Saturday, September 22, 2012

கருணைக் கடலான இறைவன்!

கருணைக் கடலான இறைவன்!



வைணவப் பெரியவர் பராசரபட்டர் ஒரு முறை தம் சீடரான நஞ்சீயருடன் திருவாணையாடித் திரும்பும்போது அஸ்தமனமாகி விட்டது. ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.

ஒரு வேடனின் குடிசையிலே தங்கினார். வேடன் அவரை வணங்கி அவர் அமர்வதற்கு ஒரு கட்டிலைத் தந்தான். அதில் அமர்ந்ததும் அவர் தம் சீடரை நோக்கி, ""இவன் நம்மை நம் வைபவம் அறிந்து வரவேற்று உபசரிக்கவில்லை. நம்மால் பெற்ற உபகாரத்துக்காக செய்தானென்பதும் இல்லை. நாம் இவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பின் எதற்குச் செய்தான்? நாம் இவனது குடிசையிலே புகுந்தோம் என்பதற்காகச் செய்தான். நம்மிடம் இவனுக்கு ஏற்பட்ட அன்பினால் செய்தான். இப்படித்தான் பகவானும் தன்னுடைய அபிமானத்தில், ஒதுங்கி இருப்பவர்களுக்கு அருள் செய்கிறான்'' என்றார்.

பட்டர், பின் வேடனைப் பார்த்து, ""இந்த ஊரில் ஏதேனும் விசேஷம் உண்டோ?'' என்றார்.

அவனும் "உண்டு' என்று சொல்லித் தனக்கு அன்று நேர்ந்த அனுபவத்தைப் பணிவுடன் சொல்லலானான். ""நான் காட்டில் இன்று வேட்டைக்குப் போனேன். அங்கே ஒரு முயல் குட்டியைப் பிடித்தேன். தாய் முயல், வழியிலே என் முன்னே வந்து என் தயையை நாடி நின்றது. அதன் தாயுள்ளத்தை உணர்ந்தேன். என் உள்ளம் இரங்கியது. அந்தக் குட்டியை அதனிடத்தே விட்டு விட்டேன். வெறுங்கையுடன் வீடு திரும்பினேன்'' என்றான். அவனது முகத்தில் ஒரு மலர்ச்சி இருந்தது. பேரறிவு பெற்ற ஒரு பண்பாளனின் அருங்குணம் அவனிடம் காணப்பட்டது. பட்டரும் வேடனைப் பாராட்டினார்.

அந்த முயலுக்கு, "என் ஒருவனையே சரணம் அடை' என்ற சரணாகதி தத்துவத்தை யாரும் உபதேசிக்கவில்லை. எதிரிகளுக்குள் ஒருவன் பயந்தவனாகவோ பயமற்றவனாகவோ சரணம் அடைந்துவிட்டால், மற்ற எதிரி நன்னெஞ்ச முடையவனானால் உயிரையும் கொடுத்து அவனைக் காக்க வேண்டும் என்னும் கோட்பாடும் வேடனுக்கு தெரியாது. முயலின் சரணாகதியும் வேடன் அதனைக் காத்ததும் அறிவினாலோ உபதேசத்தினாலோ ஏற்படவில்லை. அவை அன்பில் விளைந்து அறியாமையிலே தற்செயலாய்

மலர்ந்தவையே.

எளிய பிராணியாகிய முயல் சரணாகதி ஒன்றே தனக்காகும் என்பது போலக் கொலைத் தொழில் புரியும் வேடனையே தன் குட்டிக்காக நாடியது. அவனும் மனமிரங்கி அதைக் காக்க உளங்கொண்டு முயல் குட்டியை விட்டுவிட்டான். அப்படியிருக்க ஆறறிவு படைத்த மனிதன் எல்லாம் வல்ல, கருணைக் கடலான இறைவனைச் சரணாகதியடைந்து பற்றினால் நலம் பல பெற முடியுமல்லவா?

No comments:

Post a Comment