Sunday, September 23, 2012

இரண்டு கண்கள்!

இரண்டு கண்கள்!



ஆதி சங்கரர் கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை திருத்தல யாத்திரை செய்து அத்வைதத்தை நிலை நிறுத்தியவர். சிவ பரம்பொருளின் தனி மகிமையை எடுத்துரைத்தும், தர்க்கம் புரிந்தும் பண்டிதர்கள் பலரை வென்றவர்.

ஒருமுறை அவர் காஷ்மீரத்தில் வாழ்ந்து வந்த பண்டிதர்களிடம் நெடுநேரம் வாதம் செய்து களைப்படைந்துவிட்டார். அன்று நல்ல வெயில். மலைச் சாரலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து சிவ தியானம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு சிறுமி "மோர் மோர்' என்று கூவிக் கொண்டு வந்தாள். ஆதி சங்கரர் அந்தச் சிறுமியைப் பார்த்து ""அம்மா உடம்பு களைப்பாக இருக்கிறது. கொஞ்சம்கூட சக்தியில்லை; கொஞ்சம் மோர் தருகிறாயா?'' என்று கேட்டார். அந்தச் சிறுமி மென்மையான புன்னகையுடன் ""சரிதான்... நீங்கள் எப்போதும் சிவம் சிவம் என்று சொன்னால் உங்களுக்கு சக்தி எங்கிருந்து வரும்?'' என்று கூறி மோர் கொடுத்து, பின் மறைந்துவிட்டாள். சங்கரருக்கு பொறி தட்டியது. ""இத்தனை ஆண்டுகளாக சிவத்தையே தியானித்தும் பேசியும் வந்தேன். இனியேனும் சிவத்தின் பாதியான சக்தியைப் பாட வேண்டும் என்று நினைத்தார். தேவி அருளால் ""ஸெளந்தர்ய லஹரி' என்ற தோத்திரத்தை திருவாய் மலர்ந்தார்.

ஏறக்குறைய ஐம்பது ஸ்லோகங்கள் பாடினார். அந்த ஸ்லோகங்களின் பக்தி ரசம் கண்டு மகிழ்ந்த அம்பிகை தன் பங்குக்கு மேலும் ஐம்பது ஸ்லோகங்களை சொல்லி ùஸளந்தர்ய லஹரியை பரிபூரணமாக ஆக்கினாள். சேயும் தாயும் உயிர்க்கும் உயிராய் இருந்து பாடிய "ஸெளந்தர்ய லஹரி' அம்பிகை தோத்திர நூல்களில் சிகரமாக விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் ஸெளந்தர்ய லஹரி! தமிழில் அபிராமி அந்தாதி! இரு நூல்களும் இரு கண்கள். "சிவம் அமைதி, சக்தி இயக்கம்' என்பார்கள். ""சக்தியிருந்தால் செய்; இல்லையேல் சிவனே என்று கிட'' என்னும் பழமொழியை மறக்க இயலுமா?

No comments:

Post a Comment