Tuesday, September 25, 2012

மன உறுதி தரும் சண்டிகேசுவரர்

மன உறுதி தரும் சண்டிகேசுவரர்




சோழ நாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு
எச்சத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர்.  இவர்கள்
புதல்வர் விசாரசருமன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவர்.

பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள்
இவரை தங்கள் உயிராக கருதின மாடு மேய்க்க செல்லும் இடத்தில்
மணலை குழைத்து சிவலிங்கம் வடிப்பார் விசாரசருமன்.

மேய செல்லும் பசுக்கள் அதன் மேல் பாலை சுரந்து அபிஷேகம்
செய்யும். சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும்
தங்கள் எஜமானர்களுக்கு பாலையும் கொடுத்தன.

ஒருமுறை அவ்வூர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது
பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டு ஊருக்குள் போய்
விசாரசருமனின் செய்கை பற்றி கூறினான். மாட்டின் எஜமானர்கள்
இதுகுறித்து எச்சத்தனிடம் சொல்லி மகனை கண்டிக்கும்படி
கூறினார்.

உண்மையை அறிய ஒருநாள் மாட்டு மேய்க்கும் இடத்துக்கு வந்து
மறைந்து இருந்து கவனித்தான் எச்சத்தன். அந்த இளைஞன்
சொன்னது போலவே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை
சொரிந்தன. விசாரசருமன் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில்
இருந்தான்.

எச்சத்தனுக்கு கோபம் வந்து விட்டது. வேகமாக மகன் அருகே
வந்து அவனை உதைத்து கண்டித்தான். மேலும் மணல் லிங்கத்தையும்
காலால் மிதித்து சிதைத்து விட்டான்

இதனால் கோபம் அடைந்த மகன் தன கையில் இருந்த குச்சியை
அவர் கால் மீது எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக
மாறி அவரது காலை காயப்படுத்தியது.

தன்மேல் இந்தளவு பக்திகொண்ட விசாரசருமன் பார்வதி தேவியுடன்
சிவன் தோன்றினார். எச்சத்தன் காயம் மறையும்படி செய்தார்.

விசாரசருமனுக்கு சிவகணங்களை நிர்வாகம் செய்யும் சண்டிகேச
பதவியை வழங்கி, தனக்கு சூட்டப்படும் மாலை நைவேத்தியம்
ஆகியவை அவருக்கே தினம் வழங்கப்படும் என அருள்பாலித்தார்.

இப்போதும் சிவனுக்கு அணிவித்த மாலையே சண்டிகேஸ்வரருக்கு
அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.  சிவன் கோவிலுக்கு வருபவர்கள்
சண்டிகேஸ்வரரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு
வந்த பலன் கிடைக்காது என்பது நீண்ட கால நம்பிக்கை.

சண்டிகேஸ்வரர் சிவா தியான நிலையல் இருப்பவர். இவர் முன்
பலர் கைத்தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர்.  இவ்வாறு செய்தால்
இவரது தியானம் களையும் என்பது ஐதீகம். இனிமேல் அவர் முன்
கைதட்டி வணங்காமல் அமைதியாக வணங்குங்கள்.

மேலும் சண்டிகேஸ்வரர் முன் கைகளில் ஒன்றும் எடுத்து செல்லவில்லை
என்று கைகளை துடைத்து காண்பித்து செல்வதும் வழக்கத்தில் உள்ளது
"சிவசொத்து குல நாசம்" என்பது ஆன்றோர் வாக்கு.

சண்டிகேஸ்வரரை வணங்குபவர்களுக்கு மன உறுதியும், ஆன்மிக
பலமும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.



No comments:

Post a Comment