Saturday, November 23, 2013

நாக தோஷம் நீக்கும் வடதிருநாகேஸ்வரம்

நாக தோஷம் நீக்கும் வடதிருநாகேஸ்வரம்அநபாய சோழனின் ஆளுகைக்குள் இருந்தது தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதி. சைவம் தழைத்தோங்கிய அந்தக் காலத்தில், அவனது அரசவையில் அமைச்சராகப் பணியாற்றினார் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர். அவர் மகன் அருண்மொழிராம தேவர். சிறு வயதிலேயே புலமை கைவரப் பெற்ற அவர், குலத்தின் பெயரால் சேக்கிழார் என்ற பெயரால் அறியப்பட்டார். சேக்கிழாரின் புலமையை உணர்ந்த சோழன், அவரைத் தன் அரசவையில் அமைச்சராக்கிக் கொண்டான்.

நிர்வாகத்திறமை மிக்கிருந்த அவரது செயல்பாடு கண்டு, அவருக்கு உத்தமசோழ பல்லவன் என்ற சிறப்புப் பெயரையும் சூட்டி அழகு பார்த்தான் மன்னன். சிவபக்தியில் திளைத்திருந்த சேக்கிழார்தான் பின்னாளில் சிவனடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை புராணமாக்கி திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணத்தை எழுதி வெளியிட்டார்.

ஒரு முறை, கும்பகோணத்துக்கு அருகில் நாகேஸ்வர ஸ்வாமி குடிகொண்டுள்ள ராகு பரிகாரத் தலமான திருநாகேஸ்வரம் சென்றார் சேக்கிழார். சிவபெருமானை தரிசித்த போது, தன்னையே மறந்தார். அவருள் பக்தி உணர்வு பெருக்கெடுத்தது. அன்பின் மிகுதியால் திருநாகேஸ்வரரிடம் திருத் தெண்டம் சமர்ப்பித்த சேக்கிழார், அவரை தினமும் கண்டு தொழ ஆசை கொண்டார். ஆனால், அவர் இருக்கும் பகுதியில் இருந்து தினமும் சென்று வர இயலாது போனது. எனவே திருநாகேஸ்வரரைப் போல், தம் ஊரிலேயே கோவில் ஒன்று கட்ட வேண்டும் என நினைத்தார். திருநாகேஸ்வர ஸ்வாமியின் அமைப்பிலேயே லிங்கம் செய்து, தனது ஊரில் பிரதிஷ்டையும் செய்து கோயிலை எழுப்பினார். அந்தப் பெருமானுக்கு திருநாகேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டி, பொழுதெல்லாம் வழிபடத் தொடங்கினார். இந்தத் தலமும் வடதிருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படலானது.

சேக்கிழாரின் ஊரான குன்றத்தூர், சென்னையின் போரூர் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. குன்றத்தூர் பேருந்து நிலையத்தை ஒட்டி தேரடியும் அதன் அருகில் இருந்து உள்ளே சென்றால் கோவில் வீதியையும் அடையலாம். கிராமத்துக்கே உரிய அழகுடன் திகழும் நீளமான கோவில் தெரு. 5 நிலை ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால், உள்ளே அனுக்ஞை விநாயகர். முன் மண்டபம் கடந்து உள்ளே செல்கிறோம். இங்கே மூலவர் திருநாகேஸ்வரராக வணங்கப்படுகிறார். அழகிய தோற்றம். லிங்கத் திருமேனியின் மீது நாகம் குடை பிடிப்பது போன்ற தோற்றம்.

அருகே வலப்புறம் அன்னை காமாட்சி தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் காட்சி தருகிறார். எதிரே சிம்ம வாகனம். அம்பிகைக்கு தை வெள்ளிக் கிழமைகளில் பன்னீர் அபிஷேகம் சிறப்பாகச் செய்கின்றனர். செண்பக மரம் தல விருட்சமாகத் திகழ்கிறது. தல தீர்த்தம் சூரிய புஷ்கரிணி.

சந்நிதியைச் சுற்றி வலம் வரும்போது, பிராகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர், நாக வடிவில் சத்யநாராயணர், நாகேந்திரர், நாகநாதேஸ்வரர், நாகத்தில் நர்த்தன கிருஷ்ணர் என நாகர்களுடன் தொடர்புடைய வடிவில் தரிசிக்கிறோம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, ஸ்ரீவிஷ்ணு ஆகியோரையும், சந்நிதி பின்னே காசி விஸ்வநாதர், ஸ்ரீலட்சுமி, சரஸ்வதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தொடர்ந்து சுற்றுப் பிராகார வலத்தில், கற்பக விநாயகர், சனீஸ்வரர் ஆகியோரையும் தரிசிக்கிறோம்.

இங்கே ஒருமுறை சேக்கிழாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகேஸ்வர லிங்க விக்ரஹம் லேசாக சேதமுற்றதாம். எனவே, அந்த லிங்கத்தை அகற்றிவிட்டு வேறு லிங்கம் செய்து வழிபட வேண்டும் என்று கூறப்பட்டதாம். இதை அடுத்து, அந்த லிங்கத்தை இங்குள்ள சூரிய புஷ்கரிணி தீர்த்தத்தில் போட்டுவிட்டு, புதிதாக ஒரு லிங்கம் செய்து, கருவறையில் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆனால், அன்றிரவே பக்தரின் கனவில் தோன்றிய சிவபெருமான், கருவறையில் பழைய லிங்கத் திருமேனியையே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறினாராம். இதை அடுத்து, தீர்த்தத்தில் இருந்து அந்த லிங்கம் எடுக்கப்பட்டு, மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். புதிதாக செய்யப்பட்ட லிங்கம், சந்நிதி பின்புறத்தில், அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்தோடு பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருக்கார்த்திகை நாளில் பக்தர்கள் இந்தத் திருமேனி முன் விளக்கேற்றி வழிபடுகின்றனர். இவரையும் மூலவராகவே பாவித்து வணங்குகின்றனர்.

பிராகாரத்தில் சேக்கிழாருக்கு, தனி சந்நிதி உள்ளது. சிவபெருமானை தரிசித்தவண்ணம் மேற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் இவர், வலது கையில் சின்முத்திரையுடனும், இடது கையில் ஏடும் வைத்துள்ளார். பூச நட்சத்திர நாட்களில் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. வைகாசி பூசத்தை ஒட்டி 10 நாட்கள் இவருக்கு குருபூஜை விழா நடக்கிறது. அந்த நாளில், காலை சேக்கிழார் உற்சவமூர்த்தியை தேரடிக்கு எடுத்துச் செல்வர். பின்னர், சேக்கிழாரை கோயிலுக்குள் அழைத்து வந்து, கருவறை அழைத்துச் சென்று நாகேஸ்வரரை தரிசிக்க வைப்பர். அன்று இரவு சேக்கிழார் திருவீதி உலா சென்று, மறுநாள் காலை கோயிலுக்குத் திரும்புவார். அன்று இரவு முழுதும் கோயில் திறந்திருக்கும். இங்கே சேக்கிழாருக்கு சிவபெருமான் தரிசனம் தரும் நிகழ்வு சிறப்பான ஒன்று.

திருவிழா: சித்திரை பிரம்மோற்ஸவம், வைகாசியில் சேக்கிழார் குருபூஜை, புரட்டாசியில் நிறைமணிக்காட்சி, தைப் பூசத்தில் தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம், மாசிமகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் இங்கே பிரசித்தம். சித்ரா பெüர்ணமி பிரம்மோற்ஸவ எட்டாம் நாளில் சிவபெருமான், அடியாருக்குக் காட்சி தரும் வைபவத்தின் போது, சுவாமிக்கு முன்பு பெருமானை நோக்கியபடிஒரு சப்பரத்தில் நால்வர், சேக்கிழார் ஆகியோர் உலா வருவர். சித்ரா பெüர்ணமியில் சிவபெருமான், அம்பிகை திருமண வைபவம் நடக்கும்.

பிரார்த்தனை: ராகு-கேது தோஷம் உள்ளிட்ட நாக தோஷ நிவர்த்திக்காக இங்கே பக்தர்கள் பெருமளவில் வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.

நாக தோஷம் நீக்கும் சிவபெருமானாக இங்கே திருநாகேஸ்வரர் திகழ்கிறார். இங்கே பெருமானுக்கு தினமும் காலை 6.30, 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாலபிஷேகம் நடைபெறுகின்றது. திருநாகேஸ்வரத்தில் நடைபெறுவது போன்ற பூஜை முறைகள். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு, ராகு காலத்தில் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து தோஷ நிவர்த்திக்காக வேண்டிக் கொள்கிறார்கள்.

சந்நிதி தரிசன நேரம்: காலை 6.30- 12 மணி வரை, மாலை 5- 9 வரை

தகவலுக்கு: 044-24780436

No comments:

Post a Comment