Thursday, November 21, 2013

சுசீந்திரம் நாராயணி - 51 சக்தி பீடங்களில் 7வது பீடமாக விளங்கும்

சுசீந்திரம் நாராயணி



தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது நாராயணி தேவியின் ஆலயம். 51 சக்தி பீடங்களில் 7வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் மேல் பற்கள் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

குமரி என்றாலே அம்மாவட்டத்தின் தென்கோடியில் வீற்றிருக்கும் பராசக்தி கன்னியாகுமரி அன்னையின் தோற்றமே மனதில் சட்டென்று தோன்றும். இங்கே தேவியின் மேல் பற்கள் விழுந்த இடம் என்பதால் ப்ருகு பீடம் என்று அழைக்கப்படுகிறது. ப்ருகு எனும் இம்மகாசக்தி பீடத்தை சுசி பீடம் என்றும் கூறுவர்.

இங்கு அருள் பாலிக்கும் அன்னை நாராயணி. தல பைரவர் ஸம்ஹாரர். இம்மாவட்டத்தில் மகாசக்தி பீடத்தை அலங்கரிக்கும் அன்னையின் நாமம் முன்னுதித்த நங்கை. சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத் தெப்பக்குளத்துக்கு அருகில் உள்ளது.

சுசீந்திரம் தல வரலாற்றில் காணப்படும் புராணக் கதைகளுள் ஒன்று...

கெளதம முனிவரின் மனைவி அகலிகை. அவள் வடிவழகில் மையலுற்ற தேவேந்திரன், அவளை அடைய விரும்பினான். ஒரு நாள் நள்ளிரவில் சேவல் உருக் கொண்டு, கெüதம முனிவரின் ஆசிரமத்தின் அருகே வந்து கூவினான். பொழுது விடிந்துவிட்டதாகக் கருதிய கெüதம முனிவர், நீராட ஆற்றை நோக்கிச் சென்றார். அப்போது இந்திரன், முனிவரின் உருக் கொண்டு, ஆசிரமத்துக்குள் நுழைந்து அகலிகையைச் சேர்ந்தான். ஆற்றங்கரை அடைந்த முனிவர், பொழுது விடியாதது உணர்ந்து, ஞானதிருஷ்டியால் நடந்தவற்றை அறிந்தார். உடனே ஆசிரமத்துக்குத் திரும்பினார். முனிவரின் வரவால் அதிர்ச்சியுற்ற இந்திரன், சட்டென பூனை உரு எடுத்துத் தப்பிச் செல்ல முயன்றான். கோபமுற்ற முனிவர், இந்திரனின் உடல் முழுவதும் கண்களாகும்படி சாபமிட்டார்.

இச் செயலுக்கு உடந்தையாக இருந்த அகலிகையை கல்லாக மாறும்படி சபித்தார். பிற்காலத்தில் ராமன் திருவடிபட்டு சாபவிமோசனம் ஏற்படும் என்று கெüதமர் சாப விமோசனம் கூறினார். அவ்வாறே அகலிகை சாப விமோசனம் பெற்றாள்.

கெளதம முனிவரின் சாபத்தால் உடல் முழுவதும் கண்களைப் பெற்ற இந்திரன், பல்வேறு இன்னல்களைச் சந்தித்தான். நாரதர் அவன் முன் தோன்றி உரிய பரிகாரத்தை விவரித்தார். அதன்படி, இந்திரன் சுசீந்திரத்தை அடைந்து, முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலை அடுத்த பொய்கையில் தினமும் புனித நீராடி, அன்னையை ஒரு மண்டலம் வழிபட்டான். இதன் பின் மும்மூர்த்தியையும் ஒரே லிங்கமாக நிலைநிறுத்தி, தாணுமாலயனைப் பூரண பக்தியோடு பூசை செய்து, முடிவில் சாப விமோசனம் பெற்றான்.

இங்கே சித்திரை, மார்கழி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் முன்னுதித்த நங்கையே முதன்மைப்படுத்தப்பட்டு, வீதியுலா வரும் காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பூரத்தை அன்னை அவதரித்த புனித தினமாகக் கருதுவதால், அன்று முன்னுதித்த நங்கைக்குச் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பொளர்ணமி அன்றும் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் முன்னுதித்த நங்கைக்குப் பலவித விசேஷ அலங்காரங்களும் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. முன்னுதித்த நங்கையை, நாராயணி அன்னையாக வழிபட்டு நலம் பல பெறுகிறார்கள் பக்தர்கள்.

No comments:

Post a Comment