Thursday, November 7, 2013

51 சக்தி பீடம்: காஷ்மீர் மகாமாயா



51 சக்தி பீடம்: காஷ்மீர் மகாமாயா



காஷ்மீர் பள்ளத்தாக்கின், வடகிழக்கில் அமைந்துள்ளது மகாமாயா தேவியின் ஆலயம். 51 சக்தி பீடங்களில் 13வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் கழுத்து விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த பீடத்தை அலங்கரிக்கும் அம்பிகை மகாமாயா. தலத்தின் காவல் தெய்வமாகத் திகழும் பைரவர் த்ரிசந்தேஷ்வரர்.

இயற்கையே வடித்த - லிங்க உருவில் காட்சி தரும் அன்னையை, காஷ்மீர் மாநிலத்திலுள்ள அமர்நாத் பெருங்குகையில் காணலாம். சிவலிங்கத்திலேயே சக்தியின் அம்சம் உண்டு என்பர். உதாரணமாக குடமுழுக்கு வைபவத்தில் முக்கிய கும்பத்துக்கு அருகில் சிறிய கும்பத்தில் சிவப்புத் துணி கட்டி வைப்பர். இது சக்திக்கானது. இதுபோலவே அமர்நாத் பெருமான் அருகிலேயே தேவி ரூபமாக பாவித்து வணங்குகின்றனர். அன்னையின் அங்கம் விழுந்து இது மகாசக்தி பீடம் ஆனது. அமர்நாத் குகையில் சிவன் மட்டுமன்று, தேவியும் நீர் கொண்ட லிங்கங்களாகத் திகழ்கிறார்கள். இன்றைய காஷ்மீர் பள்ளத்தாக்கு முன்னர் பெருங்கடல் போன்ற ஓர் ஏரியாகக் காணப்பட்டதாம். தேவியின் அங்கம் இந்த ஏரியில் விழுந்ததால் "ஸதி சரஸ்' என அது அழைக்கப்பட்டது.

ஒரு முறை உமையுடன் மகேஸ்வரன் உலா வரும்போது இங்குள்ள குகையில் அவர்கள் இருவரும் தற்செயலாக தங்க நேர்ந்தது. அப்போது, அழிவின்மையின் ரகசியத்தைத் தனக்கு விளக்கும்படி ஈசனிடம் வேண்டினாள் அன்னை. அவரும் அந்த ரகசியத்தை அன்னைக்கு விளக்கினார். இதனால் அங்கிருந்த ஜடப் பொருள்கள் யாவும் சிரஞ்சீவித்வம் பெற்றனவாம். அப்போது அங்குள்ள குகையின் மேற்பகுதியில் குடியிருந்த ஜோடிப் புறாக்கள் இந்த ரகசியத்தைக் கேட்க நேர்ந்ததாகவும், அவை அழிவுறாமல் இன்று வரை வாழ்ந்து கொணடிருப்பதாகவும் கூறுகிறார்கள். இவ்வளவு உயரத்தில், பனிமூடிய இடத்தில் பறவைகள் வாழ்வது கடினம். ஆனால் இங்கே வசித்து வரும் புறாக்களை பக்தர்கள் ஆச்சர்யத்துடனும், பக்தியுடனும் வணங்குகிறார்கள்.

இந்துக்களின் புனிதத் தலங்களில் சிகரமாக விளங்கும் தெய்வீக மணம் கமழும் குகை, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வடகிழக்கில் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ளது. அமர்நாத் குகைக் கூரையின் உட்புறத்திலிருந்து சொட்டுச் சொட்டாக விழும் நீர் குகையின் தரையில் விழுந்தவுடன் பனிக்கட்டியாக மாறுகிறது. இப்பனிக்கட்டி முழு லிங்க உருவம் பெற சுமார் 15 நாட்கள் ஆகின்றன. அதாவது சுக்லபட்ச பிரதமையில் உருவெடுக்கும் அமர்நாதர் திருவுருவம், முழுமையாக பௌர்ணமி அன்று கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. இதன் பின் கிருஷ்ண பட்ச பிரதமையில் உருக ஆரம்பிக்கும் இந்தப் பனி லிங்கம், அமாவாசை அன்று மறைந்து விடும். இவ்வளவு சிறப்பு மிக்க அமரேஸ்வர் - அமரேஸ்வரி தரிசனம் கண்டால் மோட்ச பலன் பெறலாம்.

No comments:

Post a Comment