Sunday, December 23, 2012

திருப்பாவை - 9 - திருவெம்பாவை பாடல் 9


திருப்பாவை - 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்குஎரிய
தூபம்கமழ துயில்அணை மேல்கண் வளரும்
மாமன்மகளே! மணிக் கதவம் தாள்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயவன் மாதவன் வைகுந்தன் என்றுஎன்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாம்.

பொருள்

தூய்மையான மாணிக்க கற்களால் கட்டப்பட்ட மாளிகையில் நாற்புறமும்
விளக்குகள் எரிகின்றன நறுமணம் புகை எங்கும் மணக்கின்றன. அங்கே படுக்கையில் துயில் கொண்டு இருக்கிற மாமன் மகளே! மாணிக்க கற்கள் பொருந்திய வீட்டு வாயிற் கதவினைத் திறப்பாயாக. மாமியாரே உள்ளே உறங்குகின்ற உம் மகளை எழுப்ப மாட்டீரோ? உமது மகள் ஊமையோ அல்லது செவிடோ அதிகநேரம் உறங்கும்படி மந்திரத்தால்
கட்டப்பட்டாளோ? அவளை எழுப்பினால் அவளுடன் சேர்ந்து மாதவன், வைகுந்தன் என்று பல நாமங்களில் கூவி பரந்தாமனை வழிபடுவோம்

விளக்கம்: உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.


திருவெம்பாவை பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.



பொருள்: கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள்
இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம்என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும்
கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக்
கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.

விளக்கம்: தனக்கு வரும் கணவன் செல்வசீமானாக இருக்க வேண்டும் என்று நினைக்ககூடிய காலம் இந்தக்காலம். இந்த செல்வம் நிலைத்திருக்குமா! இந்த செல்வத்துக்கு சொந்தக்காரர்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்களா! பக்திமான் ஒருவன் எனக்கு கணவனாக வேண்டும் என்று கேட்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலாவது இன்று இருக்கிறார்களா? அன்றைய பெண்கள் தங்கள் கணவன் பக்திமானாக அமைய வேண்டுமென விரும்பினர்.
அதை இறைவனிடம் கேட்டனர். செல்வச்சீமான்களால் நிம்மதியைத் தர முடியாது. பக்திமான்களை மணந்தால் எளிய வாழ்க்கை அமையலாம். ஆனால், அதில் இருக்கும் மனநிம்மதி யாருக்கு கிடைக்கும்? என்பது இந்தப் பாடலின் உட்கருத்து.

No comments:

Post a Comment