Friday, October 12, 2012

தசாவதாரக் கோயில்

கிரகதோஷத்தை நீக்கும் தசாவதார கோவில்

திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது அருள்மிகு தசாவதாரக் கோயில்.

பெரியவர்களின் சொல்லே பெருமாளின் சொல்

“பெரியோர்கள் கூறுவது பெருமாள் கூறுவது போல” என்பார்கள். காரணம் அவர்கள், நல்லது-தீயது என பல அனுபவங்களை பெற்று இருப்பார்கள். வெற்றி, தோல்விகளை சந்தித்து இருப்பார்கள். வெற்றிக்கான காரணம் எது?-தோல்விக்கான காரணம் எது என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் தங்களின் அனுபவத்தை எடுத்துச் சொல்லி மற்றவர்களை சரியான பாதையில் செல்ல வழி சொல்வார்கள். அதனால்தான் “பெரியவர்களின் சொல், பெருமாளின் சொல்” என்கிறார்கள். ஸ்ரீமந் நாராயண பெருமாள், கிருஷ்ணஅவதரம் மட்டும் எடுத்து மக்களுக்கு அறிவுரை கூறவில்லை. நமக்காகவே-நம் நன்மைக்காகவே அவதாரங்கள் எடுத்து வந்தவர். அதனால் அவருக்கு அனுபவம் ஜாஸ்தி.

“எப்போது உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மத்தின் கை ஓங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து தர்மத்தை காப்பேன்.” என்பது பகவானின் வாக்கு. பெருமாளின் அவதாரங்கள் பத்து. அதுவே “தசாவதாரம்” என்கிறோம்.

அவை, 

மச்சவதாரம் – 
கூர்மா அவதாரம் – 
வராக அவதாரம் – 
நரசிம்மா அவதாரம் – 
வாமன அவதாரம் – 
பரசுராம அவதாரம் – 
ராமவதாரம் – 
பலராம அவதாரம் – 
ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் – 
கல்கி அவதாரம் 

ஆகிய பத்து அவதாரங்கள் உள்ளன. இதில் இன்னும் கல்கி அவதாரத்தை பெருமாள் எடுக்கவில்லை. அதாவது, இந்த கலியுகத்தில் தர்மம் இன்னும் அழியவில்லை. அது கொஞ்சமாவது இருக்கிறது.

ஆகவே, பெருமாளின் அவதாரங்கள் உலக மக்களின் நன்மைக்காகவே ஏற்படுகிறது.

கோவில் உருவான கதை

பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார், நமக்கு பெருமாள் பாசுரங்களை இயற்றி தந்தார். அவர் வாழ்வில் ஒரு சம்பவம். ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம், திருமதில் சுவர் போன்ற கோவிலுக்கு தேவையான திருபணிகளை செய்து கொண்டு இருந்தார். எம்பெருமாள் என்று அவர் மனம் எப்போதும் உச்சரித்து கொண்டே இருக்கும். எந்த நாளும்-நேரமும், கோவில் திருப்பணி, பெருமாளுக்கு சேவை – பெருமாளின் திருநாமம் உச்சரிப்பது என்றே அவர் வாழ்வாக அமைந்திருந்தது.

திருமங்கையாழ்வாரின் பக்தியை கண்ட பெருமாள் மகிழ்ச்சியடைந்து, “தன் நலத்தைவிட எமக்கு சேவை செய்வதே பெரும் கடமை என்றிருக்கும் திருமங்கையாழ்வாரை நேரில் சந்திக்கவேண்டும்” என்று ஆவல் கொண்டு, திருமங்கையாழ்வாரை சந்திக்க வந்தார் பெருமாள்.

திருமங்கையாழ்வார் கொள்ளிடம் ஆற்றங்கரையிலுள்ள இடத்தில் இருந்ததால் ஸ்ரீனிவாசபெருமாள் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு சென்று திருமங்கையாழ்வாருக்கு அருட்காட்சி தந்தருளினார்.

பெருமாளை கண்ட ஆழ்வார் பெரும் மகிழ்ச்சியடைந்து, “பெருமாளே…ஸ்ரீமந் நாராயணா.. நான் என்ன பாக்கியம் செய்திருந்தால் எனக்கு நீங்கள் நேரிலே காட்சி தந்திருப்பீர்கள். அடியேனுக்கு ஒரு விருப்பம். எனக்காக தாங்கள் பத்து அவதாரமான தசாவதார சொரூபமாக காட்சி தந்தருள வேண்டுகிறேன்.” என கேட்டுக் கொண்டார்.

“எம் பக்தர்களின் விருப்பமே எமது விருப்பம்” என்ற பெருமாள், தசாவதாரங்களாக தோன்றி மறைந்தார்.

பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு தசாவதாரத்தை காட்டி அருளிய இடம் கொள்ளிடம் ஆற்றங்கரை என்பதால் அந்த இடத்திலேயே பெருமாளுக்காக தசாவதார திருக்கோவிலை கட்டினார் திருமங்கையாழ்வார்.

கிரகதோஷத்தை நீக்கம் கோவில்

இங்குள்ள தசாவதார கோவிலில் உள்ள சிறப்பு என்னவென்றால், கிரகதோஷத்தை நீக்கும் ஆற்றல் படைத்தவர். ஒருவருடைய ஜாதகத்தில் ஏதேனும் கிரகம் சரியில்லாமல் இருந்தால் தசாவதாரம் கொண்ட இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால், தம்முடைய பக்தர்களுக்கு கிரகங்களால் நேரும் ஆபத்தை தடுப்பார் பெருமாள் என்கிறது ஸ்தலபுராணம்.

திருமால் பெருமைக்கு நிகர் ஏது. அதனால் தசாவதார கோவிலுக்கு சென்று பக்தியுடன் பெருமாளை சேவித்து கிரகதோஷத்தில் இருந்த விடுபட்டு அருள் பெறுவோம்.

‘ஓம் நாராயணாய வித்மஹே
வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்’
ஓம் நமோ நாராயணாய

No comments:

Post a Comment