Saturday, December 15, 2012

திருப்பாவை (1) - திருவெம்பாவை -- (1)



திருப்பாவை (1)





மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர் !
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்



பொருள்:- அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களே , செல்வம் கொழிக்கும் ஆயர்பாடியில் தொண்டு செய்யும் செல்வத்தையும் கன்னிப் பருவத்தையும் உடையவர்களே மாதங்களில் சிறந்த மார்கழித் திங்களில் முழுநிலா தோன்றுகின்ற நாளிலே கூர்மையான வேலையுடயவனும் பகைவர்களுக்குக் கொடுமை செய்பவனும் ஆன நந்த கோபனுக்கு பிள்ளையாகப் பிறந்தவனும் அழகு நிறைத்த கண்களையுடைய யசோதை பிராட்டிக்கு இளஞ்சிங்கம் போன்றவனும் கார்மேகம் போன்ற திருமேனியையும் செந்தாமரை போன்ற கண்களையும் சூரியன் மற்றும் சந்திரன் போன்ற முழுமுகத்தையும் உடைய எல்லாம் வல்ல நாராயணனே நாம் விரும்பிய வரத்தை நமக்கே தருவான் இன்று மார்கழி மாதத்து பவுர்ணமி நல்ல நாள் உலகத்தார் புகழும் வன்னம் நீராட வருபவர்களே வாருங்கள்





திருவெம்பாவை -- (1)


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடம்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசுஏலோர் எம்பாவாய்.




ஒளி பொருந்திய அகன்ற வாள் போன்ற கண்களை
உடைய பெண்ணே! ஆரம்பமும், முடிவும் இல்லாதவன்
சிவபெருமான். அருட் பெரும் ஜோதி வடிவானவன்.
அவன் மகிமை பாடுகின்றோம்.


அதை கேட்ட பின்னும் நீ தூங்குகிறாயே? உன்
காதுகள் கேட்கும் சக்தியற்று போனதா?
மகாதேவனின் நெடிய, சிலம்பணிந்த திருவடிகளை,
தெருவில் நின்று நாங்கள் பாடுகிறோம். அதை
கேட்டதும், பக்தி நிறைந்த பெண் ஒருத்தி விம்மி
விம்மி அழுது, படுக்கையை விட்டு புரண்டு
விழுந்து இந்த நிலத்தில் தன்னை மறந்து கிடந்தாள்
இதுவன்றோ பக்தியின் உச்ச நிலை


ஆனால் நீ இன்னும் உறங்கி கொண்டு இருக்கிறாயே?
இது என்ன விந்தை? எழுந்து வா!!

No comments:

Post a Comment