திருப்பரங்குன்றத்தில் இன்று வேல் எடுக்கும் திருவிழா!
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், இன்று(அக்., 12) மலை மீது வேல் எடுக்கும் திருவிழா நடப்பதால், மூலவர் கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் நடக்காது.
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், மூலஸ்தானத்தில் எழுந்தருளிய மூலவர் மலை அடிவாரத்தை குடைந்து வடிவமைக்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வரும் பால், பன்னீர், சந்தனம் போன்றவைகளால், மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு தான் அபிஷேகம் நடக்கும்.இன்று காலை மூலவர் கரத்திலுள்ள வேல், சகல மரியாதையுடன், பல்லக்கில் வைத்து மலை மீது கொண்டு செல்லப்படும். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரேவுள்ள வற்றாத சுனை தீர்த்தத்தில், பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுப்பிரமணியர் கரத்தில் சாத்துப்படியாகும்.
பூஜைகள், தீபாராதனைகள் முடிந்து, கிராமத்தினர் சார்பில் கதம்ப சாதம் பிரசாதம் வழங்கப்படும், மாலையில் மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, பழனி ஆண்டவர், வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து, தீபாராதனைகளுக்குப் பின், இரவு பூ பல்லக்கில் வீதி உலா நடக்கும். பின் மூலவர் கரத்தில் வேல் மீண்டும் சேர்ப்பிக்கப்படும். மலை மீது வேல் எடுக்கும் விழா நடப்பதால், இன்று மட்டும் வேலுக்கு அபிஷேகம் நடக்காது.
No comments:
Post a Comment