முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா துவக்கம்!
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா,மும்மதத்தினர் பங்கேற்ற, ஒருமைப்பாட்டு உறுதிமொழியுடன் துவங்கியது. வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்றது முத்தாலம்மன் கோயில் தேர் விழா.
இதில் ஏழுநாட்கள் கலைவிழா நடைபெறும். இவ்விழாக்களில், அனைத்து சமுதாயத்தினரும் மத பாகுபாடின்றி கலந்து கொள்வது தனிச்சிறப்பு. இதன் துவக்க விழா நேற்று முன்தினம் கலக்டர் ஹரிஹரன் தலைமையில், சாதி, மத, நல்லிணக்க ஒருமைப்பாட்டு உறுதிமொழியுடன், கோலாகலமாக துவங்கியது. மும்மதங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.கலக்டர் ஹரிஹரன் சமுதாய ஒற்றுமை சீரழிந்துவரும், இந்த காலகட்டத்தில்,இதுபோல் சமுதாய ஒற்றுமையை வளர்த்து, பேணிகாக்கும் விழாக்கள் அவசியம். இதுபோன்ற விழாவில் கலந்து கொள்வதே பெருமையான விஷயம்,என்றார். இந்து சமய இணை ஆணையர்தனபால்,"" சமுதாய நல்லிணக்கத்தோடு, 60 ஆண்டுகளாக விழா நடப்பது மிகவும் பாராட்டுக்குறியது. இப்பகுதி மக்கள் ஒற்றுமையோடு வாழ, இவ்விழா ஒரு கருவியாக உள்ளது,என்றார். பாதிரியார்டேவிட் ,"" மதநல்லிணக்க உறுதிமொழி எடுத்து ,ஒரு விழா துவங்குவது இதுவரை எங்கும் நடந்ததில்லை. இயேசு, மக்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகத்தான், மக்களுக்கு வந்த துன்பங்களை தாங்கிக்கொண்டு, தன்னையே அர்ப்பணித்தார். அதேநோக்கத்தை மனதில் கொண்டுதான் இந்த விழாவும் நடத்தப்படுகிறது,என்றார். தொண்டை மருத்துவக்கழக மாநில தலைவர் டாக்டர் சையத்பாசுதீன்,""நான் முஸ்லிமாக இருந்தாலும், இந்த பக்தசபாவில் ஒரு உறுப்பினராக இருப்பதிலும், விழாவில் கலந்து கொள்வதையும் பெருமையாக கருதுகிறேன். இன்று நாட்டில் நல்லது நடக்கிறது என்றால் அது நாம் கடவுள் மீது வைக்கும் நம்பிக்கைதான்,என்றார்.முன்னதாக கலக்டர் ஹரிஹரன் உறுதிமொழி வாசிக்க, பொதுமக்கள், அதிகாரிகள் அனைவரும், உறுதிமொழி எடுத்தனர். காந்திய இயக்க மாநில தலைவர் கரம்சந்த் நல்லுசாமி வரவேற்றார். பக்தசபா செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment