Wednesday, April 24, 2013

மிராசுதாரை மிரள வைத்த மஹா பெரியவர் - ஒரு சித்ரா பௌர்ணமி அன்று நடந்த நிகழ்ச்சி

ஒரு சித்ரா பௌர்ணமி அன்று நடந்த நிகழ்ச்சி;மிராசுதாரை மிரள வைத்த மஹா பெரியவர்

[ (எஸ். ரமணி அண்ணா எழுதிய கட்டுரை.[இது பழைய போஸ்ட்தான். சித்ரா பௌர்ணமிக்கு ஸ்பெஷல்]

நன்றி வரகூர் நாராயணன் மாமா - Sage of Kanchi




பல வருஷங்களுக்கு முன் ஒரு சித்ரா பௌர்ணமி தினம். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மகாந்யாஸ ருத்ர ஜபத்துடன் ஓர் அபிஷேகம் விசேஷமாக நடை பெற்றது. 


11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர், திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர் என்பவர். காலை எட்டு மணி அளவில் ஆரம்பித்த ருத்ராபிஷேகம், மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது.

காஞ்சி மஹா ஸ்வாமிகளிடம் அபரிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர். 'எப்படியும் இந்த ருத்ரா அபிஷேகப் பிரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பித்து விட வேண்டும் என்று தீர்மானித்தார். ருத்ரா அபிஷேகப் பிரசாதத்தை பய பக்தியுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப் பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக் கொண்டார். அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில் மதுரை-சென்னை பாசஞ்சர் ரயிலில் ஏறினார் மிராசுதார். விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி, பஸ் பிடித்து காஞ்சிபுரம் வந்து இறங்கினார் நாராயண ஸ்வாமி ஐயர்.

அன்று மடத்தில் ஏகக் கூட்டம். ஸ்நானம் இத்யாதிகளை முடித்துக் கொண்டு, பெரியவா தரிசனத்துக்காகப் பிரசாதத்துடன் காத்திருந்தார் மிராசுதார். நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்து விட்டு வந்து உட்காந்தார் மகா ஸ்வாமிகள். பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது. மிராசுதாரால் ஸ்வாமிகளை நெருங்க முடியவில்லை. உடனே மிராசுதார், " எல்லோரும் நகருங்கோ..நகருங்கோ. நா பெரியவாளுக்கு திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். அதை அவர் கிட்டே சமர்பிக்கணும்" என்று பிரசாத மூட்டையைக் காட்டிக் கெஞ்சினார்.

ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரின் தவிப்பையும், பதற்றத்தையும் பார்த்த மடத்தை சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக் கொடுத்து நாராயணஸ்வாமி ஐயரை பெரியவாளுக்கு அருகே அழைத்துச் சென்றார். பெரியவாளை பார்த்ததும் மிராசுதாருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தொப்புகடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மஹா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார்! என்ன விஷயம் என்பது போல புருவங்களை உயர்த்தினார்.

உடனே மிராசுதார் கைகள் உதற பிரசாத மூட்டையைப் பிரித்துக் கொண்டே, 'பிரசாதம்...பிரசாதம் பெரியவா' என்று குழறினார். மீண்டும் பெரியவா, "என்ன பிரசாதம் ?" என்று கேட்டு அவரைப் பார்த்தார். அதற்குள் மூட்டையைப் பிரித்து, பிரசாதத்தை எடுத்து, அங்கிருந்த மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாகச் சமர்ப்பித்தார் மிராசுதார். அதில், ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், இரண்டு தேங்காய் மூடிகள், பூவன் வாழைப் பழங்கள் சில இருந்தன.

மஹா ஸ்வாமிகள், "இதெல்லாம் எந்த க்ஷேத்ரப் பிரசாதம்னு?" என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப் பார்த்தார். மிராசுதார் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மிக விநயமாக, "பெரியவா ! நேத்திக்கு திருவிடமருதூர்லே மகாலிங்க ஸ்வாமிக்கு ருத்ரா அபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹாந்யாச ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்த பிரசாதம் தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கரதுக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்கிரகம் பண்ணனும் !" என்று சொல்லி முடித்தார்.

உடனே பெரியவா அந்த பிரசாத மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்து விட்டுக் கேட்டார். 'நாராயணசாமி! நீ பெரிய மிராசு தான். இருந்தாலும் செலவுக்கு இன்னும் யாரையாவது கூட்டு சேர்த்துண்டு இந்த ருத்ரா அபிஷேகத்தை ஸ்வாமிக்குப் பண்ணினியோ ?"

"இல்லே பெரியவா...நானே என் சொந்த செலவுலே பண்ணினேன்" என்று அந்த "நானே"வுக்கு சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். பெரியவாள் தனக்குள் சிரித்துக் கொண்டார். அத்துடன் விடவில்லை. "லோக க்ஷேமத்துக்காக (உலக நன்மைக்கு) மத்யார்ஜுன க்ஷேத்ரதுலே (திருவிடைமருதூர்) ருத்ரா ஆபிஷேகத்தைப் பண்ணினையாக்கும் ?" என்று கேட்டார். உடனே மிராசுதார் ஆதங்கத்துடன், "இல்லே பெரியவா. ரெண்டு மூணு வருஷமாகவே வயல்கள்ல சரியான வெளைச்சல் கிடையாது. சில வயல்கள் தரிசாகவே கெடக்கு. திருவிடைமருதூர் முத்து ஜோசியரைப் போய்ப் பார்த்தேன். அவர் தான், 'சித்ரா பௌர்ணமி அன்னிக்கு மகாலிங்க ஸ்வாமிக்கு மஹாந்யாச ருத்ராபிஷேகம் நடத்து. அமோகமா வெளைச்சல் கொடுக்கும்'னார்! அதை நம்பித் தான் பண்ணினேன் பெரியவா என்று குழைந்தார்.

எதிரில் வைத்த பிரசாதம் அப்படியே இருந்தது. ஆச்சார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. "அப்படின்னா ஆத்மார்த்ததுக்காகவோ, லோக க்ஷேமத்துக்காகவோ நீ இதைப் பண்ணலைன்னு தெரியறது" என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண் மூடி த்யானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தார் ஆச்சார்யாள். அவர் முகத்தில் அப்படி ஒரு தெளிவு! கண் மூடி த்யானித்த பதினைந்து நிமிடங்களுக்குள், பல விஷயங்களைப் புரிந்து கொண்டு விட்ட ஒரு ஞானப் பார்வை. அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடந்தார். "சரி..ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா ?"

"பதினொரு வேத பண்டிதாளை ஏற்பாடு பண்ணி இருந்தேன் பெரியவா !" - இது மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள், வைதீகாள் எல்லாம் யார் யாரு ? எந்த ஊருநெல்லாம் தெரியுமோ ? நீ தானே எல்லாம் ஏற்பாடு பண்ணினே ?" என்று விடாப் பிடியாக விசாரித்தார்.

இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு, 'பெரியவா ஏன் இப்படி துருவி துருவி விசாரணை செய்கிறார் !" என வியப்பாக இருந்தது. இருந்தாலும், ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். மிராசுதார், தன இடுப்பில் சொருகி இருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

"வாசிக்கேறேன் பெரியவா. திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாச கனபாடிகள், ராஜகோபால சிரௌதிகள், மருத்துவக் குடி சந்தான் வாத்தியார், சுந்தா சாஸ்திரிகள், சுப்ரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக் குடி வெங்கிட்டு வாத்தியார்..அப்புறம்..." என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், "எல்லாம் நல்ல அயனான வேதா வித்துகளாத்தான் ஏற்பாடு பண்ணி இருக்கே. அது சரி..ஒன் லிஸ்டுல்லே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கானு பாரு..." என்று இயல்பாகக் கேட்டார்.

உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, 'இருக்கு பெரியவா..இருக்கு. அவரும் ஜபத்துக்கு வந்திருந்தார் !" என ஆச்சர்யத்தோடு பதில் அளித்தார்.

சூழ்ந்து நின்ற பக்தர்கள் எல்லாம், 'பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப் பற்றி, இப்படித் துருவி துருவி விசாரிக்கிறார்' என்று வியப்பு தவிர ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.

ஸ்வாமிகள், "பேஷ்...பேஷ் ! வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்கு சொல்லி இருந்தியா? ரொம்ப நல்ல காரியம். மஹா வேத வித்து ! இப்ப கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்ப சிரமப்படும். ஜபத்தைப் புடிச்சு (மூச்சடக்கி) சொல்லறதுக்கு கஷ்டப்படுவார் " என்று கூறியது தான் தாமதம்....மிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில், "ஆமாம் பெரியவா ! நீங்க சொல்லறது ரொம்ப சரி தான். அவர் சரியாகவே ருத்ரம் ஜபிக்கலை! சில நேரம் வாயே திறக்காம கண்ணா மூடிண்டு ஒக்காந்துண்டிருக்கார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனாலே ஜப 'ஸங்க்யை' யும் (எண்ணிக்கை) கொரயறது! நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார்.
ஏண்டா அவரை வரவழைச் சோம்'னு ஆயிடுத்து பெரியவா' என்று சொல்லி முடித்து தான் தாமதம்...பொங்கி விட்டார் ஸ்வாமிகள்.

வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், "என்ன சொன்னே...என்ன சொன்னே நீ ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாம்ங்கற திமிரோ ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்கியதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும் ? அந்த வேத வித்தோட கால் தூசு பெறுவியா நீ ? அவரைப் பத்தி என்னமா நீ அப்படிச் சொல்லலாம் ? நேத்திக்கு மகாலிங்க ஸ்வாமி சந்நிதியிலே என்ன நடந்ததுங்கறதை இப்போ நான் புரிஞ்சுண்டுட்டேன் ! நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு ! நேத்திக்கு ஜப நேரத்துலே...கனபாடிகள் முடியாமல் கண் மூடி ஒக்காந்திருந்த நேரத்திலே நீ அவர் கிட்டே போய், கடுமையா 'ஏங்காணும், காசு வாங்கலே நீர் ! இப்படி ஜபம் பண்ணாம வாயடைச்சு ஒக்காண்திண்டிருக்கீரே'னு கத்தினது உண்டா, இல்லியா ?" என்று பொரிந்து தள்ளி விட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப் போனது.

கை கால்கள் நடுங்க சாஷ்டாங்கமாக மஹா பெரியவா கால்களில் விழுந்தார் நாராயணஸ்வாமி ஐயர். ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். வாயைப் பொத்திக் கொண்டு நடுக்கத்துடன், "தப்பு தான் பெரியவா ! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பாத்து, ஸ்வாமி சன்னதியில் சொன்னது வாஸ்தவம் தான். என்னை மன்னிச்சுடனும் பெரியவா" என்று கெஞ்சினார்.

"இரு..இரு..நீ அந்த ஒரு தப்பை மாத்திரமா பண்ணினே ? சொல்லறேன் கேளு. எல்லோருக்கும் நீ தட்சிணை கொடுத்தியோல்லியோ...ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்வளவு தட்சிணை கொடுத்தே ?" என்று கேட்டார். மிராசுதார் மென்று விழுங்கியபடியே, "தலைக்கு பத்து ரூபா கொடுத்தேன் பெரியவா" என்றார் ஈனஸ்வரத்தில். "சரியா சொல்லு! எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்து பத்து ரூவாயா கொடுத்தே ! நேக்கு எல்லாம் தெரியும்” என்று மடக்கினார்.

மிராசுதார் மெளனமாக நின்றார். ஆனால் ஆச்சார்யாள் விடவில்லை! "நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறதை நா சொல்றேன் கேட்டுக்கோ..நோக்கு சொல்ல வெக்கமா இருக்கு போல . வைதீகாளை எல்லாம் வரிசையா சந்நிதியிலே ஒக்காத்தி தலைக்கு பத்து ரூபா சம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள் கிட்டே வந்த போது, 'இவர் தான் சரியாகவே ருத்ரம் சொல்லலியே...இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூபா கொடுக்கணும்?'னு தீர்மானிச்சு ஏழே ஏழு ரூபாய் சம்பாவணை பண்ணினே. ஏதோ அவரைப் பழி வாங்கிப்டதா எண்ணம் நோக்கு. கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணினாரா பார்த்தியா ? நீ கொடுத்ததை வாங்கி அப்பிடியே தலைப்பில் முடிஞ்சுண்டுட்டார். நா சொல்றதெல்லாம் சரி தானே. சொல்லு" என்று உஷ்ணமானார் ஆச்சார்யாள்.

பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தனர்! ஒருவரும் வாய் திறக்கவில்லை.
"நேற்று திருவிடைமருதூர் கோயிலில் நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது ?' என அங்கே குழுமி இருந்த பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர். மிராசுதார் பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, "தப்பு தான் பெரியவா! ஏதோ அஞ்ஞானத்தாலே அப்படி நடந்துட்டுண்டேன். இனிமே அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிசுண்டுங்கோ..."என்று முடிப்பதற்குள் பெரியவா, "இரு..இரு! இதோட முடிஞ்சுட்டா தான் பரவாயில்லையே...ஜப பிராமண்ணாளுக்கு எல்லாம் அங்க மகாதானத் தெரு ராமச்சந்திர ஐயர் க்ரஹதுலே தானே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தே ?" என்று கேள்வி கேட்டார்.

"ஆமாம் பெரியவா!" - இது மிராசுதார்.

உடனே ஆச்சார்யாள், "சாப்பாடெல்லாம் பரமானந்தமா நன்னாத் தான் போட்டே. பந்தியிலே, நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப் பருப்பு, திராட்சை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே...சரியா ?" என்று கேட்டார். வெலவெலத்துப் போய் விட்டார் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் !

மிராசுதார் வாயைப் பொத்தியபடியே, "ஆமாம் பெரியவா ! பந்தியிலே சக்கரைப் பொங்கலை மட்டும் என் கையாலே நானே பரிமாறினேன் !" என்று குழைந்தார்.

ஸ்வாமிகள் விடவில்லை. "சரி...அப்டி நீ சக்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோட பரிமாறினதா ஒன் மனசாட்சி சொல்றதா ?" என்று கேட்டார் கடுமையாக.

வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆச்சார்யாளே பேசினார். "நீ சொல்ல வேண்டாம்...நானே சொல்லறேன்! நீ சக்கரைப் பொங்கலை போடறச்சே, அது பரம ருசியா இருந்ததாலே வைதீகாளேல்லாம் கேட்டுக் கேடு வாங்கி சாப்பிட்டா! நீயும் நெறையப் போட்டே. ஆனா தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் வாய விட்டு, "சக்கரைப் பொங்கல் இன்னும் கொஞ்சம் போடுடாப்பா..ரொம்ப ருசியா இருக்கு"னு பல தடவை வாய்விட்டுக் கேட்டும் கூட நீ காதுலே வாங்கிண்டு அவருக்கு போடாமலேயே போனாயா இல்லியா ? எத்தனை தடவை வாய் விட்டுக் கேட்டார் ! போடலியே நீ ! பந்தி வஞ்சனை பண்ணிட்டியே...இது தர்மமா ? ஒரு மஹா சாதுவை இப்படி அவமானபடுத்திட்டியே..." - மிகுந்த துக்கத்துடன் மௌனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள் !
மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்புறமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் ஆச்சார்யாள். சாட்சாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.

பதினைந்து நிமிஷங்கள் மௌனம். பிறகு, கண்களைத் திறந்து மௌனம் களைந்தார் ஆச்சார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆச்சார்யாளே நாராயணஸ்வாமி ஐயரைப் பார்த்து தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார்.

"மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுகண்ணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தொரு வயசாறது. தன்னோட பதினோராவது வயசுலேர்ந்து எத்தனையோ சிவ க்ஷேத்ரங்களிலே ஸ்ரீருத்ர ஜபம் பண்ணி இருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேற்பட்ட மஹான் அவர். அவர்ட்டே நீ நடந்துண்ட விதம் மஹா பாபமான கார்யம்...மஹா பாபமான கார்யம் !" - மேலே பேச முடியவில்லை பெரியவளால். கண் மூடி மௌனமாகி விட்டார். சற்றுப் பொறுத்து ஆச்சார்யாள் தொடர்ந்தார்.

"நீ 'பந்தி பேதம்' பண்ணின காரியமிருக்கே. அது கனபாடிகள் மனசை ரொம்பவே பாதிச்சிடுத்து. அவர் என்ன கார்யம் செஞ்சார் தெரியுமா நோக்கு ? சொல்றேன் கேளு. நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலே. மகாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். 'அஸ்மேத' (பெரிய பிரகார) பிரதட்சிணம் மூணு தடவை பண்ணினார். நேரா மகாலிங்க ஸ்வாமிக்கு முன்னாலே போய் நின்னார். கை கூப்பி நின்னுண்டு என்ன பிராத்தித்தார் தெரியுமா ?" மேலே பேச முடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.

"கண்ணுலேர்ந்து தாரையா நீர் வழிய, 'அப்பா ஜோதி மகாலிங்கம்! நா ஒன்னோட பரம பக்தன். பால்யத்தில் இருந்து எத்தனையோ தடவை ஒன் சந்நிதியிலே மஹாந்யாச ஸ்ரீருத்ரம் ஜபிச்சுருக்கேன். நீ கேட்ருக்கே. நேக்கு இப்போ எண்பத்தி ஒரு வயசாறது. மனசிலே பலமிருக்கு. வாக்குலே அந்த பலம் போயிடுதுப்பா! இன்னிக்கு மத்யானம் சாப்பிடறச்சே நடந்தது. நோக்குத் தெரியமா இருக்காது. அந்த சக்கரைப் பொங்கல் ரொம்ப ருசியா இருந்ததேன்னு 'இன்னும் கொஞ்சம் போடுங்கோ'னு வெக்கத்தை விட்டு அந்த மிராசுதார் கிட்டே பல தடவை கேட்டேன். அவர் காதுலே விழுந்தும் விழாத மாதிரி நகர்ந்து போயிட்டார். சக்கரப் பொங்கல்னா நேக்கு உசிர்ருன்னு நோக்குத் தான் தெரியுமே. சபலப் பட்டு கேட்டும் அவர் போடலியேனு அப்போ ரொம்ப தாபப்பட்டேன்.

ஆனா, சாப்பிட்டு கையலம்பிண்டு வாசத் திண்ணைக்கு வந்து ஒக்காந்த அப்புறம் தான், 'இப்படி ஒரு ஜிஹ்வா சபலம்' (பதார்த்தத்தில் ஆசை) இந்த வயசுலே நமக்கு இருக்கலாமான்னு தோணித்து. அப்பா மகாலிங்கம்...இப்போ அதுக்காகத் தான் நோக்கு முன்னாடி வந்து நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்திலேர்ந்து ஒரு பிரதிஞ்ஞை பண்ணிக்கிறேன். எல்லோரும் காசிக்குப் போனா, புடிச்ச பதார்த்தத்தை விடுவா. காசிலேயும் நீ தான்...இங்கேயும் நீ தான். அதனாலே ஒனக்கு முன்னாலே, 'இனிமே இந்த சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சக்கரப் பொங்கலையோ அல்லது வேற எந்த தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன் ! இது சத்தியம்டாப்பா மகாலிங்கம்'னு வைராக்கியப் பிரமாணம் பண்ணிண்டு, 'அப்பா ஜோதி மகாலிங்கம் ! நா ஒன்கிட்டே உத்தரவு வாங்கிக்கறேன்'னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கனபாடிகள் கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர். ஊருக்குப் பொறப்டுட்டார் ! இப்போ சொல்லு...நீ பண்ணின கார்யம் தர்மமா ? மகாலிங்க ஸ்வாமி ஒப்புத்துப்பாரா? "

பெரியவா நிறுத்தினார். அப்போது மதியம் மூணு மணி. "நேக்கு இன்னிக்கு பிஷை வேண்டாம் !" என்று சொல்லி விட்டார் ஸ்வாமிகள். அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை. அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் பிரமித்து நின்றிந்தார். அவருக்குப் பேச நா எழவில்லை. பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'நேற்றைய திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்லறாளே. இது எப்படி ?" என்று அனைவரும் வியந்தனர்.

பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது. "பெரியவா ! நா பண்ணது மகா பாபம் ! அகம்பாவத்திலே அப்படி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ. இனி, என் ஜன்மாவில் இப்படி நடந்துக்கவே மாட்டேன். 'மன்னிச்சுட்டேன்'னு சொல்லணும் பெரியவா !" என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.

ஆச்சார்யாள் வாய் திறக்கவில்லை. விடவில்லை மிராசுதார். "பிராத்திக்கிறேன் பெரியவா. நீங்க இந்த மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதத்தை ஸ்வீகரிச்சுக்கணும்...என்னை மன்னிசுடுங்கோ !" என்று பிரசாதத் தட்டை நோக்கி கைகளைக் காண்பித்தார்.

உடனே ஆச்சார்யாள், "இருக்கட்டும்...இருக்கட்டும். நேக்கு அந்த மகாலிங்க ஸ்வாமியே பிரசாத அநுக்ரகம் பண்ணுவார்" என்று சொல்லி முடிப்பதற்குள், "நகருங்கோ...நகருங்கோ" என்று ஒரு குரல் கூட்டத்துக்கு வெளியே கேட்டது. எல்லோரும் விலகி வழி விட்டனர். தலையில் கட்டுக் குடுமி. பளிச்சென்று பஞ்சகச்ச வேஷ்டி. இடுப்பில் பச்சை பட்டு வஸ்திரம். கழுத்தில் பெரிய ருத்ராக்ஷ மாலை. பட்டுத் துணியில் பத்திரப்படுத்தப்பட்ட பிரசாதத்தை ஒரு பித்தளை தட்டில் வைத்து கைகளில் பக்தியோடு ஏந்தியபடி சுமார் அறுபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், பெரியவாளுக்கு அருகே வந்து சேர்ந்தார். ப்ரசாதத் தட்டை ஆச்சார்யாளுக்கு முன்பு பவ்யமாக சமர்ப்பித்து விட்டு, "எம் பேரு மகாலிங்கம். திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய அர்ச்சகர். நேத்திக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராசுதார் நடத்தினார். இந்தூர்லே எங்க அக்காவை (சகோதரி) கொடுத்திருக்கு. ஆச்சார்யாளுக்கும் அந்தப் பிரசாதத்தை கொடுத்துட்டு, அவளையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். நமஸ்காரம் பண்ணிக்கிறேன். பெரியவா அனுக்கிரகிக்கணும்" என்று நமஸ்கரிக்கப் போனவரை தடுத்து விட்டார் ஸ்வாமிகள்.

"நீங்கள் எல்லாம் சிவ தீக்ஷை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்படாது" என்று சொன்ன பெரியவா, அவர் கொண்டு வந்த பிரசாதங்களை ஸ்வீகரித்துக் கொண்டு, சிவாச்சார்யாருக்கு மடத்து மரியாதை பண்ணச் சொன்னார். அதற்குள், சற்று தள்ளி நின்றிருந்த மிராசுதாரைப் பார்த்து விட்டார் சிவாச்சாரியார். "பெரியவா ! இவர் தான் நேத்திக்கு அங்கே ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சவர். அவரே இங்கே வந்திருக்காரே !" என்று ஆச்சர்யத்துடன் கூறி விட்டு, உத்தரவு பெற்றுக் கொண்டு போயே போய் விட்டார் அந்த மகாலிங்கம் சிவாச்சாரியார்.

ஆச்சார்யாளை மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து எழுந்து கன்னத்தில் போட்டுக் கொண்ட மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர், "திரும்பத் திரும்ப பிராத்திக்கிறேன் பெரியவா. நா பண்ணினது ரொம்ப பாவ கார்யம் தான் ! இதுக்கு நீங்க தான் பிராயச்சித்தம் சொல்லணும்" என்று மன்றாடினார்.
விருட்டென்று ஸ்வாமிகள் எழுந்து விட்டார். "இதுக்கு பிராயசித்தம் நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் தான் சொல்லணும்" என்றார் !

"இந்த பாவி பண்ணின காரியத்துக்கு கனபாடிகள் பிராயச்சித்தம் சொல்லுவாரா பெரியவா ?" என்று தாபத்தோடு கேட்டார் மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள் சற்று உரத்த குரலில், "’நோக்கு ப்ராப்தம்' இருந்தா நிச்சயம் சொல்லுவார்!" என்று கூறி விட்டு, விடு விடுவென்று உள்ளே சென்று விட்டார். அதன் பிறகு பெரியவா வெளியே வரவே இல்லை. சில மணி நேரம் காத்திருந்து பார்த்தார் மிராசுதார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக புறப்பட்டு பஸ் பிடித்து செங்கல்பட்டு வந்து சேர்ந்தார். ரயிலைப் பிடித்து, அடுத்த நாள் காலை திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்.

அங்கே காவிரி ஆற்றுக்கு சென்று ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, ஒரு வைராக்கியத்துடன் அருகில் உள்ள தேப்பெருமாநல்லுரை நோக்கி நடையைக் கட்டினார். எப்படியும் வேங்கடேச கனபாடிகளைப் பார்த்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர் கூறும் 'ப்ராயசித்த'த்தைப் பூர்த்தி செய்து, பாப விமோசனம் பெற்று விட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வேக வேகமா நடந்தார்.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹாரத்தில் நுழைந்தார் மிராசுதார். எதிர்பட்ட ஒருவரிடம் கனபாடிகள் பெயரைச் சொல்லி, அவர் கிருஹம் எங்கே என விசாரித்தார். உடனே அவர், வெளியே பலர் கூட்டமாக நின்றிந்த ஒரு வீட்டை சுட்டிக் காட்டி, "துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா ? அதான் வேங்கடேச கனபாடிகள் வீடு. இன்னிக்கு விடியக் காலம் தான் கனபாடிகள் திடீர்னு காலம் ஆயிட்டார். 'அநாயசேந' மரணம் (சிரமங்கள் இல்லாத சுலப மரணம்) போய்ப் பார்த்துட்டு வாங்கோ" என்று சொல்லிப் புறப்பட்டார்.

இதைக் கேட்டவுடன் பிரமித்துப் போய் விட்டார் நாராயண ஸ்வாமி ஐயர். யாரோ அவர் தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியது போல் இருந்தது. நேற்று மடத்தில் ஆச்சார்யாள் உரத்த குரலில் ஆணித்தரமாகச் சொன்ன வாக்கியம் மீண்டும் அவர் காதுகளில் ஒலிப்பது போல் இருந்தது. "நோக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்வார்!"

'ப்ராப்தம்' இல்லேங்கறது நேத்திக்கே பெரியவாளுக்கு தெரிஞ்சுருக்கு' என்பது மிராசுதாருக்கு இப்போது புரிந்தது. கனபாடிகள் வீட்டுக்குச் சென்றார் மிராசுதார். மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கனபாடிகளின் பூத உடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். புறப்பட்டார்.

அதன் பிறகு, பல விதமான துன்பங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன சொத்துகளை எல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களில் திருமடப்பள்ளி கைங்கர்யம் பண்ணி விட்டு, காசி க்ஷேத்ரத்திலே கால கதி அடைந்தார்.

No comments:

Post a Comment