Saturday, December 22, 2012

திருப்பாவை பாடல் 8 - திருவெம்பாவை பாடல் 8

திருப்பாவை பாடல் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.




பொருள்: மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக்
கொண்ட சிலை போன்று அழகு கொண்ட
பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது. எருமைகள்
மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து
நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும்
நீராடுவதற்காக வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள்,
உடனே குளிக்கப் போக வேண்டும் என
அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக
தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி
அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை
வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து
கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர்
உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி
தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால்,
அவன் ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள்
தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.

விளக்கம்: திவ்ய தேசமான சின்னக்காஞ்சிபுரம்
(அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி
இப்பாடலை ஆண்டாள் பாடுகிறாள். தேவாதி
தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர்.
கண்ணனின் வீரச்செயல்கள் இப்பாடலில்
புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே
விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.



திருவெம்பாவை பாடல் 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.




பொருள்: தோழியை எழுப்ப வந்த பெண்கள்,
அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள்
கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன்
வாத்தியங்கள் இசைக்கப்படுகின் றன.


நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள்
முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள்
எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும்
சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும்
கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை
பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல்
தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே!
இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில்
பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப்
பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து
சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட
பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை,
ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.

விளக்கம்: இறைவன் மனிதர்களின் உள்ள இருளைப்
போக்குபவர். பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி
காலையை சூரியன் எப்படி பிரகாசமாக்குகிறானோ,
அதுபோல் ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய
இருள் சூழ்ந்த மனதை சிவபெருமான் ஒளி
வெள்ளமாக்குகிறார் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

No comments:

Post a Comment