Friday, October 19, 2012

நவராத்திரி ஐந்தாம் நாள்

நவராத்திரி ஐந்தாம் நாள்  வழிபாட்டு முறை 



நாளை(அக்.20ல்)அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழிபட்டால் செல்வவளம் பெருகும். நாளை மதுரை மீனாட்சியம்மன் "மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். மலையத்துவஜ பாண்டியனும், அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திரபாக்கியம் இல்லாமல் வருந்தினார். அந்தணர்களை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். யாகத்தின் பயனாக உமையவளே யாகத்தீயில் தோன்றினாள். அவளுக்கு தடாதகை என பெயர் சூட்டினர். அவளது கண்கள் மீன் போல் இருந்ததால், மீனாட்சி எனப்பட்டாள். அவளுக்கு வில்பயிற்சி, வாள்பயிற்சி, குதிரையேற்றம் தந்து இளவரசியாக்கினார். அவள் அஷ்டதிக்குகளும் நடுங்கும்படியாகப் போருக்குப் புறப்பட்டாள். மீனாட்சியின் வீரத்தைக் கண்டு மன்னர்கள் அஞ்சினர். எல்லாரையும் வென்றபிறகு, ஈசன் ஆளும் கயிலாயமலையையும் பிடிக்கச் சென்றாள். தேவியின் பராக்கிரமத்தைக் கண்ட நந்தியம்பெருமான் பயந்துபோய் சிவபெருமானை துணைக்கு அழைத்தார். அஷ்டதிக்குகளையும் வென்ற உமையவள், ஈசனைக் கண்டதுமே பெண்மைக்கே உரிய நாணம் கொண்டாள். வீரத்தால் உலகை வென்ற அம்பிகை, நாணத்தால் உலகாளும் ஈசனை வென்றாள். நாமும் அனைத்து செயல்களிலும் வெற்றிவாகை சூடி முதலிடம் பிடிக்க அம்பாளை வணங்கி வருவோம்.

நாளைய நைவேத்யம்: கல்கண்டு சாதம்
தூவ வேண்டிய மலர்: பிச்சிப்பூ

பாட வேண்டிய பாடல்:

அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே!
ஆலவாய் ÷க்ஷத்ர ஒளியே உமையே!
வருவினை தீர்க்கும் ஜெகத்ஜனனி நீயே!
வைகைத் தலைவியே சரணம் தாயே!

No comments:

Post a Comment