Tuesday, October 9, 2012

ஏர் பிடித்து உழுத சிவபெருமான்

ஏர் பிடித்து உழுத சிவபெருமான்

அன்பர்களை சோதிப்பது ஆண்டவனுக்கு விளையாட்டான விஷயம். அதே போல் அந்த இறைவனிடம் நாம் உண்மையான பக்தியை செலுத்தும்போது  அவன் நமக்கருளும் இறையருள் சொல்ல முடியாத இன்பத்தை தருவதாகும்.
பயிர் செய்யும் விவசாயியை சோதிக்க அவனே விவசாயியாக மாறிய திருவிளையாடலை இங்கே காண்போம்.


பக்தியை சோதிக்க





கடலூர் அருகே உள்ள திருத்தினை என்ற இடத்தில் முன்னொருகாலத்தில்
விவசாயத் தம்பதியினர்  சிவன் மீது தீவிர பக்தியுடன் வாழ்ந்து வந்தனர். தினமும் ஈசனுக்கு பூஜை செய்து முடித்துவிட்டு ஒருவருக்காவது உணவளித்து விட்டுதான் தாங்கள் சாப்பிடுவது வழக்கம்.  தன மீது அதீத பக்தி
கொண்ட பக்தரை சோதித்து பார்க்கும் சிவன் இவர்களையும் சோதிக்க நினைத்தார்.

இதன் காரணமாக மறுநாள் அந்த தம்பதியர் வீட்டுப் பக்கம் எவரும் செல்லாதபடி செய்து விட்டார், இதனால் அந்த தம்பதியர்கள் பெரும் கவலை அடைந்து தங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் எவருக்காவது உணவு அளிக்கலாம்  என்று தோட்டத்திற்கு சென்றால் அங்கும் ஈசனின் திருவிளையாடல் அன்று எவரும் வேலைக்கு வரவில்லை. இதனால் மனம் மிகவும் சோர்வுற்ற தம்பதியினர் அங்கேயே அமர்ந்து யாரவது வழிப்போக்கர் வந்தால் அவர்களை வீட்டிக்கு அழைத்து சென்று உணவருந்த செய்யலாம் என்ற நினைப்பின் அங்கேயே அமர்ந்தனர்.  அவ்வமயம் அங்கே ஒரு முதியவர் வந்தார், அவரிடம் சென்ற விவசாயி அய்யா நாங்கள் தினமும் ஈசனுக்கு பூஜை செய்து ஒருவருக்கு உணவு அளிப்பது வழக்கம் இன்றைய உணவை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்க்கு அந்த முதியவர் நான் உழைக்காமல் எதுவும் சாப்பிடமாட்டேன்  ஆகவே எனக்கு உங்கள் தோட்டத்தில் ஏதாவது வேலை குடுங்கள்  அதற்க்கு கூலியாக நீங்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்ப்பிடுகின்றேன் என்று கூறினார்.

ஏதுமறியாத விவசாயி அதற்க்கு ஒப்புக்கொண்டு தனது தோட்டத்தை உழுது தரும்படி கூறினார். முதியவரும் வயலில் இறங்கி உழுதார். வேலை முடிந்ததும்  விவசாயி தம்பதி முதியவருக்கு உணவளிப்பதற்காக வீட்டிற்கு
சென்றனர் . பின்னர் சிறிது நேரத்தில் உணவுடன் தோட்டத்திற்கு வந்தவர்களுக்கு  பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது.

ஆம் தோட்டத்தில் விதைக்கப்பட்ட தினைப்பயிர் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் தலை தாழ்ந்து நின்று கொண்டிருந்தது. இதைக்கண்டதும்  விவசாயிக்கு முதியவர் மீது சந்தேகம் எழுந்தது. இருப்பினும் தாங்கள் கொணர்ந்த உணவை அருகில் உள்ள  கொன்றை மரத்தின் அடியில் வைத்து முதியவருக்கு பரிமாறினார்.

 முதியவர் சாப்பிடும் வரை பொறுமை காத்த தம்பதியினர் அவரிடம், 'ஐயா ! தாங்கள்  எங்கள் நிலத்தை உழுது முடித்த சிறிது நேரத்தில் தோட்டத்தில் பயிர் விளைந்து  அறுவடை நிலைக்கு தயாராக உள்ளது , இதைக்கண்டு நாங்கள் திகைப்படைந்து உள்ளோம் தாங்கள் யார் , இது எப்படி நடந்தது என்று கேள்வியை அடுக்கினர் .

இவ்வளவு கேள்விகளுக்கும் சிரிப்பு ஒன்றை மட்டும்  பதிலாக்கிய ஈசன்
தனது சுய உருவை  அவர்களுக்கு காட்டினார்.  அந்தக்காட்சியை கண்ட தம்பதியினர் ஆனந்த கூத்தாடினர். ஆம் சுய உருவைக்காட்டிய சிவன் அந்த தம்பதியினருக்கு முக்தியை அருளி அவ்விடத்திலேயே சிவலிங்கமாக எழுந்தருளினார்.

ஈசனே நேரில் வந்து வேலையாளாக பணி செய்து தினைப்பயிரை விளயச்செய்த தலம் என்பதால் இந்த ஊருக்கு 'திருத்தினை' என்று பெயர் வந்தது. கடலூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்.

இறைவன் சிவகொழுந்தீஸ்வரர் என்றும் , இறைவி ஒப்பில்லாநாயகி என்ற பெயருடன் தனி சந்நிதியில் அருளாட்சி செய்கிறாள். அம்பாளை கருதடங்கன்னி, நீலாம்பிகை என்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள். சுந்தரர் அம்பாளை குறித்தும் பதிகம் பாடியுள்ளார்.

விவசாயம் செழிக்கவும், நாட்டியத்தில் சிறக்கவும் இங்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் வேண்டுவர் , மேலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரங்கள் சாற்றி வழிபட்டால் அனைத்து பிரார்த்தனைகளும் கைகூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

சிவன் சுயம்பு லிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார், அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலப்பை பயன் படுத்தியதால்  அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.

பங்குனி மாதத்தில் 3 நாட்கள் சுவாமியின் மீது சூரிய ஒளி  விழுவது பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் காட்சி.

விஷ்ணு துர்கைக்கு தனி சந்நிதி உள்ளது. கோஷ்டத்தில் லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். நிறுத்த விநாயகர் படைப்புச் சிற்பமாக இருக்கிறார், அருகில் நான்கு பூதகணங்கள் அவரை வணங்கியபடி இருக்கின்றன. சிவன் உணவருந்திய கொன்றை மரம் பிரகாரத்தில் இருக்கிறது. இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர். கோவில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமையபெற்றது.

முன்பு தினமும் ஈசனுக்கு தினைப்பயிராய் நைவேத்தியமாக படைக்கும் வழக்கம் இருந்தது  தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் அவ்வழக்கம் நடைமுறையில் இல்லை. சிவனது உதவியாளராக இருந்து கணக்கெடுக்கும் பணியை செய்த சண்டிகேஸ்வரர் பல கோவில்களில் தனித்துதான் இருப்பார். அனால் இந்த கோவிலில் இவர் மனைவி சண்டிகேச்வரியுடன் இருக்கிறார்.

கோவிலுக்கு வெளியே 'ஜம்புவதடாக' தீர்த்தம் உள்ளது. முன்வினைப் பயனால் சாம்பு(கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இந்த தீர்த்ததில் நீராடி சாபவிமோசனம்  பெற்றதாக கூறப்படுகிறது. இதுவே இத்  தீர்த்ததிற்க்கு பெயர் காரணமாகவும் விளங்குகின்றது. இதில் நீராடி சுவாமியை வழிபட்டால் பாவங்கள் நீங்கும்.

சிறப்புத் தகவல்கள்:-  இந்த கோவிலில் நடராஜர், ஆனந்த தாண்டவ கோலத்தில் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.  அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதியபடியும் அருகில் பிரம்மதேவர் மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர்.  திருமாலும், பிரம்மதேவரும் வாசித்த இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இந்த காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது. நடன இசை பயில்பவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுவதால் இந்த கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.


No comments:

Post a Comment