Sunday, October 14, 2012

ஆலயம் நிறைந்த நல்லாத்தூர்!

ஆலயம் நிறைந்த நல்லாத்தூர்!






கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லாத்தூர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் "சின்னகாஞ்சிபுரம்' என்று அழைக்கப்பட்டது. இங்கே சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீதிரிபுர சுந்தரி சமேத சுவர்ணபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் ஆகியோர் தனித் தனி திருக்கோயில்களில் அருள்புரிகின்றனர்.

சுந்தரமூர்த்தி விநாயகரை "பேசும் பிள்ளையார்' என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். மாத சங்கடஹர சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி, வ
ிநாயகர் சதுர்த்தி ஆகியவை இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.

இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரிபுர சுந்தரி சமேத சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம். சாளர சக்கர அமைப்பு கொண்டது இக்கோயில். மூலவர் அக்னி சக்தி நிறைந்தவராக இருக்கிறார். இக்கோயிலில் ஹோமம், சாம்பிராணி தூபம், தீபம் ஏற்றி வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். பல்லவ சிற்றரசர்களால் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோயில். மஹா மண்டபத்தின் தெற்கு திசையில் மிக அழகாக கால சம்ஹார மூர்த்தியாகிய சிவபெருமானும், மார்கண்டேயரும் எமன் மற்றும் எம தூதர்களுடன் அமர்ந்துள்ள புடைப்புச் சிற்பம் காணக் காண அழகு. எனவே இவ்வூர் வட திருக்கடையூர் என்றும் அழைக்கப்படுகிறது. எம பயம் நீங்க, ஆயுள் விருத்தி ஹோமங்கள், ஷஷ்டி அப்தபூர்த்தி, பீமரதசாந்தி,சதாபிஷேகம் ஆகியவை இக்கோயிலில் பக்தர்களால் நடத்தப்படுகின்றன. இதற்கு நேர் எதிரே பாமா - ருக்மிணி சமேத கிருஷ்ணரை தரிசிக்கலாம்.

அடுத்து ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம். வரதராஜர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அபய, வரத ஹஸ்தம் தாங்கி சேவை சாதிக்கிறார். பெருந்தேவி தாயார், நெடிதுயர்ந்து நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
அர்த்தமண்டபத்தில் "திரிபங்கிராமர்' வீற்றிருக்கிறார். இவருக்கு அருகே ராமரின் சூரிய வம்சக் கொடியை ஏந்தி, வாய் மூடி பணிவாக அமர்ந்திருக்கிறார் விநய ஆஞ்சநேயர். பிராகாரத்தில் விஷ்ணு துர்க்கையை தரிசிக்கலாம். கருடாழ்வார் எட்டு நாகங்களுடன் காட்சி தருவது சிறப்பு.

இங்கே போகிப் பண்டிகையன்று ஸ்ரீஆண்டாள் கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டாள் மாலையை வாங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வருடமும் சீதா கல்யாணத்தின்போது காப்பு கட்டிக்கொண்டு செல்லும் இரு பாலருக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது.

ஆலயங்கள் நிறைந்த நல்லாத்தூர் சென்று நாமும் அனைத்து வளமும் பெறுவோம்.

தகவலுக்கு:90032 73368

No comments:

Post a Comment