வாரம் ஒருபாடல்: நீராட வாராய் கண்ணா!
தமிழின் சிற்றிலங்கியங்களில் ஒன்றாக பிள்ளைத் தமிழைக் கூறுவார்கள். தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழாக பெரியாழ்வாரின் திருமொழியைச் சொல்வர். இதில், கண்ணனைக் குழந்தையாக எண்ணி பிள்ளைத் தமிழ் இலக்கியப் பருவங்களை வைத்து ஆழ்வார் பாடியுள்ளார். இந்தப் பாடல் "நீராட்டம்' என்னும் பிரிவில் வருகிறது.
"கறந்த நற்பாலும் தயிரும்
கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்
என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய்''-
கண்ணனை நீராட அழைக்கிறார் தாய் யசோதை. ஆனால், கண்ணனோ வர மறுக்கிறான். என்ன காரணம்? தாயாரின் மீதான கோபமோ? அப்படித்தான் எண்ணிக் கொள்கிறாள் யசோதை. காரணம் தன் குழந்தையைப் பற்றி மற்ற ஆய்ச்சிமார் முன்னிலையில், கண்ணன் வெண்ணெய் திருடித் தின்கிறான் என்று சொல்லும்போது, கண்ணனின் மனம் வேதனைப் பட்டதாம். "இந்தக் கண்ணன் இந்த வீட்டில் பிறந்த பிறகு நான் உறி மேல் வைத்திருந்த வெண்ணெய், நல்ல பால், தயிர் என்று எதையும் முழுதாகப் பெறவில்லை. அதை எல்லாம் அவன் முன்பே பதம் பார்த்து விடுகிறான். இவ்வாறெல்லாம் கண்ணா நான் பிற ஆய்ச்சிமாரிடம் பேசினால், உன் மனம் வேதனைப் படும். நம்மைப் பற்றி நம் தாயாரே இப்படிச் சொல்கிறாரே என்று. எனவே, கண்ணா... நான் மறந்தும் பிறர் முன்னே உரையாட மாட்டேன். தயவுடன் நீராட வாராய்' என்று அன்னை கண்ணனை நீராட்ட அழைக்கிறார். இவ்வாறு பெரியாழ்வார் தாமே அன்னை யசோதையாக எண்ணி, கண்ணனை அழைத்தல் சிறப்பு.
No comments:
Post a Comment