Saturday, October 6, 2012

பக்தனின் நிலையறிந்து உதவுபவன்!

பலன்தரும் பரிகாரத் தலம்: பக்தனின் நிலையறிந்து உதவுபவன்!



அசுரன் சோமுகன். அனைவரையும் கலங்கடித்தான். பூமியில் தர்மம் தழைத்தோங்குவதற்கும், தேவர்கள் பலம் பெறுவதற்கும் காரணம் வேதங்களே என்பதை உணர்ந்தான். பூமியில் வேதங்களை ஓதி, அவிர் பாகம் அளித்து தேவர்களை பலம் பெறச் செய்வதற்கு முனிவர்களும் தவசீலர்களும் துணை புரிவதைக் கண்டான். எனவே, ஒட்டுமொத்தமாக தேவர்களையும் தர்மங்களையும் முடக்க ஒரே வழி, அந்த வேதங்களை அபகரிப்பதுதான் என்று தீர்மானித்தான்.

வேதங்களைக் கொண்டிருந்த பிரம்ம தேவன் அசந்து போன நேரத்தில், வேதங்களைத் திருடிக் கொண்டு போனான் சோமுகன். அதனுடன் வேத சாஸ்திரங்களும், ஞானமும் படைக்கும் திறனும் களவு போயின.
இதனால் பெரு வருத்தம் கொண்ட பிரம்ம தேவன், இழந்தவற்றை மீண்டும் பெற காக்கும் தெய்வம் நாரணனை, ஸ்ரீவைகுண்ட நாதனைத் துதித்து பரணிக் கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி தவத்தில் ஈடுபட்டார்.
அவரது தவத்துக்கு இரங்கிய ஸ்ரீவிஷ்ணு, அவரது வேண்டுகோளை நிறைவேற்றுவதாகவும், வேதங்களை மீட்டுத் தருவதாகவும் கூறினார். பின்னர் பிரம்மனின் வேண்டுகோளை ஏற்று, அதே தலத்தில் ஸ்ரீவைகுண்டநாதனாகக் கோயில் கொண்டார்.

தாமிரபரணி பாயும் வளமான மண்ணில் சிறப்பாகத் திகழ்கின்றன சைவ, வைணவக் கோயில்கள். திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது ஸ்ரீவைகுண்டம் திருத்தலம். ஆற்றின் மறுகரையில் உள்ள இந்தக் கோவிலில் இருந்துதான் நவதிருப்பதி ஆன்மிகச் சுற்றுலாவும் துவங்குகிறது.
நவதிருப்பதிகளில் முதல் திருப்பதி இது. நவகிரகங்களில் சூரியனுக்கு உரிய தலமாகத் திகழ்கிறது. இந்திர விமானத்தின் கீழ் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார்.

மூலவர் திருநாமம் ஸ்ரீவைகுண்டநாதன். ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்கள் கொண்டு மார்பில் மகாலட்சுமியுடன் அருள்புரிகிறார். உபய நாச்சிமார் இன்றி ஸ்ரீவைகுண்டநாதனாய்க் காணும் கோலம் இங்கே.


உற்ஸவர் ஸ்ரீ சோரநாதர் (ஸ்ரீ கள்ளபிரான்), ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தரிசனம் அருள்கிறார். அருகே ஸ்ரீவைகுண்ட நாச்சியார், ஸ்ரீசோரநாத நாச்சியாருடன் அருள்பாலிக்கிறார். இங்கே, தல விருட்சம்- பவளமல்லி. பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம், தாமிரபரணி ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. 9 நிலையுடன் கூடிய 110 அடி உயர ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது.
ஒரு முறை ஸ்ரீவைகுண்டம் நகரில் காலதூஷகன் என்ற திருடன்... நண்பர்களுடன் திருட்டுத் தொழிலை செய்து வந்தான். திருடச் செல்லும் முன் ஸ்ரீவைகுண்டநாதனை தரிசித்து வேண்டிக் கொண்ட பிறகே, திருட்டுத் தொழிலுக்குச் செல்வான். அப்போது யார் கண்ணிலும் படாமலும், யாரிடமும் பிடிபடாமலும் இருக்க வேண்டும் என்றும், திருடிய பொருளில் பாதியை உன் சந்நிதியில் சேர்த்து விடுகிறேன் என்றும் வேண்டிக் கொள்வான். அவ்வாறே தான் திருடியவற்றில் பாதியை பெருமான் சந்நிதியில் வைத்தான். மீதமுள்ளவற்றை தன் சகாக்களுடன் கலைஞர்கள், ஏழைகளுக்கு தான தர்மங்களாக செய்து வந்தான்.

ஒருமுறை அரண்மனையில் திருடச் சென்றான். அப்போது இவன் மட்டும் தப்பி ஓடி வந்துவிட்டான். ஆனால், இவனது சகாக்கள் காவலாளிகளிடம் மாட்டிக் கொண்டனர். அவர்கள் மூலம் காலதூஷனைப் பற்றி அறிந்த அரசன் அவனைப் பிடித்து வர உத்தரவிட்டான். அதை அறிந்த காலதூஷகன் ஸ்ரீவைகுண்டநாதனை சரணடைந்து, தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினான்.

அவனது வேண்டுகோளை ஏற்ற ஸ்ரீவைகுண்டநாதன் அரசவைக்கு காலதூஷகன் வேடத்தில் சென்றார். அரசனுக்கு தர்மத்தைப் போதித்தார். "தர்மத்தைச் செய்வித்து நீ குடிமக்களைக் காக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் அதை உனக்கு உணர்த்தவே இந்தத் திருவிளையாடலை நடத்தினேன்' என்றார். அதன் பின்னர், அரசனுக்கும், திருடனான காலதூஷகனுக்கும் பெருமாள் காட்சியளித்து அருளினார். திருடன் வேடத்தில் வந்ததால் பெருமாளுக்கு ஸ்ரீகள்ளபிரான் (சோரநாதன்) எனப் பெயர் ஏற்பட்டது.காலப் போக்கில் பெருமாளின் கோவில் மண்ணில் புதையுண்டு போனது. அப்போது மேய்ச்சலுக்கு வந்த பசுக் கூட்டத்தில் ஒரு பசு வைகுண்டநாதர் இருக்கும் இடத்துக்கு நேர் மேலே தன் பாலை சுரக்குமாம். இது பெருமாளுக்கு செய்யும் திருமஞ்சனத்தைப் போன்றது. இதை அறிந்த மன்னன் பயபக்தியோடு பூமியைத் தோண்டிப் பார்த்தான். அப்போது, ஸ்ரீவைகுண்டபதியைக் கண்டு ஆனந்தமடைந்தான். ஸ்ரீவைகுண்டநாதனப் பெருமாளை எடுத்து பெரிய சந்நிதியை கட்டுவித்து தினந்தோறும் பாலால் திருமஞ்சனம் செய்வித்தான். பெருமாள் கோவிலில் தினமும் திருமஞ்சனம் நடைபெறுவது அபூர்வம்தான். அந்த வகையில் இங்கே தினமும் பெருமாளுக்கு பால் திருமஞ்சனம் நடைபெறுகிறது. மேலும் இங்கே இரண்டு தாயார்களுக்கு தனித்தனி சந்நிதியும், நரசிம்மர் சந்நிதியும், கோதண்ட ராமர் சந்நிதியும் உள்ளன.

இங்கு வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்ஸவத்தில் ஸ்ரீ கள்ளபிரான், ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான், ஸ்ரீ விஜயாசனம், ஸ்ரீ காசினி சேந்தர் போன்ற எம் பெருமான்கள் கருட வாகனத்திலும் ஸ்ரீ நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாகும்.

சித்திரை, ஐப்பசி மாத பெüர்ணமி தினத்தன்று சூரியனின் கதிர்கள் பெருமாளின் திருவடிகளை பணிந்து எழும். இதற்காக இக்கோவில் கொடிமரம் சற்று விலகியுள்ளது. இங்கே வந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு சகல பாவங்களும் நீங்கி பரிபூரண கடாட்சம் கிடைக்கும். தாயாருக்கு திருமஞ்சனம் செய்வித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும்.

தலத்தின் பெயர் : ஸ்ரீவைகுண்டம்
அம்சம் : சூரியன்
மூலவர் : வைகுண்டநாதன்
உற்ஸவர் : கள்ளர்பிரான்
தாயார் : வைகுண்டநாயகி

வழி : திருநெல்வேலி திருசெந்தூர் சாலையில் திருநெல்வேலியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

 திறக்கும் நேரம்: காலை 07 - 12 மாலை 5 - 8.

No comments:

Post a Comment