Wednesday, November 27, 2013

தினமும் ஒரு திருப்புகழ் - காட்சி பெற

தினமும் ஒரு திருப்புகழ் - காட்சி பெற  -  நாள் (17)

ராகம்: ஹம்சத்வனி / ஹிந்தோளம்                     தாளம் :- கண்டசாபு அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்தத மும்வந்துகண் டரிவையர்க்
கன்புரு குசங்கதந் தவிரமுக் ...... குணமாள

அந்திப கலென்றிரண் டையுமொழித்
திந்திரி யசஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெ ருகுந்தடந் தெளிதரத் ...... தணியாத

சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்

குன்றிடி யஅம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான

சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.

கருத்துரை:-
 யமன் வருகின்ற தினமானது பின் தள்ளிப் போக,  எப்போதும்
வருவதும் போவதும் காண்பதுமாய், பெண்களிடம் அன்பு காட்டி 
உருகக்கூடிய தொடர்பு விட்டு நீங்க,  சத்துவம், ராஜதம், தாமதம் 
என்ற மூன்று குணங்களும் அழித்து,  இரவு (ஆன்மா செயலற்றுக் 
கிடக்கும் நிலை), பகல் (ஆன்மா உழலும் நிலை) என்னும் இரண்டு நிலைகளையும் ஒழித்து,  ஐம்பொறிகளால் வரும் துன்பங்களை 
அறுத்து,

 தாமரை போன்ற உன் திருவடிகளின் பெருமையைக் கவிபாடி,  திருச்செந்தூரைக் கருதி உணர்ந்து ஞானம் பிறக்க,  கந்தக் கடவுளாம் உன்னைஅறிந்து அறிந்து அந்த அறிவின் வழியே  சென்று நுழைந்து 
முடிகின்ற இடம் தெளிவு பெற,

அடங்காத மனமும் நெகிழ்ந்து நெகிழ்ந்து,  பேச்சும் நின்று, எனது 
செயலும் அடியோடு அற்றுப் போக,  உண்மையான அறிவு வர, 
எப்பொழுது உன்னைக் காணும் பாக்கியத்தை யான் பெறுவேனோ?

 மலர்க் கொத்துக்கள் கிடக்கும் பாதங்களே சரணம் சரணம் என்று
கும்பிட்ட இந்திரன் தனது ஊராகிய அமராவதியை மீண்டும் பெற,
யானை வளர்த்த மகள் தேவயானையின் மார்பகம் உன் 
திருப்புயங்களைப் பெற,  அரக்கர்கள் யாவரும் மாண்டழிய, 
 கிரெளஞ்ச மலை பொடிபட்டு விழ, அழகிய பொன்னாலான 
அரைஞாண் கிண்கிணி கிணின் கிணின் கிணின் என்று ஒலிக்க,  குண்டலங்கள் அசைந்து சிறிய காதணிகளில் ஒளிவீச, தந்தன 
தனந்தனந் தன என்ற ஓசையோடு செவ்விய சிறு சதங்கைகள் 
சிற்றொலி செய்திட, மணித் தண்டைகள் கலின்கலின் கலின் 
என்று சப்திக்க, அழகிய சங்கரி மனம் குழைந்து உருகி நிற்க, 
முத்தம் தர வரும் செழுவிய தளர்ந்த நடைப் பிள்ளையே,
இந்த வையமெல்லாம் தொழும் சரவணப் பெருமாளே.

தொடர்ந்து வரும் திருப்புகழ், ...................தொடர்ந்து வாருங்கள்

No comments:

Post a Comment