Thursday, November 7, 2013

பதவி உயர்வுக்கு வழிகாட்டுபவர்

பதவி உயர்வுக்கு வழிகாட்டுபவர்

ஸ்ரீவல்வில்ராமன் திருக்கோயில் அது திரேதாயுகம். சக்ரவர்த்தித் திருமகன் ராமனின் மனைவி சீதையைக் கவர்ந்து சென்றான் இலங்கை அரக்கர் வேந்தன் ராவணன். அவன் தென்பகுதிக் காட்டைக் கடந்து சென்றபோது, அவனுக்குத் தடைபோட்டபடி துரத்தியது கழுகு வேந்தன் ஜடாயு. இருவருக்கும் நிகழ்ந்த சண்டையின் முடிவில், கழுகின் சிறகை வெட்டி வீழ்த்தினான் ராவணன். கீழே விழுந்த ஜடாயு, குற்றுயிரும் குலையுயிருமாக ராம நாமத்தைச் சொல்லி முனகியபடி காத்திருந்தது.

அதேநேரம், சீதையைத் தேடி தென்பகுதிக்கு வந்த ராமனுக்கு இந்த முனகல் சத்தம் கேட்டது. அப்போது ஜடாயுவை சிதைந்த கோலத்தில் கண்டனர் ராமனும் லட்சுமணனும். ராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் தகவலைக் கூறி, அதைச் சொல்வதற்காகவே தாம் காத்திருந்ததாகக் கூறி உயிரை விட்டது ஜடாயு. இதனால் மிகவும் துயரம் அடைந்த ராம லட்சுமணர்கள் ஜடாயுவின் இறுதிச் சடங்கை நிறைவேற்ற எண்ணினர். இறுதிச் சடங்கை நிறைவேற்ற வேண்டுமாயின் தம்பதியாக இருந்து செய்ய வேண்டும் என்பதால், சீதை உடன் இல்லாத நிலையை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டார் ஸ்ரீராமர். மனதளவில் சீதையை உடன் இருத்தி ஈமக்கடன் செய்ய முயன்றார். ஆனால் அவருடைய நிலையை எண்ணி இரங்கினார் பூமிப் பிராட்டி. சீதாதேவி தன் அம்சம்தானே என்பதால், தாமே அருகில் இருந்து ஈமக் கடன் நிறைவேறத் துணை புரிந்தாள் பூமிப் பிராட்டி. அதனால் ஜடாயுவின் ஈமக் கடன்கள் நிறைவேறின. இந்த நிகழ்வினை நினைவுறுத்தும் வகையில் இங்கே தலம் அமைந்தது.

காஞ்சிபுரத்தருகே திருப்புட்குழி என்ற தலத்திலும் பெருமான் தம் மடியில் ஜடாயுவைக் கிடத்தி ஈமக்கடன் நிறைவேற்றிய கோலம் கொண்டார். இங்கே ராமபிரான் சயனக் கோலம் கொண்டது சிறப்பு. புள் எனும் பறவையாகிய ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த தலம் என்பதால், புள்ளங்குடி என்றும், திருப்புள்ளம் பூதங்குடி என்றும் ஆனது இந்தத் தலம். இது பூதபுரி úக்ஷத்ரம் என்றும் பெயர் கொண்டது.

வல்வில் ராமன் என்ற பெயரில் பெருமான் இங்கே காட்சியளிக்கிறார். எப்போதும் உடன் இருக்கும் சீதாப்பிராட்டி உடன் இல்லை. கையில் தாம் வைத்திருக்கும் கோதண்ட வில்லே துணையாகப் பிடித்து தம் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தை ஒருவாறு போக்கிக் கொண்டார் பெருமான். எனவே இவர் இங்கே வல் வில் ராமன் எனப்பட்டார். இருப்பினும், ஜடாயுவுக்கு இறுதிக் கடன் முடிக்கும்போது, பூமிப் பிராட்டியே உடன் வந்தமர்ந்து, கடன் நிறைவேற்றத் துணைபுரிந்தார்.

கிருத்ர ராஜன் என்ற அரசன். இதயசுத்தியுடன் மனத்திலும் அறிவிலும் ஸ்ரீமந் நாராயணனை நினைந்து தவம் புரிந்தான். அவனது தவ வலிவுக்கு மெச்சிய ராமபிரான் இங்கே புஜங்க சயனத்தில் கிருத்ர ராஜனுக்கு காட்சி கொடுத்தார். அவனால் இந்தத் தலத்தின் தீர்த்தம் சீரமைக்கப்பட்டது. எனவே அவன் பெயரில் கிருத்ர தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. இங்கே பெருமான் தனக்கே பிரத்யட்சமாக தரிசனம் கொடுத்துக் கொண்டார் என்பது சிறப்பு. ஸ்ரீராமனாக மனித அவதாரம் எடுத்தாலும், ஸ்ரீமந் நாராயணன் இங்கே அவருக்கு மூல அவதார ரூபத்தைக் காட்டிக் கொடுத்தாராம். ஏற்கெனவே பரசுராமனை ஓர் இடத்தில் சந்தித்தார் ஸ்ரீராமன். பரசுராமனின் கர்வத்தை பங்கம் செய்தவர், இரு அவதாரங்களுமாய் சந்தித்ததற்கு சாட்சியானர்.

பரசுராம அவதாரத்தில், தந்தையாரின் வார்த்தைக்கு செவிமடுத்து, தாயைக் கொன்றார் ஆனாலும், தந்தையிடம் தாயை உயிர்ப்பித்துத் தரும்படி வரம் கேட்டுப் பெற்றார். அவ்வாறு, இந்த அவதாரத்தில், தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பளிக்கும் மகனாகத் தம்மை வெளிப்படுத்தினார் ஸ்ரீராமர்.

ராமன் தான் காட்டில் இருந்தபடியால் தம் தந்தையான ராஜா தசரதனின் ஈமச் சடங்குகளைச் செய்ய இயலாமல் போனது. ஆனால், தம் தந்தையாரின் இடத்தில் ஜடாயுவை வைத்து, தம் தந்தைக்குச் செய்வது போலே இங்கு ஜடாயுவின் ஈமக் கடனை நிறைவேற்றினார். ஜடாயுவின் இறுதிச் சடங்கு இங்கே புன்னை மரத்தடியில் நடந்ததாம்.

பரசுராமனும் ஸ்ரீராமனும் வெவ்வேறு ரூபமாயினும், ஸ்ரீமந் நாராயணனின் அவதாரம் என ஒரே சக்தியாய் பரிமாறிக் கொண்டதுபோல், இங்கே கிருத்ரராஜன் ஸ்ரீமந் நாராயணனை வேண்டி தவம் இருந்தபோதும், பெருமானின் அவதாரமான ஸ்ரீராமனே கையில் சங்கொடு சக்கரம் ஏந்தி பூமிப்பிராட்டியார் உடனிருக்க, தாமே நாராயணன் எனக் கூறும் வண்ணம் சயனக் கோலத்தில் காட்சி தந்தார்.

அதுபோல் ஸ்ரீமந் நாராயணனே, ஸ்ரீராமபிரானுக்கும், சங்கு - சக்கரம் ஏந்தி, நான்கு கரங்களுடன் சதுர்புஜராக பூமிப் பிராட்டியாருடன் காட்சி தந்தாராம். எனவே, இங்கே பெருமாள், ஸ்ரீராமனுக்கும் பிரத்யட்சம் எனப்படுகிறது. இங்கே தாயார் பொற்றாமரையாள். ஹேமாம்புஜவல்லி என்ற திருநாமங்களுடன் காட்சி தருகிறார். தாயாருக்கு தனி சந்நிதி உள்ளது. மூலவர் வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன். கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இந்தத் தலம், பூதபுரி என்றும், திருப்புள்ளம்பூதங்குடி என்றும் அழைக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசித் திருவிழா இங்கே சிறப்பு. பொதுவாக ஸ்ரீராமபிரானை நின்ற கோலத்தில் நாம் தரிசித்து மகிழலாம். திருப்புல்லாணி தலத்தில் தர்ப்ப சயனத்தில் காட்சி தரும் ஸ்ரீராமபிரானைப் போல் இங்கே, புஜங்க சயனக் கோலத்தில் ஸ்ரீராம பிரான் அருள்பாலிக்கிறார். சோழர்களால் கட்டப்பட்டது இந்தக் கோயில்.

இங்கே பெருமான் திருமங்கை மன்னருக்கும் காட்சியளித்தார். சங்கு, சக்கரத்துடன் சக்ரவர்த்தித் திருமகனாக, ஸ்ரீராமபிரான் காட்சி அளித்தார். திருமங்கையாழ்வார் இங்கே வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ பெருமான் இருப்பதாகக் கருதி, கோயிலையே கவனிக்காமல் சென்றாராம். அப்போது பெரிய ஒளி தோன்றி, அதிலிருந்து சங்கு சக்ர தாரியாக ஸ்ரீராமன் காட்சியளித்தார். இதைக் கண்ட திருமங்கை மன்னன், தாம் அறிய வேண்டியதை அறியாமல், எங்கோ சென்றேனே என வருந்தி, இத்தலப் பெருமான் மீது 10 பாசுரங்களைப் பாடினார்.

அமைவிடம்: கும்பகோணத் துக்கு அருகில். சுவாமி மலையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு.

திறக்கும் நேரம்: காலை 7.30- 12 வரை, மாலை 4.30- 7.30 வரை.

பிரார்த்தனை: புதனுக்குரிய பரிகாரத் தலம். இங்கே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உகந்தது. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு நடத்தி, நல்லறம் காண்கின்றனர். பதவி உயர்வு வேண்டி, இங்கே பிராகாரத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர்.