Friday, October 19, 2012

வெற்றியை வாரி வழங்கும் வீரியம்மன்

வெற்றியை வாரி வழங்கும் வீரியம்மன்


தாயகமாம் தமிழகத்தில் சங்க காலம் முதல் சக்தி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தீய சக்திகளை அழிப்பவள் துர்க்கை. சிவபெருமானின் அருளைப்பெற்ற அவள் எல்லோருக்கும் தாயைப்போன்றவள்.


கோபப்படும்போது துர்கயாகவும், செல்வத்தை வாரி வழங்கும் பொது லட்சுமியாகவும், கல்வியை அளிப்பதில் சரஸ்வதியாகவும் திகழ்பவள். இந்த தேவியின் மகிமை பற்றி தேவிமகாத்மீயம் கூறுகின்றது


மதுகைடவர், மகிஷாசுரன், கண்டமுண்டன், ரத்தவீசன், கம்பிநிகும்பன் இவர்களை போரிட்டு அழித்தவள் அதனால் அவளுக்கு சாமுண்டேஸ்வரி என்ற பெயர் உண்டு. 'சர்வ மங்கல மாங்கல்யே......' என எல்லாவிதமான செல்வங்களையும் கொடுப்பவள்.


இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பது முறையே பார்வதி, லட்சுமி, சரஸ்வதியை குறிக்கும். கவுரி, சாமுண்டேஸ்வரி, காளிகாம்பாள் என்னும் மூன்று சக்தி தெய்வங்களும் சேர்ந்த ஒரு சக்தி தெய்வம் வீரியம்மன். எட்டுத் திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அவள் அசுரனை கீழே தள்ளித் திரிசூலத்தால் சம்காரம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறாள்.


சிவன் தனது அக்கினிக் கண்ணின் அம்சமாகவும், நீல கண்டத்தில் இருக்கும் ஆலகால விஷம் இரண்டையும் கலந்து வீரியம்மனை படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நிகழ்ச்சியை திருநாவுக்கரசர் நினைவுகூர்ந்து 'வேலார் கை வீரியை முன் படைத்தார்' என்று குறிப்பிடுகிறார்.


மகாகவி பாரதி விண்ணும், மண்ணும் தனி ஆளும் எங்கள் வீரசக்தி என்கிறார்.


வீரியம்மன் நிறைய செல்வங்களை கொடுப்பாள், வசீகரமான அழகைக் கொடுப்பாள். நாம் என்னும் காரியங்கள் எல்லாவற்றையும் வெற்றி பெறும் படியாக செய்வாள்.


வீரியம்மனுக்கு தனிச்சன்னிதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்பனந்தாளில் உள்ளது. பதினாறு கரங்களைக் கொண்ட யட்சர் குலப் பெண்ணாகிய தாடகா தேவி என்னும் சிவா பக்தை அருண ஜடேஸ்வரர் ஆலயத்தின் வடக்கு வீதியில் வீரியம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.


வீரியம்மனின் புன்னகை தவழ அருள் பொழியும் திருமுகமும், வீரம் கொப்பளிக்க துட்டனை சம்காரம் செய்யும் திருக்கரமும், இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டிருக்கும் அழகு தோற்றமும் பக்தர்களை பரவசப்படுத்தும்.


அம்பாளுக்கு தனியாக உள்ள கோவில்களில் பலவற்றில் இல்லாத சிறப்பாக யாக சாலை, திருக்குளம், திருத்தேர் முதலியன இந்த கோவிலுக்கு உண்டு. பைரவர் பரிவார தேவராக தனிச்சன்னதியில் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சமாகும்.


பங்குனி உத்திரத்தையொட்டி 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். 8 நாட்கள் இரண்டு வேளையும் அம்பாள் திருவீதி உலா வந்து , 9 வது நாள் தேரில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சி தருவாள். பங்குனி உத்திரத்தன்று குளத்தில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.


வீரியம்மன் கோவில் காசி மடத்திற்கு சொந்தமானது.


நவராத்திரியின் பொது 9 நாட்களிலும் இங்கு அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார , ஆராதனைகள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடது மகிழ்வார்கள்.


வழித்தடம்:- தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பனந்தாளில் இந்த தலம் உள்ளது.