Friday, November 22, 2013

குராயூர் அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்



குறைகளை அகற்றும் குராயூர் கோபாலன்





மதுரை - விருதுநகர் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது கள்ளிக்குடி. இங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது குராயூர். இங்கு உள்ளது பழைமையான அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்.

குராயூர், மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வட்டத்தில் உள்ள அழகான ஊர். "குரா' என்ற மலர் இங்கு அதிகமாகக் கிடைத்ததால் குராயூர் என்ற பெயர் ஏற்பட்டது. மதுரை நகர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த இந்த உபகோயிலில் ஸ்ரீவேணுகோபாலசுவாமி சேவா டிரஸ்ட் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு மகாசம்ப்ரோக்ஷண வைபவம் இன்று (நவ: 22) காலை 8.30 மணியளவில் நடைபெறுகிறது.


தென்காசியை தலைநகராகக் கொண்டு 14ஆம் நூற்றாண்டில் ஆண்ட வீரபாண்டியன் என்ற மன்னன் மதுரைக்கு அடிக்கடி வந்து மீனாட்சியம்மனையும் சொக்கநாதரையும் தரிசிப்பது வழக்கம். அம்மன்னனுக்கு தன் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருமாலுக்கு என்று ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது.

ஒருநாள் மதுரையில் அம்மையப்பனை தரிசித்துத் திரும்பும்போது குராமரங்கள் சூழ்ந்த ஒரு பகுதி வழியாக வந்தான். அப்போது காற்றில் வேணுகானம் தவழ்ந்து வந்தது. எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் தவித்த மன்னன், இதுவும் நாராயணன் சித்தம் என்று கருதி, "பெருமாளுக்கு ஓர் ஆலயம் எழுப்பாத குறையைத் தீர்த்து வைக்க இடம் இதுவாகத்தான் இருக்கும்' என்று தீர்மானித்தான்.

அங்கு அழகிய ஆலயம் அமைத்து ஸ்ரீருக்மிணி சத்யபாமா சகிதம் ஸ்ரீவேணுகோபாலனை பிரதிஷ்டை செய்தான். வைணவ கிரந்தமான நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் குராமலரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஒரு காலத்தில் இந்த மலர்கள் நிறைந்திருந்த இப்பகுதியில் பெருமாள் ஆலயம் அமைந்தது மிகவும் சாந்நித்யமாகக் கருதப்படுகிறது. மேலும் முசுகுந்த சக்கரவர்த்தி என்ற மன்னனால் இங்கே பெருமாள் ஆராதனம் செய்யப்பட்டதாக செவிவழி செய்தி உண்டு.

கருவறையில் புல்லாங்குழல் இசைக்கும் கோலத்தில் பாமா - ருக்மிணி சமேதராக வேணுகோபால சுவாமி எழுந்தருள்கிறார். கண்களுக்கு தெவிட்டாத சேவை. இதைத் தவிர ஆழ்வார்கள், சிறிய திருவடி, பெரிய திருவடி, ஆசார்ய பெருமக்கள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு. பெருமாளுக்கு சனிக்கிழமை தோறும் காலையில் திருமஞ்சனமும், மாலையில் பூஜையும் நடக்கின்றன. தன்னை சேவிப்பவர்களின் அனைத்துக் குறைகளையும் தீர்க்கின்றான் இந்த கோபாலன்.

ஒரு காலத்தில் சான்றோர்களும் ஆன்றோர்களும் வசித்த இந்த ஊரில் அனைத்து உற்சவாதிகளும் நடைபெற்று வந்தன. காலப்போக்கில் ஆலயம் சிதிலமடைந்து பூஜை, வழிபாட்டு முறைகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆதரவுடன் ஊர்மக்களும்,பக்தர்களும் ஆலயத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் மூலஸ்தானம் விமானம் சீர்படுத்துதல், கொடிமரம் புதுப்பித்தல், தரைத்தளம் அமைத்தல் எனப் பல்வேறு திருப்பணிகளை நிறைவு செய்துள்ளனர். இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் மீதம் உள்ள நிலையில் மஹாசம்ப்ரோக்ஷணம் நடக்கிறது.

அமைவிடம்: மதுரையிலிருந்து கள்ளிக்குடிக்கு பேருந்து வசதி உண்டு. கள்ளிக்குடியிலிருந்து குராயூருக்கு ஆட்டோவில் செல்லலாம்.

தகவலுக்கு: 98432 93141

No comments:

Post a Comment