Sunday, April 14, 2013

அகம் புறம் பேசும் ராம காதை!


அகம் புறம் பேசும் ராம காதை!






தமிழ் சங்க கால இலக்கியத்தில் அகநானூறும் புறநானூறும் மிக முக்கியமானவை. அவற்றில் ராமாயணக் கதையின் சில அம்சங்கள் காணக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று-

"இலம்பாடு உழ்ந்த என் இரும்பேர் ஒக்கல்' என்ற புறநானூறின் 378வது பாடல். இதில், சீதையின் நகைகளைக் கண்ட வானரர்களின் செயல் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"ஊன்பொதி பசுங்குடையார்' என்ற சங்க காலப் புலவர் ஒருமுறை இளஞ்சேட்சென்னி எனும் ஓர் அரசனைப் பாடினார். அரசன் அவருக்குப் பரிசில் அளித்தான். புலவரின் உறவினர்களோ ஏழைகள். வயிற்றுச் சோற்றையே எண்ணிக் கொண்டிருந்த அவர்களுக்கு அணிகலன் பற்றி என்ன தெரியும்? அவர்கள் அவற்றைப் பார்த்ததே இல்லையே! அதனால் அவற்றை எடுத்து மாற்றி மாற்றி அணிந்துகொண்டனர். அதனைக் கண்ட புலவருக்குச் சிரிப்பு மேலோங்கியது. உடனே, "இராமனின் மனைவி சீதையின் அணிகலன்களைப் பெற்ற குரங்குகளைப் போல் என் உறவினர் உள்ளனரே. விரலில் போடக்கூடியதைக் காதிலும், காதில் போடவேண்டியதை விரலிலும், இடையில் அணிய வேண்டியதை கழுத்திலும், கழுத்தில் அணிய வேண்டியதை இடையிலுமாக அக்குரங்குகள் அணிந்து வேடிக்கை பார்த்தன. அதுபோல் இது அமைந்ததே' என இப்பாடலைப் பாடினாராம்.

இதுபோல் மதுரை தமிழ்க்கூத்தனார் அகநானூறில் பாடிய 70வது பாடலில், "ராமபிரான் பறவைகளின் ஒலியை அடக்கிய செயலைப் போல், உன் செயலும் ஆனதே' எனப் பாடியுள்ளார். "இராமன் அருமறைக்கு அவிந்த பல்வீழ் ஆலம்போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே' என்று குறிப்பிடுகிறார்.

""இலங்கைக்கு எதிராகப் படையெடுப்பது பற்றி ராமன் ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது பறவைகள் ஆரவாரம் செய்தன. உடனே ஒரு மந்திரத்தைச் சொல்லி அவற்றின் ஆரவாரத்தை அவர் தடுத்துவிட்டார். பின்னர் அவை அங்கே ஆரவாரம் செய்யவில்லை. அதுபோல், தலைவியே முன்பு உன்னைப் பற்றி பலரும் தூற்றினர். எங்கும் அதே அவதூறுப் பேச்சாக இருந்தது. இப்போது உன் காதலருக்கே உன்னை மணமுடிக்க உன் பெற்றோர் முடிவு செய்தனர். அதனால் இன்று ஊரில் அத்தகைய பேச்சு ஏதுமில்லை...'' என்று உவமையாகக் கூறுகிறாளாம் தோழி.

No comments:

Post a Comment