரும், பூதத்தாழ்வாரும். இவை அறம், பொருள், இன்பம், வீடு எனும் திருக்குறள் நெறியைக் காட்டும். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவற்றையும் நமக்கு எடுத்துக் காட்டும். இந்த ஞானமே தீப ஒளியின் தத்துவமாகத் திகழ்கிறது.

அடிமுடி தேடிய கதை: ஒரு முறை பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர். ஆதி - அந்தம் அற்று தீப வடிவாய்த் திகழும் ஜோதிஸ்வரூபனை திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். அதுவே லிங்கோத்பவ மூர்த்தியாக வழிபாடு தொடரக் காரணமானது.

கார்த்திகை தீபத் திருநாள் அன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடும் மரபும் தொடர்ந்தது.

கார்த்திகை பௌர்ணமியில்தான் அன்னை பார்வதி, சிவபெருமானின் இடப்பாகம் பெற்று அமர்ந்தாகவும், சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபமான அர்த்தநாரீஸ்வரராக இறைவன் அன்றைய தினம் திகழ்வதாகவும் கூறுவர். இப்போதும் கூட, தீபதரிசனத்துக்கு முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக் கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்ற பின்னே, அதிர்வேட்டுகள் முழங்க அண்ணாமலையின் மலைமுகட்டில் தீபம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.

தீபம் ஏற்றி வழிபட முடியாத இடங்களில் பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பனை கொளுத்துவர். சொக்கப்பனாகிய சிவபெருமானை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆனதாம்.

No comments:

Post a Comment