Sunday, October 14, 2012

வறுமை நீக்கும் நிதீஸ்வரர்!

வறுமை நீக்கும் நிதீஸ்வரர்!





பதும நிதி, 
மகா பதுமநிதி, 
மகாநிதி, 
கச்சபநிதி, 
முகுந்த நிதி, 
குந்த நிதி, 
நீலநிதி, 
சங்கநிதி 

ஆகிய எட்டு வகையான நிதிச் செல்வங்களுக்கும் தலைவன் குபேரன். எனவே அவனுக்கு "நிதிபதி' என்ற பெயரும் உண்டு. குபேரன் வழிபட்டு வரம் பெற்றதாலே அன்னம்புத்தூர் கிராமத்தில் அருளும் ஈசனுக்கு "ஸ்ரீநிதீஸ்வர்' என்ற பெயரும் ஏற்பட்டது.

அடிமுடி காணா அண்ணாமலையில் ஈசனின் முடியைக் கண்டதாக கூறியதால் ஏற்பட்ட இழுக்கு தீர "நான்முகன்' இத்தலத்தில் தங்கி வழிபட்டு பரமனின் அருளைப் பெற்றார். "அன்னமூர்த்தி' "அன்ன வாகனன்' என்று பக்தர்களால் பூஜிக்கப்படும் நான்முகன், ஈசனிடம் அருள்பெற்ற திருத்தலம் என்பதால் "அன்னம்புத்தூர்' என்ற பெயர் ஏற்பட்டது.

பிரம்மாண்டமான லிங்கத் திருமேனியாக காட்சி தருகிறார் ஈசன். இவரை வழிபட பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கொடிய தோஷங்கள் நீங்கும். இல்லத்தில் வறுமை நீங்கி செல்வம் கொழிக்கும்.

இவ்வாறு தன்னை நாடும் பக்தர்களுக்கு எண்ணிலடங்கா செல்வங்களை வாரி வழங்கும் ஸ்ரீநிதீஸ்வரர், குடிசையில் இருப்பது பக்தர்களை வருந்த வைத்தது. கடந்த 2008ஆம் ஆண்டு திருக்கோயில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. கருவறை, மகாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவை பழமை மாறாமல் கருங்கற்களாலேயே புனரமைக்கப்பட்டு வருகின்றன. விமானம், பலிபீடம், துவஜஸ்தம்பம் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை எழுப்பப்பட உள்ளன. குபேரனுக்கும் பிரம்மனுக்கும் அருளிய ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டால் வற்றாத செல்வம் பெருகுமன்றோ!

அமைவிடம்: திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் வரகுப்பட்டு என்னும் கிராமத்தை அடுத்து வரும் சாலையில் வலது பக்கம் உள்ள சாலை வழியாக 4 கி.மீ. பயணித்தால் திருக்கோயிலை அடையலாம்.

மேலும் தகவலுக்கு 94430 44556.

No comments:

Post a Comment